இளையர் அறிவியல் களஞ்சியம்/யுரேனஸ்
யுரேனஸ் : பூமியைவிட நான்கு மடங்கு விட்டமுடைய யுரேனஸ் ஒரு கிரகமாகும். இது சூரிய மண்டலத்தில் உள்ளது. யுரேனஸ் கிரகத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் வில்லியம் ஹெர்சல் எனும் ஆங்கிலேய வானியல் அறிஞராவார். சூரியனிலிருந்து சுமார் முன்னூறு கோடி கி.மீ. தொலைவிலிருக்கும் இக்கிரகம் சூரியப்பகுதியில் உள்ள ஏழாவது கிரகமாகும்.
யுரேனஸ் கிரகத்தைச் சாதாரணமாகக் கண்களால் காண இயலாது. தன்னைத்தானே 17 மணி 14 நிமிடங்களுக்கு ஒரு முறை சுற்றிக் கொள்ளும். இது சூரியனை ஒருமுறை சுற்றி வர 84 ஆண்டுகள் ஆகின்றது. இக்கிரகத்தில் உள்ள வாயுக்கள் ஹைட்ரஜனும் ஹீலியமுமாகும். இதன் வெப்ப நிலை சுமார் 2190 ஆகும்.
இக்கிரகத்தில் ஐந்து துணைக் கிரகங்கள் இருப்பதாக முன்பு கண்டறியப்பட்டிருந்தது. 1986ஆம் ஆண்டு வாயேஜர்-2 எனும் விண்வெளிக்கலம் யுரேனஸ் கிரகத்தை அடுத்துச் சென்றபோது, அதைச் சுற்றி மேலும் 10 துணைக் கிரகங்கள் இருப்பதைப் படம்பிடித்து அனுப்பியது. இதன் அடர்த்தி வியாழன் கிரகத்திலுள்ள அடர்த்தியை ஒத்ததாகும்.