உள்ளடக்கத்துக்குச் செல்

மணி பல்லவம் 5/நிறை வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து

நிறை வாழ்வு

திரு என்ற சொல்லுக்குக் ‘கண்டாரால் விரும்பப் படும் தன்மை நோக்கம்’ என்ற பொருள் விரிவு கூறியிருக்கிறார்கள் உரையாசிரியர்கள். தத்துவஞானிகளோ இன்னும் ஒருபடி மேலே போய்ப், பொருள் உடைமையும் பொருள் சேர்த்து நுகர்வதுவும் திரு அல்ல, அழகு கருணை முதலிய உயர் குணங்கள் இடையறாமல் எண்ணங்களில் நிறைந்திருக்கும் மன நிகழ்ச்சிதான் திரு-என்று பொன்னும் பொருளும் சேர்வதைத் திருவாகக் கருதாமல், நிறைந்த மனத்தையே திருவாகக் கூறினார்கள். பெரியவர்களும் அரியவர்களும் கண்ட இந்த நிறைவாழ்வைத்தான் இளங்குமரன் இறுதியாக அடைகிறான். மங்கலமான நற்குணங்களையே நிதியாகக் கொண்டு நிற்கும்போது வாழ்வில் தனக்கு வரும் சோதனைகளை வெல்ல வேண்டிய அவசியமும் அவனுக்கு ஏற்படுகிறது. கொலை என்பது பிறருடைய உயிரையோ, உடல் உறுப்புக்களையோ கொல்வது மட்டுமல்ல, ‘பிறர் அறிவையும் புகழ் முதலாயினவற்றையும் கொன்றுரைப்பதுகடக் கொலை தான் என்றெண்ணிச் சொல்லிலும், நினைப்பிலும் செயலிலும் சான்றாண்மை காத்து வந்த இளங்குமரன் அவற்றைக் கைவிட வேண்டிய சோதனைகளையெல்லாம் சந்திக்க நேரிடுகிறது. செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்று எண்ணி எண்ணி அந்த எண்ணமே செல்வமாகி நிற்கத் தொடங்கிவிட்ட அவன் மனத்திலும் உலகியல் வாழ்வின் சலனங்கள் குறுக்கிடுகின்றன. அறிவின் வலிமையாலும் சேர்த்து வைத்துக் கொண்ட தத்துவ குணங்களின் நிதியாலும் அந்தச் சலனங்களையும் வென்று நிற்கிறான் அவன்.

தன்னுடைய காலடியில் வந்து ஒதுங்கிய சங்குகளையும் பூங்கொத்துக்களையும் குறிப்பிட்டு வளநாடுடையாரும், ஓவியன் மணிமார்பனும், விசாகையும், மணி நாகபுரத்து மண்ணின் பெருமையைச் சொல்லி மங்கல வாழ்த்துக் கூறியபோதும் அவனுடைய உணர்வுகள் தன் வாழ்வில் ஏதோ சில புதிய அநுபவங்களை எதிர் பார்த்தனவேயன்றி எந்தவிதமான செருக்கும் அடையவில்லை. பிறருடைய வாழ்த்தும், புகழ் வார்த்தைகளும் தன் மனத்தைக் கிளர்ச்சி கொள்ளச் செய்ய முடிந்த அளவு தனது எண்ணங்களையோ, நம்பிக்கைகளையோ மலிவாக வைத்துக் கொண்டிருக்கும் பலவீனமான வேளைகள் தன் வாழ்வில் வரலாகாது என்று அவன் உறுதியாயிருந்தான். உலகத்தில் துய்மையான புகழ் என அவன் நம்பியது, ‘நான் பழி வருவன எவற்றையும் எண்ணுவதில்லை; செய்வதில்லை; பேசுவதில்லை’ என்று ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே சத்யத்தில் மனப்பூர்வமாக நம்பிக்கை வைத்துத் தன்னைச் சோதித்துக் கொள்கிறானே அதுதான்! மெய்யான புகழ் ஒரு மனிதனுடைய ஏதாவதொரு திறமையை மட்டும் சார்ந்து நிற்பதில்லை. அந்தத் திறமையை ஆள்கின்றவன் தன் வாழ்வில் எவ்வளவுக்கு நியாயமான குணங்களைச் சார்ந்து நிற்கிறான் என்பதையும் பொறுத்துத்தான் இருக்கிறது. ‘பழிக்கு அஞ்சுவதுதான் பெரும் புகழ். புகழுக்கு ஆசைப்பட்டுத் தவிப்பதுதான் பெரும்பழி’ என்று தொல்காப்பியருடைய மெய்ப்பாட்டியலில் புகழ் என்னும் பெருமிதத்தைப் பற்றி இளங்குமரனுக்குக் கற்பிக்கும்போது திருநாங்கூரடிகள் கூறியிருந்தார். அறிவினால் வலிமையடைந்து மனம் வளர்த்தபின் நிறைவு குறைவுகளைப் பற்றிய இந்தப் புதிய தத்துவத்தை உணர்ந்திருந்தான் அவன.

ஆசைகள் குறைவதே பெரிய நிறைவு. ஆசைகள் குறைந்தால் அவற்றைச் சூழ்ந்திருக்கும் பல துன்பங்களும் குறைந்துவிடுகின்றன. மலைமேல் ஏறுகிறவன் கனமான பொருள்களைத் தலைச்சுமையாகச் சுமந்துகொண்டு மேலே போக முடியாததுபோல் மனத்தில் ஆசைகளைச் சுமந்துகொண்டு எண்ணங்களால் உயரத்துக்குப் போக முடிவதில்லை. ஆசைகளுக்கு நடுவிலும் ஆசைகளால் குறைந்து நிற்கும் வாழ்வே பண்புகளால் நிறைந்து நிற்கிறது. குறைவில்லாத வாழ்வு எதுவோ அதுவே நிறை வாழ்வு. அந்த வாழ்வுக்கு திரு நிறைந்த மனம் வேண்டும். அது இளங்குமரனுக்கு வாய்த்திருந்தது. குறைகளை முடிக்கத் தவித்துத் தவித்து அதற்காக மனத்தில் எழும் முனைப்பே ஆசை, பற்று, விருப்பம் எல்லாம். ஆசைகள் தேவையில் தொடங்கிக் குறைகளாலே வளர்ந்து துன்பங்களோடு முடிகின்றன. நெடுநாட்களாய் மண்ணில் கிடக்கிற கல்லைப் புரட்டினால் அதன் மறுபுறம் தேளும் பாம்பும், பூரானும் போன்ற நச்சுப் பிராணிகள் இருப்பதை ஒப்ப ஆசைகள் மறுபுறத்தைப் புரட்டிப் பார்த்தால் அந்த மறுபுறத்தில் எத்தனையோ துன்பங்கள் தெரிகின்றன. எனவே ஆசைகள் நிறைந்த வாழ்வை நிறைவாழ்வு என்று இளங்குமரன் நம்பவில்லை.

எல்லையற்ற திருநிறைந்த மனம், திருநிறைந்த எண்ணங்கள் ‘உலகமே அன்பு மயமானது - அந்த அன்பே இன்பமயமானது’ என்ற பாவனையுடன் வாழ்தல், இவையே நிறை வாழ்வு என்று நம்பினான் அவன். தன் வாழ்க்கையின் நம்பிக்கைகள் நிறைந்த வேளையில் மங்கல மான சுப சகுனங்களோடு மணிநாகபுரத்து மண்ணில் இறங்கி நின்ற இளங்குமரன் நிறைக! நிறைக!’ என்று விசாகை தன்னை வாழ்த்திய வாழ்த்துக்களை இப்படிப்பட்ட நிறைவாகவே பாவித்துக் கொண்டான். ஆசை களால் குறைந்து குணங்களால் நிறைந்த வாழ்வுக்கு அவன் ஆசைப்பட்டான்.

அந்த விநாடியில் அவன் மனம் இடைவிடாமல் ‘என் எண்ணங்களில் திரு நிறைய வேண்டும்’ என்று உருவேற்றிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை ஆசைப்படும் போதும் மனம் ஒருவிதத்தில் எதற்காகவோ எரிந்து அழிந்து போகிறது. ஆசை என்பது என்றும் நிறைவில்லாத இயல்பையுடையது. நிறைந்த வாழ்வு வேண்டுமானால் நிறைவில்லாத இயல்புகளை நீக்கிவிட வேண்டும். மனம் எதற்காகவும் அழியாமல் நிறைந்தே நிற்க வேண்டும் என்ற உறுதியுடனும் அப்படியே அழிந்தாலும் அந்த அழிவானது தங்கம் நெருப்பில் அழிவதைப்போல முன்னிலும் நிறைந்து ஒளிரும் அழிவாக வளர வேண்டும் என்ற எண்ணத்துடனும், உடன் வந்தவர்களோடு மணிநாகபுரத்து மண்ணில் நடந்து சென்றான் இளங்குமரன். புண்ணியப் பேராற்றல் நிறைந்த நாகநாட்டு மண்ணில் இறங்கியபோது அவனுடைய வாழ்வில் ஐந்தாவது பருவம் பிறந்தது. ‘கவலைப்படாதே தம்பீ! உன்னுடைய வாழ்வில் இனிமேல் தான் எல்லாம் இருக்கிறது’ என்று வளநாடுடையார் கூறிய சொற்களில் ஏதோ பெரிய விளைவுக்கான அர்த்தம் இருக்க வேண்டுமென்று தோன்றினாலும் அது என்ன என்று அவரிடமே கேட்கும் துடிப்பு அப்போது அவனுக்கு ஏற்படவில்லை. ஏதோ வரவிருக்கிறதென்று அவன் மனத்திலேயே ஒருவாறு புரிந்தது. தன்னுடைய வாழ்வில் இப்போது வரவிருக்கும் அனுபவங்கள் எவையோ அவை தன்னை முழுமையாகக் கனிவிக்கப் பயன்படப் போவ தாக உணர்ந்து தன்னுடைய உள்ளத்தையும் உணர்வுகளையும் அவற்றுக்குப் பக்குவமான பாத்திரமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.

‘என்னுடைய எண்ணங்களில் இதற்கு முன்பும் இனியும் நீ ஒரு காவிய நாயகனாக உருவாகிக் கொண்டிருப்பவன்’ என்று திருநாங்கூர் அடிகள் என்றோ அவனை வாழ்த்திய வாழ்த்துக்கு விளக்கமாய் நிறைகிற வாழ்வு இந்தக் கதையின் ஐந்தாம் பருவத்தில் இளங்குமரனுக்கு எய்துகிறது.

தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுகுவதற்கு அருமை, தன்னிடமிருந்து பிறர் ஒளிபெறுதல் தான் சார்ந்த இடத்தைத் தன்னுடைய சார்பில் தூயதாக்குதல் ஆகிய பொற்குணங்கள் இந்தப் பருவத்தில் இளங்குமரனின் வாழ்வில் நிறைந்து விளக்கமாகத் தோன்றுகின்றன. எல்லையற்ற நிதானத்தில் போய் நின்று கொண்டு இந்த உலகத்தைப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்ற அவனது எண்ணமும் இந்தப் பருவத்தில் முழுமையாக நிறைகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_5/நிறை_வாழ்வு&oldid=1231723" இலிருந்து மீள்விக்கப்பட்டது