உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டியன் நெடுஞ்செழியன்/நிறைந்த வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து
11 நிறைந்த வாழ்வு

மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சி தமிழ்ப் புலவருக்கு இன்பத்தை உண்டாக்கியது; பன்னூறு ஆண்டுகளாகியும் இன்றும் அது பழைய மதுரையின் வளத்தைக் காட்டிக்கொண்டு இன்புறுத்துகிறது. அது பாடப்பெற்ற அப்போதே மருதனார் எதிர்பார்த்த பயனை உண்டாக்கியது. அரசன் பன்முறை அந்தப் பாட்டைக் கேட்டான். தனக்கு அறிவுரை கூறுவதற்காகவே மருதனார் அதைப் பாடினார் என்பதை அவன் நன்கு தேர்ந்தான். சென்ற நாட்களில் சிந்தனையை ஓட்டினான். போர், போர் என்றே பல காலத்தைக் கழித்துவிட்டதை நினைந்து இரங்கினான். அறம் வளரவும் வீட்டு நெறிக்குரிய திறம் வளரவும் என்ன என்ன செய்யவேண்டும் என்று பெரியோர்களோடு இருந்து ஆராய்ந்து அவற்றைச் செய்யத் தலைப்பட்டான்.

அவனுடைய செயல்களால் குளங்களும் ஏரிகளும் செப்பம் அடைந்தது போல, உடைந்து போயிருந்த சான்றோர் உள்ளமும் புலவர் நெஞ்சமும் கவலை தீர்ந்து நிறைவடைந்தன. கருவிலே வள்ளன்மையையுடைய அரசன் தான் போரிலே பெற்ற பொருள்களை வாரி வாரி வழங்கினான். நல்ல வேள்விகளைச் செய்தான். அறத்துறைகளை வளர்த்தான். தெய்வத் திருக்கோயில்களே எடுப்பித்தான். வழிபாடுகள் சிறப்புடன் நடைபெறச் செய்தான். பலவேறு விழாக்கள் நடத்தினான்.

அப்போது அவனுக்கே அமைதி யென்பது இன்னது என்ற உணர்ச்சி பிறந்தது. ஞான நூல்களைத் தக்கார் வாயிலாகக் கேட்டான். இந்த அமைதியிலே கிடைக்கும் இன்பத்துக்கு ஈடில்லை என்பதை அநுபவத்திலே தெளிந்தான்.

பிற நாட்டார் வந்து பாண்டி நாட்டில் நிலவும் அமைதியைக் கண்டு வியந்து பாராட்டினார்கள். மக்களிடம் உள்ள மன நிறைவு அவர்களைக் கவர்ந்தது. ஆக்க வேலைகளிலும் அமைதி பெறும் வழியிலும் ஈடுபட்ட அரசனை வணங்கிப் போற்றினார்கள். வேற்று நாட்டு மன்னர்கள் நெடுஞ்செழியனிடம் நட்புப் பூண்டு அடிக்கடி கையுறைகளுடன் வந்து கண்டு மகிழ்ந்தார்கள். அவன் செய்யும் நற் கருமங்களுக்குத் துணையாக நின்று ஏவல் செய்தார்கள்.

இந்தக்காட்சியைக் கண்ட மாங்குடி மருதனாருக்கு உவகை தாங்கவில்லை.

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றமாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே[1]

என்று பாடினார்.

புலவர்கள் அவன் புகழைப் பலபடியாக விரித்துப் பாடினார்கள். யாழ் வாசிக்கும் பாணர்கள் வந்து பாடிப் பரிசில் பெற்றார்கள். பொருநரும் விறலியரும் கூத்தருமாகிய கலைஞர்களின் கலையை அமைதியாக இருந்து நுகர்ந்து பரிசு பல வழங்கினான் அரசன்.

குடிமக்கள், தம் குறைகளை வேண்டும் பொழுதெல்லாம் அரசனை அணுகி எடுத்து இயம்பி, அவன் அவற்றைக் கேட்டு ஆவன செய்வதனால் குறைகள் நீங்கி இன்பம் பெற்றார்கள். தொழிலும் கலையும் சிறந்து விளங்கின. அறம் மலரவும் பொருள் கனியவும் இன்பம் பொங்கவும், மக்கள் தம் அரசனைப் போல வீட்டு நெறிக்குரிய நற்செயல்களைச் செய்வதனால் அமைதி பெருகவும் எங்கும் வள வாழ்வு மல்கியது.

புறப் பகைகளைக் களைந்து வென்று மிடுக்கிலே தலை நிமிர்ந்து நின்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இப்போது அறத்துறைகளை நிறைவேற்றி, மெய்ஞ்ஞான நெறியிலே சிந்தையைச் செலுத்தி, இறை வழிபாடும் பெரியோரைப் பேணலாகிய நற்செயல்களைத் தவறாமற் செய்து, அமைதியும் நிறைவும் பெற்று வாழ்ந்தான். அகப் பகையாகிய போர் ஆசையும் பேராசையும் அவனிடமிருந்து ஒழிந்தன.

அவன் புகழ் நாடுகடந்து சென்றது. தண்டமிழ்ப் பாடல்களில் நின்று காலங் கடந்தும் வந்து அப்புகழ் மணக்கிறது.


  1. அமைந்த கேள்வியையும் ஐம்புலனும் அடங்கிய விரதங்களேயும் நான்கு வேதத்தையுமுடைய அந்தணர் சுற்றமாக, வேந்தர் தக்க ஏவல்களைச் செய்ய நிலைபெற்ற வேள்வியைச் செய்து முடித்த வேந்தனே!