இளையர் அறிவியல் களஞ்சியம்/மின் பகுப்பு
மின் பகுப்பு : மின்சாரத்தைத் திடப்பொருள் வழியே கடத்தும்போது அப்பொருள் வெப்பமடைகிறது. வேறு வேதி நிகழ்வுகள் எதுவும் ஏற்படுவதில்லை. எனினும், ஒரு பொருளின் கரைசல் வழியே மின்சாரத்தைப் பாய்ச்சினால் அக்கரைசலில் வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. சான்றாக, நீர்த்த கந்தக அமிலத்தை நீரில் விட்டு, அதில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அத்திரவத்திலிருந்து ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுக்கள் வெளியேறிவிடும். இவ்வாறு மின்சாரம் வேதியியல் பகுப்புச் செய்வதால் இவ்வினை மின்பகுப்பு எனக் குறிக்கப்படுகிறது.
மின் பகுப்புக் கரைசல் திரவத்தில் ஒன்றையொன்று தொடாதவாறு இரு உலோகக் கம்பிகளை வைக்க வேண்டும். எந்தக் கம்பி வழியே மின்சாரத்தைப் பாய்ச்சுகிறோமோ அது நேர் மின் முனை எனப்படும். மின்சாரம் வெளியேறும் முனை எதிர்மின் முனை எனப்படும்.
ஒரு கரைசல் திரவம் மின் பகுப்புச் செய்யுமா செய்யாதா என்பது அதில் கரைக்கப்படும் பொருளைப் பொறுத்ததாகும். நீருடன் சோடியம் குளோரைடைக் கலந்தால் அக்கரைசலில் மின்சாரம் பாயும். ஆனால் நீருடன் சர்க்கரையையோ பென்சினையோ கலந்தால் அக்கரைசலில் மின்சாரம் பாய்வதில்லை.
மின் பகுப்பு மூலமே பல பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. தாமிர சல்பேட்டுக் கரைசலை மின் பகுப்புச் செய்வதன் மூலம் தாமிரம் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
மின் பகுப்பின் துணைகொண்டு மின் முலாம் பூசப்படுகிறது. செம்பு, பித்தளை, இரும்பு போன்ற உலோகப் பொருட்களுக்கு நிக்கல், குரோமியம், வெள்ளி அல்லது தங்கப் பூச்சுக்கள் மின்பகுப்பு மூலம் பூசப்படுகிறது. நகைகள், கத்தி, கரண்டி போன்றவற்றிற்கும் கார் போன்ற வாகனங்களின் பகுதிகளுக்கும் இவ்வாறே மின் பகுப்பு முறையில் முலாம் பூசப்படுகிறது. இஃது அவற்றிற்குக் குறைந்த செலவில் அதிகக் காலத்துக்கு அழகான தோற்றத்தை வழங்க உதவுகிறது.