மணி பல்லவம் 4/16. கனவை வளர்க்கும் கண்கள்
ஏக்கறுதல் என்ற தமிழ் வார்த்தைக்குப் பொருள் ஆசையால் தாழ்தல் என்று இளமையில் தனக்கு இலக்கியங்களைக் கற்பித்த புலவர் கூறியிருந்ததை இன்று நினைத்துக் கொண்டாள் சுரமஞ்சரி. நன்றாக முற்றிக் கனிந்த முழுமையான கனியைப்போல இந்த வார்த்தையில் நிரம்பியிருக்கும் பொருளை எல்லாம் இன்று அவள் உணர்ந்தாள். ஆசைக்கு உரிய பொருள் மேலே மேலே எட்ட முடியாத உயரத்துக்கு விலகிப்போகும்போது அதன்மேல் ஆசை வைத்தவர்கள் கீழே தாழ்ந்துதான் போய்விடுகிறார்கள். முன்பு இருந்த இடத்தினின்று தணிந்து கீழே சரிவதுதான் தாழ்வு என்பதில்லை. ‘இது நமக்குக் கிடைக்க வேண்டும்’ என்று நாம் ஆசைப்படும் இலக்கு எதுவோ அது நம்மினும் மேலே உயர்ந்துவிட்டாலே நமக்குத் தாழ்வுதான் என்று தன் குறையை உணர்கிற மனநிலையோடு கையிலிருந்த ஏடுகளையெல்லாம் பட்டு நூலில் கட்டிச் சுற்றி வைத்து விட்டு ஏக்கப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி.
அவளுக்கு எதிரே மேற்குப் புறத்துப் பலகணியின் முன் மாடத்துக்கு அப்பால் அந்திவானம் செந்தழல் பரந்து, அதில் சிறிது சிறிதாய் மஞ்சளும் கலந்து கொண்டிருந்தது. நான்கு காத தூரம் பரந்து கிடக்கும் அந்தப் பெரிய பூம்புகார் நகரத்தில் ஒவ்வொரு மாலைப் போதும் யார் யாருடைய வாழ்க்கையில் என்னென்ன மாறுதல்களை எல்லாம் உண்டாக்குகின்றனவோ! அவளைப் பொறுத்தவரை ஒரு மாறுதலும் இல்லை. அவளுடைய காலை நேரம் அந்த மாடத்தின் கிழக்குப் பக்கத்துப் பலகணியில் பிறக்கிறது. மேற்குப் பக்கத்துப் பலகணியில் முடிந்துவிடுகிறது. இவற்றுக்கு இடையே தான் அவளுடைய ஆசைகளும் அவளும், ஏங்கி ஏக்கற்றுக் கொண்டிருக்கும்படி நேர்ந்துள்ளது. காலையில் தான் கற்ற கவிதையில் வந்த உவமை இப்போது அவளுக்கு மீண்டும் நினைவு வந்தது.
வில்லில் இருந்து புறப்பட்டுப் பாய்ந்து கொண்டிருக் கிற அம்பின் நிழலைப்போல இந்த வாழ்வின் வேகத்திற்கு இடையே சுகங்களும் தோன்றித், தோன்றிய வேகத்திலேயே அழிந்துகொண்டிருக்கின்றன.
தோன்றுவதாவது, அழிவதாவது தோன்றினால் தானே அழிய முடியும்? என்னுடைய வாழ்க்கையில் நான் ஆசைப்படுகிற சுகங்கள் இன்னும் தோன்றவே இல்லையே! கிழக்குப் பக்கத்திலிருந்து தெரியும் ஒளி மேற்குப் பக்கத்தில் ஓடி மறைவதற்குள் இந்தச் செல்வச் சிறைக்குள் எத்தனை சுகங்கள் தோன்றிட முடியும்? ‘நான் மட்டும் கவியாகப் பிறந்திருந்தேனானால் இப்போது உங்களுடைய துக்கங்களை யாரிடம் போய்ச் சொல்ல வேண்டுமோ அவரிடம் போய் அழகிய உவமை உருவங்களோடு சொல்லிவிடுவேன் அம்மா!’ என்று வசந்தமாலை குறைப்பட்டுக் கொள்கிறாள். இங்கே எனக்குச் சுகம் இல்லை. சுகத்தைப் பற்றிய நினைவுகளும் ஏக்கங்களுமே நிறைய இருக்கின்றன. நினைவே அதுபவமாகிவிடாது. ஏக்கமே, எதற்காக ஏங்குகிறோமோ அதை அடையும் முயற்சியாகி விடாது. நினைப்பதும் ஏங்குவதும், மனத்தின் பசிக்கு அடையாளங்கள். அவற்றாலேயே மனம் நிரம்பிவிடாது’ என்று எண்ணியபடியே எழுந்துபோய் நகரத்தின் பல பகுதிகள் கண் பார்வையில் படுகிறாற்போல் மாடத்தின் முன்புறம் நின்றுகொண்டு நோக்கினாள் சுரமஞ்சரி.
அவளுடைய பார்வையில் தன்னைப் போலவே யாருக்காகவோ ஏங்கி அழுவது போலத்தான் அந்த நேரத்தில் மேற்குத் திசை வானமும் தெரிந்தது. பக்கத்து வீதியாகிய அரச வீதியின் மாளிகை ஒன்றிலிருந்து யாரோ ஓர் இசைக் கலைஞன் வேய்ங்குழலில் சோகத்தைப் பேசும் நோதிறப் பண்ணை வாசித்துக் கொண்டிருந்தான். தன் மனத்தில் ஏங்கி ஏக்கற்றுத் தவிக்கும் சோகத்தையும், மேற்கு வானில் காட்சியாய்ப் புலப்பட்ட சோக அழகையும், அந்தக் கலைஞனுடைய குழலிசை சாட்சியாய் நின்று பேசுவது போல் தோன்றியது சுரமஞ்சரிக்கு. மாடத்தின் உட்புறம் தூப கலசங்களில் நெருப்பிட்டு அகில் துரவிக்கொண்டிருந்தாள் வசந்தமாலை. அந்த நறுமணப் புகைச்சுருள்களும் காற்றில் கலந்து வந்தன. முல்லையும் மல்லிகையுமாகத் தான் சூடிக்கொள்ள வேண்டும் என்று கொடுத்தனுப்பப்பட்டிருந்த பூக்களைச் சூடிக்கொள்ளும் விருப்பமில்லாமல் அப்படியே மஞ்சத்தின் ஒரு மூலையில் வீசி எறிந்திருந்தாள் அவள். அந்தப் பூக்களின் நறுமணமும் எழுந்து பரவிற்று இப்போது.
போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்கும் இளம் பருவத்து வீரனைப் பல ஆயுதங்களோடு பல முரட்டு எதிரிகள் ஒன்று சேர்ந்துகொண்டு தாக்குவதுபோல் அந்த இசையின் சோக இனிமையும், மாலையின் அந்தி மயக்கமும், பூக்களும் அகிலும் பிறப்பித்த நறுமணமும், சொந்த மனத்தின் பசிகளும் ஒன்றுசேர்ந்து தன்னைத் துன்புறுத்துவதை அவள் உணர்ந்தாள், தவித்தாள், பின்பு உருகினாள்.
அப்படியே அந்த மாடத்தின் கோடியில் அது முடியும் இடத்திலிருந்து பறந்துபோய் அதற்கு அப்பால் உள்ள உலகத்தில் தன் மனம் விரும்புகிற ஓர் இடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. பேதைப் பருவம் முடிந்து நினைவு தெரிந்த பெண்ணாய் வளர்ந்துவிட்ட பின் தன் மனத்தில் அழுத்தமாய் ஏற்பட்டிருந்த பொதுவான கர்வமும், செல்வச் செருக்கும், அழகுத் திமிரும் இன்று படிப்படியாகக் குறைந்து, ‘தானும்கூட ஆசைப்பட்டு நிறை வேற்றிக்கொள்ள வேண்டிய குறை ஒன்று உண்டு’ என்று ஏங்குகிற அளவுக்குத் தன் மனம் தாழ்ந்திருப்பது அவளுக்கே புரிந்தது. ஆசையால் தாழும்போது கர்வத்தால் உயர முடியாதென்றும் இந்த அநுபவம் அவளுக்குப் புரிய வைத்திருந்தது.
‘பெண்ணின் அழகு பற்றிய செருக்கு அவளுடைய காதலால் அழிந்துபோகிறது. ஆணின் பெருமிதம் பற்றிய செருக்கு அவனுடைய மெய்யுணர்வாலும் பக்தியாலும் அழிந்து போகிறது என்று சொல்லப்படுகிற தத்துவத்தை முன்பெல்லாம் சுரமஞ்சரி ஒப்புக்கொண்டதில்லை. வீரமும் செல்வமும் பற்றிய காரணங்களால் ஆண் பிள்ளைக்கு வருகிற செருக்கு வேண்டுமானால் பக்தியால் அழியலாம். பெண்ணின் அழகு பற்றிய செருக்கு அவளிடமிருந்து என்றும் அழியாது’ என்று சுரமஞ்சரி எண்ணிக்கொண்டிருந்த எண்ணம் இப்போது மெல்லத் தேய்ந்து போய்விட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பழைய இந்திர விழாவின்போது கடற்கரை மற்போரில் இளங்குமரனைச் சந்தித்த நாளிலிருந்து இந்த வருடத்து இந்திர விழாவில் அவரையே மீண்டும் நாளங்காடிச் சொற்போரில் சந்தித்தது வரை உள்ள நீண்ட காலத்தில் தன்னுடைய செருக்குப் படிப்படியாகத் தேய்ந்திருப்பது அவளுக்குத் தெரிந்தது.
காற்றில் வந்த வேய்ங்குழலிசை அவளுடைய சோகத்தை மேலும் வளர்த்தது. துயரங்களை மறப்பதற்காகத்தான் அவள் காவியங்களையும், இலக்கியங்களையும் கற்க விரும்பினாள். அவற்றிலிருந்தும் அதே துயரம் பிறந்த போதுதான் அவள் பொறுமை இழக்கும்படி ஆயிற்று.
தன்னுடைய கண் பார்வை செல்ல முடிந்த தொலைவு வரை நகரத்தின் தோற்றத்தைப் பார்த்தாள் சுரமஞ்சரி. மாலைப் போதின் இருள் கவிழ்ந்த அழகு நகரின் தோற்றத்தில் தெரிந்தது. அந்த நகரத்தில் ஏறக்குறைய எல்லா இடங்க்ளையும் தன்னுடைய இளம் வயதிலிருந்து அவள் திரும்பத் திரும்பப் பலமுறை பார்த்திருக்கிறாள். கவேரவனம் என்ற சோலையையும், உய்யான வனம் என்னும் தோட்டத்தையும் தவிர மற்ற எல்லா இடங்களையும் பார்த்திருக்கிறாள். உய்யான வனமும், கவேர வனமும் பார்க்கக்கூடாதவை என்று தடுக்கப் பட்டவை. இல்லாவிட்டால், அவற்றையும் சுற்றிப் பார்க்கிற வாய்ப்பை அவள் முன்பே அடைந்திருக்க முடியும். அப்படியெல்லாம் பலமுறை பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருந்தாலும் இன்று இப்படி அடைபட்டுக் கிடக்கிறபோது இன்னும் எதையோ பார்ப்பதற்கு விட்டு வைத்திருப்பது போலவும், அதை உடனே போய்ப் பார்த்துவிட வேண்டும் போல வும் அவள் மனம் குறுகுறுப்பு அடைந்தது. இந்தக் குறு குறுப்புத் தன் மனத்தில் அப்போது ஏற்படுவதன் காரணம்தான் அவளுக்கே விளங்கவில்லை.
‘எந்தப் பொருளின்மேலாவது அளவுகடந்து ஆசைப் படும்போது இப்படி விடுபட்டுப் பறக்க வேண்டும் போலத் தவிப்பது மனத்தின் இயல்பா? அல்லது ஏக்கத்தின் விளைவா?’ என்று முடிவு கிடைக்காத சிந்தனையில் அழுந்தி நின்றாள் அவள்.
‘நினைவுகளால் மனத்தின் பசி தணிவதில்லை. நினைவுகள்தாம் பசியை வளர்க்கின்றன. நினைவுகளே பசியாகவும் செய்கின்றன. நினைவுகள் எதை அடையத் தவிக்கின்றனவோ, அதை அடைகிற அநுபவம்தான் மனத்தின் பசிக்கு உணவு’ என்று எண்ணிக்கொண்டே இருள் பரவத் தொடங்கியிருந்த நகரிலிருந்து தன் கண்களையும், சோகம் பரப்பிக் கொண்டிருந்த குழலிசையிலிருந்து தன் செவிகளையும் விடுவித்து மீட்டுக் கொண்டு அவள் உள்ளே திரும்பியபோது பூக்களின் மணமும், அகிற்புகையின் வாசனையும் முன்னைக் காட்டிலும் அதிகமாக நெருங்கிக்கொண்டு பரவி அவளைத் தாக்கின.
‘பரிபூரணமான இசையின் விளைவு அழுகையாயிருக்கிறது. நல்ல மணங்களை உணரும்போது ஆழ்ந்த துயரங்கள் நினைவு வருகின்றன. உயர்ந்த கவிதைகளின் பொருள் புரியும் போது மனத்தில் ஏக்கம் பிறக்கிறது. மறைகின்ற கதிரவனையும் மேற்கு வானத்தையும் காணும்போது உலகத்தின் கடைசிக் காட்சியைப் பார்ப்பதுபோல் எண்ணங்களில் ஓர் அநுதாபம் பொங்குகிறது. நான் இன்று மட்டும் இவற்றை உணர்கிறேன். எல்லாக் காட்சியிலிருந்தும், எல்லா உணர்விலிருந்தும் ஆழ்ந்த துயரத்தைத் தவிர வேறொன்றையும் பெற முடியாத துர்ப்பாக்கியவதியாக இப்படி நான் எப்போது மாறினேன்?
சிந்தனையில் இப்படி ஆயிரம் எண்ணங்கள் சேர்ந்தும் பிரிந்தும் தவித்திட விளக்குச் சுடர்களைத் தணித்துவிட்டு மங்கலான இருளைப் பரவச் செய்து கொண்டபின் மஞ்சத்தில் சாய்ந்து படுத்தாள் சுரமஞ்சரி. பொற்பேழை நிறைய நெய் அதிரசங்களும், பல்சுவைப் பணியாரங்களும், பழங்களும், வற்றக் காய்ச்சிய பாலும் கொண்டு வந்து வைத்துக்கொண்டு சுரமஞ்சரியை உண்ணுவதற்கு அழைத்தான் தோழி வசந்தமாலை.
“தோழி! நீ கொண்டு வந்திருக்கும் உணவுகள் என் மனத்தின் பசியை ஆற்றுவதற்குப் பயன்படாதவை. இவற்றைக் கொண்டுபோய்விடு. எனக்கு இவற்றில் விருப்பமில்லை. இந்த மஞ்சத்தில் சாய்ந்துகொண்டு இப்படியே ஏதாவது மனதிற்குப் பிரியமான நினைவுகளை எல்லாம் நினைக்க வேண்டும் போல் இருக்கிறது எனக்கு. நன்றாகத் தூங்கியும் விடாமல் நன்றாக விழித்துக் கொண்டுமிராமல் எவையேனும் நினைவுகளில் மிதக்க ஆசைப்படுகின்றேன் நான்” என்று தோழிக்கு மறுமொழி கூறினாள் சுரமஞ்சரி. தோழி இதைக் கேட்டு மறுபேச்சுப் பேசாமல் திரும்பிப் போய்விட்டாள்.
சுரமஞ்சரி இரண்டு புறக்கண்களையும் மூடிக் கொண்டு மனக் கண்களால் தான் விரும்பிய முகத்தை யும் எண்ணங்களையும் காணலானாள். சில நாழிகைகளில் அப்படியே சோர்ந்து போய்த் தூங்கியும்விட்டாள். அவளுடைய அந்தத் துாக்கத்தில் அதற்கு முந்திய நினைவுகளோடு தொடர்புடைய கனவு ஒன்று நிகழ்ந்தது.
ஆலமுற்றத்துக் கோவிலில் முல்லையும் இளங் குமரனும் அருகருகே நின்று கொண்டிருக்கிறார்கள். முல்லை இளங்குமரனுடைய கழுத்தில் மணமாலை சூட்டுவதற்காகத் தன் பொற்கரங்களை உயர்த்துகிறாள். அப்போது தொலைவிலிருந்து தானும் ஒரு மண மாலையோடு சுரமஞ்சரி இளங்குமரனை நோக்கி ஓடி வருகிறாள். முல்லையின் கைகள் இளங்குமரனை நெருங்க நெருங்கச் சுரமஞ்சரியின் இதயம் வேகமாகத் துடிக்கிறது. இளங்குமரனுக்கும் முல்லைக்கும் நடுவே தான் ஆற்றல் குறைந்து சிறியவளாகி விட்டதுபோல் நம்பிக்கை தளர்ந்தும், ஆசை தளராமல் நெஞ்சம் பதற ஓடி வருகிறாள் அவள்.
முல்லை சூட்டுவதற்கு இருக்கும் மாலை அவனுடைய தோள்களில் படியும் முன்பு அவன் சற்றே திரும்பித் தான் ஓடி வருவதை ஒருமுறை பார்க்கவாவது வேண்டும் போலத் தவித்தாள் சுரமஞ்சரி.
இளங்குமரனின் அழகிய கண்களைச் சந்திக்க அவளுடைய கண்கள் விரைந்து முதிர்ந்தன.
அவளுடைய ஆசை வீண் போகவில்லை. முல்லையின் மாலையை ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்பு இளங்குமரனே திரும்பிச் சுரமஞ்சரி ஓடி வருவதைப் பார்த்துவிடுகிறான். அப்படி பார்க்கும்போது அவனுடைய கண்களே சிரிப்பது போன்ற குறிப்புடன் அவளைப் பார்க்கின்றன. அந்தக் கண்களின் பார் வையைச் சந்தித்ததும் மேலே ஓடுவதற்கு முடியாமல் அவள் அப்படியே நாணி நிற்கிறாள். அவளுடைய ஆசைக் கனவுகளை அவனுடைய அந்தக் கண்களே வளர்க்கின்றன. இந்தச் சமயத்தில் யாரோ வந்து சுரமஞ்சரியின் தோளைத்தொட்டு அவளை எழுப்பினார்கள். அவளுடைய கனவு கலைந்தது.