உள்ளடக்கத்துக்குச் செல்

கரிகால் வளவன்/கரிகாலன்

விக்கிமூலம் இலிருந்து
2. கரிகாலன்

குழந்தை பிறந்தது. எப்படிப் பிறக்க வேண்டுமோ, எப்படி வளர வேண்டுமோ அப்படியெல்லாம் இருக்க வகையில்லை. சோழ மண்டலத்தின் சக்கரவர்த்தியாக விளங்க வேண்டிய குழந்தை, இப்போது ஊர் அறியாமல், நாடு அறியாமல் வளர்ந்து வந்தது.

ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள சிலருக்கு மாத்திரம் தெரிந்தது. ஆட்சியை நடத்தி வந்த அமைச்சர்களுக்கும், சில சான்றோர்களுக்கும் தெரியும். அவர்கள் இதற்கு முன் ஊக்கமில்லாமல் இருந்தார்கள். அவர்கள் முகத்தில் வாட்டமே குடி கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் இரும்பிடர்த்தலையாரிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

‘இளஞ்சேட் சென்னி இருந்து பார்த்து முறைப்படி குழந்தையைச் சீராட்டக் கொடுத்து வைக்கவில்லையே!’ என்ற துயரம் அவர்களுக்கு இப்போது உண்டாயிற்று. ஆண்குழந்தை பிறந்த செய்தி அளவில்லாத மகிழ்ச்சியை உண்டாக்கினாலும் வேறு வகையில் அவர்களுடைய உள்ளம் மறுகியது. குழந்தை பிறந்ததை உலகத்தார் அறியத் தெரிவிப்பது உசிதமன்று என்று தீர்மானித்தனர். சோழ நாட்டில் உள்ள சில வேளிர் கலகம் செய்யக் கிளம்பியிருந்தனர்.

குழந்தை பிறந்த செய்தி அவர்களுக்குத் தெரிந்தால் ஏதேனும் செய்துவிடக் கூடும். அரண்மனைக்குக் குழந்தையைக் கொணர்ந்து வளர்த்தால் தக்க பாதுகாப்பு வேண்டும். அதற்குரிய படைப்பலம் இல்லை. ஆகவே, இன்னும் சில ஆண்டுகள் ஒருவரும் அறியாமல் குழந்தை வளர்வதே நல்லது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். இரும்பிடர்த்தலையாரும் அந்த முடிவுக்கு உடன்பட்டார். குழந்தையைக் காக்கும் பொறுப்பு அவரிடமிருந்து அகலவில்லை. இன்ன இடத்தில் குழந்தை வளர்கிறது என்ற செய்தி மிகவும் இரகசியமாகவே இருந்தது.

ஆயினும் சோழ நாட்டு மக்களிடையே ஒரு வதந்தி பரவியது. சோழ குலத்தைக் காப்பாற்ற அரசிக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி அங்கங்கே வழங்கியது. “எல்லாம் பொய், இப்போது ஆட்சி புரிபவர்கள் தங்கள் ஆட்சி மாறாமல் இருக்க வேண்டிக் கட்டிவிட்ட கதை” என்று சிலர் சொன்னார்கள்.

“இளஞ்சேட்சென்னி வாழ்ந்திருந்த காலத்தில் பிறக்காத குழந்தை இப்போதுதான் பிறந்து வளர்கிறது போலும்!” என்று சிலர் ஏளனமாகப் பேசினர்.

“அயலிலுள்ள பாண்டி நாடும் சேர நாடும் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றன! அரசன். இல்லாத நாடும் ஒரு நாடா? பேசாமல் சேரன் ஆட்சியையே ஏற்கலாமென்று தோன்றுகிறது.”

இவ்வாறு பலர் பலவிதமாகப் பேசிக்கொண்டிருந்தனர். மன்னன் ஒருவன் இல்லாமையால் சோழ நாட்டின் பெருமை மங்கியது. காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பும் குறையத் தொடங்கியது.

பகைவர் வர வர உரம் பெற்றனர். பாண்டிய மன்னனோடும், சேரனோடும் சேர்ந்து சூழ்ச்சி செய்தனர். சோழ இளவரசனாகிய குழந்தை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தை பிறக்கவே இல்லை என்ற வதந்தியைப் பரப்பினர். திருமாவளவன் வளர்ந்து வந்தான். தங்கத் தொட்டிலில் வளர வேண்டியவன் மரத்தொட்டிலில்கூட வளரவில்லை. எந்தச் சமயத்தில் குழந்தைக்கு அபாயம் நேருமோ என்ற பயத்தால் அவனைத் தாய் ‘மார்த் தொட்டில்’ இட்டு வளர்த்தாள். பனி நீரால் குளிப்பாட்டினாள். மகிழ்ச்சி பொங்க உடல் பூரிக்க நாளுக்கு நாள் ஆனந்தம் அடைய வேண்டிய அவள் ஒவ்வொரு கணமும் குழந்தைக்கு யாரால் என்ன தீங்கு நேருமோ என்று அஞ்சி நடுங்கினாள்; உள்ளம் சாம்பினாள்; உடல் மெலிந்தாள்.

தாயின் அன்பணைப்பிலே வளவன் வளர்ந்தான். காட்டிலே ஓடி வேட்டையாடி விளையாட வேண்டிய சிங்கக் குட்டி கூட்டிலே கிடந்தது. வளவனுடைய மேனி அழகும், துள்ளிக் குதிக்கும் தோற்றமும், துடியான பேச்சும் தாய் வயிற்றைக் குளிரச் செய்தன; அடுத்த கணம் தீயை மூட்டின. ‘கடவுளே! என் கண்மணி, சோழர் குலத் தோன்றல், இருக்க வேண்டிய நிலையில் இருந்து விளங்கும் காலம் வருமா?’ என்று அவள் அங்கலாய்த்தாள். “காலம் வரும்” என்று ஆறுதல் கூறினார், இரும்பிடர்த்தலையார். குழந்தை தன் தோளைத் தட்டிக்கொண்டு சிரித்தான்.

குழந்தைக்கு இரும்பிடர்த்தலையார் கல்வி புகட்டினார். சோழர் குலப் பெருமையைக் கதை கதையாகச் சொன்னார். தமிழின் சிறப்பை எடுத்துக் காட்டினர். அவர் சங்கப் புலவர் அல்லவா? திருமாவளவன் உடம்பு வளர்ந்தது போலவே அறிவும் வளர்ந்தது. அது கண்டு அன்னையும், அம்மானும் மகிழ்ச்சி கொண்டனர்.

“ஐயோ! குழந்தையைக் காணவில்லையே! இங்கேதான் விளையாடிக்கொண்டிருந்தான். இப்போது காணவில்லையே!” என்று அழுதாள் தாய்.

இரும்பிடர்த்தலையார் காவிரிப்பூம் பட்டினத்துக்குச் சென்றிருந்தார். தக்க பாதுகாப்பைச் செய்து விட்டுத்தான் போயிருந்தார். வளவன் காலையில் தாயோடு பேசிக்கொண்டிருந்தான். “அம்மா, இன்னும் நாலைந்து ஆண்டுகள் போனால் பெரியவனாகி விடுவேன். காவிரிப்பூம் பட்டினத்துக்கு அப்போது போகலாம் அல்லவா? அங்கே போய் நம்முடைய அரண்மனையையும் சிங்காதனத்தையும் பார்க்க வேண்டுமென்று எவ்வளவு ஆசையாக இருக்கிறது தெரியுமா?” என்று சொன்னானே! மாலையில் அவனைக் காணவில்லை. சின்னஞ் சிறு குழந்தையாக இருந்தால் இடுப்பில் வைத்துக்கொள்ளலாம். ஓடியாடிப் பேசி எல்லாம் தெரிந்துகொள்ளும் பருவம் வந்த பிள்ளையைக் கட்டுக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? அவனும் தனக்கு வரக்கூடிய அபாயத்தைத் தெரிந்துகொண்டிருந்தான். காளைப் பருவம் வரவில்லை; சின்னப் பையன் தான். ஆனாலும் ஓரளவு தன்னைத்தான் காத்துக் கொள்ளும் திறமை அவனுக்கு இருந்தது.

அன்னை எங்கெங்கோ தேடினாள்; அழுதாள்; கதறினாள். தெரிந்தவர்களை எல்லாம் அழைத்துத் தேடச் செய்தாள். தெரியாதவர்களையும் கெஞ்சிக் கும்பிட்டு அங்க மச்ச அடையாளங்களைச் சொல்லித் தேடச் சொன்னாள். வளவன் அகப்படவில்லை. உயிர்க்கழுவில் நின்று துடித்தாள் தாய். அவளுடைய நெட்டைக் கனவெல்லாம் எப்படி ஆகிவிடுமோ? குழந்தைக்காக அல்லவா அவள் உயிரோடிருக்கிறாள்? பெண்ணாகப் பிறந்தவள் ஊரைக் கடந்து ஓடிப்போய்த் தேட முடியுமா? கனலில் விழுந்த புழுவைப் போலத் துடிதுடித்தாள். தன் தலைவிதியை நொந்து அரற்றினாள். குழந்தை போனவன்தான்; வரவில்லை.

மறுநாள் இரும்பிடர்த்தலையார் வந்தார். வரும் போதே அவருக்கு வீடு விளக்கமற்றிருப்பது தெரிந்தது. உள்ளே புகுந்தாரோ இல்லையோ, “அண்ணா! இனிமேல் நான் என்ன செய்வேன்” என்று தலைவிரி கோலமாக அரசி அவர் காலில் வந்து விழுந்தாள்.

“குழந்தை எங்கே?”

இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு நான்கு புறமும் பார்த்தார் புலவர்.

“குழந்தையைப் பறிகொடுத்துவிட்டேனே!” என்று அழுதாள் அவள்.

“நான் புறப்படும்பொழுது நன்றாகத்தானே இருந்தான்? அதற்குள் அவனுக்கு என்ன வந்தது?”

“ஐயோ! அவனை நேற்றிலிருந்து காணவில்லை. எந்தப் பாவி தூக்கிக்கொண்டு போனானோ! என்ன செய்தானே! என் கண்மணி உயிரோடு இருக்கிறானோ, இல்லையோ ஐயோ! நான் என்ன செய்வேன்!”

ஒரு கண நேரம் இரும்பிடர்த்தலையார் செயலற்று நின்றார். உலகமே சுழன்றது. பிறகு எல்லாம் அப்படியே திடீரென்று இயக்கம் ஒழிந்து நின்றுவிட்டதுபோல் இருந்தது. நின்று நிதானித்தார். அவர் எதிர்பார்த்ததுதான் இது. இது நேரக்கூடாதென்று எத்தனையோ கட்டுக்காவலாக இருந்தார். ஆனாலும் விதி யாரை விட்டது? நடப்பது நடந்தே தீரும்.

இந்த அலங்கோல நிலையில் அவருக்கு ஒரு சிறிய ஆறுதல் ஏற்பட்டது. அவர் முதலில் அஞ்சியது போல, இளவரசன் இறந்து போகவில்லை. யாரோ வஞ்சகருடைய சூழ்ச்சியால் மறைந்து விட்டான். தாய் புண்ணியம் செய்திருந்தாளானால், சோழர்குலம் புண்ணியம் உடையதானால், சோழ நாடு பாக்கியம் பெற்றதானால், இன்னும் நம்பிக்கைக்கு இடம் உண்டு.

இளைஞன், தக்க பருவம் வராதவன் வளவன். ஆனால் எளிதிலே ஏமாந்து போகிறவன் அல்லன். சோழர் குலத்தின் வீரக்குருதி அவன் நரம்புகளில் ஓடியது. சோழர் கொடியான புலியைப்போல அவன் பதுங்கிப் பாயும் திறமையுடையவனாகலாம்.

அவன் தோளில் வீரத்தின் செறிவு இருந்தது. அவன் பேச்சில் ஆண்மையின் அழுத்தம் இருந்தது.

“ஒருகால் காவிரிப்பூம்பட்டினத்துக்குத் தானாகப் போய்வரலா மென்று புறப்பட்டிருப்பானா? அன்று ஒரு நாள் அந்த நகரத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருப்பதாகச் சொன்னானே!” என்று தாய் கூறினாள்.

“இருக்கலாம். அங்கே போய்த் தேடுகிறேன். அநேகமாக அந்த நகரத்தில் இருக்கக் கூடுமென்றே தோன்றுகிறது” என்றார் புலவர்.

இதை அவர் மனப்பூர்வமாகச் சொல்லவில்லை. தாயின் வேதனையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தினால், அவள் கொண்ட ஐயத்தில் உண்மை இருப்பதாகக் காட்டினார். அவருக்கு அந்தச் சந்தேகமே இல்லை. இளவரசன் மிகவும் கூரிய அறிவுடையவன். யாரிடமும் சொல்லாமல் போகமாட்டான். இதை அவர் தெரிந்து கொண்டிருந்தார்.

“சரி, நான் போய் வருகிறேன். குழந்தையை அழைத்துக்கொண்டே வருவேன். நீ கவலையுறாமல் கடவுளின்மேல் பாரத்தைப் போட்டு இரு” என்று விடைபெற்றார் புலவர்.

“அண்ணா, நான் குழந்தையைக் காண்பேனா?” என்று அழுதாள் அவள். “நான் பாவி! குழந்தையைப் பக்கத்திலே இருக்கும்படி சொல்லாமற் போனேனே!” என்று புலம்பினாள்.

“அதையெல்லாம் இப்போது நினைத்துப் பயன் இல்லை. குழந்தை கிடைத்து விடுவான் என்றே எனக்குத் தோன்றுகிறது. இவ்வளவு காலம் பாதுகாத்த திருவருள் இனியும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீ கவலைப்படாமல் இரு.”

இரும்பிடர்த்தலையார் புறப்பட்டுவிட்டார். காவிரிப்பூம் பட்டினத்திற்கா? இல்லை, இல்லை. அங்கே அவருக்கு என்ன வேலை? இளவரசனை இழந்து விட்டேன் என்று சான்றோர்களிடம் சொல்லப்போவதானால் போகலாம்!

என்ன செய்வது, எங்கே போவது என்ற திட்டமே இல்லாமல் அவர் புறப்பட்டார். கால் போன வழியே நடந்தார். தம் தங்கைக்கு முன் தம் துயரத்தை வெளியிடவில்லை. இப்போது அவர் உள்ளத்துக்குள்ளே புதைந்திருந்த துயரம் வந்து கப்பிக்கொண்டது. கால் தள்ளாடியது. கண்ணில் நீர்த்துளிகள் தோன்றிப் பார்வையை மறைத்தன. தலை கிறுகிறுத்தது.

திர்பாராத வகையில் சிக்கிக்கொண்டான் இளவரசன். யாரும் இல்லாத காலத்தில் இரண்டு முரடர்கள் அவனை மறித்துப் பிடித்துக்கொண்டார்கள். ஆட்டுக் குட்டியைப் போல் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். இளவரசன், “ஐயோ!” என்று கத்தவில்லை. அந்த வார்த்தை அவன் குலத்தினர் வாயில் வராதது. தன்னால் ஆனவரையில் முரணிப் பார்த்தான். முரடர்களின் பலத்துக்கு முன் அவன் பலம் எம்மாத்திரம்?

பகைவர்கள் ஒற்றர்களை ஏவி அரசி இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டார்கள். பிறகு அவளுக்குக் குழந்தை பிறந்து வளர்ந்து வருவதையும் அறிந்தார்கள். மேற்கொண்டு ‘முளையிலே கிள்ளி எறியும்’ வேலையிலே முனைந்தார்கள். அதன் பயனாகத்தான் இளவரசன் திருமா வளவன் முரடர்கள் கையிலே சிக்கினான்.

ஏதோ ஓரிடத்துக்கு அவனைக் கொண்டு போனார்கள். ஒரு வீட்டில் அடைத்து விட்டார்கள்.

பாவம்! இளம் பாலகன்; உலகம் இத்தகையதென்றே அறியாதவன்; உலக விரிவைக் காணக் கொடுத்து வைக்காதவன்; கூட்டிலே வளரும் சிங்கக் குட்டியைப்போல வளர்ந்தவன்; தான் வாழும் பெரிய சிறையை விட்டுப் பகைவர் புகுத்திய சிறிய சிறையில் இப்போது கிடந்தான். அங்கே அன்னை இருந்தாள்; அம்மான் இருந்தார். இங்கே என்ன இருந்தது? இருள் இருந்தது; பகைவர்களின் கொடுமை இருந்தது.

இந்த இடத்திலிருந்து மீள வழியுண்டா என்று ஆராய்ந்தான். மேலே கூரை வேய்ந்திருந்தது. பெரிய கட்டிடம் அல்ல; சிறிய வீடு அது. மனிதர்கள் பேசும் குரலே காதில் விழவில்லை. வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு வெளியேற முடியுமா? அது முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. கத்திப் பார்த்தான். “மாமா! அம்மா!” என்று அழைத்தான். யாரும் ஏனென்று கேட்கவில்லை.

காட்டுக்கு நடுவில் அந்த இடம் இருக்க வேண்டுமென்று தோன்றியது. உண்மையில் சோழ நாட்டிலே அவ்விடம் இருக்கவில்லை. சோழ நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடையில் கருவூரை அடுத்த ஒரு சிறிய காட்டில் திருமா வளவனைச் சிறை செய்திருந்தார்கள் பாவிகள்!

அயர்வினால் இளவரசன் தூங்கிவிட்டான். எவ்வளவு காலம் தூங்கினானோ, தெரியாது. ஏதோ ஆளரவம் கேட்டு விழித்துக் கொண்டான். வெளியிலே யாரோ பேசினார்கள். பேச்சுத் தெளிவாகக் காதில் விழவில்லை. “யார் அங்கே?” என்று கேட்டான். அவர்கள் விடை கூறவா வந்தார்கள்?

மாபாவிகள் அந்தச் சோழர் குலக்கொழுந்தை உயிரோடு கொளுத்திவிட வந்தார்கள். நள்ளிருளில் இந்தக் காரியத்தைச் செய்ய வந்திருந்தார்கள். அந்தக் கூரை வீட்டில் நெருப்பு வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

உள்ளே இருந்த சிறுவனுக்குப் புகை நாற்றமும் மூங்கில் வெடிக்கும் ஓசையும் தெரிந்தன. ஒரே வெளிச்சம் தோன்றியது. அண்ணாந்து பார்த்தான். கூரை தீப்பிடித்துக்கொண்டது தெரிந்தது. “ஆ!” என்று கூவினான். இனி எப்படி தப்புவது? கதவை இடித்தான்; தன் பலத்தை யெல்லாம் சேர்த்து இடித்தான்; அது வழி விடவில்லை. மேலே கூரை பற்றி எரிந்தது. நெருப்புக் கங்குகளும் எரிந்த மூங்கில்களும் கீழே விழுந்தன. எரியாத கூரைப் பகுதிக்கு அடியிலே போய் ஒன்றிக் கொண்டான். அந்தப் பகுதி எரிந்துவிட அதிக நேரம் செல்லாதே! கூரை முழுவதும் நெருப்புக் கோளமாகி அவன் தலைமேல் விழப்போகிறது; அப்புறம்?

ஓடி ஓடி ஒதுங்கினான். “அம்மா! அம்மா! மாமா! மாமா!” என்று கதறினான். தந்தையையோ பிறரையோ கூப்பிட்டுப் பழக்கம் இருந்தால் அல்லவா அவன் வாயில் வேறு வார்த்தை வரும்?

நெருப்பு வாண வேடிக்கை செய்துகொண்டிருந்தது. அந்தச் சடசடா ஓசையினூடே அவன் போட்ட சத்தம் வெளியிலே கேட்குமா?

இன்னும் அரை நாழிகையில் திருமா வளவன் உயிரோடு வேகப் போகிறான். தீ நாக்குகள் தாவித் தாவிப் பிடிக்க வருகின்றன. அவன் கனல் வேகம் காந்த, மூலையிலே ஒன்றுகிறான். “அம்மா!” என்று கத்துகிறான். “மாமா!” என்று கூவுகிறான்.

“மாமா!” — நீண்ட கூச்சல் போட்டு விழப் போனான்.

“வௗவா!” என்று ஓர் ஒலி கேட்டது. அவன் சற்று நிதானித்தான். மயக்கம் வந்தாலும் நினைவை இறுக்கிப் பிடித்துக் காதிலே பொருத்தினான். “மாமா!” என்று மறுமுறையும் கூவினான்.

“என் கண்ணே!” என்று ஒரு குரல் பதில் கொடுத்தது.

மாமாவே வந்துவிட்டார். இரும்பிடர்த்தலையார் எங்கெங்கோ அலைந்தவர், அந்த நேரத்துக்கு அங்கே வந்துவிட்டார். எங்கும் அலைந்து அலைந்து தேடினார். இந்த இரவில் இந்தச் சிறு காட்டின் வழியே வந்தார், நெருப்பு எரிவது அவர் கண்ணிலே பட்டது. அங்கே வந்தார், “மாமா!” என்ற குரலைக் கேட்டார். அது வளவனுடைய குரல் என்று தெளிவாகத் தெரிந்தது. ஒரு கணத்தில் எல்லாவற்றையும் ஊகித்துக் கொண்டார். பெரிய கற்களைக் கொண்டுவந்து கதவை உடைத்தார். பிளந்தது கதவு. உள்ளே நோக்கினார். மூலையில் ஒன்றிக்கொண்டு கதறிய இளவரசன் அவரைக் கண்டதும் ஓடிவந்தான். நெருப்பை மிதித்துக் கொண்டு ஓடிவந்தான். அவரைக் கண்ட வேகத்தில் அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. இரண்டு தாவிலே தாவி இரும்பிடர்த்தலையார் காலடியில் வந்து விழுந்தான். அதன்பின் அவனுக்கு நினைவு தப்பிவிட்டது.

திருமா வளவன் நினைவு வந்து பார்த்தபோது தான் ஒரு கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தான். காலில் ஏதோ எரிச்சல், அருகில் இரும்பிடர்த்தலையார் இருந்தார். கண்ணை விழித்தான்; “மாமா” என்றான்.

“என் கண்ணே! என் வயிற்றில் பாலை வார்த்தாயா?” என்று கேட்டுக்கொண்டே குனிந்து பார்த்தார் அருமை அம்மான்.

“இந்தா, இதைச் சாப்பிடு” என்று எதையோ குடிக்கக் கொடுத்தார். அதைக் குடித்தான். சற்றுத் தெம்பு வந்தது.

“நான் எங்கே இருக்கிறேன்?”

“ஆண்டவன் அருள் நிழலில் இருக்கிறாய் என்று பதில் வந்தது. இரும்பிடர்த்தலையார் தழுதழுத்த குரலோடு பேசினார்.

“அம்மா எங்கே?”

“வந்துவிடுவாள்.”

கருவூரில் யாரும் அறியாத ஓரிடத்தில் இரும்பிடர்த்தலையாரின் பாதுகாப்பில் திருமா வளவன் நெருப்புக் காயம் பட்டுக் கிடந்தான். அவன் காலில் நெருப்புத் தன் சக்தியைப் பூரணமாகக் காட்டிவிட்டது. இரும்பிடர்த்தலையார் சோழ நாட்டிலிருந்து தம் நண்பராகிய மருத்துவரை அழைத்து வந்தார். அவர் கட்டுக் கட்டினார். தாயும் வந்து சேர்ந்தாள்.

சில நாட்கள் மருந்து கட்டினார்கள். கடைசியில் கட்டை அவிழ்த்தார்கள். அந்த அழகிய கால் கறுப்பாகக் கரிந்திருந்தது. பகைவருடைய வஞ்சகச் செயலுக்குச் சாட்சியாக அந்தக் கரிந்த கால் இருந்தது. “உயிருக்கு வந்தது காலோடு போயிற்றே!” என்று ஆறுதல் அடைந்தாள் தாய்.

அன்று முதல் திருமா வளவன் கரிகாலன் ஆனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கரிகால்_வளவன்/கரிகாலன்&oldid=1232608" இலிருந்து மீள்விக்கப்பட்டது