உள்ளடக்கத்துக்குச் செல்

விந்தன் கதைகள் 1/முதல் தேதி

விக்கிமூலம் இலிருந்து

முதல் தேதி


மாதக் கடைசி; தேதி இருபத்து மூன்று; வெள்ளிக்கிழமை; மாலை நேரம்.

கணேசன் காரியாலயத்திலிருந்து மனச்சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். அவனுடைய சோர்வுக்குக் காரணம் வேறொன்றுமில்லை; இந்தியாவின் பொருளாதார நிலை திருப்திகரமா யிருப்பதுபோல், அவனுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக யில்லாமற் போனது தான்

அவனுடைய மனைவி மரகதம் அப்பொழுதுதான் கோயிலுக்குப் போவதற்காக வெற்றிலை, பாக்கு, பூ, பழம் தேங்காய் முதலியவற்றையெல்லாம் எடுத்துப் பூக்கூடையில் வைத்துக் கொண்டிருந்தாள். கடைசியாக எதையோ எடுத்து வைக்கப் போனவள், அது இல்லாமற் போகவே கணேசனிடம் ஓடோடியும் வந்து, ‘கற்பூரம் வீட்டில் இருக்கிறதாக்கும்னு நினைத்தேன் - இல்லை; ஒரு காலணா இருந்தால் கொடுக்கிறீர்களா?’ என்று கேட்டாள்.

கணேசன் தன்னுடைய 'மணிபர்ஸை' எடுத்துத் திறந்து பார்த்தான். அதில் ஒரே ஒரு ஓட்டைக் காலணா இருந்தது. அந்தக் காலணாவுக்கும் அன்று வரை செலவு இல்லாமற் போகவில்லை; ‘மணிபர்ஸ் காலியாக இருக்கக் கூடாதே’ என்ற அசட்டு நம்பிக்கையின் காரணமாக அவன் அதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.

அந்தக் காலணாவைப் பெற்றுக் கொண்டதும் ‘ஒரே ஒரு காலணாதான் வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது; அதற்கும் பகவான் பங்குக்கு வந்து விட்டார்’ என்றாள் மரகதம் சிரித்துக் கொண்டே.

'பங்குக்கு வந்துவிட்டாரா முழுக் காலணாவையும் அவரேயல்லவா அடித்துக் கொண்டு போகிறார்' என்றான்.கணேசன்.

அதற்குள் குழந்தை பானு கையில் பூக்கூடையுடன் அங்கே வந்து, ‘அம்மா! வா அம்மா!’ என்று மரகதத்தை அழைத்தாள்.

"அத்தை வரவில்லையா?” என்று கேட்டாள் மரகதம்.

"இதோ வந்துவிட்டேன்" என்றாள் அறைக்குள் தன் குழந்தைக்குப் பால் ஊட்டிக் கொண்டிருந்த காவேரி, அவள் கணேசனின் தங்கை, ஊரிலிருந்து வந்திருந்தாள்.

நால்வரும் கோயிலுக்குக் கிளம்பினார்கள். குழந்தை முரளி மட்டும் போக வில்லை; அவன் ஏதோ பாடம் எழுதுவதில் முனைந்திருந்தான்.

"என்ன மரகதம், பேசாமற் போகிறாயே! நிஜமனைவியைவிட கதையில் வரும் மனைவியே எவ்வளவோ தேவலைபோலிருக்கிறதே!" என்றான் கணேசன்.

மரதகம் சற்று நின்று அவனைத் திரும்பிப் பார்த்து, ‘ஏன் நிஜ மனைவிக்கு என்ன குறைச்சலாம்?’ என்று கேட்டாள்.

'கணவன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் கதையில் வரும் மனைவி காப்பி கொடுக்கத் தவற மாட்டேன் என்கிறாள்; நீ என்னடாவென்றால்...?'

‘கதையில் வரும் மனைவியா கொடுக்கிறாள்? கதாசிரியர் கொடுக்கிறார் - அவருக்கென்ன, காப்பி போட வேண்டுமானால் சர்க்கரை தேவையில்லை, பால் தேவையில்லை, காப்பிப் பொடி தேவையில்லை. கையில் பேனாவும் மேஜையின்மேல் காகிதமும் இருந்தால் எத்தனை 'கப்' காப்பி வேண்டுமானாலும் போட்டுவிடுவார் என்னால் அப்படிப் போட முடியுமா? நான்தான் காலையிலேயே படித்துப் படித்துச் சொல்லியனுப்பினேனே, சாயங்காலம் வரும்போது மறக்காமல் காப்பிப் பொடி வாங்கி வாருங்கள் என்று! - வாங்கி வந்தீர்களா?”

‘பால்காரன் கடனுக்குப் பால் ஊற்றுவது போலக் காப்பிப் பொடியும் யாராவது கடன் கொடுத்தால் தேவலை, இருபத்து மூன்றாம் தேதியன்று இன்னொரு சம்பளமா வருகிறது? முதல்தேதி யன்று தான் வாங்கிக் கொண்டு வரவேண்டும்’

‘அப்படியானால் முதல் தேதி வரை காப்பி சாப்பிடாமல் இருங்கள்’

‘சரி, கொஞ்சம் வெந்நீராவது கொடுத்துவிட்டுப் போயேன்’

"கொஞ்சம் என்ன எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே அடுக்களைக்குச் சென்று, ஒரு செம்பு நிறைய வெந்நீரைக் கொண்டு வந்து அவனுக்கு எதிரே 'நக்' என்று வைத்தாள் மரகதம்.

இந்தச் சமயத்தில் ‘அண்ணா இன்றுகூட அவரிடமிருந்து கடிதம் வந்தது...’ என்று ஆரம்பித்தாள் தங்கை காவேரி..

‘உடனே புறப்பட்டுவரச் சொல்லித்தானே...”

'ஆமாம்.'

‘இப்பொழுது எங்கே புறப்படுவது? முதல் தேதியன்று தான் புறப்பட வேண்டும்’

இடையில் பானு குறுக்கிட்டு 'ஏன், அப்பா என்னை எப்போ சர்க்கஸ்-க்குக் கூட்டிக் கொண்டு போவே?' என்று தினசரி கேட்கும் கேள்வியை அன்றும் மறக்காமல் கேட்டு வைத்தாள்.

'முதல் தேதியன்று கட்டாயம் கூட்டிக் கொண்டு போவேன்!' என்று தினசரி சொல்லும் பதிலைக் கணேசனும் மறக்காமல் சொல்லி வைத்தான்.

'சாக்லெட்.....'

'முதல் தேதிக்கு!'

'அப்பா ஹிஸ்டரிக்கு ஒரு நோட், ஜாக்ரபிக்கு ஒரு நோட், மேதமெடிக்ஸுக்கு ஒரு நோட்.....' என்று சந்தர்ப்பத்தைக் கைவிடாமல் ஆரம்பித்தான் முரளி.

'சரிதாண்டா ஆறு நோட்டுப் புத்தகங்கள் வேண்டுமென்று சொன்னாயே, அதைத்தானே கேட்கிறாய்?' என்று இடைமறித்துக் கேட்டான் கணேசன்.

"ஆமாம், அப்பா!"

"முதல் தேதியன்று வாங்கிக் கொண்டு வருகிறேன்"

"பேபி ஸைக்கிள்....?"

"முதல் தேதிக்கு!"

"எதிர்வீட்டில் இன்று எல்லோரும் 'எக்ஸிபிஷ'னுக்குப் போய் வந்தார்கள். இதுவரை அவர்கள் நாலு தரம் போய்வந்து விட்டார்கள். நீங்கள் என்னடாவென்றால் ஒருதரம்கூட அழைத்துக் கொண்டு போக மாட்டேன் என்கிறீர்கள்" என்றாள் அதற்குள் காப்பி விஷயத்தை மறந்த மரகதம்.

",அதுதான் முதல் தேதியன்று ஆகட்டும் என்று சொன்னேனே" என்றான், எதை விட்டாலும் முதல் தேதியை விடாத கணேசன்.

‘எல்லாவற்றுக்கும் முதல் தேதிதான்!’ என்று அலுத்துக் கொண்டு மரகதம் நடையைக் கட்டினாள். பானும் காவேரியும் அவளைப் பின்தொடர்ந்து சென்றனர். 

'அப்பாடா!' என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே கணேசன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தான்.

‘ஸார்!' என்று குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்காரர் வந்தார்.

‘வாங்க ஸார் என்ன விசேஷம்?' என்று யாரை என்ன கேட்கிறோம் என்று தெரியாமலே கேட்டு வைத்தான் கணேசன்.

‘வீட்டுக்காரருக்கும் குடியிருப்பவருக்கும் மத்தியில் வேறு என்ன ஸார், விசேஷம் இருக்கும் தேதி இருபத்து மூன்று ஆகிவிட்டதோ’

'ஓ, அதுவா முதல் தேதியன்று ஆகட்டும் லார் இரண்டு மாத வாடகையையும் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன். இந்த மாதம் காவேரி ஊரிலிருந்து வந்திருந்தாளோ, இல்லையோ - அதனால் கொஞ்சம் தாமதம்....'

'சரி; மறந்து விடாதீர்கள்!' என்று சொல்லிவிட்டு வீட்டுக்காரர் நல்ல வேளையாக அத்துடன் நழுவினார்.

அந்தச் சமயம் பார்த்துச் சலவைக்காரி வந்து அவனுக்கு எதிரே நின்று ‘மத்தியானம் சலவை கொண்டு வந்து கொடுத்தேனுங்க; இதோடு நாலு சலவை ஆச்சுங்க, அம்மா, காசுக்கு ஐயா வந்ததும் வான்னு சொன்னாங்க; அதுதான் வந்தேனுங்க’ என்றாள்.

‘காசுக்கு வேளை, நாழி, நாள், கிழமை ஒன்றும் கிடையாதா? நினைத்த போதெல்லாம் வந்துவிட வேண்டியதுதானா? போ, போ! முதல் தேதியன்று வா’ என்று அவளை விரட்டிவிட்டு, சற்று விக்ராந்தியாக இருந்துவிட்டு வரலாமென்று கணேசன் மாடிக்குச் சென்றான்.

அடுத்த வீட்டு மொட்டை மாடியில் சாப்பிட்டு விட்டு உலாவிக் கொண்டிருந்த சதாவதானம் கணேசனைக் கண்டதும் "ஸார் ஒரு சின்ன விஷயம் - நீங்கள் என்னிடம் ஒரு சமயம் ஐந்து ரூபாய் வாங்கினர்கள்; "மறந்தே போய் விட்டீர்கள்" என்று தலையைச் சொறிந்து கொண்டே சொன்னார்.

"மறக்கவில்லை, ஸார் வரப்போகிற முதல் தேதியன்று கட்டாயம் கொடுத்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கணேசன் உடனே கீழே இறங்கி வந்து விட்டான்.

** *

கணேசனுக்கு மாதாமாதம் நூற்றைம்பது ரூபாய் சம்பளம் வந்து கொண்டிருந்தது. அந்தச்சம்பளத்தைக் கொண்டு அவன் எவ்வளவோ செளகரியமாக வாழலாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தான். ஆனால் நடைமுறையில் அது அசாத்தியம் என்று தோன்றிற்று. அதற்காக அவன் தன்னுடைய வாழ்க்கைச் செலவை எப்படியெல்லாமோ கட்டுப்படுத்திப் பார்த்தான். ஆனால் அப்படிக் கட்டுப்படுத்திக் கொள்ளும்போது அவன் அடுத்த வீட்டுக்காரரையும், அவரையும் மிஞ்சியே அந்த 'நாலுபேரையும்' கொஞ்சம் அனுசரித்தே போக வேண்டியிருந்தது.

‘உண்டுண் டுறங்குவது தான் வாழ்க்கை’ என்ற கூற்றைக் கணேசன் ஒப்புக் கொள்ளவில்லை. அழகு எதிலிருந்தாலும், எங்கிருந்தாலும் அதை அனுபவிக்கும் திராணி அவனுக்கு இயற்கையாகவே இருந்தது. அடுத்த வீட்டுக்காரி நல்ல புடவையோ, நகையோ அணிந்திருந்தால் தன் மனைவியும் அணிய வேண்டும் என்று அவன் விரும்புவான். பக்கத்து வீட்டுக் குழந்தை ‘சாக்லெட்’ தின்றால் தன் வீட்டுக் குழந்தை அதனிடம் கையேந்திவிடக் கூடாது என்பது அவன் எண்ணம். எதிர் வீட்டுச் சிறுவன் சைக்கிள் விட்டால், தன் வீட்டுச் சிறுவன் அந்த ஸைக்கிளுக்காக ஏங்கி விடக் கூடாது என்பது அவன் ஆசை. இவை யெல்லாவற்றையும் விட, பாரத நாட்டின் பழம் பெருமையை விளக்கும் சின்னங்கள் எதுவாயிருந்தாலும் அவற்றைப் பார்க்க அவன்துடிதுடிப்பான்; அருங்கலைகளில் அவனுக்கிருந்த ஆர்வத்தையோ சொல்லி முடியாது.

இத்தகைய மனோபாவத்தின் காரணமாக அவன் தன் வாழ்க்கையில் இருந்த கொஞ்ச நஞ்ச இன்பத்தையும் அனுபவிக்க முடியாமற் போயிற்று; துன்பம், துன்பம், துன்பம் என்று அவன் ஒரே துன்பத்தில் உழலவேண்டியதாயிற்று. அந்தத் துன்பம் ஒவ்வொரு முதல் தேதியும் உச்ச நிலையை அடையும்; முதல் தேதி வருவதற்கு ஒரு வாரம் இருக்கும்போதே, துன்பத்தின் சாயை அவனைத் தொடரும்.

அதன் கோர சொரூபத்திலிருந்து அன்றிரவாவது அவனால் தப்ப முடிந்ததாஎன்றால் அதுதான் இல்லை. ‘பத்துப் பதினைந்து ரூபாயில் மில் புடவைகளிலாவது இரண்டு எடுத்துக் கொடுக்கிறேன் என்கிறீர்களே, எடுத்துக் கொடுத்தீர்களா?’ என்று கேட்டுக் கொண்டே அவன் அறைக்குள் வந்தாள் மரகதம்.

"எங்கே எடுத்துக் கொடுப்பது? மாதம் பிறந்தால் தான் ஏதாவது ஒரு புதுத் தொல்லை வந்து சேருகிறது!" என்றான் கணேசன்.  "சொன்னால் கோபித்துக் கொள்வீர்கள். நீங்கள் போகிற தொல்லையையாவது போகவிட்டால் தானே?"

"காவேரியைப் பற்றித் தானே சொல்கிறாய்? அவளை அனுப்பி வைப்பதற்குக் குறைந்த பட்சம் முப்பது ரூபாயாவது வேண்டுமே, அதற்கு என்ன செய்வது?"

“முப்பது ரூபாய் இல்லை என்று சொல்லிக் கொண்டு இதுவரை நீங்கள் அவர்களுக்காக அறுபது ரூபாய் செலவழித்திருப்பீர்கள் போலிருக்கிறதே!"

"ஒரு பெரிய உண்மையை எடுத்துச் சொல்கிறாய் மரகதம் நம்மைப் போன்றவர்களுடைய கஷ்டம் எப்படி வளருகிறது - தெரியுமா? இப்படித்தான் வளருகிறது!"

"செலவைக் கூடியவரை கட்டுப்படுத்திக் கொண்டு சிக்கனமாக வாழ முயன்றால் கஷ்டம் ஏன் வளருகிறது?"

"ஏது உன்னிடமும் அந்த மலிவான சரக்கு, நிறைய இருக்கிறது போலிருக்கிறதே!"

"எந்த மலிவான சரக்கு?"

"பிறருக்குப் புத்திமதி சொல்வது!"

மரதகம் சிரித்தாள்.

"இதைக் கேள், மரகதம்! உன்னைப் போலத்தான் என்னுடைய நண்பர்களெல்லாம் கூடச் சொல்கிறார்கள். அவர்களுடைய புத்திமதியின் படி நாம் சிக்கனமாக வாழ வேண்டுமானால் என்ன செய்யவேண்டும் தெரியுமா? முதலில் இந்த வீட்டைக் காலி செய்து விட்டுக் குடியிருக்க ஒரு 'கிளிக்கூண்டு' வாங்கிக் கொள்ள வேண்டும்; நீயும் நானும் பழைய மலையாளத்து ஸ்தீரி - புருஷர்களைப் போல ஆளுக்கொருமுண்டு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்; காலையில் வெறும் காப்பி குடிக்கிறோமல்லவா? அதை நிறுத்தி விட்டு கொட்டாவி விட்டுக் கொண்டே வேலைக்குக் கிளம்பவேண்டும். அப்புறம் இரண்டு வேளை சாப்பாட்டை ஒருவேளையாக குறைத்துக் கொள்ள வேண்டும்......."

"வேடிக்கைதான்! சிக்கனம் என்றால் இதுவாசிக்கனம்..."

"பின் என்ன செய்வது? கூரை வீட்டை இடித்து விட்டு மாடி வீடு கட்டலாம் என்று இருந்தோமே, அதை நிறுத்தி விடுவதா? 'ஆஸ்டின்' காரை விற்று விட்டு 'போர்டு' கார் வாங்கலாம் என்று இருந்தோமே, அந்த யோசனையைக் கைவிட்டு விடுவதா? உச்சி வேளையில் பழரசம் அருந்திக் கொண்டிருந்தோமே, அதை மறந்துவிட்டுப் பச்சைத் தண்ணீர் குடிப்பதா...?”

"எட்டாதவற்றுக்கெல்லாம் கொட்டாவி விட்டு என்ன பிரயோஜனம்...?"

"இல்லையே எட்டுபவைக்கே அல்லவாநாம் கொட்டாவி விட வேண்டியிருக்கிறது...!"

"அதைச் சொல்லவில்லை நான்! வாழ்க்கைச் செலவுகளை வரவுக்குத் தகுந்தபடி ஒரு ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறேன்; அதாவது, மேற்கொண்டு கடனே வாங்கக்கூடாது என்கிறேன்!”

"அதற்கு வாழ்க்கைப்பாதை பட்டணத்து ரஸ்தா மாதிரி தார் போட்டு 'ஜம்'மென்று இருக்கவேண்டும். அப்படியில்லையே! அது மேடும் பள்ளமும் நிறைந்த பட்டிக்காட்டு ரஸ்தா மாதிரியல்லவா இருக்கிறது? அதை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வருவது எப்படி?”

"போதுமென்ற மனம் இருந்து, உள்ளவரை திருப்தியும் அடைவதாயிருந்தால்....”

"இன்று சாயந்திரம் நீ காப்பி இல்லை என்றாய்; நான் திருப்தியடைந்துவிட்டேன். அதேமாதிரி நான் புடவை இல்லை என்கிறேன், நீயும் திருப்தியடைந்து விடுகிறாயா?”

“ரொம்ப அழகுதான்!” "பார்க்கப்போனால் நம்மைக் காட்டிலும் வாழ்க்கையில் குறைந்த அளவு தேவையுடன் திருப்தியடைபவர்கள் வேறு யாருமே இருக்கமாட்டார்கள், மரகதம்!”

“ஏன் இல்லை? எத்தனையோ பேர் இருக்கிறார்கள். முனியன், மூக்கன், தொப்பை, சப்பை என்று இல்லையா?”

"அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? பிறர் வாழ்வதற்காக நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்கிறது, மரகதம் பிரெஞ்சு அறிஞன் ஒருவன் ஜனங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறான். அதாவது மேல் வகுப்பு, மத்திய வகுப்பு, கீழ்வகுப்பு என்று அவன் வகுத்திருக்கிறான். மேல் வகுப்பார் சுதந்திரத்தை விலைக்கு வாங்குகிறார்கள்; கீழ் வகுப்பார் சுதந்திரத்தை விலைக்கு விற்கிறார்கள் என்று அவன் சொல்கிறான். இந்த இரு வகுப்பார்களுக்கும் மத்தியில் இரண்டுங்கெட்டானாக இருந்துகொண்டு அவதிப்படுபவர்கள் தான் நம்மைப் போன்றவர்கள். நம்முடைய சூழ்நிலை வேறு; அவர்களுடைய சூழ்நிலை வேறு. நம்முடைய சுற்றுப்புறம் வேறு; அவர்களுடைய ஆசாபாசங்கள் வேறு. இவையனைத்தையும் கூட்டிக் குழப்பி ஒன்று சேர்க்கத்தான் அரசியல் தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களுடைய முயற்சி இன்றுவரை வெற்றியடைய வில்லை..."

"இது என்ன, பெரிய பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விட்டீர்களே! - போதும், தூங்குங்கள்!" என்று சொல்லி விட்டு மரகதம் வெளியே வந்து தன் நாத்தனாருடன் படுத்துக் கொண்டாள்.

“தேவைக்குமேல் வரும்படி உள்ளவர்களுக்கல்லவா சிக்கன உபதேசம் செய்ய வேண்டும்? தேவைக்குக் குறைவான வரும்படி உள்ளவர்களுக்குச் சிக்கன உபதேசம் செய்து என்ன பிரயோஜனம்?” என்று தனக்குள் முனகிக் கொண்டே அப்படியும் இப்படியுமாகப் புரண்டு படுத்தான் கணேசன்.

* * *

மறுநாள் காலை, “மரகதம், குளிப்பதற்கு வெந்நீர் போட்டுவிட்டாயா?” என்று கேட்டுக் கொண்டே கணேசன் எழுந்து வந்தான்.

"கரி இல்லை; கட்டையும் இன்னும் இரண்டு நாட்களுக்குத்தான் காணும் போலிருக்கிறது. நீங்கள் செம்பை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு போங்கள்!" என்றாள் மரகதம்.

"சரி, அப்படியே செய்தால் போச்சு" என்று அழுத்தலாகச் சொல்லி விட்டுக் கணேசன் கிணற்றடியை நோக்கி நடந்தான்.

அதன் பயனாக அன்று மாலை அவன் ஜலதோஷத்துடன் வீடு திரும்ப வேண்டியதாயிற்று; அன்றிரவே அவனுக்கு ஜூரம் வேறு வந்துவிட்டது. பொழுது விடிந்ததும் மரகதம், "டாக்டரிடம் போய் வாருங்களேன்!" என்று சொன்னாள்.

"எடுக்கும்போதே டாக்டரிடம் போவானேன்? உன்னுடைய சிக்கன உபதேசத்தை உத்தேசித்து இரண்டு நாட்கள் ஆஸ்பத்திரிக்குத்தான் போய் வருவோமே என்று பார்க்கிறேன்!” என்றான் கணேசன்.

"உங்கள் இஷ்டம்!” என்று சொல்லிவிட்டு முகவாய்க் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டாள் மரகதம். இரண்டு நாட்கள் ஆஸ்பத்திரியில் மருந்து சாப்பிட்டதால் தானோ என்னவோ, கணேசன் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாதவனானான். இப்பொழுது அவன் டாக்டர் வீட்டுக்குப் போவதாயிருந்தால் ஏதாவது ஒரு வாகனத்தில் போகவேண்டும். அதற்குக் காசு வேண்டாமா? என்ன செய்வது? மரகதம் நல்லவேளையாகக் கடுகு டப்பியில் எட்டணா சேர்த்து வைத்திருந்தாள். அதை வாங்கிக் கொண்டு கணேசன் டாக்டர் வீட்டுக்குப் போனான். டாக்டர் தெரிந்தவராகையால் மருந்துக்கு உடனே பணம் கேட்கவில்லை. முதல் தேதியன்று பில் அனுப்பி வைக்கலாம் என்று பேசாமல் இருந்துவிட்டார்.

மரகதம் தனக்குத் தெரிந்த சிநேகிதி ஒருத்தியிடம் இருபத்தைந்து ரூபாய் கடன் வாங்கி அந்த வாரம் முழுவதும் காலக்ஷேபம் செய்து வந்தாள். ஒரு காலத்தில் கணேசனின் உடம்பும் தேறிற்று.

★ ★ ★

ன்று முதல் தேதி; அதே வெள்ளிக்கிழமை தான்; ஆனால் காலை நேரம்.

அதற்கு முதல் நாளே சம்பளம் வந்துவிட்டது. தங்கையின் பிரசவத்துக்காக வாங்கிய நூறு ரூபாய்க் கடனுக்கு இருபது ரூபாய் கொடுத்து விட்டுப் பாக்கியை வீட்டுக்குக் கொண்டு வந்திருந்தான். அவன் முகத்தை அன்று ஏனோ பார்க்கச் சகிக்க முடியவில்லை. அவ்வளவு வேதனை அவனுடைய முகத்தில் குடி கொண்டிருந்தது.

“காவேரி!" என்று இரைந்தான் கணேசன்.

அவள் கைக்குழந்தையுடன் வந்து அவனுக்கு எதிரே நின்றாள். அவளிடம் முப்பது ரூபாயை எடுத்துக் கொடுத்து “இன்றே மன்னியுடன் சென்று இருபது ரூபாயில் உனக்கு ஒரு புடவையும், குழந்தைக்கு ஒரு சட்டையும் வாங்கிக் கொள். பாக்கிப் பத்து ரூபாய் இருக்கிறதல்லவா? அதைச் செலவுக்கு வைத்துக் கொள். நாளைக்கே நீ ஊருக்குக் கிளம்பி விடலாம், போ!" என்றான்.

அவள் போய்விட்டாள்.

வீட்டுக்காரர் வந்தார். அவரிடம் இரண்டு மாத வாடகைக்கு நாற்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.

மரகதத்தினிடம் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து, அதை உடனே அவள் சிநேகிதியிடம் கொடுத்துவிட்டு வரச்சொன்னான்.  மறக்காமல் மாடிக்கு ஒடோடியும் சென்று, சதாவதானத்திடம் ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு வந்த பிறகு, ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

பால்காரனுக்குப் பன்னிரண்டு ரூபாய்; வண்ணாத்திக்கு ஏழு ரூபாய்; டாக்டருக்குப்பத்து ரூபாய்-தனித்தனியே எடுத்துவைத்தான்.

மொத்தம் 149 ரூபாய் ஆயிற்று!

பாக்கி ஒரே ஒரு ரூபாய் இருந்தது. கொஞ்சங்கூட யோசிக்காமல் அதை வீட்டுச்செலவுக்காகதன் மனைவியிடம் அப்படியே முழுசாகத் தூக்கிக் கொடுத்துவிட்டான்!

"ஒரு மாதச் செலவுக்கு இவ்வளவுதானா?” என்று அவள் திடுக்கிட்டுக் கேட்டாள்.

"வாழ்க்கைச் செலவை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரவேண்டுமென்றாயே, கொண்டுவா! மேற்கொண்டு கடன் வாங்குவது தான் உன்னுடைய புத்திமதிப்படி ஒழுங்கீனமாச்சே!” என்றான் கணேசன் வெறுப்புடன் சிரித்துக் கொண்டே.

அவன் சிரித்ததும் அதுவரை அப்பாவை நெருங்கப் பயந்து கொண்டிருந்த குழந்தைகள் இரண்டும் கொஞ்சம் தைரியமடைந்து அவனை நெருங்கின.

"அப்பா என்னை எப்போ சர்க்கஸ்-க்குக் கூட்டிக் கொண்டு போவே?" என்று கேட்டாள் பானு.

"முதல் தேதி!"

"சாக்லெட்....?"

"முதல் தேதிக்குத்தான்!”

"எனக்கு நோட் புத்தகம் எப்போ அப்பா வாங்கி வருவே?" என்று கேட்டான் முரளி.

"முதல் தேதி”

"ஸைக்கிள்.....?"

"முதல் தேதிக்குத்தான்!"

"இந்த முதல் தேதிக்கு ஒரு முடிவே கிடையாதோ?” என்றாள் மரகதம்.

“நம் வாழ்வு முடியும்வரை அதற்கு ஒரு முடிவே கிடையாது” என்று அழுந்தந் திருத்தமாகச் சொன்னான் கணேசன்.