மணி பல்லவம் 4/17. வாழும் பேய்கள்
படிப்படியாக வீழ்ச்சி என்று சொல் வார்களே அந்த வீழ்ச்சியை இன்று ஒரே நாளில் நகைவேழம்பர் அடைந்துவிட்டார். சறுக்கி விழ நேர்வது உண்டுதான். ஆனால் இவ்வளவு உயரத்திலிருந்து சறுக்கி விழுந்திருக்கக்கூடாது. முழங்கால்களிலும், கைமூட்டுகளிலும் பலமான அடிகள் பட்டிருந்தன. இடுப்பிலோ, காலிலோ எங்கோ மிகவும் பலமான அடிபட்டிருந்ததென்றும் அவரால் உணர முடிந்தது. உடலில் வார்த்தைகளால் அளவிட்டு உரைக்க முடியாத சோர்வு தெரிந்தது. நிலவறையின் கடைசிப் படிக்கும் கீழே நிலைகுலைந்து உருண்டு விழுந்தபோது அவருடைய கண்முன் எல்லாம் தலைகீழாகச் சுழல்வது போலத் தெரிந்தது. வலது கால் பாதத்தை அழுத்தி ஊன்றிக்கொண்டு உந்தி எழுந்திருக்க முயன்றார் அவர். எழ முடியவில்லை.
ஆண்டுக் கணக்கில் பிணியுற்று முடங்கிக் கிடந்தது போல் உடம்பு வலித்தது. இரண்டு கால்களில் ஏதோ ஒன்றில் எலும்பு முறிந்திருக்குமோ என்று பயமும் நடுக்கமும் பிறந்தபோது கருங்கல்லாய் இறுகிப் போ யிருந்த அந்தக் கொடியவருக்குக் கூடக் ‘கோ'வென்று கதறி அழுதுவிட வேண்டும் போல் வருத்தமாக இருந்தது. முழங்கால்களில் இரத்தமும் கசியத் தொடங்கிவிட்டது.
இதே பெருநிதிச் செல்வரின் மாளிகைக்குக் கீழே உள்ள இரகசியச் சிறைக்கூடங்களிலும், கொடிய விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கும் காராக்கிருகங்களிலும் இப்போது தான் வைக்கப்பட்டிருப்பது போலப் பலரைப் பல சமயங்களில் முன்பு தன் கைகளாலேயே தள்ளி அடைத்ததையெல்லாம் வரிசையாக நினைத்துப் பார்த்தார் நகைவேழம்பர். நாய்க்குச் சோறு வைப்பது போல் இன்று தனக்குச் சோறும் நீரும் வைக்கப் பட்டதைத் தான் கேவலமாக எண்ணுவது போலத் தானே அவர்களும் அன்று எண்ணித் துடித்திருப்பார்கள் என்று ஞாபகம் உண்டாயிற்று அவருக்கு.
அப்போது தான் நிதியறையின் படிகளிலிருந்து மட்டும் சறுக்கியிருப்பதாக அவர் நினைக்கவில்லை. வாழ்க்கையில் தன்னுடைய எல்லா நம்பிக்கைகளிலிருந்துமே சறுக்கியிருப்பதாகத் தோன்றியது. மனைவி, மக்கள், உள்ளம், உறவு எதுவுமே இல்லாமல் யாருக்காக இவ்வளவு கொடுமையாக வாழ்ந்தோம் என்று நினைத்துப் பார்க்க முயன்றார் அவர். கொடுமையாக வாழ்ந்தோமா அல்லது பொய்யாக வாழ்ந்தோமா என்று தனக்குத்தானே அவர் கேட்டுக்கொண்ட கேள்வி இரண்டு பிரிவுகளாகக் கிளைத்தது. இந்த விநாடி வரையில் என்னென்ன பாவங்களையும், கொடுமைகளையும் நான் செய்திருக்கிறேன் என்று தனக்குத்தானே பிரித்து எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமே அவருக்கு ஏற்படவில்லை. காரணம் தான் செய்யாமல் எஞ்சிப் போகும்படி விட்ட பாவம் ஒன்றுமில்லை என்று அவருக்கே தெரிந்திருந்தது!
அவர் தன் மனத்தில் தனக்குத்தானே கேட்டுக் கொண்ட இரண்டு கேள்விகளுக்கு விடையே கிடைக்கவில்லை. ‘இதுவரை நல்லதாக என்ன செய்தோம்? கெட்டதாக என்ன செய்யவில்லை’. இந்த இரண்டு கேள்விகளுக்கும், ‘ஒன்றுமில்லை ! ஒன்றுமில்லை!’ என்பதைத் தவிர வேறு பதில் ஏதும் அவருடைய மனத்திலிருந்து எழவே இல்லை.
தன்னுடைய பெயரின் பொருளுக்குச் சிறிதுகூடப் பொருத்தமில்லாமலே தான் வாழ்ந்திருப்பதாக நினைவு வந்தது அவருக்கு. நகைவேழம்பர் என்றால் பிறருக்குச் சிரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாக்குகிற பரியாசகர் என்றுதான் காவிரிப் பூம்பட்டினத்துக் கூத்தரங்கங்களிலும், நாடகக் கலைஞர்களிடையேயும் பொருள்படுவது வழக்கம். தானும் எப்போதோ ஒரு காலத்தில் அப்படிச் சில ஆண்டுகள் இருந்ததைக் கடந்த காலத்துக் கழிவிரக்கமாக அவரால் நினைத்துக்கொள்ள முடிந்தது. இப்படி மாறியபின்பு தன் பழைய பெயருக்கு ஏற்பத் தான் யாருக்கும் சிரிப்போ மகிழ்ச்சியோ ஏற்படுத்தியதாக அவருக்கு ஞாபகம் இல்லை.
பூம்புகாரின் பட்டினப்பாக்கமும், மருவூர்ப்பாக்கமும் சந்திக்கிற நாளங்காடியின் கலகலப்பான இடத்தில் கூத்தரங்கம் ஒன்றில் அவர் புகழ்பெற்ற நகைச்சுவை வேழம்பராக இருந்த காலம், அதிலிருந்து மாறியபோதே பொய்யாய்ப் போய்விட்டது. பெருநிதிச் செல்வரோடு தொடர்பும் பழக்கமும் ஏற்பட்டபின் வஞ்சகப் பேயாய்த் தான் வாழ்ந்த கொடிய வாழ்க்கையும் இன்று இப்படி அடைபட்ட பின்னர் இந்த விநாடியிலிருந்து பொய்யாய்ப் போய்விட்டது.
இப்படி எத்தனை எத்தனை பொய்கள்? படியிலிருந்து உருண்டு விழுந்ததும் காலை ஊன்றி எழ முடியாமல் போனபோது சென்ற விநாடிவரை கால் ஊன்றி நடந்ததும் பொய்யாய்ப் போய்விட்டது. நடந்தவை எல்லாம் பொய்யாகவும் நடக்கின்றவை யெல்லாம் உண்மையாகவும், நடக்க இருப்பவையெல்லாம் சந்தேகங்களாகவும், தன் வாழ்க்கையே மாற்றிக்கொண்டு தான் என்றிருந்தோ கெட்டுப்போய் விட்ட கொடுமையை நினைத்து நினைத்துக் கண்ணீர் வற்றுகிறவரை அழ வேண்டும்போல் இருந்தது அவருக்கு. இந்த ஏலாமையும் பயமும்கூடச் சில கணங்கள்தான் நீடித்தது. மனம் சபலப்பட்டு மாறி மறுபடியும் கொடுமை யில் நம்பிக்கை வந்த கணத்தில் காலை ஊன்றி எழுந் திருந்துவிட முயல்வதும், எழ முடியவில்லை. எலும்பு முறிந்துதான் போயிருக்கிறது என்று உணர்கிற கணத்தில் அழுது விடுவதுபோல் தளர்வதுமாக அந்த நேரத்தில் அந்த நிலவறையில் கணத்திற்குக் கணம் பொய்யாயிருந்தது நகைவேழம்பருடைய காலம்.
இனிமேலும் தனக்கு சமயமும் பொருத்தமாக வாய்த்து உடம்பிலும் வலிமையிருந்தால் அந்த வாய்ப்பைத் தவறவிடாமல் எதிரியைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று இப்போது கூட வைரமாகவும் கொடுமையாகவும் நினைப்பதற்கு அவரால் முடிந்தது. ஆனால் எரியுண்டு போன படகில் பட்ட தீக்காயங்களும், கடலில் நெடுந்தொலைவு நீந்தி வந்த களைப்பும், பசியும், கடிகளில் பயங்கரமாகச் சறுக்கி விழுந்த வேதனையும் சேர்ந்து தனக்குக் கெடுதல் செய்ய வேண்டிய கெட்ட கோள்கள் எல்லாம் இனி உன்னை இப்படியே விடமாட்டோம்’ என்று ஒன்றாகச் சேர்த்து வந்து வளைத்துக் கொண்டு விட்டாற்போல் அவரை மலைப்பு அடையச் செய்திருந்தன. அவர் வீழ்ந்து விட்டார். இப்போது நிச்சயமாக வீழ்ந்தே விட்டார்.
நிதியறையின் எதிர்ப்புறத்திலிருந்து இருளடைந்த சுவர் திடீரென்று பிளப்பது போலவும் அந்தப் பிளவிலிருந்த ஒரு புலி பயங்கரமாகப் பாய்ந்துகொண்டு வருவது போலவும். அந்தப் புலியே அருகில் வரும்போது பெருநிதிச் செல்வராக மாறிவிடுவது போலவும் பிரமையான பொய்க் காட்சிகள் அவர் கண்ணில் தெரிந்தன. தானும் புலியாக மாறி எதிர்த்துப் போராடுவதுபோலக் கற்பனை செய்ய முயன்றார் அவர்.
‘மரணாவஸ்தை மரணாவஸ்தை என்று சொல்கிறார்களே, அது இப்படித்தான் இருக்குமோ?’ என்று அப்போது நினைக்கத் தோன்றியது நகைவேழம்பருக்கு.
இப்படி நினைத்தபோது தன்னைச் சுற்றிலும் காலனின் கொடிய பாசக் கயிறுகள் சுழன்று சுழன்று வீசப்பட்டு விழுவது போலவும், தான் அந்தக் கொடிய பாசத்தில் சிக்கிக்கொண்டு விடாமல் தப்பித்துவிட உடனே முயல வேண்டும் போலவும் அவருக்குத் தோன்றியது. பதறி எழுந்து அங்கிருந்து ஓடிவிடும் நோக்கத்துடன் வலது கால் பாதத்தைப் பதித்து ஊன்றி மேலே எழ முயன்று மறுபடி கீழேயே விழுந்தார் அவர். அப்படி விழுந்ததும் அவருக்கு முன்னைவிடத் தளர்ச்சி பெருகியது. முழங்கால்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். தொட்ட இடத்தில் இரத்தம் பச்சையாகப் பட்டுக் கை நனைந்தது. பாவத்தைத் தொடுவதுபோல் அவருக்கே அருவருப்பாக இருந்தது அப்போது.
‘உன் உயிரைக் கொடுத்துவிடு! இனிமேல் நீ வாழ்வதைக்கூடப் பொய்யாக்கிவிட வேண்டும்’ என்று யாரோ பேய்க்கூச்சல் இட்டுக்கொண்டே வந்து தன் கழுத்தை இறுக்குவது போல் இருந்தது அவருக்கு.
அந்த விநாடியில் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது மெய்யா, பொய்யா என்று புரியாமல் அவர் உடல் நடுநடுங்கி, நினைவிழப்பது போலத் தலை சாய்ந்தார். இருட்டில் அடைபட்டுக் கிடந்த வெளவால் ஒன்று தன் சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு அவருடைய தலைக்குமேல் பறந்துவிட்டு மீண்டும் தன்னுடைய பழைய இடத்தில் போய்த் தலைகீழாகத் தொங்கியது.