பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்ன பாவம் செய்தேன்?

205

முன்போல், ‘'ராஜினி, ராஜினி!" என்று அப்பா என்னை அழைக்கும் போது, அந்தக் குரலில் தேனின் இனிமையும் பாலின் சுவையும் கலந்திருப்பது போல் எனக்குத் தோன்றுவதில்லை; விஷமும் விளக்கெண்ணெயும் கலந்திருப்பது போல் தோன்றும்.

"ஏன் அப்பா" என்று கேட்டுக் கொண்டே வந்தால் அவர் முன்போல் என் கண்ணத்தை அன்புடன் கிள்ளி, ஆசையுடன் தூக்கிவைத்துக் கொள்வதில்லை. "போ, உள்ளே! இன்னொரு தரம் அங்கேயெல்லாம் போனாயோ, உன் காலை ஒடித்து விடுவேன்!" என்று எரிந்து விழுந்தார்.

அவர் மட்டுமா? அம்மாவும், "காப்பிகூடச் சாப்பிடாமல் இத்தனை நாழி எங்கே போயிருந்தாயாம்?" என்று முன் போல் என்னைச் செல்லமாகக் கடிந்து கொள்வதில்லை; “இத்தனை நாழி வெளியே என்னடி வேலை, உனக்கு? பேசாமல் ஒரு மூலையைப் பார்த்துக் கொண்டு உட்காரு? என்பாள், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.

"இதென்ன வேடிக்கை! இவர்கள் இப்படி எரிந்து விழும்படியாக நாம் என்ன குற்றம் செய்தோம்?" என்று ஒன்றும் புரியாமல் நான் திரு திரு வென்று விழிப்பேன்.

என் வாழ்நாட்கள் இப்படியே புரிந்தும் புரியாமலும் சென்று கொண்டிருந்தன. கடைசியில் என் பெற்றோர் கவலையைத் தீர்க்கும் அந்த நாளும் வந்தது. “இதுவரை உன் பெற்றோர் உன்னைக் காப்பாற்றியது போதும்; இனி மேல் நான் காப்பாற்றுகிறேன், வா!" என்று சொல்லிக் கொண்டு யாரோ முன் பின் தெரியாத ஒருவன் வந்து என் கரங்களைப் பற்றினான். நானும் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன்.

தங்கள் கவலை தீர்ந்ததென்று எண்ணியோ என்னமோ, என் பெற்றோர் எனக்குக் கல்யாணமான சில வருடங்களுக்கெல்லாம் ஒருவர் பின் ஒருவராகக் கண்ணை மூடிவிட்டார்கள்.

***

ன் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் முடிந்து, இரண்டாம் அத்தியாயம் ஆரம்பமாயிற்று. அதாவது நேற்று வரை என்தந்தைக்குப் பாரமாயிருந்த நான், இன்று, என் கணவருக்குப் பாரமானேன்.