மணி பல்லவம் 4/11. தேடிக் குவித்த செல்வம்
பொழுது புலர்ந்ததும் புலராததுமாக வந்து நகைவேழம்பர் நினைவுபடுத்திய பழைய நினைவுகளால் பெருநிதிச் செல்வர் சாகின்ற காலத்து வேதனைகளையெல்லாம் உயிருடனேயே அப்போது அடைந்தவராக நடுங்கி நின்றார். ஆந்தை விழிப்பதுபோல அவருடைய கண்கள் புரண்டு உருண்டு விழித்தன. முகத்திலும் பிடரியிலும் வேர்த்துக் கொட்டியிருந்தது. மனத்தின் கருத்தோடு ஒத்துழைக்காத நலிந்த குரலில் அவர் நகைவேழம்பருக்குப் பதில் கூறினார்.
“புரிந்துகொள்ளாமலே நான் இத்துணை நாட்களாகப் பாம்புக்குப் பால் வார்த்துவிட்டேன்.”
“கடைசி கடைசியாக அந்தப் பாலில் நஞ்சைக் கலந்து வார்த்துக் கொடுத்த நாளையும் சேர்த்துத்தான் சொல்கிறீர்களென்று நினைக்கிறேன். நஞ்சுடையதனைக் கொல்வதற்கு இன்னொரு நஞ்சு பயன்படாது என்பதை நீங்கள் மறந்திருக்கக்கூடாது. சொந்த உயிரையும் அந்த உயிரின் நம்பிக்கைகளையும் உங்களிடம் கொடுத்துவிட்டு ஏமாறுவதற்கு எல்லாருமே காலாந்தகனாக இருக்க மாட்டார்கள் ஐயா! மேலும் நஞ்சுடைய பொருளுக்குப் புதிய நஞ்சைக் கலந்து கொடுப்பதனால் நலிவு ஏற்படுவதற்குப் பதில் பலம்தான் பெருகும்.”
“உண்மைதான்! பலம் பெருகியிருப்பதை இதோ இப்போது நீங்கள் எனக்கு முன்னால் வந்து நிற்கிற விதத்திலிருந்தே நான் தெரிந்துகொள்கிறேன், நகை வேழம்பரே!”
இதைக்கேட்டு நகைவேழம்பர் அந்தப் பெரு மாளிகைக் கட்டிடமே அதிர்ச்சி அடைகிறாற்போல் இடிஇடியென்று சிரித்தார்.
“தெரிந்து கொள்ளுங்கள்! தெரிந்து கொள்ளுங்கள்! நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். இன்னும் நான் உங்களைத் தெரிந்து கொள்ளச் செய்ய வேண்டியவை நிறைய மீதமிருக்கின்றன. கொலையும் கொள்ளையும், குரோதமும், வஞ்சகமும் குறைவில்லாமல் புரிந்து உங்களுடைய நிலவறையில் நீங்கள் தேடிக் குவித்திருக்கிறீர்களே அந்தச் செல்வம் ஒன்று மட்டும்தான் உங்களுடைய வலிமை.”
“ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உன்னைப்போல ஓர் அசுரப் பிறவியின் கொடிய நட்பு எனக்குக் கிடைத்திருக்கவில்லையானால் நான் நியாயமானவனாகவும், இந்த வஞ்சகமான வலிமை இல்லாது ஏதோ ஒருவகையில் பலவீனனாகவும் எல்லாரையும் போல வாழ்ந்திருக்கலாம்.”
-எதிரே நிற்கிற ஒற்றைக் கண்ணனிடம் பெருநிதிச் செல்வருக்கு மதிப்புக் குறைந்து போய்விட்ட காரணத்தினால் “நீ, உன்னை என்று ஏகவசனத்தில் அலட்சியமாகப் பேசத் தொடங்கிவிட்டார். அதனால் இந்தப் பேச்சு எதிராளியை இன்னும் கொதித்தெழச் செய்தது.
“இந்த அசுரப் பிறவியின் சூழ்ச்சிகள் கற்பித்த வழியில் போய்த்தான் சோழ மன்னரிடம் பெருமதிப்புக்குரிய எட்டிப்பட்டம் பெற்றீர்கள். இந்த அசுரப் பிறவியின் சூழ்ச்சியைக் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்ட வழிகளில் போய்த்தான் உங்களுடைய அந்தரங்க நிலவறையில் தாழி தாழியாகப் பொன்னும் மணியும் முத்தும் சேர்த்துக் குவித்திருக்கிறீர்கள். இந்த ஒற்றைக் கண்ணால் நான் உலகத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்ட அநுபவங்களிலிருந்துதான் இரண்டு கண்களால் கூடப் பார்த்து முடிக்க இயலாத அவ்வளவு செல்வத்தை உங்களுடைய நிலவறையில் நிறையக் குவித்திருக்கிறேன்.”
எதிரி திரும்பத் திரும்பத் தன்னுடைய செல்வத்தைப் பற்றியே நினைவூட்டிப் பேசியதைக் கேட்டுப் பெருநிதிச் செல்வருக்குப் பொறுமை போய்விட்டது. அளவற்ற ஆத்திரம் பிறந்தது அவருக்கு.
“பேயே! செல்வம் செல்வமென்று பறக்கின்றாயே! நிலவறையைத் திறந்து விட்டு விடுகிறேன். உனக்கு வேண்டியதை அதிலிருந்து வாரி எடுத்துக்கொண்டு போய்விடு. மறுபடி நீ என் முகத்தில் விழிக்காதே...” என்று கூறியவராகத் தம்முடைய பள்ளியறையிலிருந்தே நிலவறைக்குள் போவதற்குரிய வழியாகக் கீழே இறங்கும் படிக்கட்டில் நகைவேழம்பரையும் கைப்பற்றி இழுத்துக் கொண்டு வேகமாகப் பாய்ந்து இறங்கினார் பெருநிதிச் செல்வர்.
“கையை விடுங்கள். நான் வாரிக்கொண்டு போவதற்கு உங்களுடைய அநுமதி எதற்கு? நானே அதைச் செய்து கொள்கிறேன்!” என்று தன் கையைப் பெருநிதிச் செல்வருடைய பிடியிலிருந்து உதறிக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தார் நகைவேழம்பர். நிலவறைக்குச் செல்லுவதற்காக ஒவ்வொரு படியாய் மிதித்துக்கொண்டு கீழே இறங்கியபோது, தாம் மிதிக்கின்ற ஒவ்வொரு மிதியும் நகைவேழம்பருடைய கழுத்தில் படுவதுபோல் பாவித்துப் பல்லைக் கடித்துக் கொண்டு சென்றார் பெருநிதிச் செல்வர். பெருநிதிச் செல்வரையே அழுத்தி மிதிப்பதாக நினைத்துக் கொண்டு சென்றார் நகைவேழம்பர். கீழே நிலவறை வந்தது. செல்வம் குவிந்திருக்கிற இடத்துக்கே மணமும் உண்டு போலும். சந்தனமும் அகிற் புகையும், பச்சைக் கற்பூரமும் அந்தப் பகுதியிற் குவிந்திருக்கிற செல்வத்தின் மிகுதியை எடுத்துச் சொல்லுவன போல் நறுமணம் பரப்பிக் கொண்டிருந்தன. தரையில் விலை மதிப்பற்ற சீனத்துப் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டி ருந்தது.
என்றாலும் அப்போது அந்த நிலவறைக்குள் புகுந்த இருவருக்கும் நறுமணத்தை உணர்கிற எண்ணமோ, பட்டுக் கம்பளத்தில் மென்மையை உணர்கிற நளின உணர்வோ சிறிதும் இல்லை. அந்த இருவருடைய நிலை யையும் கண்டு சந்தர்ப்பம் தெரியாமல் பெரியவர்கள் முன்னால் சிரித்து அவர்களுடைய கோபத்தைக் கிளறிவிடுகிற சிறு பிள்ளைகளைப் போல் அங்கே குவிந்திருந்த முத்துக்களும், மணிகளும், பொற்காசுகளும் ஒளி மின்னிச் சிரித்தன. அந்த இரண்டு பேருடைய கோபத்துக்கும் நடுவே அவை இயல்பாக மின்னுவதுகூட அதிகமான துடுக்குத் தனமாகத் தோன்றுவது போலிருந்தது.
அவர்கள் இருவருக்கும் வழக்கமான நெஞ்சுத் துடிப்பைவிட அதிகமான விரைவோடு மூச்சும் இதயமும் அடித்துக்கொண்டன. விநாடிக்கு எத்தனை முறை துடிக்கிறது என்று நினைக்கவும் முடியாத வேகத்தோடு இதயம் துடித்தது. அறையில் மூலைக்கு மூலை இறைந்து கிடந்த தனித்தனி மாணிக்கக் கற்கள் எல்லாம் செக்கச் செவேரென்று மின்னியபோது அவை அத்தனையும் தனித்தனியே நகைவேழம்பரின் ஒற்றைக் கண்ணாகத் தோன்றின பெருநிதிச்செல்வருக்கு. ‘நிலவறையின் நான்கு புறமும் எவராவது முரட்டுக் கொலையாளிகளை மறைவாக இருக்கச் செய்துவிட்டுத் தம்மைத் தீர்த்துவிடுகிற அந்தரங்க எண்ணத்தோடு அங்கே அவர் அழைத்து வந்திருப்பாரோ?’ என்று சந்தேகம் கொண்டவராய் ஒற்றைக் கண்ணினால் நான்கு புறமும் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே, ஒவ்வோர் அடியாகப் பாதம் பெயர்த்து வைத்து உள்ளே நடந்தார் நகைவேழம்பர். ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பது போல் பெருநிதிச் செல்வரின் சூழ்ச்சிகள் நகைவேழம்பருக்கு மனப்பாடம். எப்போதும் இயல்பிலேயே வேறு வழியின்றி நிரந்தரமான கோழையாக இருப்பவனைக் கண்டு பயப்பட வேண்டுவதில்லை. சில சந்தர்ப்பங்களைச் சமாளிப்பதற்காக மட்டும் கோழைபோல நடித்து விட்டுப் பின்பு எதிரியைக் கறுவறுக்க நேரம் பார்க்கும் நடிப்புக் கோழைகளை நம்பக்கூடாது. இத்தனை ஆண்டுகள் பழகியும் பெருநிதிச் செல்வர் முதல் வகைக் கோழையா, இரண்டாவது வகைக் கோழையா என்பதை முடிந்த முடிவாக அறிந்து கொண்டுவிட முடியாமல் திணறினார் நகைவேழம்பர். காரணம் அவர் இரண்டு வகைக் குணங்களையும் மாற்றி மாற்றிச் செயல்படுத்தியிருக்கிறார். அதில் எது மெய் எது போலி என்று புரிந்துகொள்வது, தந்திரத்தில் தேர்ந்தவராகிய நகைவேழம்பருக்கே அரிதாயிருந்தது. அதனால்தான் அன்று காலை நேரத்தில் அவரோடு நிலவறைக்குள் புகுந்த போது மிக நுணுக்கமான தற்காப்பு நினைவுடனேயே அங்கு நுழைய வேண்டியிருந்தது நகைவேழம்பருக்கு.
செல்வக் களஞ்சியமான காவிரிப்பூம்பட்டினத்தையே சோழ மன்னனிடமிருந்து விலைபேசி வாங்கினாலும் அதற்கு அப்புறமும் மீதமிருக்கக்கூடிய அவ்வளவு செல்வம் வேறு வேறு வடிவில் அங்கே குவிந்து கிடந்தது. இருவரும் அவற்றை எதிரெதிர்த் திசைகளிலே இருந்து பார்த்தபடி இருந்தனர். இருவருடைய நெஞ்சுத் துடிப்பையும் கேட்டு முத்துக்கள் மின்னுவதற்குப் பயந்தனவோ என இருந்தன. இருவரும் மூச்சு விடுகிற ஒலி வெகுண்டெழுந்த சர்ப்பங்கள் சீறுவதுபோல் ஒலித்தது.
ஒவ்வொரு விநாடியும் தன்னைக் கொல்லப் பாயும் முரட்டுக் கரங்களையே நான்கு புறத்திலிருந்தும் எதிர்பார்க்கிற தற்காப்போடு நின்றார் நகைவேழம்பர். பல விநாடிகள் ஒரு விளைவும் இல்லாமல் மெளனமாகக் கழியவே தான் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கிற சூழ்நிலை அங்கு இல்லை என்று அநுமானம் செய்து கொண்டு தைரியம் அடைந்தார் நகைவேழம்பர். மெல்லத் தொண்டையைக் கனைத்து விட்டுக்கொண்டு கை விரல்களைச் சொடுக்கினார். அப்போது எதிரெயிருந்து பெருநிதிச் செல்வருடைய குரல் ஒலித்தது.
“செல்வம் செல்வம் என்று நீ பறந்த பேராசை தீரும் படி உனக்கு வேண்டியதை வாரிப் போகலாமே இங்கிருந்து ?”
“என்ன சொல்கிறீர்கள் ?”
தனக்குக் காது கேட்காததுபோல் அதை மீண்டும் சொல்லும்படி இரண்டாம் முறையாகப் பெருநிதிச் செல்வரைக் கேட்டார் நகைவேழம்பர்.