பாசமுள்ள நாய்க்குட்டி/கோலபுரி ஊர்வலம்

விக்கிமூலம் இலிருந்து

கோலபுரி என்ற ஊரிலே வண்ணங்கி என்ற ஒரு மன்னன் இருந்தான்.

மன்னன் வண்ணங்கி எப்போதும் இன்பமாகவேயிருந்தான். அவனுக்குப் புதுப் புது ஆடைவகைகளையணிவதில் விருப்பம் மிகுதி. காலையில் எழுந்தவுடன் ஓர் ஆடையணிவான்; குளித்தவுடன் மற்றோர் ஆடையணிவான்; அரசவைக்கு வரும்போது வேறோர் ஆடை அணிவான்; பகல் உணவுக்கு ஒர் ஆடையணிவான்; பிற்பகலில் இன்னுமோர் ஆடையணிவான்; நகர்வலம் வரும்போது ஒவ்வொரு வீதி கடந்ததும் ஓர் ஆடை மாற்றுவான். வேட்டைக்குச் சென்றால் அதற்கென்று ஓர் ஆடை, நீதிவிசாரணையின் போது மற்றோர் ஆடை. இப்படி அவன் ஒரு நாளைக்கு இருபது ஆடை மாற்றுவான். முதல் நாள் உடுத்திய ஆடையை மறுநாள் பயன்படுத்த மாட்டான். அவனுடைய பணம் முழுவதும் ஆடைக்காகவே செலவிட்டான். அவனுடன் நெருங்கிப் பழகுவோர், அவன் புதிதுபுதிதாகப் பூணும் உடைகளின் அழகைப் புகழுவார்கள். அவர்களுக்கு உடனே பரிசு, அல்லது பதவி கிடைக்கும்.

கோல புரிக்கு ஒரு நாள் மூன்று ஆட்கள் வந்தார்கள். ஏமாற்றிப் பிழைப்பதே அவர்கள் தொழில். நாடுநாடாகச் சென்று பெரிய மனிதர்களோடு பழகி அவர்களை ஏமாற்றிப் பணம் பறித்துப் பறித்துப் பழகியவர்கள்.

பத்தன், சித்தன், முத்தன் என்ற பெயருடைய அந்த எத்தர்கள் மூவரும் கோலபுரி ஊரைச் சுற்றிப் பார்த்தார்கள். அரசாங்க அதிகாரிகள், மக்கள் ஆகியோரிடம் அந்த அரசனைப்பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார்கள்.

ஆடைப் பைத்தியம் பிடித்த அரசனை ஏமாற்றிப் பணம் பறிக்க ஒரு திட்டம் தீட்டினார்கள்.

ஒருநாள் அவர்கள் அரசனைப் பார்க்க அரண்மனைக்குச் சென்றார்கள்.

பத்தன் தான் துணி நெய்வதில் வல்லவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் சித்தன் தான் ஆடை தைப்பதில் சூரன் என்று சொல்லிக் கொண்டான்.

முத்தன் தான் சாயங் கொடுப்பதில் தலை சிறந்தவன் என்று கூறினான்.

"நாங்கள் மூவரும் சேர்ந்து உருவாக்கும் ஆடையைப் போல் இந்த உலகத்தில் இதுவரை யாரும் செய்ததில்லை" என்று மூவரும் கூறினார்கள்.

‘அரசே, தாங்கள் விரும்புவீர்களானால், தங்களுக்கு ஓர் அதிசயமான மாய ஆடையை நாங்கள் உருவாக்கித் தருகிறோம். துணியின் தரத்திற்கோ தையல் வேலையின் திறத்திற்கோ, அதற்குக் கொடுக்கும் வண்ணச் சாயத்தின் அழகுக்கோ ஈடாக நீங்கள் எதையும் காண முடியாது. இந்த அதிசயமாய ஆடையின் தன்மை என்ன வென்றால், தன் கடமையைச் சரிவரச் செய்யாத ஒருவனோ, ஒர் அறிவற்ற முட்டாளோ பார்ப்பானாயின் இந்த ஆடை அவன் கண்ணுக்குத் தெரியாது. கண்ணால் பார்த்தவர்களோ அதன் அழகையும், திறத்தையும், நிறத்தையும் வியந்து பாராட்டிக் கொண்டேயிருப்பார்கள்.

‘அரசே இப்படிப்பட்ட ஆடையொன்று தங்களுக்குத் தேவையா; அப்படியானால் எங்களுக்குக் கட்டளை யிடுங்கள்’ என்று அவர்கள் கேட்டார்கள்.

"விந்தையான அந்த ஆடையைப்பற்றி நீங்கள் சொல்லும்போதே என் சிந்தையைக் கவர்கின்றதே! நிச்சயமாக நான் அந்த ஆடையை அணிந்து கொள்ளவிரும்புகிறேன்.

"கலைஞர்களே, உங்கள் கூட்டு முயற்சியால் உருவாகும் ஆடையை அணிந்து கொண்டு நான் நகர்வலம் வர விரும்புகிறேன். உங்களுக்கு எத்தனை பொன் வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள். நாளைக்கே வேலையைத் தொடங்குங்கள். ஒரு வாரத்தில் உங்கள் ஆடையை எதிர்பார்க்கிறேன்” என்றான் கோலபுரி அரசன் வண்ணங்கி. அந்த எத்தர்கள் அரசனிடம் ஆயிரம் பொன் அச்சாரமாக வாங்கிக் கொண்டார்கள். அன்றே கடைத் தெருவுக்குச் சென்று ஒரு கைத்தறியும், ஒரு தையற் பொறியும், ஓர் அடுப்பும், சாயங் காய்ச்சுகிற பானையும் வாங்கிக் கொண்டு வந்தார்கள். அவர்களுக் கென்று ஒதுக்கப்பட்ட கூடத்தில் இவற்றைக் கொண்டு வந்து இறக்கினார்கள்.

முதல் இரண்டு நாட்கள் பித்தன் கைத்தறியில் நூல் இல்லாமலே வேலை செய்து கொண்டிருந்தான். சித்தனும் முத்தனும் உதவி புரிவதுபோல் பாவனை செய்து கொண்டிருந்தனர்.

அடுத்த இரண்டு நாளும் சித்தன் தையற் பொறியை ஒட்டிக் கொண்டிருந்தான். துணியில்லாமலே, தையற்பொறி வேலை செய்து கொண்டிருந்தது. பித்தனும் முத்தனும் தூக்கிப் பிடித்துக் கொள்வது, போலவும் எடுத்துக் கொடுப்பது போலவும் நடித்துக் கொண்டிருந்தனர்.

மற்ற இரண்டு நாட்களும், முத்தன் சாயப்பானையில் தண்ணீர்ஊற்றிக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். வெறுங்கையினால் துணியைச் சாயத்தில் நனைப்பது போலவும் காயப் போடுவது போலவும், பாசாங்கு செய்து கொண்டிருந்தனர்.

ஏழாவது நாள் மன்னன் வண்ணங்கி தனக்காக உருவாகியுள்ள ஆடையைப் பார்த்துவரப் புறப்பட்டான். அரசமண்டபத்திலிருந்து இரண்டுபடி கீழிறங்கிய பிறகுதான், மன்னனாகிய தானே போவது தன் தகுதிக்கு ஏற்றதல்ல என்று எண்ணித் தன் அமைச்சர்களில் ஒருவரைக் கூட்டிவரும்படி ஆளனுப்பினான்.

அந்த அமைச்சர் போய்ப் பார்த்துவந்தால் ஆடையைப் பற்றி அறிந்து கொள்வதோடு, அவர் கடமை தவறாதவரா? அறிவாளியா என்பதையும் ஐயமறத் தெரிந்து கொள்ளலாமே என்று அரசன் எண்ணினான்.

அரசன் கட்டளைப்படி அமைச்சர் புதிய ஆடையைப் பார்த்துவரப் புறப்பட்டார்.

அமைச்சர் தங்கள் கூடத்தை நோக்கி வருவதைக் கண்ட எத்தர்கள் eச்சரிக்கையானார்கள். எப்படி நடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.

அமைச்சர் கூடத்திற்குள் நுழைந்தவுடன், அவருக்கு ஒரு நாற்காலி போட்டு உட்கார வைத்தார்கள். மூன்று பேரும் அடக்கஒடுக்கமாக வணங்கி நின்றார்கள்.

‘ஆடை உருவாக்கி விட்டீர்களா?’ என்று அமைச்சர் கேட்டார்.

பெருமானே, இதோ எடுத்துவருகிறோம் என்று மூன்று பேரும் கிளம்பினார்கள். ஒரு மேசையின் மேல் மடித்து வைத்துள்ள ஆடையை எடுத்து விரிப்பது போல், பத்தன் நடித்தான். விரித்துப் பிடித்த போது தரையில் பட்டுவிட்ட துணியைத் தூக்கிப் பிடிப்பது போல் சித்தன் நடித்தான். காற்றில் பறந்துவந்த தூசி துணியின் மேல் பட்டது போல அதை அங்கங்கே தட்டிவிடுவது போல் நடித்தான் சித்தன்.

அமைச்சர் கண்ணுக்கு இவர்களுடைய நடிப்புத் தெரிந்ததே தவிர துணி தெரியவே இல்லை. துணியிருந்தால் அல்லவா தெரியும்! அமைச்சர் சிந்தித்தார் துணி கண்ணுக்குத் தெரியவில்லை என்று சொன்னால், அரசர் தான் கடமை தவறியவன் என்றோ, அறிவற்ற முட்டாள் என்றோ எண்ணிவிடக், கூடும். ஆகவே, தான் உடையைப் பார்த்ததாகவே காட்டிக் கொள்ள வேண்டும் என்று மனத்துக்குள் முடிவு செய்து கொண்டார்.

“பெருமானே, துணிஎப்படியிருக்கிறது?” என்று கேட்டான் பத்தன்.

“தளதள வென்று பட்டுப் போல் இருக்கிறது” என்றார் அமைச்சர்

“தையலைப் பற்றித் தாங்கள் ஒன்றும் சொல்ல வில்லையே!” என்று வினவினான் சித்தன்.

“சீராக இருக்கிறது” என்றார் அமைச்சர்.

“பெருமானே துணியின் நிறம் எப்படியிருக்கிறது?" என்று கேட்டான் முத்தன்.

“பொன்னின் வண்ணம் தான்!” என்று அமைச்சார் பராட்டினார். தங்கள் சூழ்ச்சியில் அமைச்சர் சரியாக ஏமாந்து விட்டார் என்று எத்தர்கள் தெரிந்து கொண்டார்கள்.

“பெருமானே உடையின் சிறப்பைப் பற்றி அரசரிடம் எடுத்துக் சொல்லுங்கள். முதலில் இந்த உடையை நாங்களே எடுத்து வந்து அரசருக்கு எங்கள் கைகளாலேயே அணிந்து விட விரும்புகிறோம்” என்றார்கள்.

“அப்படியே செய்யலாம்!” என்று கூறி அமைச்சர் அரசவை மண்டபத்திற்கு வந்தார்.

அங்கே அரசர் ஆவலோடு காத்திருந்தார்.

அமைச்சரைக் கண்டவுடனே, “எப்படியிருக்கிறது” என்று கேட்டார்.

அமைச்சர் அந்த உடையைப் பற்றிப் பெரிதாகப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்.

“பட்டினும் சிறந்த பளபளப்பு! பொன்னினும் சிறந்த வண்ணம்! இதுபோன்ற எடுப்பான உடையை நான் இதுவரை பார்த்ததேயில்லை என்று அமைச்சர் அளந்து கொட்டினார். இதைக் கேட்ட அரசன் மற்றும் ஓர் ஆயிரம் பொன் அந்தக் கலைஞர்களுக்கு வழங்கும்படி கட்டளையிட்டான்.

அவையில் இருந்தவர்கள் இதைக்கேட்டு வியப்படைந்தனர். ஊரெங்கும் இந்த உடையைப் பற்றியே பேச்சாய் இருந்தது.

ஊர்மக்கள் இந்த விந்தையான உடையில் அரசரைப் பார்க்க விரும்புவதால் மறுநாளே ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடுசெய்தார்கள் அமைச்சர் அவையினர்.

மறுநாள் ஊர்வலத்துக்குத் தான் அணிந்து கொள்ளப்போகும் அந்த உடையை, முன்னாலேயே பார்க்க வேண்டும் என்று அரசன் துடித்தான். ஆனால் தன் அவசரத்தை வெளியில் காட்டிக் கொள்ள அவன் விரும்ப வில்லை.

நள்ளிரவு நேரம். அரசன் வண்ணங்கி தன் படுக்கையிலிருந்து எழுந்தான்.

ஒரு காவல்வீரன் போல் மாறுவேடம் போட்டுக் கொண்டான். கலைஞர்கள் இருக்கும் கூடத்திற்குச் சென்றான். அந்த எத்தர்கள் மூன்று பேரும் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அரசன் வண்ணங்கி கூடம் முழுவதும் தேடிப் பார்த்தான். அங்கிருந்த மேசையிழுப்புகள் பெட்டிகள், அலமாரித் தட்டுகள் எல்லாம் திறந்து பார்த்தான். எதிலும் உடையைக் காணவில்லை. அவர்களை எழுப்பிக் கேட்கலாமா என்று எண்ணினான். பிறகு, சரி காலையிலேயே பார்த்துக் கொள்ளலாம், என்று தன் படுக்கை யறைக்குத் திரும்பிவந்தான்.

காலையில் அரசன் நீராடி முடிந்தபின், அந்த எத்தர்கள் மூவரும் அலங்கார மண்டபத்துக்கு அழைத்துவரப் பட்டனர். அவர்கள் கையில் ஒரு ஒலைப்பெட்டியிருந்தது. அதை மிகப்பத்திரமாகப் பத்தன் தூக்கிக் கொண்டு வந்தான்.

அரசனை அந்த எத்தர்கள் ஒரு நாற்காலியில் உட்காரவைத்தனர். அவன் அணிந்திருந்த ஆடைகளை யெல்லாம் கழற்றினர். தங்கள் கொண்டு வந்திருந்த ஒலைப்பெட்டியைத் திறந்தனர். அரசன் ஆவலோடு பெட்டிக்குள் எட்டிப் பார்த்தான். அதில் ஒன்றுமே இல்லை. ஆனால் அதில் ஒரு மென்மையான பட்டுத்துணி யிருப்பதுபோலவும், அதை மிகப் பக்குவமாக எடுப்பது போலவும் நடித்தான் பத்தன். அதைவிரித்துப் பிடிப்பதுபோல் நடித்தான் சித்தன். அதை அரசருக்கு அணிவிப்பது போல நடித்தான் முத்தன். பிறகு மூவரும் சேர்ந்து அங்கங்கே

சுருக்கங்களை நீக்கி யிழுத்து விடுவதுபோலவும், உடலில் பொருத்தி விடுவது போலவும் அபிநயங்கள் செய்தனர். அப்போது முதல் நாள் ஆடையைப் பார்க்கச் சென்ற அமைச்சர் உள்ளே நுழைந்தார். அம்மணமாக இருக்கும் அரசரைப் பார்த்தார். கடமையைச் சரியாகச் செய்யாத தன் கண்ணுக்குத்தான் ஆடை தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டு, வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் "மன்னர் பெருமானே, இந்த உடையில் நீங்கள் இந்திரன் போல் இருக்கிறீர்கள்" என்று பனிக்கட்டி போன்ற குளிர்ந்த சொற்களால் புகழ்ந்துரைத்தார்.

அரசன் கண்ணுக்குத் துணியும் தெரியவில்லை; அதன் வண்ணமும் தெரியவில்லை. அவன் இவ்வாறு நினைத்தான்:குடிமக்களுக்கு என் கடமையை நான் சரியாகச் செய்யவில்லை என்று நினைக்கிறேன். என் கடமையை நினைவுபடுத்தவே கடவுள் இந்தக் கலைஞர்கள் மூலம் இந்த மாய ஆடையை அனுப்பியிருக்கிறார். ஆனால், நாமாகப் பேரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு, "அமைச்சரே இது மிக விந்தையான ஆடைதான்!" என்றான்.

எத்தர்கள் அரசனுக்கு ஆடையணிவிக்கும் சடங்கு முடிந்தவுடன் ஊர்வலம் புறப்பட ஏற்பாடாகியது. அழகாக அலங்கரிக்கப்பட்ட தேர் ஒன்றில் அரசன் நின்று கொண்டான். அமைச்சர்கள் படை வீரர்கள், அரண்மனை யாட்கள் தொடர தேர் புறப்பட்டது. வீதிகளில் மக்கள் வெள்ளம் வெள்ளமாகக் கூடியிருந்தார்கள்.

அம்மணக் கோலத்தில் அரசன் தேர்த்தட்டின் மீது நின்றபடி ஊர்வலம் வந்தான். பார்த்த ஒவ்வொருவரும், தான் அறிவற்ற முட்டாளாய் இருப்பதாலோ, கடமை தவறியதாலோ அரசனின் ஆடை தன் கண்ணுக்குத் தெரியவில்லை என்று எண்ணிக் கொண்டான்.

ஆனால், தன்னை முட்டாளாக வெளிக் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, “மன்னர் இந்த ஆடையில் மிக அழகாக இருக்கிறார்!" என்று ஒவ்வொருவனும் பக்கத்தில் இருப்பவனிடம் சொன்னான். பக்கத்தில் இருப்பவனோ, அவனுக்கு அழகாகத் தோன்றும் அரசர் தனக்குமட்டும் அம்மணமாகத் தோன்றுவதால் தன்னை முட்டாளாக எண்ணிக் கொண்டான். ஆனால் தன்னைத்தானே முட்டாள் என்று சொல்லுவது சரியல்ல என்று அவனும், “ஆம்! ஆம்! மிகமிக அழகாக இருக்கிறார்!" என்று கூறினான்.

இவ்வாறு ஆண் பெண் அனைவரும், அம்மணக் கோலத்தில் ஊர்வலம் வரும் அரசனைப் பார்த்து, அவன் ஆடையின் அழகைப் பாராட்டுவதாகப் போலித் தனமாகப் பாராட்டிப் பேசிக் கொண்டனர்.

முதல் அமைச்சரின் வீட்டுக்கு அருகில் தேர் வந்தது. முதலமைச்சரின் மனைவி, அரச ஊர்வலத்தைப் பார்ப்பதற்காகத் தன் குழந்தையுடன் உப்பரிகையின் மீது வந்து நின்றாள். அந்தக் குழந்தைக்கு ஐந்து வயது இருக்கும். சுடர்க்கொடி என்ற பெயருடைய அந்தப் பெண்குழந்தை சுட்டித்தனத்துக்கும் சுறுசுறுப்புக்கும், அறிவுநுட்பத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியது. ஐந்து வயதில் அது கேட்கும் கேள்விகள் அறிவுக்கு விருந்தாய் இருக்கும்.

சுடர்க் கொடி உப்பரிகையின் மீது வந்து நின்றதும் அரச ஊர்வலத்தை நோக்கினாள். அரசரை நோக்கினாள். அம்மணக் கோலத்தில் அரசர் தேர்த் தட்டில் நிற்பதைக் கண்டாள்.

அவள் அரசரை நோக்கிக் கூவினாள். “வெட்கம் வெட்கம்! மன்னரே ஏன் அம்மணமாக இருக்கிறீர்கள் உங்கள் ஆடையெல்லாம் எங்கே போயிற்று” என்று கூச்சலிட்டுத் தன் கண்களை மூடிக் கொண்டாள்.

சுடர்க் கொடி அறிவுமிக்க குழந்தை என்பது அரண்மனை வாசிகள் எல்லாருக்கும் தெரியும். அவள் முட்டாள் தனமாகப் பேச மாட்டாள் என்பதும் தெரியும்! அவள் கூறிய உண்மையைக் கூறியதும் அங்கங்கே வீட்டு வாசல்களிலும் பலகணிகளிலும், உப்பரிகைகளிலும், வீதி ஓரங்களிலும், நின்று கொண்டிருத்த பெண்கள் கண்களை மூடிக் கொண்டு ஓடி ஒளிந்தார்கள்.

தம்மைத் தாமே முட்டாளாக எண்ணிக் கொண்டு அறிவாளிகளாக நடித்த ஆண்கள் உண்மையிலேயே முட்டாளாகிவிட்ட தங்கள் நிலையைக் கண்டு நாணித் தலைகுனிங்தார்கள். அரசன் தன்னைத் தானே நிர்வாணமாக்கிக் கொண்டு ஊர்வலம் வந்து விட்ட அவலத்தை எண்ணி மனம் குன்றிப் போனான்.

அங்கங்கே நிற்கும் மக்கள் தன் மூடத் தனத்தைப் பற்றிக் குசுகுசு வென்று கமுக்கமாகப் பேசிக் கொள்வதைப் பார்த்து வெட்கித் தலை குனிந்தான். வேக வேகமாகத் தேரைத் திருப்பி அரண்மனைக்குக் கொண்டுவரச் சொல்லித் தன் அறைக்குச் சென்று ஆடையணிந்து கொண்டான்.

தன்னை ஏமாற்றிய எத்தர்களைப் பிடித்து வரும்படி கட்டளையிட்டான். ஆனால், அவர்கள் நிலைமை மாறிவிட்டதை யுணர்ந்து கூட்டத்துக்குள் கலந்து மறைந்து ஊரை விட்டு ஓடி விட்டார்கள்.