பாசமுள்ள நாய்க்குட்டி/கவலைக்கு மருந்து
தங்கபுரி என்று ஓர் ஊர் இருந்தது. அந்த ஊரில் வளவனார் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். வளவனார் சிறந்த பண்புநலம் உடையவர்; பெருஞ் செல்வர்; நல்ல அறிஞரும்கூட. தங்கபுரியில் அவர் செல்வமும் செல்வாக்குமாக வாழ்ந்து வந்தார்.
வளவனார் உழைப்பினால் உயர்ந்தவர். சிறுவயதில் பாடுபட்டு உழைத்துப் பெருஞ்செல்வராக முன்னுக்கு வந்தவர்.
வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்தவர். அதேபோல் உயர்ந்த இன்ப வாழ்வையும் அடைந்தவர்.
வளவனார், சுறுசுறுப்பானவர்; நல்ல உழைப்பாளி. அதனால் அவர் நோயென்று படுத்ததே கிடையாது.அவருக்கு எண்பதாவது வயது நடக்கும் போது ஒரு நாள் காய்ச்சல் என்று படுக்க நேர்ந்தது. மூன்று நாட்களில் அந்தக் காய்ச்சலும் பறந்துவிட்டது. மிகுதியாக உழைத்து, அளவோடு உண்டு, நல்வழியில் நடந்து வருபவர்களுக்கு நோய் நொடிகள் வருவதில்லை, வந்தாலும் எளிதாக மறைந்து போய்விடும்.
காய்ச்சலாகப் படுத்திருந்த அந்த மூன்று நாட்களில் அவருக்கு ஒரு பயம் தோன்றியது.
தனக்கு வயதாகிவிட்டது. இனி நெடு நாட்கள் உயிருடன் இருக்க முடியாது.எனவே, அதற்குமுன் தன் ஒரே மகனைப் பொறுப்பும் தகுதியும் உள்ளவனாக ஆக்கிவிட வேண்டும் என்று எண்ணினார்.
காய்ச்சல் நோயிலிருந்து விடுபட்டு, உடல் நலம் அடைந்த பிறகு ஒரு நாள் அவர் தன் மகனைக் கூப்பிட்டார்.
“அன்பு மகனே! எனக்கு வயது மிகுந்து விட்டது. இன்னும் சில ஆண்டுகள்தான் நான் உயிரோடு இருப்பேன். அதற்குள் நீ பொறுப்புள்ளவனாய் வளர வேண்டும். என்னுடைய சொத்துக்கள் எல்லாவற்றையும் மேற்பார்த்துக் காப்பாற்றிவைத்துக் கொள்ள உனக்கு உலக அனுபவம் வேண்டும். அவ்வப்போது நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் திறமையை நீ பெற வேண்டும். ஆகவே மகனே நீ இப்போது உலகப் பயணம் மேற்கொள். உலகில் உள்ள பல நாடுகளுக்கும் சென்று உலக அனுபவம் பெற்றுவா. எங்கு சென்றாலும் நீ தங்கியிருக்கக் கூடிய புகலிடங்களை உண்டாக்கிக் கொள். அப்போது தான் உனக்குக் கவலை ஏற்படும்போதோ, வேறு தேவையுண்டாகும் போதோ அவை பயனுள்ளவையாக இருக்கும்” என்று கூறினார்.
மகனும் நிறையப் பணம் பெற்றுக்கொண்டு உலகச் சுற்றுப்பயணம் புறப்பட்டான்.
பேருந்துகளிலும், சிற்றுந்துகளிலும், புகை வண்டிகளிலும், மின்வண்டிகளிலும் கப்பல்களிலும், வானூர்திகளிலும் தன் விருப்பம் போல் அவன் பல நாடுகளுக்கும் சென்றான். பலவகையான மொழிபேசும், பல வகையான பழக்க வழக்கங்கள் உடைய மக்கள் அனைவரோடும் பழகினான். ஆங்காங்கேயுள்ள அழகிய, விந்தையான பல காட்சிகளையும் கண்டுமகிழ்ந்தான். ஆடம்பரமான உணவு விடுதிகளில் தங்கினான்.
ஒவ்வொரு நாட்டிலும் தனக்குப் பிடித்தமான ஊர்களில், மனை வாங்கி அழகான பெரிய மாளிகைகளைக் கட்டினான். அந்த மாளிகைகளைச் சுற்றி அழகிய பூங்காக்களை அமைக்கச் செய்தான். தான் எப்பொழுது சென்றாலும் வரவேற்கக் கூடிய மேற்பார்வையாளர்களை ஏற்படுத்தினான். ஏறத்தாழ ஐம்பது நாடுகளில் அவனுடைய மாளிகைகள் இருந்தன.
கடைசியில் அவன் உலகப் பயணத்தை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பி வந்தான்.
தந்தை அவனை அன்போடு வரவேற்றார். அவனுடைய உலகப் பயணம் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் மகன் விரிவாகக் கூறக்கேட்டு மகிழ்ந்தார்.
கடைசியில் அவர் மகனைக் கேட்டார். மகனே, நீ உனக்குக் கவலை ஏற்படக் கூடிய காலத்தில் புகலடையக் கூடிய இடங்களை உண்டாக்கிக் கொண்டாயா?
“ஆம் அப்பா. அழகான மலைச்சாரல்களிலும், ஆற்றங்கரைகளிலும், தென்னங்தோப்புகளின் இடையிலும் மனைகளை
வாங்கி புதுப்புது மாதிரிகளில் பல மாளிகைகளைக் கட்டியிருக்கிறேன். கோடையின் துன்பத்தைப் போக்கிக் கொள்ள மேலைநாட்டு மாளிகைகளில் ஒன்றில் போய் இருக்கலாம். வாடைக் காலத்தில் கீழை நாடுகளில் உள்ள ஒரு மாளிகையில் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு நாட்டு மாளிகை ஏற்றதாய் இருக்கும். இயற்கையாக உள்ள இந்த வசதிதவிர எந்தக் காலத்திலும் செயற்கையாக, இந்த வசதிகளைத் தரக்கூடிய அமைப்புள்ள மாளிகைகளையும் கட்டியிருக்கிறேன். பருவத்துன்பங்களைப் பற்றியே கவலைப்படத் தேவையில்லை” என்றான் அந்த அன்பு மகன்.
பருவங்களைப் பற்றி மகன் பேசப் பேச அப்பா புருவங்களை உயர்த்தி வியப்புடன் மகனைப் பார்த்தார்.
“அன்பு மகனே, நீ இன்னும் என் மனக் கருத்தைப் புரிந்து கொள்ள வில்லை. நீ கட்டியுள்ள மாளிகைகள் பருவகாலத் துன்பங்களுக்கு வேண்டுமானால் ஈடு கொடுக்கலாம். ஆனால், மனிதனுக்கு ஏற்படக் கூடிய மனக் கவலைகளுக்கு மருந்தாக மாட்டா.
“எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குள்ள நல்லறிஞர்களோடு நட்புக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்படுகின்ற நண்பர்கள் தான் மனக்கவலை ஏற்பட்ட காலத்தில் ஆறுதல் அளிக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள். “மகனே, உண்மையான நண்பர்கள் எத்தனை யெத்தனைபேர் இருக்கிறார்களோ, அத்தனைக் கத்தனை ஒருவன் கவலையற்றவனாக வாழமுடியும்.
“எனவே, மகனே இனிமேலாவது நல்ல நண்பர்களைத் தேடிக்கொள். நண்பர்களின் வீடுகள்தான் உனக்குச் சரியான புகலிடங்கள் ஆகும்” என்று சொல்லி முடித்தார் தந்தை.
அப்பொழுதுதான் மகன் அவருடைய அன்பு உள்ளத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டான்.
அவனுடைய எதிர் காலம் சிறப்பாக அமைந்தது.