விந்தன் கதைகள் 1/வாழ வழியில்லை
கடைசி கடைசியாக எங்களுக்கு அப்படித்தான் தோன்றிற்று. அதாவது “நாங்கள் இந்த உலகத்திலே வாழ வழியில்லை!" என்று.
என்ன, 'எங்களுக்கு' என்றா சொன்னேன்? - இல்லை, இல்லை; எனக்குத்தான்!
இந்தத் தீர்மானத்துக்கு நான் திடீரென்று வந்து விடவில்லை; எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம் தீர்க்காலோசனை செய்த பிறகுதான் வந்தேன்.
"இதை அவளிடம் இன்றே சொல்லிவிட வேண்டும், -சொல்லுவதாவது? எழுதிவிட வேண்டும்!"
இந்த எண்ணம் தோன்றியதும் ஒரு நிமிஷம் கூட நான் தாமதிக்கவில்லை; தாமதித்ததெல்லாம் போதும் என்று உடனே ஒரு காகிதத்தை எடுத்தேன்; விஷயத்தை விறு விறு'வென்று எழுதினேன்; அதை உறைக்குள் போட்டுத் திணித்துத் தபாலில் சேர்த்தேன்.
அப்புறந்தான் என்னால் வேறு காரியம் பார்க்க முடிந்தது!
கடிதத்தில் “மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்த கதை தான்!" என்று வெறுமனே எழுதிவிடவில்லை. "ஏன் விழுந்தான், எப்படி விழுந்தான்?" என்றெல்லாம் விவரித்துத்தான் எழுதினேன். ஏன் தெரியுமா என்னுடைய பேச்சுக்கு எதிர்ப்பேச்சின்றி அவள் அப்படியே என்னுடைய தீர்மானத்தை அங்கீகரித்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான்!
ஆனால், என்ன கஷ்டம் பாருங்கள்; அது தான் அவளிடம் நடக்கவில்லை.
எல்லாவற்றையும் பொறுமையுடன் படித்துவிட்டு அவள் எனக்கு என்ன எழுதியிருந்தாள் தெரியுமா? அதை ஏன் கேட்கிறீர்கள், போங்கள்!
இத்தனைக்கும் அவள் எழுதியிருந்தது ஒரே ஒரு வார்த்தைதான். அந்த ஒரு வார்த்தை அந்த ஒரே ஒரு வார்த்தை - என்னை என்னதாக்கு தாக்கி விட்டதென்கிறீர்கள்! - அப்பப்பா! பொல்லாதவர்கள் ஐயா, இந்தப் பெண்கள் மிகமிகப் பொல்லாதவர்கள்!அவள் எழுதியிருந்த அந்த வார்த்தையைப் படித்த பிறகு எனக்கே என்னுடைய தீர்மானத்தில் சந்தேகம் வந்துவிட்டது. எனக்கு மட்டும் என்ன? என்னுடைய கதையைக் கேட்டால் உங்களுக்கும் அந்தச் சந்தேகம் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லைதான்!
அந்தச் சங்கத்தின் பெயர் இன்னதென்று எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை. ஆனால் பல பெண்கள் ஒன்று சேர்ந்து கூத்தடிக்கும் சங்கம் அது என்பது மட்டும் என்னுடைய நினைவில் இன்றும் தங்கியிருக்கிறது. அந்தச் சங்கத்துக்கு அவள் காரியதரிசி. அதற்கு ஒரு சமயம் வருஷாந்திரவிழா நடந்தபோது, அதில் என்னைப் பேசுவதற்கு அவள் அழைத்திருந்தாள்.
பெண்களுக்கு மத்தியில் போய்ப் பேசுவதற்கு எனக்கு முதலில் கொஞ்சம் வெட்கமாயிருந்தது. ஆகவே, "எனக்குப் பதிலாக யாராவது ஒரு பெரிய வரை அழைத்துப் பேசச் சொல்லுங்கள்" என்று எழுதினேன். அதற்கு அவள் கன்னத்தில் அடித்தாற்போல் "நாங்கள் பாட்டிமார்களல்ல; நீங்களே வாருங்கள்" என்று எழுதினாள்.
அதற்குமேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அடக்க ஒடுக்கத்துடனும் பயபக்தியுடனும் சென்று அந்த மாதர்மகாசபையில் பேசினேன். விழாவில் கலந்து கொண்ட பிறகு அதுவரை என்னைப் பீடித்திருந்த வெட்கமும் போன இடம் தெரியாமல் போயே போய்விட்டது. எல்லாம் இடத்தின் விசேஷம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
காரியதரிசி வந்தனோபசாரம் கூறியதும் என்னை வழியனுப்ப வந்தாள். வாசலைக் கடந்ததும், "தங்களுடைய பிரசங்கம் ரொம்ப ஜோர் ரொம்ப ரொம்ப ஜோர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது!" என்றாள்.
இதைச் சொல்லிவிட்டு அவள் ஒரு காரணமுமின்றிச் சிரித்தது, என்னை என்னவோ செய்தது. அதன் காரணமாகத்தானோ என்னவோ, "நல்லவேளை என்னுடைய பிரசங்கத்தை மட்டுந்தானே உங்களுக்குப் பிடித்தது?" என்று நான் கொஞ்சம் கிருதக்காகக் கேட்டுவிட்டேன்.
அவள் சளைக்கவில்லை. "உங்களையுந்தான்!" என்று சொல்லிவிட்டு எடுத்தாள் ஒட்டம்.அவ்வளவுதான்; அன்றைய தினத்திலிருந்து நான் அவளுடைய காதலனானேன்; அவள் என்னுடைய காதலியானாள்.
இருவருக்கும் கடிதப் போக்குவரத்து வருஷக்கணக்கில் நீடித்தது. அப்படி நீடித்ததற்குக் காரணம் எங்களுடைய ‘காதல் பிரச்சனை'யில் இருந்த ஒரே ஒரு சிக்கல்தான். அந்தச் சிக்கல் அப்படியொன்றும் அற்ப சொற்பமானதல்ல; அகில உலகத்தையும் இன்றுவரை ஆட்டிவைத்துக் கொண்டிருப்பது!
அப்படிப்பட்ட சிக்கல்தான் என்ன என்று கேட்கிறீர்களா? - அவள் ஒரு ஜாதி, நான் ஒரு ஜாதி!
இந்த ஜாதி வித்தியாசம் எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கத்தான் செய்தது, அதாவது எப்படித் தெரிந்திருந்தது என்கிறீர்களா? நான் ஆண் ஜாதி என்றும் அவள் பெண் ஜாதி என்றும் தெரிந்திருந்தது!
எங்களுக்குத் தெரியும் இந்த உண்மையை எங்களுடைய பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை; நண்பர்கள் ஒப்புக் கொள்ளவில்லை; உறவினர்கள் ஒப்புக் கொள்ளவில்லை; ஊராரும் உலகத்தாரும் ஒப்புக்கொள்ளவில்லை!
எங்கள் காதலுக்கு உவமை சொல்ல வேண்டுமானால் சந்திரனைத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் எங்கள் காதல் சில சமயம் வளர்பிறைபோல் வளர்வதும் உண்டு; தேய் பிறை போல் தேய்வதும் உண்டு. இந்த வளர்ச்சியும் தேயவும் அநேகமாக அடிக்கடி மாறும் எங்களுடைய மனோபாவத்தைப் பொறுத்தே இருந்தன.
ஒருசமயம் நாங்கள் நினைப்போம் "இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் நாம் நம்முடைய காதலைக் கைவிடக் கூடாது" என்று; இன்னொரு சமயம் நினைப்போம் "இந்த உலகத்தை வெறுத்துக் கொண்டு நாம் தனியாக இருந்து என்னத்தைச் செய்வது?” என்று!
இப்படியாக எங்களுடைய மனம் பேதலித்து நின்றாலும், அவற்றையும் அறியாத ஏதோ ஒன்று எங்களை விடாப்பிடியாகப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தது. அது நாங்கள் பரஸ்பரம் கடிதம் எழுதிக் கொள்வதோடு திருப்தி யடையவில்லை; அடிக்கடி நேரில் சந்திக்க வேண்டுமென்றும், அளவளாவ வேண்டுமென்றும், அன்புடன் இறுகத் தழுவி ஆனந்தபாஷ்யம் சொரிய வேண்டுமென்றும் அந்தச் சக்தி எங்களைத் தூண்டிவந்தது.
இந்தத் தூண்டுதலினால், ஒரு முறை அவளை என் வீட்டுக்கு வா என்று நான் துணிந்து அழைத்துவிட்டேன்!
அவள் வந்தாள்; வாசலில் நின்றாள். நான் அவளைப் பார்த்தேன்; அவள் என்னைப் பார்த்தாள். நான் புன்னகை புரிந்தேன்; அவளும் புன்னகை புரிந்தாள்.
அந்த ஒரு கணத்திற்குப் பிறகு....? அப்பா பார்த்துவிட்டால்...? அண்ணா பார்த்து விட்டால்...? அம்மா பார்த்து விட்டால்....? அக்கா பார்த்துவிட்டால்....?
இப்படி அடுத்தடுத்துப் பல கேள்விகள் அடுக்கடுக்காக என் உள்ளத்தில் எழுந்தன. அவ்வளவுதான்; என் கண்களில் பீதி நிறைந்தது; கால்கள் தரையில் பாவவில்லை; தடுமாறின.
ஏன் இந்த நடுக்கம்? அப்பா, அம்மா, அண்ணா, அக்கா எல்லோரும் என்னுடைய ஜன்ம விரோதிகளா, என்ன? - விரோதிகள் இல்லையென்றால் எனக்குப் பிடித்தமான அவளை என் வீட்டுக்குள் அழைக்க என்னால் ஏன் முடியவில்லை?
இந்நிலையில் ஆவலுடன் என்னிடம் ஏதோ சொல்லத் துடித்த அவள், அசடு வழியும் என் முகத்தைக் கண்டதும் திடுக்கிட்டு நின்றாள்!
நானோ எப்படியாவது ராஜ விழி விழிப்பதென்று தீர்மானம் செய்து கொண்டு, அதற்காகப் பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தேன்.
முடியவில்லை; அவள் திரும்பிப் போனாள்!
அடுத்தபடி, எனக்கென்று நான் தனியாக எங்கேயாவது ஒரு அறையை வாடகைக்கு அமர்த்திக் கொள்வதென்றும், அந்த அறைக்கு அடிக்கடி அவள் வந்து என்னைச் சந்தித்துவிட்டுச் செல்வதென்றும் எங்களுக்குள் தீர்மானமாயிற்று. அதன்படியே நானும் படாத பாடுபட்டு ஓர் அறையை வாடகைக்குப் பிடித்தேன்.
அவள் வந்தாள்; எனக்கு எதிரேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.நான்கதவைச்சாத்தித் தாளிடப் போனேன்.
"பிறருடைய கவனத்தைக் கவருவதற்கு வேறு வினை வேண்டியதில்லை!” என்றாள்.அவள்.
எனக்கும் அது உண்மையாகப் பட்டது. கதவைத் தாளிடாமல் வெறுமனே சாத்திவிட்டு வந்து உட்கார்ந்து, அவளுடைய மிருதுவான கரத்தை மெல்லப் பற்றினேன்.
அவள் என் உடலையும் உயிரையுமே தன் வசப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு மந்திரச் சிரிப்பால் என்னைக் காந்தம்போல் இழுத்தாள்.
நான், அவளுடைய கரத்தைக் கொஞ்சம் அழுத்திப் பிடித்து, "அப்பா! இதற்காக நாம் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது!" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டேன். அதற்குள், "என்னடா, கதவைச் சாத்திக் கொண்டு...?" என்று கேட்டுக்கொண்டே, எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தான் என் நண்பன் நாராயணன்.
இருவரும் திடுக்கிட்டு அவனைத் திரும்பிப் பார்த்தோம்.
"ஓ!" என்று அவன் ஒரு தினுசாக நீட்டி முழக்கிக் கொண்டே வெளியே சென்றான். அவன் வெளியே சென்றதும் ‘களுக்’ என்ற சிரிப்பொலி எங்கள் காதில் விழுந்தது.
"என்னுடைய நண்பன் எப்படிப்பட்டவன், தெரியுமா? கோயபெல்ஸின் திரு அவதாரம்!" என்றேன் நான்.
"பார்த்தாலே தெரிகிறதே! இங்கிலீஷ்காரனிடமிருந்து ஹாட்டும் சூட்டும் போடக் கற்றுக்கொண்ட மனுசன், அவனிடமிருந்து கொஞ்சம் ஒழுங்கும் கற்றுக் கொண்டிருக்கக் கூடாதோ?" என்றாள்.அவள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. "அது என்ன ஒழுங்கு?" என்று கேட்டேன்.
"இங்கிலீஷ்காரன் இப்படியா ‘திடுதிப் என்று பிறத்தியாருடைய அறைக்குள் நுழைவான்? கதவைத் தட்டிக் கொண்டு வெளியிலே அல்லவா நிற்பான்? உள்ளேயிருப்பவர்கள் ‘வா என்று சொல்வதற்கு முன்னால் அவன் வரவே மாட்டானே!” என்றாள் அவள். "அந்த வழக்கம் இங்கிலாந்தில்தானே?" என்றேன்.
"ஏன், இந்தியாவில் மட்டும் யாராவது வேண்டா மென்றார்களாக்கும்!" என்று சொல்லிக்கொண்டே எழுந்து அவள் நடையைக் கட்டினாள்; நான் தடுக்கவில்லை.
இந்தச் சோதனைக்குப் பிறகு என் உள்ளத்தில் புயல் வீச ஆரம்பித்து விட்டது. நண்பன் நாராயணனைப் பார்த்து, அவளை எனக்கு முன்பின் தெரியாதென்றும், நான் நடிக்கப் போகும் உதவி நாடகம் ஒன்றுக்கு டிக்கெட் விற்பதற்காக அன்று என்னைத்தேடி வந்திருந்தாளென்றும் ஒரு மகத்தான பொய்யைச் சிருஷ்டித்துச் சொன்ன பிறகு தான் என் மனம் ஒருவாறு நிம்மதியடைந்தது.
அதற்குப் பிறகாவது நாங்கள் ‘சும்மா இருப்பதே சுகம்' என்று இருந்துவிட்டோமா என்றால், அது தான் இல்லை!
இன்னதென்று தெரியாத அந்தச் சக்தி எங்களை மீண்டும் ஆட்டுவித்தது; நாங்கள் ஆடினோம்!
அதன்படி, மூன்றாவதாக இருவரும் ஏதாவது ஒரு பொது இடத்தில் சந்திப்பதென்ற முடிவுக்கு வந்தோம். அன்று மாலை ஆறரை மணிக்குக் குறிப்பிட்ட சினிமா ஒன்றுக்குச் செல்வதென்றும், ஒருவரையொருவர் எதிர் பாராமலே மேல்வகுப்புக்குச் சென்று விடுவதென்றும் தீர்மானித்தோம்.
என்னத்தைச் சொல்ல? நான் சினிமாவுக்குச் சென்றது அதுதான் முதல் தடவையல்ல; எத்தனையோ தடவை சென்றிருக்கிறேன். அவ்வாறு சென்றபோதெல்லாம் "எனக்குப் பின்னால் யார் வருகிறார்கள், என்னைச் சுற்றி யார் யார் நிற்கிறார்கள்?” என்றெல்லாம் நான் கவனித்ததே கிடையாது. அன்று என்னடாவென்றால், என்னுடைய கவனமெல்லாம் எனக்குப் பின்னால் வந்தவர்கள் மீதும், என்னைச் சுற்றி நின்றவர்கள் மீதும் சென்றது.
"இதென்னசங்கடம்!" என்று எண்ணிக் கொண்டே டிக்கெட்டை வாங்கினேன். மாடிப்படி ஏறியதும் எனக்குப் பின்னால் ‘தடதட'வென்ற சத்தம் கேட்டது. "நம்மை யார் தொடர்ந்து வருகிறார்கள்?" என்று திரும்பிப் பார்த்தேன். யாருமில்லை; படிகள் மரப் படிகளாதலால் நான் ஏறியபோது கேட்ட சத்தம் அது!
எனக்கு முன்னாலேயே அவள் வந்து அங்கே உட்கார்ந்திருந்தாள். நான் சிரித்துக் கொண்டே சென்று அவள் பக்கத்தில் அமர்ந்தேன்.
"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.
"ஒன்றுமில்லை!" என்று மழுப்பிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்கள் இருவரைத் தவிர அங்கு வேறு யாருமே இல்லை!"
அந்த நிமிஷம் எனக்கு மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. "இன்றைக்காவது மனம் விட்டுப் பேசலாம்" என்று எண்ணிக் கொண்டேன்.
அடுத்த நிமிஷம் அதற்கும் வந்தது ஆபத்து எங்கிருந்தோபத்துப் பன்னிரண்டு பேர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தார்கள். வந்தவர்களுக்கு உட்கார இடமா இல்லை? எங்களுக்குச் சற்றுத் தூரத்தில் எவ்வளவோ இடம் இருக்கத்தான் செய்தது. ஆயினும் அவர்கள் அனைவரும் எங்களைச் சுற்றியிருந்த இடங்களிலேயே உட்கார்ந்தார்கள்!
எங்களுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டுமென்பதில்தான் இந்த ஜன்மங்களுக்கு எவ்வளவு ஆர்வம்! ஏழேழு ஜன்மத்துக்கும் தொடர்ந்து வரும் என்கிறார்களே, அந்தப் பாவத்தைப் போலல்லவா இவர்கள் எங்கு போனாலும் எங்களை விடாமல் தொடர்ந்து வந்து தொலைக்கிறார்கள்!
எங்களுக்கு வந்த ஆத்திரத்தில் அவர்களையெல்லாம் வாயாரத் திட்ட வேண்டும்போல் இருந்தது. ஆனால் அத்தனை பேருக்கும் மத்தியில் அது சாத்தியமா? ஆகேவ, அவரவர்களை மனமாரத் திட்டிக்கொண்டு பேசாமல் உட்கார்ந்திருந்தோம்.
படம் முடிந்ததும் ஒருவரையொருவர் எதிர்பார்க்கவில்லை; 'பதவிசுகள் போல அவரவர்களுடைய வீட்டை நோக்கி நடையைக் கட்டிவிட்டோம்.
அன்றிரவுதான் விடிய விடிய நான் யோசித்தேன். அப்படியும் இப்படியுமாக ராஜ நடை நடந்த வண்ணம் யோசித்தேன்; கட்டிலில் உட்கார்ந்து வீட்டு முகட்டைப் பார்த்த வண்ணம் யோசித்தேன்; மல்லாந்து படுத்துக் கொண்டும் மண்டையைக் குடைந்து கொண்டும் யோசித்தேன். அதன் பயனாகத்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த தீர்மானத்திற்கு நான் வந்தேன். அதாவது “நாங்கள் இந்த உலகத்தில் வாழ வழியில்லை!" என்று.
உடனே என்னுடைய தீர்மானத்தை அவளுக்கு எழுதினேன் - வருத்தத்துடன்தான்!
என்னுடைய வருத்தத்தை அவள் பொருட்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, "இந்தப் பரந்த உலகத்தில் நாம் வாழ வழியா இல்லை? வழி இருக்கத்தான் இருக்கிறது. ஆனால், உங்களுக்கு என்மீது காதல்தான் இல்லை!" என்று அவள் எழுதியிருந்தாள்.
இதைப் படித்ததும் எனக்குச் 'சுருக்'கென்றது!
என்ன அக்கிரமம், இது எவ்வளவு பொல்லாதவள், அவள்
எனக்கு அவள்மீது காதல் இல்லையாமே!
ஒருவேளை அவள் சொல்வதும் உண்மையா யிருக்குமோ - அவ்வளவுதான்; என்னுடைய தீர்மானத்தில் எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. அப்படியே அசந்து உட்கார்ந்துவிட்டேன். உட்கார்ந்து நெடுநேரம் ஆழ்ந்து யோசித்தேன் - ஆம் அவள் சொல்வது உண்மை; முற்றிலும் உண்மை; முக்காலும் உண்மை!
அவள்மீது எனக்கு உண்மையிலேயே காதல் இருந்தால், அந்தக் காதல் எந்தச் சக்தியைத்தான் எதிர்த்து நிற்காது?