உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1/திருவள்ளுவர் -அரசியல்

விக்கிமூலம் இலிருந்து

திருவள்ளுவர் - அரசியல்
(மூன்றாம் நாள் சொற்பொழிவு)

மனித குல வரலாறு உயிர்ப்புடையது. இடையீடின்றித் தொடர்ந்து நடைபெறுவது; வளர்ச்சி நோக்கிச் செல்வது; மாற்றங்களைத் தரவல்லது. மாறுதல் இயற்கை நியதி. இந்த இயற்கை நியதியின் வழி மனித குல வரலாறு பெற்ற மாறுதல்கள் பலப்பல. சிலபொழுது வரலாறு நெறியல்லா நெறியதனை நெறியென்று கருதித் தடம்பிறழ்ந்து செல்லு தலும் உண்டு. சில சமயங்களில் வரலாற்றுப் போக்கின் எதிர்விளைவுகளைத் தாங்கிக்கொள்ள ஆற்றலில்லாமல் தேங்கி நிற்பதும் உண்டு. இத்தகைய சூழ்நிலைகளில் தடம் பிறழ்ந்த சமுதாயத்தை, நன்னெறியாகிய தடத்தில் நெறிப் படுத்தவும் தேங்கியிருக்கின்ற மனித குலத்திற்கு உந்து. சக்தியாக விளங்கி உந்திச் செலுத்தி வழி நடத்தவும் சிந்தனையாளர்கள் உருவாகின்றனர். அங்ஙனம் தோன்றிய சிந்தனை யாளர்களில் திருவள்ளுவரும் ஒருவர்.

திருவள்ளுவர், திருக்குறள் என்ற மறையைத் தந்தார். திருக்குறள். தமிழினத்துத் தோன்றலாகிய திருவள்ளுவர் தந்ததாலும், தமிழ் மொழியில் அமைந்ததாலும் தமிழ் மறை ஆயினும் திருக்குறள் உலகந்தழீஇய ஒட்பமுடையது; நாடு, இனம், மொழி, சமயம் முதலிய எல்லைகளைக் கடந்து மனித குலத்தின் மேம்பாட்டையே மையமாகக் கொண்டு விளங்குவது. திருக்குறள் வேற்றுமைகளை விளைவிக்காத வாறு ஒரு நாட்டையோ, ஒரு. மொழியையோ, ஓரினத்தையோ; ஒரு கடவுளையோ சிறப்பித்துக் கூறவில்லை. உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சமயச்சார்பற்ற உலகந்தழீஇய பொது நூல் திருக்குறளேயாம். அதனால் அது உலகப் பொதுமறை; மனித வாழ்வின் அனைத்துத் துறைகளையும் வளப்படுத்தத் தோன்றிய புதுமறை; பொது மறை. திருவள்ளுவர் சென்ற கால வரலாற்று நிகழ்வுகளையும் அவற்றின் விளைவுகளையும் எண்ணிக் குறைகளை நிறைகளாக்கும் நோக்கத்துடன் தமது நூலைச் செய்துள்ளார். திருவள்ளுவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் அவர் கடவுளையே எல்லாமாக நினைந்து நூல் செய்ய வில்லை. திருவள்ளுவர் அரசனை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனாலும் எல்லா உரிமைகளும் அதிகாரங்களும் அரசனுக்கே என்ற கொள்கையை அவர் ஒப்பவில்லை. திருக்குறளின் அனைத்துக் கோட்பாடுகளுக்கும் நீதி சார்ந்த அறமே அடிப்படை.

இன்றைய ஆய்வுக்குரிய பேச்சு, திருவள்ளுவர் காட்டும் அரசியல். அரசியல் மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம்; கொள்கை; அரசியல் என்பது வாழும் முறை (Way of life) அல்லது வாழ்க்கை முறை (Way of living) ஆகும். அஃதொரு சமுதாய வாழ்க்கை முறை. அரசியல் சமுதாய வாழ்க்கைக்கு ஒழுங்கமைதியைத் தருவது. ஒருவருக்கு மேற்பட்ட பலர் கூடி வாழ்வதற்கும் பொருளியல் ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழி வகுத்துத் துணை செய்கிறது. கி.மு. முதல் நூற்றாண்டில் திருவள்ளுவர் தோன்றித் திருக்குறள் செய்தார். திருவள்ளுவர் தோன்றிய நூற்றாண்டுக்கு முந்திய நூற்றாண்டுகளில் உலக நாடுகளில் பல்வேறு அரசியல் சிந்தனையாளர்கள் தோன்றியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கன்பூசியஸ், சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சிசரோ ஆகியவர்கள். கௌடில்யர் செய்த அர்த்தசாத்திரம் வட இந்தியாவில் ஆட்சி நூலாக அமைந்திருந்தது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் திருவள்ளுவருக்கு முன்பு சீரான அரசியல் கோட்பாடுகளை முறைப்படுத்தி விளங்கும் நூல் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆயினும் மிகச் சிறந்த அரசியல் நெறி முறைகள் தமிழகத்தில் விளங்கின. தமிழக அரசுகள் மிகச்சிறந்த பேரரசுகளாக விளங்கின என்பதை வரலாறு மூலம் உய்த்துணர முடிகிறது. முறையான அரசியல் நூல் தோன்றாவிடினும் சங்க காலத்தில் விளங்கிய தமிழறிஞர்கள் தமிழக அரசர்களுக்கு அவ்வப்பொழுது எடுத்துக்கூறிய அறிவுரைகள் இலக்கியங்களாக உருப்பெற்றுள்ளன. ஆக, தமிழக அரசர்கள் சங்ககாலத் தமிழறிஞர்களின் அறிவுரை வழியும், வழி வழியாக வந்த சிறப்புடை மரபுகள் வழியும் நல்லாட்சி செய்தனர் என்று தெரிகிறது.

"நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே
நினவ கூறுவ லெனவ கேண்மதி
அறம்புரிந் தன்ன செங்கோ னாட்டாத்து
முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண்
டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாசு விசும்பி னடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயின் மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர் புறத் தார்த்துப்
பொருபடை தருஉங்
கொற்றமு முழுபடை"
"ஊன்றுசான் மருங்கி னீன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்
அதுநற் கறிந்தனை யாயினியும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவை யாயினின்
அடிபுறந் தருகுவ ரடங்கா தோரே." (புறம் 25)

அதனாலேயே திருக்குறள் விரிவான அரசியல் கோட்பாடுகளை நடைமுறை விதிகளை எடுத்துக் கூறாமல் பொது நெறிகளை மட்டுமே விளக்குவதாகத் தோன்றியது போலும், அரிஸ்டாடில் போன்றவர்கள் மன்னன் அதிகாரத்திற்கு அரண் செய்யும் வகையிலேயே நெறி வகுத்தனர். அர்த்தசாத்திரமும் அந்நெறியதே. இவை மட்டுமல்ல; மக்கள் உரிமைகளைக்கூட இவர்கள் உறுதிப்படுத்தவில்லை. இனப் பிரிவுகளைப் படைத்து அவ்வழியிலேயே வேறுபட்ட உரிமைகளை வழங்கினர். ஏன்? மக்களுக்கு அடிமை வாழ்க்கையே கூட வழங்கினர். வள்ளுவர் அடிமை வகுப்பு என்பதையே ஒப்புக்கொள்ள வில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்" (972)

என்பது குறள். பிறப்பில் உரிமைகள் அனைவருக்கும் சமம் என்பது வள்ளுவர் கண்ட நெறி. பிறப்பில் சாதிகள் இல்லை; பிறப்பிலேயே பணக்காரன் இல்லை; ஏழை இல்லை என்பதாகும். திருக்குறள் முடியாட்சியை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் முடியாட்சியின் தடையிலா அதிகாரத்தை வள்ளுவம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசியல் என்பது ஒரு வாழ்வியல் தத்துவம், கொள்கை, கோட்பாடு. வள்ளுவத்தின் அரசியலுக்கு ஆதாரம் அறமேயாம். திருக்குறள் அரசியலை முறையாக விளக்குகிறது. மனிதகுலப் பொருளியல் ஒழுக்க முறைகளை முறைப்படுத்தி, வளம், வறுமையென்ற வேறுபாடுகளை அகற்றிப் பொருளின் காரணமாகத் தோன்றும் ஒழுக்கச் சிதைவுகளை நீக்கி, நிறையான ஒரு சமுதாயத்தைப் படைக்கத் தோன்றும் அரசியலுக்குப் பொருளியலே அடிப்படை. அதனால் திருக்குறள் பொருட்பாலில் அரசியல் பேசுகிறது. மனிதன் பிறந்து மொழி பயின்று, கலைஞானம் கற்று, வாழ்வாங்கு வாழ்ந்து, முழுமையுறுவதற்குப் பொருளே துணை செய்கிறது. அரசியலை முறையாக அறிந்து வளர்ந்த மனிதர்களே எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கமுடியும். அறிவியலில், பொருளியலில், அரசியலில் முறையாக வளர்ந்த மனிதர்களே சமயத்துறையிலும் சிறந்து விளங்க முடியும்; மனிதகுலம் நன்னிலையடையும். ஆதலால் “அரசியல் ஒரு சிலரால் ஏற்றுக்கொள்ளத்தக்கது; எல்லார்க்கும் உரியதன்று” என்பது திருவள்ளுவருக்கு உடன்பாடன்று. வள்ளுவர் அரசியலை ஓர் வாழ்வியலாகக் கருதி, அதற்குச் சமுதாய அறத்தை ஆதாரமாக அமைத்தார். தற்கால அரசியலாசிரியர்கள் கருத்தும் இதுவே, ஆகையால் வாழ்வியலில் ஈடுபட்டுள்ள எல்லாருக்கும் அரசியல் உரியது. பொதுவானது, அரசாங்கத்தில் தமக்குள்ள உரிமை, பங்கு கடமை, மற்றவர்களோடு உள்ள தொடர்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுதற்கு வாழ்வியலாகிய இன்று அரசியலே வழிகாட்டி.

அறம் என்பது மனித வாழ்வில் தீமைகளை அகற்றித் துன்பங்களை விலக்கி இன்பத்தைத் தருவது. இந்த அறநெறி மனித வாழ்வின் படிப்பினைகளிலிருந்தே தோன்றி வரலாற் றுக்கு வளமூட்டுகிறது, இந்த அறநெறிகளில் மனிதகுலம் ஒன்றி நின்று வாழ்வதை உறுதிப்படுத்தத்தான் அரசியல் தோன்றுகிறது; தொண்டு செய்கிறது. அரசியல் தத்துவங்கள் மனித உலக வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து தோற்றம் பெறுகின்றன. சிறந்த அரசியல் நிலவும் நாட்டில் ஒழுங்குகள் நிலவும்; ஒழுக்கங்கள் விளங்கித் தோன்றும்; அமைதி நிலவும்; வாழ்க்கையின் துய்ப்புக்குரியன அனைத்தும் எளிதில் கிடைக்கும்; அறிவுத்துறை மேம்பட்டு விளக்கமுறும், ஆங்குப் பகை ஒடுங்கிப் பண்பாடு விளங்கும். அரசியலின் பயன் அரசியலை நடத்துபவர்களுக்கன்று; மக்களுக்கேயாம். ஆனால் இத்தகைய உயர்ந்த அரசியல் தத்துவங்களால் வையகம் பெற்ற பயன்களைவிடத் துன்பமே மிகுதியாக அமைந்துவிட்டது. ஏன்? ஆட்சிபுரிவோர்கள் தடம் புரண்டு அதிகாரப் பற்றுடையவர்களாகி ஆட்சி நடத்தியதனா லேயாம்.

"நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல்
நரர்கள் என்று கருதார்
ஆட்டு மந்தையாம் என்(று) - உவகை
அரசர் எண்ணி விட்டார்


காட்டும் உண்மை நூல்கள் - பலதாம்
காட்டி னார்க ளேனும்
நாட்டு ராஜ நீதி - மனிதர்
நன்கு செய்ய வில்லை”

என்ற பாரதி வாக்கு இதனை உறுதிப்படுத்துகிறது. ஆயினும் மனிதகுல வரலாறு தொடங்கிய காலம் தொட்டு அரசில்லாமல் நாடுகள் இருந்ததில்லை. அஃது, ஒரு வளர்ச்சிமிக்க சமுதாயத்திற்கு அடையாளம். மதகுரு ஆட்சியில் தொடங்கித் தலைவன் ஆட்சியில் நடந்து முடியாட்சியில் தங்கிப் பின் முடிமன்னர் மதகுரு கூட்டாட்சியில் இயங்கி, யாதொரு ஆட்சியும் பயன் படாமற் போகவே மக்கள் தங்களுக்காகத் தங்களால் நடத்தப்படுகிற மக்களாட்சியை அமைத்தனர். தமிழகத்தைப் பொறுத்தவரை முடிமன்னராட்சி போற்றுதற்குரிய வண்ணமே இருந்தது. இங்கிலாந்து, பிரெஞ்சு நாட்டு மன்னர்களின் ஆட்சியை நோக்க ஆயிரம் மடங்கு தமிழ் மன்னர்களின் ஆட்சி விழுமியது. உலக அரசியல் வரலாற்றிலேயே நீதிக்காகத் தன் உயிரையே கொடுத்த தமிழ்நாட்டு அரசர்கள் போல் யாண்டும் இல்லை. ஆதலால் நல்ல முடியரசு திகழ்ந்த நாட்டில் தோன்றிய திருவள்ளுவர் அறத்தோடு கூடிய முடியாட்சியையே ஏற்றுக்கொள்கிறார். திருக்குறள் காட்டும் அரசின் தலைவன் முடிமன்னனே. திருக்குறள் அரசனை ஏற்றுக் கொண்டாலும், மற்ற நாடுகள் அரசனை ஏற்றுக்கொண்ட முறைக்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. உலக நாடுகளில், அரசனைக் கடவுளின் பிரதிநிதி என்றும், அரசனின் உரிமை கடவுளால் வழங்கப்பெற்றது என்றும், அவனுடைய ஆணை கடவுளின் ஆணை என்றும் நம்பிய நாடுகள் உண்டு. இங்கிலாந்து நாட்டில் (Divine Theory of Right) சிறப்பான இடம் பெற்றதால் ஏற்பட்ட அரசியல் கலகங்கள் நினைவிற் கொள்ளத்தக்க நிகழ்ச்சிகளாகும். திருக்குறள் அரசனைக் கடவுளின் பிரதிநிதி என்று நம்பவுமில்லை; ஏற்றுக் கொள்ளவுமில்லை.

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்” (386)

என்று திருக்குறள் பேசுகிறது. இத்திருக்குறளை அணுகி நோக்குபவர்க்கு அரசனை இறைவன் என்று போற்றுதல் திருவள்ளுவருக்கு உடன்பாடு இல்லை. "இறையென்று வைக்கப்படும்” என்பது ஒரு உபசார வழக்கேயாம். செங்கோன்மையின் காரணமாக இறை இடத்தில் மக்களால் வைக்கப்பெற்றுப் போற்றப்படுதல் என்பதே கருத்து. குடிமக்கள் அரசை அவாவித் தழுவி வாழவேண்டும் என்ற நிலையில்தான் பல அரசுகள் விளங்கின. விளங்குகின்றன. அரசை மக்கள் தழுவி வாழவேண்டியதில்லை; அரசுதான் மக்களைத் தழுவி நிற்கவேண்டும் என்று வள்ளுவம் வழி நடத்துகிறது. அரசை மக்கள் தழுவி வாழும் நெறி சிறந்த அரசியல் நெறியாகாது. அரசைத் தழுவி வாழ்ந்தால்தான் வாழ்வு நடக்கும் என்றால் அது. கொடுங்கோன்மை. குடிமக்களைத் தழுவி நிற்கும் அரசில், மக்கள் உரிமையுடையவர்கள். மக்கள் நலனை அரசு நாளும் போற்றுகிறது; வளர்க்கிறது: . பாதுகாக்கிறது. ஆங்குப் பொதுமை நிலவும்; செங்கோன்மையும் நடுவு நிலையும் உடைய நல்லாட்சி அமையும். ஆட்சியைத் தக்க அமைச்சர்களின் ஆலோசனைப்படி பெரியோரின் துணைகொண்டும் பெருமைக்குரியவாறு ஆட்சியை நடத்தவேண்டும். இது வள்ளுவம் ஆட்சிக்கு அமைத்த இரண்டு பாதுகாப்பு ஆகும். அரசை -- அரசின் நடைமுறைகளை விமர்சனம் செய்ய வள்ளுவம் உரிமை வழங்குகிறது. அரசின் தவறுகளை எடுத்துக் கடிந்து கூறத்தக்க அமைச்சர்களைப் பெறாது போனால் அந்த அரசு பகைவரின்றியே அழியும் என்றும் கூறுகின்றது.

"இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.” (448)

ஆம். இடித்துக் கூறுதல் என்பது தடம்புரண்ட ஆட்சியாளரைத் தடுத்து நிறுத்தி உரிய தடத்திற் செலுத்து வதேயாகும். அங்ஙனம் எடுத்துக்கூறுதல் செவிக்குச் சுவையில்லாமல் இருக்கலாம். ஆயினும் ஆட்சியாளர்கள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். அப்படித் தாங்கினால் தான் தரணியைத் தாங்கி ஆட்சி நடத்த இயலும் என்பது வள்ளுவத்தின் அரசியல் முடிவு.

"செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை
வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு" (389)

என்பது திருக்குறள், ஏன்? முறையாக நடைபெறாத ஆட்சியை மாற்றலாம்; மாற்றமுடியும்; ஆட்சியாளர்கள் ஆட்சியை இழப்பர் என்று திருக்குறள் அரசியல் ஆட்சி மாற்றத்திற்குரிய உரிமையையும் வழங்குகிறது.

"கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு". (554)

வள்ளுவம் காட்டும் அரசு, குடியாட்சி தழுவிய முடியாட்சியாகும். இங்கிலாந்து நாட்டில் இன்று நிலவும் குடியாட்சி முறை தழுவிய முடியாட்சியை நினைவில் கொள்க. பண்டையத் தமிழசு ஆட்சியில் முறைப்படுத்தப் பெற்ற பாராளுமன்றங்கள் இல்லை. ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற அமைப்புத்தானிருந்தன. சங்ககாலச் சான்றோர்கள் பாராளுமன்றங்கள் செய்த பணியைவிடச் சிறப்பான பணியை அரசியலுக்குச் செய்துள்ளனர். அவர்கள் அரசுக்கு எடுத்துக்கூறிய அறிவுரைகள் இன்றைக்கும் பயனுடையன. அரசை நடத்த நிதி தேவை. நிதியை மக்களிடத்தில் வரியாக வசூலிப்பதென்பது பொதுவான அரசியல் நியதி. ஆட்சிமுறை; இங்ஙனம் வரி விதித்து வசூலிப்பதில் வரியின் மிகுதி, வரியை முறையாக வசூலிக்காமை ஆகிய குற்றங்கள் அரசிடம் கண்ட பொழுது,

"காய்நெல் லறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதய எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத் தானும்
உண்ணான் உலகமும் கெடுமே”

(புரம் 184)

என்று பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடை நம்பிக்குச் செவி யறிவுறூஉவாக இடித்துரைத்தமை காண்க, குடி மக்களின்வருவாயில் ஆறில் ஒரு பங்கை அரசு வரியாகப் பெறலாம் என்று திருக்குறள் உரையாசிரியர் கூறுவர், ஆனால் திருக்குறள் குடிமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை, வரியின் அளவை அறுதியிட்டுக் கூறவில்லை . செப்பமான அரசியல் நூல் செய்த திருவள்ளுவர் வரி -- வரியின் அளவுபற்றிக் குறிப்பிடாதது ஏன்? அரசிற்குரிய நிதியைப் பற்றிக் கூறுமிடத்திலும் வரியைப் பற்றிய குறிப்பு இல்லை. சுங்கம் வசூலிக்கும் முறை கூறப்பெற்றுள்ளது.

"உறுபொருளு முல்கு பொருளுந்த னொன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்” (755)

என்ற திருக்குறள் கருத்து அறியத்தக்கது. நாட்டின் குடிமக்கள் அவரவருடைய பொருளியல் தகுதிக்கேற்றவாறு அவர்களே வலிய அரசிற்குரிய வரியைச் செலுத்த வேண்டும் என்பதே வள்ளுவத்தின் கொள்கை.

ஏனெனில் ஆட்சியுரிமையையும் படைக்கலத்தையும் பெற்றிருக்கும் அரசன், மக்களிடத்தில் பொருளை இரப்பது போலக் கேட்டாலும் அது கொடுமை என்று வள்ளுவம் தெளிவாக வரையறுத்துக் கூறுகிறது, இரப்பவன் அரசனாக இருப்பதால் இரப்பதற்காகக் கொடுக்காமல் போனால் அரசால் என்ன தீங்கு விளையுமோ என்றஞ்சி மக்கள் கொடுப்பார்கள். அது கொடுமையிலும் கொடுமை என்பது வள்ளுவத்தின் கருத்து.

"வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு” (552)

என்பது திருக்குறள். இன்று இந்தக் கொடுமை மலிந்திருக்கிறது. பிறிதொரு பார்வையில் அரசன் வேண்டுகோளின் மீது பணம் கொடுப்பவர்கள் அரசை - அரசின் எந்திரத்தை நடுநிலை பிறழ்ந்த முறையில் தங்களுடைய பொருளாக்கத்திற்கும் தங்களோடு இசைந்து வாராதாரை ஒறுத்தலுக்கும் பயன்படுத்துவர். இதன் மூலம் அரசின் செயல்முறை பிறழும். இன்று இம்முறை பிறழ்வுகளின் மூலம் தான் இந்திய நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து பணவீக்கமும் அவ்வழி விலை ஏற்றங்களும் ஏற்பட்டு மக்களைத் துன்புறுத்துகின்றன என்பதை மறுப்பார் யார்? அதோடு திருக்குறள் நின்றுவிடவில்லை, நல்லரசு இல்லாத நாட்டில் வறுமையைவிடச் செல்வம் துன்பம் தரக்கூடியது என்றும் கூறுகிறது.

"இன்மையின் இன்னா(து) உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்."

558

இதன் பொருள் என்ன? முறைகேடான அரசு தகாத வழிகளில் பொருளுடையாரைத் துன்புறுத்திப் பொருளைக் கொள்ளும் என்பது தானே! அரசு, குடிமக்களிடத்தில் பொருளைக் கேட்டுப் பெறுவதை வள்ளுவம் தடை செய்வதால், மக்களே அரசுக்குரிய வரியை வலிய வழங்க வேண்டும் என்பது உய்த்துணரப்படுகிறது.

"பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு"

(733)

என்ற குறள் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

அரசு, குடிமக்கள் இடையில் உள்ள பொருளியல் ஒழுங்கு முறைகளைக் கண்டோம். குடிமக்களுக்கு என்ன நெறிமுறைகளை வள்ளுவம் கூறுகிறது? வள்ளுவம் காட்டும் அரசு குடிமக்களைத் தழுவிய முடி அரசு ஆட்சி, சிக்கலின்றி இயங்குவதற்காக ஒரு தலைவன் ஆட்சியில் அமர்ந்துள்ளான். ஆனாலும் ஆட்சியின் பொறுப்புகள் அந்த நாட்டின் மக்கள் அனைவரிடமும் பகிர்ந்தளிக்கப்பெற்றுள்ளன என்றே கருத வேண்டும். எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற பாரதியின் வாக்குக்குரிய பொருளும் இதுவே. ஆதலால் அரசியலில் சொல்லப் பெற்றுள்ள அதிகாரங்களில் மிகச் சிலவே ஆட்சித் தலைவனுக்கு உரியனவாக உள்ளன. மிகப்பல ஆட்சியை நடத்தும் அரசனுக்கும், அவனுடைய குடிமக்களுக்கும் பொதுவானவை. மக்களின் இயக்கத்திற்கும் பொறுப்புகளை நிறைவேற்றும் உணர்வுக்கும், முயற்சிக்கும் அரசு மறைமுக மாகத் தூண்டுகோலாகவும் துணை நிற்பதாகவும் அமைவதால் பொதுவாகக் கூறப்பெற்றன. செங்கோன்மை (அதி. 55 கொடுங்கோன்மை (அதி. 56) வெருவந்த செய்யாமை (அதி. 57 கண்ணோட்டம் (அதி. 58) ஒற்றாடல் (அதி. 77) படைச்செருக்கு (அதி. 78) ஆகிய அதிகாரங்கள் அரசுக்கேயுரியன. மற்றவை அரசவைக்கும் மக்களுக்கும் உரியன. ஆதலால் "பொருள் செயல் வகை" என்ற அதிகாரத்திலும் வேறு சில அதிகாரங்களிலும் சொல்லப்படும் பொருள் செய்யும் நெறியும் முறையும் குடிமக்களுக்கும் உரியவை, சொத்துரிமைபற்றித் திருக்குறள் அரசியல் என்ன கூறுகிறது? மனிதகுல வரலாற்றில் தொன்மைக் காலத்தில் பொதுவுடைமை முறையும் பின் தனி உடைமையும் அதன்பின் தனி உடைமை பொது உடைமை ஆகிய இரண்டும் கலந்த கலப்புப் பொருளாதாரமும் தோன்றிச் செயல்பட்டு வருகிறது. கார்ல் மார்க்ஸ் - தனி உடைமைச் சமுதாயம் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கும் ஒழுக்கத் திற்கும் அமைதிக்கும் இடையூறாவது என்று கூறியுள்ளார். வரலாற்று உண்மைகளையும் - மானிட சாதியின் உயர்வு - நெகிழ்வுகளையும் கற்றறிவார்க்கு மார்க்சியம் முரண்பட்டதன்று; உடன்பாடுடையதேயாம். அணுகுமுறைகளில் - நடைமுறைகளில் மாற்றம் ஏற்படலாம். தவறு இல்லை. முதலில் உடமை என்றால் என்ன? பொருள் என்றால் என்ன? பொருள் இருவகைப்படும். ஒன்று தனிநிலையில் மனிதன் துய்த்து மகிழ்தற்குரிய உடைமைகள் பொருள்கள் (Personal Property) ஆகும். பிறிதொன்று மனிதன் அறிவையும் உழைப்பையும் பயன்படுத்திப் பொருள் உற்பத்தி செய்வதற்குரிய அடிப்படை உரிமைகள் அதாவது உற்பத்திக் கேந்திரங்கள் (Private Property) ஆகும். இவ்விரண்டில் முதலாவதாக உள்ள உடைமைகளை மனிதர்கள் தமக்கு உரிமையாகப் பெறுவதிலும் அனுபவிப்பதிலும் அவர்களுடைய வழி வழி தலைமுறையினருக்குக் கொடுப்பதிலும் தவறில்லை; இரண்டாவது வகையினதாகிய உற்பத்திக் கேந்திரங்களைத் தனி மனிதர் உரிமைப்படுத்திக் கொள்ளுதல் நன்றன்று. பொருள் என்றால் என்ன? நிலம், தொழிற் சாலைகள் ஆகிய உற்பத்திக்கேந்திரங்களையும் பணத்தையும் பொருள் என்று ஏற்கவில்லை. பொருள் என்பது மனிதகுலம் உண்டு, தின்று, உடுத்துத் துய்த்து மகிழ்வதற்குரிய பொருள்களேயாம். இதனை,

"........................யாஅம் இரப்பவை

பொருளும் பொன்னும் போகமுமல்ல......."

(பரிபாடல் 5, 78, 79)

என்னும் பரிபாடல் அடிகளில் பொருளும் பொன்னும் பிரித்து ஒதப்பெற்றுள்ளது காண்க. திருக்குறள்,

"பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை"

(247)

என்று கூறி இருப்பது அறிக. இங்குப் பொருள் என்பது மனித குலத்தின் நுகர்வுப் பொருள்களையே குறிக்கும். உணவும், தண்ணிரும் போன்ற பொருள்கள் இல்லை யானால் உலகில் வாழ்தல் இயலாது, ஆதலால் இவ்வுலகம் இல் என்றார், "செய்க பொருளை" (குறள் 759) என்று வள்ளுவம் ஆணையிடுகிறது. பொருள்களின் மாற்றுப் பதிவுகளாக விளங்கும் நாணயங்களை அரசு மட்டுமே அச்சடித்து வழங்க முடியும். ஒவ்வொரு குடிமகனும் நாணயங்களைச் செய்தால் எது நாணயமான நாணயம்? எது நாணயமற்ற நாணயம் என்பது தெரியாமற் போய்க் கறுப்புப் பணம், கணக்கில் வாரா மூலதனம் சிலரிடத்தில் குவிந்து நாட்டை அழிக்கும். ஆதலால் செய்க பொருளை என்பதற்கு உண்டு தின்று உடுத்து மகிழ்வதற்குரிய பொருள்களைச் செய்து குவிப்பா யாக என்றே பொருள் கொள்ள வேண்டும்.

மனித குலத்திற்குத் தனி உடைமை உரிமையைத். திருக்குறள் வழங்கவில்லை. திருக்குறள் பொது உடைமையே ஏற்றுப் போற்றியுள்ளது. வள்ளுவம் பல்வேறு உடைமைகளை வகுத்துக் கூறியுள்ளது. ஆனால் பொருளுடைமை என்று ஓர் அதிகாரம் செய்யவில்லை-ஏன்? பொருளியில் பற்றிய கருத்துக்களைப் பொருளுடைமை என்று பேசாது, "பொருள் செயல் வகை" என்று கூறுவதின் விளக்கம் என்ன? பொருள் இயற்கையில் வந்து அமைவதன்று. பரம்பரையாகவும் கிடைக்கக்கூடாதது. பொருள் செயற்பாலதாகிய முயற்சியின் பாற்பட்டது என்பது தெளிவு. அது மட்டுமின்றி "ஊக்க முடைமை" அதிகாரத்தில் "உள்ளம் உடைமை" என்று கூறி உழைக்கும் உள்ளமே உடைமை என்றும் கூறி உறுதிப்படுத்துகிறது. மனிதனுக்குரிய செல்வம் அவனுடைய அறிவு உழைப்புக் கரங்களின் வழி வரவேண்டும் என்பது தான் இயற்கை நியதி; அரசியல் நெறி, உடைமைகள் பரம்பரையாக வருவதை வள்ளுவம் ஏற்கவில்லை; அதுமட்டுமல்ல. ஒருவருடைய உழைப்பின் பயன் இன்னொருவருக்கு உடைமையாவதையும் வள்ளுவம் மறுக்கிறது. அதனால் ஒவ்வொரு குடிமகனையும் உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டும் என்றே திருக்குறள் ஆற்றுப் படுத்துகிறது, "உள்ளம் உடைமை உடைமை", "செய்க பொருளை', 'தாளாற்றித் தந்த பொருள்” என்ற குறள்வரிகள் நினைவுகூரத்தக்கன. ஒருவர் உழைப்பிலிருந்து மற்றொருவர் முறைகேடாகப் பொருள் செய்து வாழ்தல் பழித்தொடர்புடையன என்று இழித்துக் கூறி மறுக்கிறது. இதனை,

"பழியஞ்சிப் பாத்துரண் உடைத்தாயின் வாழ்க்கை

வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்"

(44)

"சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று"

(660)

என்னும் குறள்கள் வழி அறிக. பொருள் செய்யும் முயற்சியில் பழி எது? செல்வத்தை உற்பத்தி செய்தவனுக்கு உழைப்புக்கும் உற்பத்திக்கும் ஏற்பப் பங்களிக்காமை, பழியாகும். நெறிமுறை பிறழ்ந்து வாழும் ஒருவன் செல்வத்தைக் குவித்து வைத்துள்ளான் நாளும் உழைத்து வாழும் செந்நெறியில் நிற்கும் ஒருவன் வறுமையில் அல்லற்படுகிறான். இந்த முரண்பட்ட காட்சி அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. இந்த முரண்பட்ட நிலை ஏன்? இதற்குத் திருக்குறள் தந்துள்ள விடை அருமையானது; சிந்தனைக்குரியது; செயற்பாட்டிற் குரியது. இம் முறைபிறழ்வு - இயற்கை நியதி, கடவுளின் ’செயல்; முற்பிறப்பின் பயன் - என்றெல்லாம் திருக்குறள் சமாதானம் கூறவில்லை; முறைபிறழ்வை நியாயப்படுத்த வில்லை. இந்த முரண்பாட்டில் நியாயமில்லை; விதிகள் இல்லை. கடவுளுக்குச் சம்மதமில்லாதது. ஆதலால் முரண்பட்ட நிலையினை ஆராய்ந்து சோதனை செய்க. முறைப்படுத்துக என்றே குறள் கூறுகிறது.

"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்"

(109)

என்பது குறள். நினைக்கப்படும் - ஆழமான பொருட் செறிவுடைய சொல். உழைப்பின் வழியதாகவே செல்வம் வருதல் வேண்டும். இது பொது நியதி, பொதுவுடைமை விதி; பொருள் வளர்ச்சிக்குரிய விதியும் கூட. ஆதலால் செல்வத்தை உற்பத்தி செய்துவரும் உழைப்பாளிகளை வள்ளுவம் வாழ்த்துகிறது; உழைப்பாளிகளுக்குப் புகழ்ப் பரணி பாடுகிறது. உழைப்பாளிகள் அல்லாதவர்களை வயிற்றுப் பிழைப்புக்காகத் தொழுது உணவு வாங்கி உயிர் பிழைப்போர் என்பது போலக் கொச்சைப்படுத்திப் பேசுகிறது.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்”

(133)

என்று கூறுகிறது. மேலும் திருக்குறள் தோன்றிய காலத்தில் உழவுத் தொழிலே பெரிய தொழில், திருக்குறள் நிலவுடைமை உரிமைபற்றிக் கூறுவது ஆய்விற்குரிய செய்தி. நிலத்தில் உழுது மனித உலகம் உண்டு மகிழக்கூடிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து அளிக்கும் உழைப்பாளிகள் உழவர்கள். உழவர்களுக்கும் அவர்கள் உழும் நிலத்திற்கும் இடையில் உள்ள உறவு எப்படி அமையவேண்டும் என்பதைத் திருக்குறள் அழகாகக் கூறியுள்ளது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவுபோல அமைய வேண்டுமாம். இது வள்ளுவத்தின் கருத்து. வீடு நோக்கி வராத தலைமகனுடன் தலைமகள் ஊடி நிற்பாள்; அதுபோல நாள்தோறும் விளை நிலத்திற்கு வராத நில உரிமை யுடையானை நோக்கி நிலமகளும் ஊடி நிற்பாள்; இந்த ஊடலால் விளைபொருள் குன்றும் என்று எச்சரிக்கை செய்கிறார். விளைபொருள் குன்றும்பொழுது நிலம் வளமின்றிக் களர் நிலமாகும். உரியார் காணாத நிலம் எல்லாம் களர் நிலம் ஆயிற்றுப்போலும். நாள்தோறும் நிலத்தின் பக்கம் வாராதார் நில உரிமை பெறுதற்கு உரியரல்லர். நிலத்தை ஒருவர் உரிமையாக வைத்துக் கொண்டு அதைக் குத்தகைக்கும் வாரத்திற்கும் விடுதல் கூடாது என்று குறள் நெறி கூறுகிறது. இந்நூற்றாண்டில் பொருளியல் வல்லுநர்கள் கூறும் (Absentee Landlord) என்ற கொள்கை வள்ளுவம் கண்டு காட்டிய கொள்கை யாகும். ஆதலால் வள்ளுவம் காட்டும் பொருளியலில் அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப உழைத்து, உரிய பயன்களைப் பெற்று வாழவேண்டும் என்ற நியதியே வற்புறுத்தப் பெறுகிறது.

உற்பத்தியாகும் பொருள்களை முறையாகப் பங்கீடு செய்வது. என்பது பொருளியலின் விதி. செல்வம் பங்கீடு இல்லாத நாட்டில் வறுமை -- வளம் என்ற வேறுபாடு இருக்கும். அவ்வழி ஒழுக்கங்கள் சிதையும்; அமைதி குன்றும். பொருள் பங்கீடு முறையை நடைமுறைப் படுத்துதல் அரசின் ஒரு நீங்காத கடமையாகும்.

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு" (385) என்பது குறள். பொருட் செல்வத்தை வகுத்தளித்தல் என்பது அரசின் தலையாய பணி; கடமை. இந்தப் பணி செம்மையாக நடைபெறாத நாட்டில் சிலர் ஆரத் துய்ப்பர்; பலர் நல்குரவால் வாடுவர். முறையான பங்கீட்டு முறை உள்ள நாட்டில் தான் செல்வத்தை உற்பத்தி செய்தற்குரிய கிளர்ந்தெழு எழுச்சியும், உற்பத்திப் பெருக்கமும். ஒழுக்க நெறிக்கோட்பாடுகளும், அரசின் விதிமுறைகளை மீறாத குடிகளும் அமைய முடியும். பொருளை வகுத்தளிக்கும் வழியில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தேவைக் கேற்ற ஊதியம் என்ற சமநிலைச் சமுதாயம் அமையத் துணை செய்யும். உழைத்தற்கியலாத உடல் ஊனமுற்றோர் முதியோர் ஆகியோர் பேணப்பெறுவர். மேலும் புதிய பொருள்களை உற்பத்தி செய்யப் புதிய திட்டங்கள் தயாரிக்கப்பெற்று அத்திட்டங்களின் நிறைவேற்றுப் பணிக்கும் நிதி ஒதுக்கப்பெறும், இன்று பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள குறை, பொருட் பங்கீட்டுமுறை சீராக நடைமுறைப்படுத்தப் பெறாததேயாம். வல்லவர்களும், அரசின் கடைக்கண் பார்வையில் குளிப்பவர்களும் அரசு உறுப்புகளுக்கு இரைபோட்டு இங்கிதமாக நடக்கத் தெரிந்தவர்களும் கோடி கோடியாக அடுக்கி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அதேபோழ்து, அறுபது விழுக் காட்டுக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வேளை உணவுகூட உறுதியாகப் பெற முடியாத நிலையில் அவமருகின்றனர். இது குறித்து “எதிர் காலங்களுக்கிடையே உராய்வுகள்” பற்றி ஆராய உலகளவில் அமைத்த குழுவின் "ஆய்வறிக்கை" இந்திய மக்களில் சரிபாதி பேர் கொடிய வறுமையில் உழலும் காட்சியை 20 ஆண்டுகளில் காணலாம் என்று கூறியுள்ளதை அறிக. இந்த நிலையில் 1955ஆம் ஆண்டிலிருந்து சோஷலிச பஜனை" பல்லவி அனுபல்லவியாகப் பாடப்பெற்று வருகிறது. யாதொன்றும் நடந்தபாடில்லை, சுரண்டல் பொருளாதாரமே வளர்கிறது. சில தர்மச் செயல்கள் கடன் வழங்குதலும், குடியிருப்புக்கள் அமைத்துத் தருதலும் வாழ்க்கையை வளர்த்துவிடா. ஏழை மக்களைப் பொறுத்த வரையில் :இன்னும் விடியவில்லை. அதாவது நள்ளிரவில் சுதந்திரம் வந்தது. அந்தச் சுதந்திரத் தேவியின் ஒளிக் கற்றைகள் குடிசைகளில் வீசவில்லை; மாடமாளிகைகள் கூட, கோபுரங்கள் பக்கமே வீசுகிறது. இந்த நிலை மாற வள்ளுவத்தின் சமநிலைப் பொருளியல் கொள்கை நடை முறைப்படுத்தப்பெற வேண்டும். பொருளாதார சமத்துவம் இல்லாத அரசும் சமுதாயமும் அல்லலுறுதல் கண்கூடு. இங்ஙனம் அல்லலுறுதல் தவிர்க்க முடியாதது.

ஒரு நாட்டின் குடிமக்கள் ஒழுங்கு முறைகளின் வழி கடமைகளை இயற்றுதல் வேண்டும். அவ்வழி ஒழுக்க நெறியில் நிற்கும் பண்பும் தேவை. ஒழுக்கமுடைமையே குடிமைப் பண்பின் இலக்கணம். தாமாக ஒழுக்க நெறியை மேற்கொள்ளுதல் அரிது. அப்படியே ஒரோவழி முயன்றாலும் சூழ்நிலை நல்லொழுக்கத்துக்கு இசைந்ததாக அமைவது இல்லை; நாட்டின் அரசு குடிமக்கள் நல்லொழுக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தக்கவாறு சூழலை உருவாக்கி வழி நடத்தவேண்டும். இதனைப் புறநானூறு ‘நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே' என்று கூறுகிறது. அரசின் நடைமுறைகளும் சமுதாயத்தின் சூழலும்தான் ஒழுக்க நெறிக்குரிய அடிப்படைத் தேவை. அரசு குடிமக்களின் குற்றங்களைக்கண்டு . தண்டம் வழங்குவதற்கு முன்பு ஆராயவேண்டும். அக்குற்றங்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்த தன் ஆட்சியின் குற்றங்களை ஆராய்ந்து கண்டு கொள்ளவேண்டும். . அவ்வண்ணம் ஆராய்ந்தறிந்து கொண்டு ஆட்சியின் குற்றங்களை நீக்கிக் கொள்ளுதல் அரசுக்கும் நல்லது: மக்களுக்கும் நல்லது என்று கூறுகிறது.

"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு” (436) என்பது குறள். குடிமக்களிடத்தில் அழுக்காறு, அவா, வெகுளி, பகை, வெஃகுதல் முதலிய ஒழுக்கக் கேடுகள் தோன்றுதற்குரிய களம் எது? ஒரு நாட்டில் வாழும் மக்களிடையில் அருவருக்கத் தக்கவாறு வளம் -- வறுமை என்ற வேறுபாடுகள் நிலவுதல் தானே? பாவேந்தன் பாரதிதாசன்,
"பொருளாளி திருடர்களை விளைவிக் கின்றான்
பொதுவுடைமையோன் திருட்டைக் களைவிக் கின்றான்”

(பாண்டியன் பரிசு இயல் 17-2)

என்று கூறியதையும் நினைவில் கொள்க. ஒழுக்கக் கேடு திடீரென்று தோன்றுதல் இயற்கை அன்று; தோன்றாது. மனிதர்கள் நல்லவர்களாகவே பிறக்கிறார்கள். சமுதாய அமைப்பு அவர்களைக் கெட்டவர்களாக்குகிறது.

"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு (452)

என்ற குறள் எண்ணத்தக்கது. கள்ளுண்ணல் கூடாது. கள்ளுண்பது ஒழுக்கக்கேடு, திருக்குறள் கள்ளுண்ணாமை என்றே ஒரு அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால் மதுவிலக்கு வெற்றி பெறத்தக்க சமுதாய அமைப்புத் தோன்றாமல் அமையாமல் மதுவிலக்கு வெற்றி பெறாது. மாறாகச் சிறைச்சாலைகனே நிறையும். உடல் உழைப்பாளிகள் தமது உழைப்பில் செலவாகும் சக்தியைத் திரும்பப் பெறத்தக்க நிலையில், ஊட்டச் சத்துள்ள உணவு கிடைப்பதில்லை. ஊதியம் குறைவு: குடும்பமோ பெரிது. பெரிய குடும்பம் வேறு அமைதியைக் கெடுக்கிறது. செலவழிக்கப்படுகிற சக்தி திரும்ப ஈடுசெய்யப்பெறாத நிலையில் சோர்வு கலளப்பு அவர்களை வருத்துகிறது. அவற்றைத் தற்காலிகமாகவேனும் மாற்றிக்கொண்டு மறக்கலாமா? தூங்கலாமா? என்று எண்ணுகின்றனர்; குடிக்கின்றனர். குடியின் பின் விளைவு உடல் நலத்தைக் கெடுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. வளமான வாழ்வு பெறாதவர்கள் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். சிந்திக்க முடிவதில்லை. அவர்களுக்குத் தற்காலிக நலன்களே முக்கியம். அது அவர்கள் குறையன்று. சமுதாய அமைப்பு முறை அவர்களை அப்படி உருவாக்கி உள்ளது. சமுதாய அமைப்புக் காரணமாகச் சிலர் மன அமைதி இழக்கின்றனர். அவர்கள் தீவிரமாகச் சிந்தித்து முயன்று சூழ்நிலைகளை மாற்றிக் கொள்ளாமல் மனக்கவலையை மாற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள்; உணர்ச்சி வசப்படுகிற வர்கள். சமுதாய அமைப்பு உணர்ச்சிக்குத் தீனி போடுகிறது. அது ஆறுதல் தருவதில்லை; அமைதியைத் தருவதில்லை ; பழித்துக் கூறும்; தூற்றும். அது வளர்ச்சியடையாத சமுதாய இயற்கை; அச்சமுதாயத்தினர் பேச வேண்டுவன பேச மாட்டார்கள்; தத்தம் மனத்தளவே பேசுவார்கள். இவ்வாறு பாதிப்புக்கு ஆளானவர்கள் மனவமைதியைப் பெறக் கள்ளுண்கின்றனர். இந்த ஒழுக்கக்கேடு முற்றாக நீக்கப்பட வேண்டுமானால் திறமைக்கேற்ற உழைப்பு வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவேண்டும். நல்ல வண்ணம் உண்டு மகிழ்ந்து வாழ -- நுகர்வுப் பொருள்கள் எளிதில் நியாய விலையில் கிடைக்கவேண்டும். ஊதியத் திற்கும் நல் வாழ்க்கைக்கும் இடையில் உள்ள இடைவெளி சுருங்கவேண்டும். மனித வாழ்க்கை சோற்றினால் மட்டும் ஆனதல்ல. உள்ளத்திற்குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. களிப்பை மகிழ்ச்சியைத் தரக்கூடிய அமைப்புக்கள் நிறையத் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக இவர்களை மகிழ்விப்ப தற்கு என்றே அமையக்கூடிய குடும்பங்களும், நட்புக்களும் சமுதாயமும் அரசும் அமையவேண்டும். இங்ஙனம் அமைந்துள்ள வாழ்க்கை முறை, சமுதாய முறை எப்போது இருந்தது? எப்போது வரும்? ஒழுக்கத்தின் ஊற்றுக்களனாக அமைந்து ஒழுக்கத்தை உறுதிப்படுத்தி வளர்க்கும் பொறுப்பு சமுதாயத்தினுடையதாகும்; அரசினுடையதாகும். இந்த நெறிமுறைப்படி அமையாத அரசுக்கு நாட்டு மக்களின் ஒழுக்கக் கேடுகளுக்குத் தண்டனைகள் விதிக்கும் சட்டங்களை இயற்ற உரிமை இல்லை; தண்டனைகள் வழங்க உரிமையில்லை. அப்படியே அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்தால் அரசு கெடும். இது திருக்குறள் காட்டும் அரசியல் நெறியின் சிறப்பு. குடிமக்களிடத்தில் ஒழுக்கக்கேடுகள் தோன்றுதலுக்கேற்ற நெறி பிறழ்ந்த ஆட்சிமுறை என்று ஆட்சித்தலைவர் அறிந்து கொள்ள வேண்டும். அங்ஙனம் இருக்குமானால் அரசு முதலில் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாட்டில் ஒழுக்கநெறி வளரும். அரசும் அரசாக இருக்கும். அரசு தண்டனைகள் வழங்கு வதற்கு முன்பு குடிமக்களுடைய வாழ்க்கை உரிமைகளை வழங்கவேண்டும். ஒரோவழி அரசின் வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தாமல் வரையறைகளை மீறி ஒழுக்க மில்லாதவனாக ஒருவன் நடந்து கொண்டாலும் அவன் அழியத்தக்க வகையில் தண்டித்தல் கூடாது. தண்டனை அழித்தலுக்கல்ல; திருத்தப்பாட்டினையே நோக்கமாகக் கொண்டது. குற்றங்களுக்குரிய தண்டனைகள் வழங்குதலில் மனிதர்களுக்கிடையில் வேறுபாடு காட்டக்கூடாது; ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற அநீதி திருக்குறள் ஏற்றுக் கொள்ளாத ஒன்று. அரசு வழங்கும் தண்டனை அச்சத்தைத் தோற்றுவிக்க வேண்டும்; ஆனால் அழித்துவிடக்கூடாது என்று குறள் கூறுகிறது.

“கடிதோச்சி மெல்ல எறிக; நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்" (562)

என்று நயம்படக் கூறுவார்.

யாதொன்றுக்கும் தகுதியில்லாத கயவரைக்கூடத் திருவள்ளுவர் அழிக்கச் சொல்லவில்லை. கொல்வதை ஒத்த துன்பங்களைத் தந்து அவர்களைத் திருத்திப் பயன்படுத்த வேண்டும், என்பதே வள்ளுவத்தின் நோக்கம். இது,

"சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்"

(178)

என்ற வள்ளுவம் வழி உணரப் பெறுகிறது. திருவள்ளுவர் உறுப்புக்கள் அழித்தல், நாடு கடத்துதல், தூக்குத் தண்டனை முதலிய கொடிய தண்டனைகள் வழங்க உடன்படவில்லை என்பது பெறப்படுகிறது.

மனிதகுலம் பொருளியல் முயற்சியில் ஈடுபடவும் ஒழுக்க நெறியில் நிற்கவும் அறிய வேண்டும். வாழ்க்கையைச் செப்பமுற அமைக்கும் அடிப்படை மூலங்களில் கல்வியே தலையாயது. காலத்தினால் செய்த நன்றி என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது கல்விக் கொடையைத் தான் போலும். கல்வி மக்களின் அடிப்படை உரிமை. அதை வழங்குவது அரசின் தலையாய கடமை. பல்வேறு துறைகளில் சிறப்புற்றிருந்த பழந்தமிழகப் பேரரசுகள் மக்களின் அடிப்படைத் தேவையான கல்வியை வழங்குவதில் ஏன் போதிய ஆர்வம் காட்டவில்லை என்பது விளங்கிக்கொள்ள முடியாத, புரியாத புதிராக இருக்கிறது. சங்க காலத்தில் கல்வி கற்கும் முயற்சி மக்களின் . பாற்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது. பாண்டியன் அறிவுடைநம்பி பாடியதாக உள்ள புறநானூற்றுப் பாடல்,

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை ::முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஒரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே"

(புறம் 173)

ஆய்வுக்குரியது. பாண்டியன் அறிவுடைநம்பி அரசன். அவன் கல்வி கற்கும் முயற்சியை, கல்வி கற்பதற்குரிய சாதனங்களை மக்களே அமைத்துக்கொண்டு கற்க வேண்டும் என்று கூறியுள்ளான். பாண்டியன் அறிவுடை நம்பியின் காலம் கி.பி, இரண்டாம் நூற்றாண்டு. அவன் காலத்தில் மக்களை நாற்பாலாகப் பிரித்தல் என்ற அயல் வழக்கு நுழைந்து விட்டதா? அதனால் கீழ்ப்பால் மக்கள், கல்வி உரிமையை இழந்திருந்தார்களா? மேற்பால் மக்கள் வழிவழியின் காரணமாகவும் கற்றுக்கொண்டார்களா? என்பனவெல்லாம் நுணுகி ஆராய்ந்தறியத்தக்க செய்திகள். சங்ககாலப் பெரும் புலவர்கள் தற்செயலாகத் தோன்றி வளர்ந்த தமிழறிஞர்கள் போலும். ஆனால் திருவள்ளுவர் கல்வியை அரசியல் பட்டியலில் சேர்த்துள்ளார். அதனாலேயே ஆட்சியாளர் கல்வி கற்றலும், ஆட்சியின் உறுப்பாகிய குடிமக்களுக்குக் கல்வியைக் கற்பித்தலும் அரசின் நீங்காத கடமை என்று வள்ளுவம் வலியுறுத்துகிறது. குடிமக்களின் அடிப்படை உரிமையாகிய கல்வி உரிமையை வழங்காத அரசு பாரதி காலம் வரை நாடு விடுதலை பெறாத காலம் வரை இருந்திருக்கிறது. பாரதி,

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்"

(வெள்ளைத்தாமரை 9)

என்ற பாடலில் “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்று பாடுவது . இக் கருத்தை வலியுறுத்துகிறது. இன்றும் ஏழை பெறும் கல்வி, வாய்ப்பும் வசதியும் உடையவர் பெறும் கல்வி வேறுபட்ட நிலையினதே; தரத்தில் மலையும் மடுவும்போல அமைந்து கிடக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு சுதந்திரக் குடியரசு ஆரம்பக் கல்வியை இலவச மாக்கியது; கட்டாயமாக்கியது; படிப்படியாக உயர்நிலைக் கல்வி, கல்லூரி புதுமுகக் கல்வி வரை இலவசமாகியது. இதுபோக சமுதாயத்தில் கல்வி உரிமையையும் மற்ற உரிமை களையும் முற்றாக இழந்து, கடைகோடியிலிருந்த மக்களை முன்னணிக்குக் கொண்டு வந்து முன் வரிசையில் நிறுத்தத் தக்கவகையில், தாழ்த்தப்பட்டோர் பிற்பட்டோர் ஆகிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உணவு -- உறையுள் உதவிப் பணம் வழங்கிக் கல்லூரிப் பட்டப்படிப்பு, மேற்பட்டப்படிப்பு வரை கற்க வாய்ப்பு வழங்கப்பெற்று வருகிறது. சுதந்திரக் குடியரசின் இந்தச் சாதனைகள் மறக்க முடியாதன; மறுக்க முடியாதன. மேலும் மேலும் வழிவழியாகத் திருக்கோயில்கள் எடுத்து அறம் செய்த தனவணிகர் குடும்பத்தைச் சேர்ந்த செட்டிநாட்டரசர் அவர்கள் ஒரு பல்கலைக் கழகத்தையே அமைத்துக் கல்விக்கொடை வழங்கிவருவதை நெஞ்சுநெகிழ்ந்த உணர்வுடன் பாராட்டுகின்றோம். கல்வித் திட்டங்கள் இவ்வளவு சீர்மையாக அமைந்திருப்பினும் நடைமுறையில் குறைகள் இல்லாமல் இல்லை. இக்குறைகள் ஆட்சியினிடத்தில் பெரும்பாலும் இல்லை. அரசு, தன் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைத்துக்கொண்டிருக்கிற உறுப்பு களில் நிர்வாக எந்திரத்தில் உள்ள குறைகளே யாகும். எல்லாச் சிற்றூர்களிலும் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் பள்ளிக்கு வரவேண்டிய வயது வந்த அனைத்துப் பிள்ளைகளும் பள்ளிக்கு வந்துவிட்டார்களா? என்று ஆண்டுதோறும் அரசு கேட்கிறது. அவர்கள் முறையான கணக்கெடுத்துக் கொடுக்காமல் 'ஆம்' என்று தவறான தகவல் தருகிறார்கள். ஆனால் உண்மையில் கிராமங்களில் பள்ளிக்கு வரவேண்டிய வயதுவந்த குழந்தை களில் குறைந்தது பத்து விழுக்காட்டினர் பள்ளிக்கு வராமல் இருப்பார்கள் என்றே நாம் நம்புகின்றோம். மற்றக் குழந்தைகள் பள்ளிக்கு வருவது மட்டுமன்று, பள்ளியில் தொடர்ந்து சீராக ஐந்தாம் வகுப்பு வரையிலாவது கற்க வேண்டும். இதற்குரிய சூழல் இன்னமும் கிராமங்களில் தோன்றவில்லை. இன்றைய சூழ்நிலையில் கல்விப் பரம்பரை பெரும்பாலோருக்கு இல்லை. சுற்றச் சூழ்நிலைகளும் மோசம். ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர் -- மாணவர் விகிதாசாரமோ, கற்பிக்கும் விதிகளுக்குப் புறம்பாக அமைந்துள்ளது. ஆரம்பப் பாடசாலைக்கு நியமிக்கப்பெறும் ஆசிரியரின் கல்வித்தரமோ சொல்லித் தெரியவேண்டியதில்லை. கல்வியின் அடிக்கல்லாக விளங்கும் ஆரம்பக் கல்வியில் நாமும் நம் அரசும் செலுத்தும் அக்கறை போதாது. அதன் காரணமாக எவ்வளவுதான் வாய்ப்புகள், வசதிகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கல்விப் பயணத்தில் இடையில் நின்று போகிறவர்கள் எண்ணிக்கையே மிகுதி. கல்விப் பயணத்தில் இடைமுறிவுகளைத் தவிர்த்தால்தான் வருங்கால வரலாறு சிறப்புறும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'கற்க' என்றார் வள்ளுவர். கற்க என்றால் எந்தவித சமாதானமும் கூறாமல் கற்க என்பதே கருத்து. கற்பதற்குரிய வசதிகளை அமைத்து வழங்கவேண்டிய பொறுப்பு அரசினுடையது என்றே வள்ளுவம் கூறுகிறது. மேலும், கல்வியைச் சாதி, இனவேறுபாடின்றிப் பொதுமையாக்கிய பெருமையை எண்ணிப் பாராட்டுதல் வேண்டும். திருக்குறள் அரசியலில், சமாதானம் வற்புறுத்தப்படுகிறது. போருக்குக் காரணமாகிய பகையைத் தவிர்க்க வேண்டுமென்று ஓர் அதிகாரம் எடுத்துக் கூறுகிறது. 'இகல்' என்ற அதிகாரத்தில் பகைவாராமல் தவிர்க்கவேண்டும்; புகை வருவதற்குரிய சூழ்நிலைகள் தோன்றினாலும் தவிர்த்தல் வேண்டும்; அங்ஙனமே வந்துவிட் டாலும் மாறுகொண்டு பகை வளர்க்காது ஒதுங்கிப்போக வேண்டும் என்றெல்லாம் சமாதான வாழ்க்கைக்கு வழி காட்டப்படுகிறது. ஆம், உலக வரலாற்றுப் பக்கங்களில் பாதியைப் போர் விழுங்கிக் கொண்டிருக்கிறது. புகழ்பூத்த தமிழகத்தின் வரலாற்றைத் தமிழரசர்கள் தம்முள் பொருதியே அழித்தனர்; அழிந்தனர். தமிழகத்தின் மூன்று பேரரசு களிடையே ஒருமைப் பாட்டை உண்டாக்கச் சங்ககாலச் சான்றோர்களாகிய கோவூர்கிழார், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார், ஔவையார் முதலியோர் செய்த முயற்சிகள் முழுமையாகப் பயனளிக்க வில்லை. சமாதானத் தூதுவராகக் கோவூர்கிழார் பாடியபாட்டு பாருள்ளளவும், மனித உலகம் உள்ளளவும் நிற்கும்.

     "இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
     கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
     நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
     பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
     ஒருவீர் தோற்பினும் தோற்பது உம்குடியே
     இருவீர் வேறல் இயற்கையு மன்றே ;அதனால்
     குடிப் பொருளன்றுறும் செய்தி கொடித்தேர்
     தும்மோரன்ன வேந்தர்க்கு
     மெய்யமலி உவகை செய்யும்இல் விகலே" (புறம் 45)

என்பது அவர் பாடல். இப்பாடல் கற்பிக்கும் பாடத்தை இன்றுவரை தமிழர்கள் உணரவில்லையே. அன்று 1800 ஆண்டுகட்கு முன் நாவடக்கமில்லாது பெரிய வடபுலத்து மன்னர்களைப் போலவே தமிழினத்தை இழித்தும் பழித்தும் பேசிக் கொடுந் துன்பங்களை விளைவித்தவர்களிடம் தமிழ்த்தலைவர்கள் தம்முள்ளிருக்கும் மாறுபாட்டைத் திருத்திக்கொள்ளாமல் சார்தலும் அவ்வழி தமிழினத்திற்கு அழிவினைத் தேடிக்கொள்ளுதலும் இன்றும் நிகழ்கின்றன. இளங்கோவடிகள், மூவேந்தரை ஒருமைப்படுத்தவே சிலப்பதிகாரம் இயற்றினார். ஆனால் அவரது முயற்சியைச் செங்குட்டுவனே முறியடித்து விட்டான். முன்பு மூவருள் ஒருவனாக விளங்கிய செங்குட்டுவன்,

     "இமயத் தாபதர் எமக்குஈங்கு உணர்த்திய
     அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி"



நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்குஅஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தருஉம்" (சிலம்பு 3-26, வரி 9-12)

என்று கூறினான். வடபுலத்து வெற்றிக்குப் பிறகு மூவரில் விஞ்சியவன் என்று உணர்வுக்கு இரையாகிவிட்டான். அதனால் போர்க்கைதிகளைச் சோழன், பாண்டியன் அவைக்களத்திற்கு அனுப்பி அவர்களின் புழுக்கத்தைப் பெறுகிறான். இளங்கோவடிகளின் தமிழினத்தின் ஒருமைப்பாடுபற்றிய நினைவு பயன்படாக் கனவுகளாகிப் போயின. ஆனால் இளங்கோவடிகள் தோற்ற இடத்தில் இருபதாம் நூற்றாண்டில் ஒருவர் வெற்றிபெற்றார். ஆம்! அந்த வெற்றி தமிழக வரலாற்றிலேயே சிறப்புடைய வெற்றி.

"துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்" (159)

என்ற திருக்குறளுக்கு ஏற்ப அவர் வாழ்ந்ததால் வரலாற்றில் வெற்றி பெற்றார். இழித்தும் பழித்தும் பேசிய பேச்சுக்களுக்கெல்லாம் அவர் எதிர்ப் பேசவே இல்லை.

"இகல்எதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகல்ஊக்கும் தன்மை யவர்" (855)

என்பது குறள்.

இந்தத் திருக்குறளுக்கு ஏற்ப அவர்மீது காரணமில்லாமல் இகல் கொண்டு அவருடைய முன்னேற்றத்திற்குத் தடைக் கற்களைப் பரப்பினாலும் மாறுகொண்டு எதிர்தாக்குதல் செய்யாது சாய்ந்தொழிகினார்.

"குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கேடும்” (1023)

என்ற குறள் நெறியின்படி தமிழினத்தாரிடத்தில் தமிழினத் தலைவர்களிடத்தில் பொய்ம்மையான மானத்தைப் பெரிது எனக் கருதாது அவர் ஒழுகிய பெருந்தன்மையை, சான்றாண்மையைத் தமிழக வரலாறு என்றென்றும் போற்றும், தம்மோடு இகல்கொண்டு பொருதியும் பகைத்தும் இடர்விளைவித்த அவர்களையும் உள்ளிட்டு மாபெரும் தலைமையையே தந்த அந்தத் தமிழ்த்தாயின் தலைமகனின் பெயர் சொல்ல இன்று நாட்டில் யாருளர்: ஒருவருமில்லை. திருக்குறள் போரைத் தவிர்க்கிறது. தவிர்க்கும்படி அறிவுறுத்துகிறது. போரின் கொடுமையை எழுத்தில் எழுதமுடியுமா? இரண்டாம் உலகப் போரைப் பற்றி அறிஞர்கள் அடியிற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

"It has been calculated for example, that the resources swallowed up by the Second World-war were enough for building a fire-room house for each family in the world and also a hospital in each town with a population of every 5000 people and to maintain all these hospitals for ten years. Thus the resources washed on one world war would be enough for medically solving the housing and health problems that today are so acute for the majority of man kind."

- (Fundamentals of Marxism-Leninism. Page 713)

திருக்குறளின் நோக்கம் சமாதானமேயாம் என்பதனை,

‘இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்" (851)

"பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை" (852)

"இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்
தாவில் விளக்கம் தரும்" - (853)

'இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்" - (854)

என்ற குறள்கள் வாயிலாக அறியலாம்.

ஆதலால் போரில் காலம், பொருள், ஆற்றல் செலவழிப்பது திருக்குறளுக்கு உடன்பாடன்று. போரைத் தவிர்த்தலே திருக்குறளுக்கு நோக்கம். போர் தவிர்க்க முடியாததாகிவிட்டதா? அப்படியே போர் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டால் வலிமையுடையாருடன் தான் போர் செய்யவேண்டும். வலிமை இல்லாதார் மேல் போர் தொடுத்தல் கூடாது. வியட்நாமுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன ஒப்புமை இருக்கிறது? இத்தகைய போர்கள் சால்பில்லாத போர்கள் என்பதை வள்ளுவம் அன்றே உணர்த்தியிருக்கிறது. மெலியார்மேல் போர் தொடுத்தால் சான்றாண்மை சறுக்கும்; சீலம் சீரழியும். தம்மின் வலியார்மேல் போர்தொடுத்தால் தமக்கே அழிவு வந்துறும். ஆதலால் "பகைத்திறம் தெளிதல்", "பகைமாட்சி" என்றெல்லாம் ஓதிப் போர் தொடுத்தலுக்கும் கூட நெறிமுறைகள் கூறும் திருக்குறள் சமாதானத்தையே விரும்புகிறது. உலக நாடுகளிடையே சமாதானக் கொள்கை பொதுக்கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பெறுதல் வேண்டும். உலக நாடுகள் படைக் குறைப்பு ஒப்பந்தங்களை இயற்றிக்கொண்டு நடைமுறைப்படுத்தவேண்டும். அங்ஙனமின்றி ஒருநாடோ அல்லது சில நாடுகளோ படையைக் குறைத்துக் கொள்ளுதல் இயலாது. "படைக்குறைப்பு” என்பது எல்லா நாடுகளும் மனம் ஒப்பிச் செய்யவேண்டிய ஒன்று. இன்று உலக வல்லரசுகளில் சமாதானப்பேச்சு ஒருபுறம் நடக்கிறது; படைப்பெருக்கமும் ஒருபுறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வளர்முக நாடுகளில் ஒன்றாகிய நமது பாரதமும் பாதுகாப்புக்கு, படைப்பெருக்கத்திற்குப் பலநூறு கோடிகளைச் செலவழிக்கிறது. இன்றைய உலகச் சூழ்நிலையில் கிழக்காசியா - இந்து மாக்கடல் பகுதிகளில் நிலவும் போர்ப்பதட்ட நிலையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் நமது படைச்செலவு தவிர்க்கமுடியாதது; தவிர்க்கக் கூடாதது. உலக வல்லரசுகளின் மனச்சான்று நன்றாக இல்லை. ஆதலால் இந்தியா படைப்பலத்தை வளர்த்துப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகிறது; தவிர்க்க முடியாதது.

திருவள்ளுவர் படைமாட்சி யென்று தனி அதிகாரமே அமைத்து ஓதுகிறார்.

"கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை” (765)

என்ற குறளில் அஞ்சாத தன்மையுடைய படை வலிமையை வலியுறுத்துகிறார். படை, போர் முனையில் செருக்கு உடையதாக மேவி, எதிர்த்தாக்குதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா தரும்" (774)

என்பது திருக்குறள் காட்டும் வீரத்தின் இலக்கணம். இத்தகைய வீரம் பழைய போர் முறையில் அமைந்திருந்தது. இன்றைய போர்முறையோ பெரும்பாலும் மறைவான போர்முறை. போர் முறையில் விஞ்ஞானம் நெறி பிறழ்வையும், முறை பிறழ்வையும் தந்திருப்பதை எண்ணி வருந்தத்தான் வேண்டியிருக்கிறது.

போரில் படைக்கு அடுத்த இடத்தை வகிப்பது அரனேயாம். அரண் தற்காப்புக்கும் பயன்படுகிறது; மேவிச் சென்று தாக்கவும் பயன்படுகிறது. பழங்கால அரண் அமைப்பில் திருக்குறள் காட்டும் அரண் மிகச் சிறப்புடையது. அளத்தற்கியலாத உயரமுடைய மதில்; அவ்வளவு உயரமுடைய மதில் சுவர்களைச் செப்பமுடன் அமைந்த அடிப்படையுடன் கட்டும் கட்டடக்கலை அறிவு அன்று இருந்தது. அதனைச் சுற்றி ஆழம் மிக்குடைய நீர்ப்பரப்பு: அதனைச் சுற்றிச் செறிந்த காடு; நடக்க இயலாத பொதிமணற் பரப்பு; மலை; காடு; அகழி; மதில் என முறைப்படுத்தி வள்ளுவம் கூறுகிறது. இடம் நோக்கி அமைதலில் மாறலாம். அரண் அமைவாக அமைந்துவிடில் நாடு, பகைவர் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகாது. பல ஆண்டுகள் அமைதியாக வாழ முடியும். அப்படி வாழுதற்குரிய முறையில் அரண் அமைய வேண்டும் என்றும் திருக்குறள் கூறுகிறது.

"எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்” (746)

என்று மேலும் கூறுகிறது. பாரியின் பறம்புமலை இத்தகைய அரனுடையதாக இருந்தது என்று புறநானூறு பேசும்.

"அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே

இரண்டே தீஞ்சுவைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவிழ்க் கும்மே
நான்கே அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
தனிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே
வான்க ணற்றவன் மலையே வானத்து
மீன்க ணற்றதன் சுனையே ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்

"புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும்"
தாளிற் கொள்ளலிர் வாளில் தாரலன்" (புறம் 109)

அதனால் மூவேந்தர்கள் பல ஆண்டுகள் பொருதியும் எளிதில் பறம்பு மலை கைப்பற்றப்படவில்லை. நிலத்து வழிப்போர் அமையின், திருக்குறள் காட்டும் அரண் மிகச் சிறந்த பாதுகாப்புடையது. திருக்குறளுக்குப் பின்னே இளங்கோவடிகள் காலத்தில் அரணில் பொறியியல் அமைப்பு வந்துவிட்டது. அரணைப்பற்றிப் பல்வேறு வகையாகத் திருவள்ளுவம் வலியுறுத்திக் கூறினாலும் வினைத் திறமுடைய தலைவன் இல்லாவிடில் அரணின் பயன் முழுமையுறாது என்றும் கூறுகிறது.

ஆட்சிக்கு அமைச்சரவை இன்றியமையாதது. ஏன்? தனி மனிதன் ஒருவன், நுண்ணறிவுடையவனாகவும் செயல்திறம் மிக்கவனாகவும் இருந்தால் ஆட்சிக்குப் போதாதா? போதாது. ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளைக் கடமைகளை நிறைவேற்ற ஆட்சியை எதிர் நோக்கிவரும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண எவ்வளவுதான் சிறந்த துண்ணறிவுடையவனாக இருந்தாலும் ஒருவனின் அறிவு மட்டும் அதுவும் சிறப்பாகப் பட்டறிவு மட்டும் போதாது: அதோடு இன்ப, துன்பங்கள் வழி அலைக்கப்படும் போது, தனி மனிதனின் அறிவு சோர்வுபடும். பாண்டியன் நெடுஞ்செழியனின் அறிவு கோப்பெருந்தேவியின் ஊடல் காரணமாகச் சோர்வுபட்டதை ஒர்க. அதனாலன்றோ வள்ளுவம் "பொச்சாவாமை" என்னும் ஓர் அதிகாரம் பேசுகிறது. நேரடியாக இன்ப, துன்பங்களால் தாக்கப்படாமல் இருப்பவர்களுக்கு அறிவு சோர்வுபடுவதற்கு வாய்ப்பில்லை. அதோடு ஆட்சியின் பல்வேறு துறைகளை நுணுகி ஆராய்ந்தறிய.ஒருவருக்குப் போதிய காலம் இராது. ஆதலால் ஒரு நேரத்தில் பலதுறைச் சிந்தனையும் பன்முகப் பணியும் நடைபெற அமைச்சரவை தேவை. வள்ளுவம் காட்டும் அமைச்சரவை சிறப்புடையது. வள்ளுவத்தின் வழியில் அமைச்சரவை அமைந்து செயற்படின் நாட்டுக்கு யாதொரு குறையும் வாராது. அமைச்சராய் அமைவோர்க்கு இயற்கையான நுண்ணறிவு தேவை; நூலறிவும் தேவை.
"மதிநுட்பம் நூலோ டுடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை" (636)

இத்திருக்குறளில் மதிநுட்பத்தை முதன்மைப் படுத்தியிருத்தல் சிறப்பு. நுண்ணறிவு நூலறிவையும் திரிபிலாது பெறுதற்குத் துணை செய்யும். ஒரோவழி நூல்கள் கூறும் வழி பயன்படாது போகலாம். இது காலத்தைப் பொறுத்தது. அப்பொழுதும் எது செய்யத் தக்கதென்று இயற்கை நுண்ணறிவால் முடிவு செய்யாமல், நூலினைப் படித்து, தொங்கிக்கொண்டிருப்பது முன்னேற்றத்திற்குத் துணைசெய்யாது. இன்றும்கூட, காலத்தின் நடைமுறைகள் மாறியும் அந்த மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாது நடைமுறைக்கு ஒவ்வாத, வராத, வர முடியாத, வரக்கூடாத, பழைய நூற்கருத்துக்களின் வழியே நின்றொழுக வேண்டுமென்று வற்புறுத்தி வளரும் சமுதாயத்தைத் தேக்கமடையச் செய்கின்றனர் சிலர். இது கொடுமையிலும் கொடுமை. ஏன்? ஒரு காலச் சூழ்நிலையில் தயாரிக்கப்பெற்ற அறிக்கையை மையமாகக் கொண்டே பின் வளர்ந்துள்ள சமுதாயப் பொருளாதார மாற்றங்களை அறிந்து கொள்ளாமல் ஆணைகள் பிறப்பிக்கப்படுவதை இன்றும் காண்கிறோமே! ஆண்டுக்கு ஆண்டு பணப்புழக்கங்கள் அதிகரித்து விலைவாசிகள் கூடிப் பணத்தின் மதிப்புக் குறைந்தும் வருவதைப் பார்க்கிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன் சராசரி நூறு ரூபாய் வருவாய் பெற்றவன் வாழ்க்கை வசதிகளையுடையவன் என்று கருதப்பெற்றான். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தது நானூறு முதல் ஐந்நூறு ரூபாயாவது வருவாய் பெறுவதுதான் வாழ்க்கை வசதிகளுக்கு உரிய அளவாகும். இத்தகைய நிதியியல் மாற்றங்களை நுனித்தறிய இயற்கையான மதிநுட்பம் தேவை. நூல்கள் பல கற்றாலும் இயற்கையாய் நுண்ணறிவு அமையாது போனால் கற்ற நூலறிவும்கூடச் சிறப்புற்று விளங்குவதில்லை. அவர்கள் கற்ற நூலின் அறிவுக்கு முரண்பட்ட வகையில் அவர்களுடைய உண்மை அறிவு செயற்படும் என்று வள்ளுவம் கூறுகிறது. ஆதலால் நாட்டின் அமைச்சரா வோருக்கு இயற்கையில் அமைந்த நுண்ணறிவு தேவை. அதனால்தான் போலும் மக்களாட்சி முறையில் நாட்டின் அமைச்சராவோருக்கு நூலறிவுத் தகுதி வற்புறுத்தப் பெறுவதில்லை, இயற்கை நுண்ணறிவே போதும் என்ற எண்ணத்தில் அரசியல் சட்டம் அமைந்திருக்கிறது.

அமைச்சராவோர் அரசுக்கும் குடிமக்களுக்கும் உறுதியான முறையில் அறிவுரை வழங்கிக் குற்றம் வராது காக்க வேண்டும். அமைச்சர், அரசன் அல்லது நாட்டு மக்களுக்குச் சிறு சிறு நயப்புகள் மூலம் மகிழ்வித்துப் பிழைப்பு நடத்தக்கூடாது. தெளிவான, நெடிய நலம் தரத்தக்க உறுதிமொழிகளைக் கூறவேண்டும். அதுவே சிறப்புடைய அமைச்சரின் கடமை என்று வள்ளுவம் கூறுகிறது.

அடுத்து அரசுக்கு இன்றியமையாது வேண்டுவது நட்பு. ஆட்சியில் அமைந்துள்ளோருக்குரிய நட்பு இருவகை; ஒரு நட்பு நாடளவில் தழுவியதாகிய அயல்நாடுகளின் நட்பு. பிறிதொரு நட்பு ஆட்சித் தலைவனுக்குரிய தனியுரிமை நட்பு. இவ்விரு நட்பும் சிறப்புற அமையின் எந்த ஆட்சித் தலைவனும் ஆட்சியைச் சிறப்புற இயற்ற இயலும், நாட்டளவில் நட்பு என்பது பொருள்துறை மாற்றங்கள் அல்லது செல்வப் பெருக்கம் அமைதற்குத் துணை செய்யும். அதாவது ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை வாங்கிப் பய்ன்படுத்தும் நாடுகள், நாட்டுக்குத் தேவையான பொருள்களை வழங்கி உதவி செய்யும் தகுதியுடைய நாடுகள் ஆகியன நட்புறுப்பு நாடுகளாக அமையவேண்டும். இந்தியாவில் அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருந்த குடியாட்சி சிதைவதற்குக் காரணமாயிருந்த பி.எல். 480 போன்ற செயல்முறைகளை வற்புறுத்தாத நாடுகளே சிறந்த நட்புறுப்பு நாடுகள், பி. எல். 480 மூலம் இந்த நாட்டின் அரசுக்குத் தொடர்பில்லாமலே தனித்துப் புழங்க உரிமை பெற்ற கோடிக்கணக்கான பணம் இந்த நாட்டின் சிறந்த அரசியல் தலைவர்களைத் தேர்தலில் தோற்கடிக்கவும் நாட்டின் அரசியற் கட்சிகளைப் பிரிவினைப் படுத்திப் பல குழுக்கள் தோற்றுவிக்கவும் பயன்பட்டிருக்கிறது. அவற்றின் விளைவே இன்றைய சீரழிவு. அதுமட்டுமா? நம்முடைய பகைநாடென அறிவிக்கப்பட்ட நாட்டுக்கும் படைக்கருவிகளைக் கொடுத்தல், நமக்குத் தராதிருத்தல், இவ்விரு நாடுகளுக்கிடையே போர் நடப்பதை விரும்புதல் போன்றவை நட்புறுப்பு நாடுகளுக்கு இலக்கணமல்ல. வள்ளுவம் கூறும் நட்பில் நாட்டுறுப்பு நட்பு நிலைமை உய்த்தறிந்து இசைந்தவாறு பொருள் கொள்ளுதல் வேண்டும். அடுத்து அரசுக்கு அமைந்த அமைச்சர்கள் நெருங்கிய நட்பினராதல் இயலாது. நெருங்கிய நட்பினராய் அமைச்சர்கள் ஆகிவிட்டால் நல்ல அமைச்சராகவும் இருக்க இயலாது. நட்பு உவப்பன கூறி, உவப்பன செய்து, நெறிப்படுத்தி உடன் வாழும் இயல்புடையது. உடன் வாழ்தல் என்பது உணர்வின் வழியது என்பதை அறிக. தெளிவாகச் சொன்னால் ஒரு தலைமகனுக்குக் காதல் வழியமைந்த தலைவியை விடவும் நட்புச் சிறப்புடையது. அதனால் அன்றோ வள்ளுவம்.

"செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு" (781)

என்று இயம்புகிறது. சிறந்த நட்பு, செய்யும் செயல்களுக்கெல்லாம் பாதுகாப்பு என்று திருக்குறள் ஐயத்திற்கிடமின்றிக் கூறுகிறது. ஒரு ஆட்சித் தலைவனின் செயல்களை அவனுக்கு உடனாக நின்று சோர்வின்றித் திருத்தமுற நடத்தித் தருவது நட்பு. அவனுக்கு வேறாக நின்று அறிவுரைகள் வாயிலாகச் செப்பமுறச் செயற்படுத்துவது அமைச்சு. ஆதலால் ஆட்சித் தலைவனின் மிகச் சிறந்த உறுப்பாகிய நட்பை ஆட்சியின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாய் அமையக்கூடிய நட்பை, ஆராய்ந்து கொள்ளுதல் வேண்டும் என்ற எச்சரிக்கையைச் செய்ய "நட்பாராய்தல்" என்றே ஓர் அதிகாரம் அமைக்கப் பெற்றுள்ளது. "அமைச்சு ஆராய்தல்” என்றொரு அதிகாரம் இல்லாததை அறிக. நட்பு நெஞ்சுக்கு நெகிழ்ச்சி தருவது; மனத்தை இன்புறுத்துவது. இதுவே நட்பின் நோக்கம்; கடமை. சிரித்துப் பேசி மகிழ்வது நட்பின் நோக்கமன்று, இதனைப் "புணர்ச்சி பழகுதல் வேண்டா" என்று கூறிக்காட்டுவார். "உணர்ச்சி தான் நட்பாம் கிழமை தரும்" என்று நட்பு அகநிலை வளர்ச்சிக்கு உறுப்பாம் என்பதை உணர்த்துகிறார். இன்று பேசிப் பழகாது போனால் நட்பில்லையென்றும் குறைந்த அளவு கடிதங்கள் பரிமாற்றம் இல்லாது போனாலும் நட்பே இல்லையென்றும் கருதப்பெறுகிறது. ஒருவன் உணர்ச்சிக்கு, அவ்வுணர்ச்சியின் வழிப்பட்ட இலட்சியங்களுக்கு ஒருவரை ஒருவர் அறியாமலே பழகாமலே துணையாய் அமையமுடியும்; நல்வழியில் அமைந்தும் ஆக்கம் தரமுடியும்; அயல்வழிச் செல்லாமலும் தடுக்க முடியும். அங்ங்ணம் அமைவதே சிறந்த நட்பு. கோப்பெருஞ் சோழன்-பிசிராந்தையார் நட்பை எண்ணிப் பார்ப்போமாக, யாதொரு நேரிடைத் தொடர்பும் பழக்கமும் இல்லாத அவர்கள் நட்பின் மாட்சிமை என்ன? உயிரில் கலந்த, உணர்வுடைய, உயிர் நட்பாக விளங்கியது. இன்றோ அத்தகைய சிறப்புடைய நட்பு அமையாமல் சமுதாயம் துன்புறுகிறது. எங்கும் வன்கண்மையும், புறம்பேசுதலும், காட்டிக்கொடுத்தலும் ஆகிய நட்பின் தன்மைக்கு மாறான செயல்கள் நாட்டில் நடைபெற்று வருகின்றன. ஏதிலான் ஆரத் - தமர் பசிப்பச் செய்யும் பழி வினைகள் மலிந்து வருகின்றன. இது வளர்ச்சியை அவாவி நிற்கும் சமுதாயத்திற்கு நன்றன்று. நேற்று நட்பு இன்று பகை என்றால் நட்பின் இலக்கணமும் நடை முறையில் இல்லை. பகைத்திறம் தெளியும் தெளிவும் இல்லை என்பது தானே பொருள்? சிறந்த நட்பு வளரும் தன்மையது. நட்பிற்காக நட்பு - இதுவே நட்பின் இலக்கணம். உயர் இலட்சியத்திற்காக நட்பு; நட்பு உதவி பெறுவதற்கன்று; நட்பு உதவி செய்வதற்கு; துணைதேடிப் பெறுவது நட்பல்ல; 'துணையாக அமையத் துடிப்பது நட்பு'. இத்தகு நட்பு நெறி நாளும் வளரும்; நட்பின் திறன் வளரும்; இன்பம் மலரும்; வரலாறு சிறக்கும். சிறந்த நூல்களைப் பயிலுந்தொறும் இன்பம் கிடைக்கிறது. படித்த நூல்தானே என்று ஒதுக்கமுடியாது. கற்குந்தொறும் புதிய புதிய பொருள் இன்பம் தந்து அறிவின் ஆக்கம் தொடர்ந்து வளர்கிறது. கற்கக் கற்க, கங்கு கரையற்ற புதிய புதிய புத்தறிவு உணர்வுகளைத் தரும். அங்ஙனம் தருவன தாம் சிறந்த நூல்கள். இத்தகைய சிறந்த நூல் உலகத்தில் மக்களாகப் பிறந்தோர் பேசும் வேறு எம்மொழியிலும் தோன்றாமல் தமிழிலேயே தோன்றியிருப்பது பழங்காலத் தமிழகத்தின் வரலாறு தந்த சிறப்பு. அந்நூல் எது? திருக்குறளைத் தவிர வேறு எது? ஒரு மறைநெறியை வளராமல் தடுக்க நான்மறைகள் முற்றுகையிட்டன என்றால் அந்த ஒரு மறையின் அருமைப்பாட்டை என்னென்று கூறுவது? புகழ் பூத்து விளங்கிய பழந்தமிழகத்தின் வாழ்க்கை நெறியைத் தமிழினம் மீண்டும் காண நான்மறைநெறிகள் துணை செய்யா, தமிழினத்துக்கு ஒரு மறையாக, மனித உலகத்துக்குப் பொது மறையாக, விளங்கும் திருக்குறளே துணை செய்ய முடியும். இதனை உணரும் நாளே தமிழகத்தின் புதிய வரலாறு தொடங்கும் பொற்காலம்.

"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு" (783)

என்பது திருக்குறள். நவில் தொறும் நயம் தரும் நூல் திருக்குறளேயாம். திருக்குறளைப் பயிலப் பயில இயல்பிற் பெறாத நுண்ணறிவுகூடத் தலைப்படுகிறது; வள்ளுவம் காட்டும் நூலறிவும் சிறக்கிறது; இன்புறுத்தி இனிய வாழ்வை அமைக்கிறது. பண்புடையாளர் நட்பும் அத்தகையது. பண்புடையாளனின் நட்பு பயிலுந்தொறும் புதுநல இன்பம் தரும் வளரும். உண்மையிற் சொன்னால் இன்றைய சூழ்நிலையில் நம்மில் யாருக்குமே நண்பர்கள் இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்; வேண்டியவர்கள் பலர் இருக்கிறார்கள்; உடனிருப்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். இவர்களில் யார் நண்பர்? அறிஞர் அண்ணாவுடன் சிலர் உடனிருந்து அவரின் சிறப்புடை நண்பர் போலப் பழகி அவரின் குறைகளை எழுதிக் காட்டினாரே, அவர் நண்பரா? தோழரா? இல்லை, பகைவரா? இம்மூவரிலும் அவர் சேர மாட்டார். பகைவர் கூட வெளிப்படையாகப் பகைப்பதால், நம்மை எளிதில் பழி தூற்ற முடியாது. நமக்குத் தீங்கு செய்ய முடியாது. இவர் இம்மூவரிலும் இல்லையானால், வேறு யார்? இந்தப் பட்டியலில் வைத்தெண்ணப்படத் தகுதியில்லாதவர்கள் கயமை (எண் 108) அதிகாரத்தில் சேர்க்கப்பட வேண்டியவர்கள். சிறந்த நட்பு, பிறை நிலாப் போல வளருமாம். நிலா குளிர்ச்சியைத் தருவது; உணர்வைத் தூண்டி வளர்ப்பது; இன்புறுத்துவது, பைங்கூழ்களை வளர்ப்பது, இத்தனை பணிகளையும் நட்புச் செய்ய வேண்டும். நட்பு உவப்பனவே செய்யுமா? ஆம், உவப்பனவே செய்யும்.

மிகுதிக்கண் மேற்சென்றிடித்தலும், உவப்புத்தானா? ஆம், அப்பொழுதும் உவப்புத்தான். நட்பிற்குரியோன் சோர்வின் காரணமாக நெறியல்லா நெறியில் செல்லும் பொழுது, அவனை இடித்துத் திருத்தலும், நெறி நிறுத்தும் பணிதானே தவிர அது பழி கூறுவதன்று. இடித்துக் கூறுதல் என்பது வேறு; பழி தூற்றுதல், குற்றங்களை விரித்தல் என்பது வேறு. அங்ஙனம் இடித்துக் கூறுதல் கூட அயலார் யாருக்கும் தெரியா வகையில் நிகழும். அதனால்தான் போலும் தமிழ் இலக்கியங்களில் இத்தகைய நட்புக்குரிய இலக்கியத்தை நாம் மிகுதியாகப் பார்க்க முடியவில்லை. அக நிலை வழிப்பட்ட காதலை விரித்துரைத்த அளவிற்குக் கூட இத்தகைய நட்புகளை-விரித்துரைக்கும் இலக்கியங்கள் தோன்றவில்லையே. அயலறியாது நட்பில் திருத்தம் காண வேண்டும் என்ற மரபினைப் போற்றிய நட்பு முறைதான் காரணம் போலும். சிறந்த நட்பு இயல்பான உதவிகளின் வழி நிகழ்வது; அதாவது தூண்டும் தொழிற்பாடின்றியும் கைம்மாறு முதலிய உறுபயன் விளைவுகளால் நிகழாமலும் இயல்பில் நிகழ்வதே நட்பு. அதுவே சிறந்த நட்புச் செய்யும் உதவி. நட்பு என்பது வள்ளுவத்தின் பார்வையில் ஒரு தலைமகனுக்கு மிகமிக நெருக்கமான உள் சுற்றத்தில் அமைகிறது. ஆங்கு நிகழும் பொருளியல் எடுப்புகளும், வைப்புகளும் கொள்ளுதலும், கொடுத்தலும் ஆகியன உரிமைச் சுற்றம்போல் நிகழ்வன. அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் பெறுவதில்லை. தட்புச் செய்யப்பெறும் ஒருவனுக்கு அவனுடைய இலட்சியம் மிக்க வாழ்க்கையில் எதிர்ப்படும் இடர்ப்பாடுகளில் அவனுக்குத் துணையாய் அமைவதே நட்பின் தலையாய கடமையும் ஒழுக்கமும் ஆகும். கட்டியிருக்கும் ஆடை இறுக்கம் தளர்ந்து நெகிழ்கிறது. இங்ஙனம் நெகிழ்தல் இயற்கை. யல்வினைகளின் காரணமாக உடல் உறுப்புகள் அசைவதால் உடை நெகிழ்தல் தவிர்க்க இயலாதது. மிக இறுக்கமாகக் கட்டுதல் உடல் நலத்திற்கு உரியதன்று. உடலுயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கம் என்ற ஆடையை உயிர் உடுத்துக்கொள்கிறது. பலருடன் தொடர்பு கொண்டு பல்வேறு செயல்களில் ஈடுபடும் வாழ்க்கையில் ஒரோவழி நன்னோக்கத்தின் காரணமாகக்கூட ஒழுக்க நெகிழ்வுகள் ஏற்படுதல் உண்டு. வள்ளுவமே ஒரோவழி ஒழுக்க நெகிழ்வுகளை ஒழுக்க அமைதியாக ஏற்றுக் கொள்வன்த எண்ணுக. "வாய்மையே ஒழுக்கம்” பொய்ம்மை ஒழுக்கமாகாது. ஆனாலும் வாழும் சமுதாயத்தின் சூழ்நிலை, பணிசெய்யப்படுவோரின் மனப்பாங்கு ஆகிய சூழ்நிலைகளில் பொய்ம்மையும்கூட வாய்மையாகக் கருதப்பெறும் என்ற ஒழுக்க அமைதியின் அருமைப்பாடு சமுதாய இயல் அறிந்தோர்க்கு விளங்கும். ஒழுக்க நெறிகள் ஏற்றுப் போற்றப்பட வேண்டியவை. ஆனாலும் சமுதாயத்தின் இயல்பான முன்னேற்றத்திற்கு அவை ஒரோவழி தடையாக அமையுமாயின் நெகிழ்ந்து கொடுத்து எடுத்தணைப்பது இன்றியமையாதது. மக்களுக்காக ஒழுக்கமே தவிர ஒழுக்கத்திற்காக மக்கள் அல்ல. இடையில் கட்டிய ஆடை நெகிழ்கிறது. நெகிழ்ந்து கீழே விழுந்துவிட்டது. உடனே உடலின் மற்ற உறுப்புகள் சிறப்பாகக் கைகள் உடையை இழந்த இடையைக் கண்டு நகைத்துக் கைகொட்டிச் சிரிப்பதில்லை. அல்லது அந்தச் சூழ்நிலையில் கண்பார்த்து மூளைக்குத் தகவலைத்தந்து ஆணை வரவேண்டுமென்று கைகள் காத்திருப்பதில்லை. அல்லது உடையை இழந்த இடை வாயின் துணைகொண்டு ஆடை வேண்டுமென்று இரந்து கேட்க, அந்த ஒலியலை செவிப்புலன் வழியாக மூளைக்குச் சென்று முளை ஆணை பிறப்பிக்கவேண்டும் என்றும் காத்திருப்பதில்லை, ஏன்? உடையை இழந்த இடையை இடைசார்புடைய மானத்தைக் காப்பாற்ற ஆடையைக்கூட உடனடியாக நம்பி நகர்வதில்லை. இடர்ப்பாடுற்ற சூழ்நிலையில் முதல் உதவி செய்யும் செயல்முறை திருக்குறள் காலத்திலேயே நடைமுறையில் இருந்ததுபோலும், உடையை இழந்தது முன்பா? கைகள் விரைந்து துணை செய்தது முன்பா? என்று கால ஆராய்ச்சி செய்யத்தக்க வகையில் கைகள் விரைந்து சென்று மறைக்க வேண்டிய பகுதியைக் கைகளே மறைத்துத் துணைசெய்கிறது. அதன்பிறகுதான் முறையாக உடலுறுப்புகள் இயங்கி உடையும் வந்துசேரும். சிறந்த நட்பும் இத்தகையதே. சிறந்த நண்பன் நட்புச் செய்யப்படுபவரின் நெறி பிறழ்ந்த நிலையை முதலில் சென்று மறைப்பான்; பின் அறிவுறுத்தி அவனை நெறியில் நிறுத்துவான்.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு" (788)

என்ற திருக்குறள் நட்பு செயற்படுமாறு காட்டுவதாகும்.

இத்தகைய நட்பு நாட்டின் ஆட்சித் தலைவர்களுக்குத் தேவை. இன்றைய சமுதாயம் இத்தகைய நண்பர்களை வழங்குமா? வழங்க வேண்டும். ஆட்சியின் சிறப்புக்கு நல்ல குடிமக்கள் தேவை. நற்குடி மக்கள் அமைய நல்லாட்சி தி-lկ-. தேவை. எது முதலில்? எது இரண்டாவது நிலையில்? முடியாட்சிக் காலத்தில் நல்ல குடிமக்கள் ஆட்சியின் வழி அமைவர். "அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்ற பழமொழி அறிக. குடியாட்சிக் காலத்தில் நல்லாட்சி அமைய நல்ல குடிமக்கள் தேவை. "வாக்காளர்களின் நாணயத்திற்கும், தரத்திற்கும் ஏற்பத் தேர்ந்தெடுக்கப் பெறுபவர்களுடைய தரமும் தகுதியும் அமையும்” என்றார் பெர்னார்ட் ஷா, திருவள்ளுவர் சிறப்புடைய சில நெறிகளை அதற்கென்று அமைந்த அதிகாரத்தில் மட்டுமல்லாது வேறு அதிகாரங்களிலும் எடுத்துக்கூறி வலியுறுத்தும் இயல்புடையாளர்; உதாரணமாக,

"பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (322)

என்ற திருக்குறளைப் பொதுநோக்கில் பார்த்தால் ஈதல் அல்லது ஒப்பரவறிதல் அதிகாரத்தைச் சேர்ந்த குறள் போலத் தோன்றும். ஆனால் இந்தத் திருக்குறள் அமைந்திருக்கும் அதிகாரம் கொல்லாமையாகும். இத்திருக்குறளைக் கொல்லாமை அதிகாரத்தில் ஓதி அறிவுறுத்தும் செய்தி சிந்தனைக்குரியது. வாழப் பிறந்தோருக்கு வாழ்வளிக்கா மலும் அவர்களைச் சாகடிப்பதும் கொலையே' என்று வள்ளுவம் கருதுகிறது.

வையத்து மாந்தர்க்கெல்லாம் வாழ்வளிப்பதற்குரிய செல்வப் பங்கீட்டு முறையை முறையாக நடைமுறைப்படுத்தி வாழ்வளிக்காதது கொலை செய்யும் குற்றத்திற்கு ஒப்பானது என்று கூறும் குறள் நெறியை சமுதாயப் பொது நெறியை உலக அரசுகள் நடைமுறைப்படுத்துமானால் எங்கிருந்து வரும் வறுமை! அடுத்து 'குடிமை' அதிகாரம். இன்றைய கல்வித் திட்டத்தில் 'குடிமைப் பயிற்சி' (citizenship) என்ற பயிற்சி இருக்கிறது. வள்ளுவம் கண்டதே இந்தக் குடிமைப் பயிற்சி. ஆனால் குடிமை என்ற அதிகாரத்தில் குடிமைக்குரிய தகுதிகளை வரையறுத்துக் கூறுவதை விட ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறுவது வலியுறுத்துவது போல அமைந்துள்ளது. ஒழுக்க நெறிகளின் தோற்றக்களனே சமுதாயம் தானே! பலர்கூடி இசைந்து வாழுதற்குத் துணை செய்யும் நெறிகள் தாமே ஒழுக்க நெறிகள். அங்ஙனமில்லாது சமுதாயத்தின் ஒரு பகுதிகளை ஒதுக்கியும் அகநிலைகளில் நீங்காத உட்பகையையும் அவ்வழிப் புலன்களையும் வழங்கும் ஆசாரம் என்ற பெயரில் வந்த முறைகள் ஒழுக்கமா? ஏன்றைக்கு வள்ளுவத்தின் ஒழுக்க நெறிகளை மறந்து இடையில் வந்த ஆசாரங்களை ஏற்றுக் கொண்டோமோ அன்றைக்கே தமிழினம் தாழ்ந்தது. மற்றவர்களை வருத்தாது, துன்புறுத்தாது, அவர்கள் உவந்துமகிழும் வண்ணம் வாழ்தலே ஒழுக்கமுடைய வாழ்க்கை. அதுவே ஒழுக்கங்களுக்கெல்லாம் தலையாய ஒழுக்கம். கள்ளுண்ணல் போன்ற ஒழுக்கக்கேடுகள் ஒழுக்கமின்மையானதற்கே காரணம் அறிவு மயங்கி மற்றவர்களுக்குத் துன்பம் விளை வித்தலால்தானே! ஆக, சமுதாயத்தில் பலரோடு கூடி இசைந்து வாழ்தல் என்பது தலையாய ஒழுக்கம். மனிதகுலக் கூட்டுச்சமுதாயம் அமையவேண்டும். நாடு, மொழி, இனம், சமயம், சாதி வேறுபாடுகள் அற்ற ஒருவன் தோற்ற வேண்டும். தமிழினத்தின் தனிக் கவிஞனெனப் பாராட்டப்பெறும் புரட்சிகள் பாரதிதாசன்கூட வளர வளர உலகைநோக்கிச் சிந்தனையை விரித்துள்ளான். பாரதிதாசன் தொடக்க காலத்தில் தமிழினத்தின் கவிஞனாக விளங்கியது உண்மை. அவனுடைய வளர்ச்சியில் அவன் பாரதியை விடவும் உலகைநோக்கி நடந்தவன் என்பதை இனவழிப்பட்ட காய்ச்சலின் காரணமாக நாடு அறியவில்லை; உணரவில்லை.

உன் வீடு - உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
விதிகள் இடையில் திரையை விலக்கி

நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
 
ஏறு...................................

.......................................

அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
 
அணைந்து கொள்! உனைச் சங்கமாக்கு

மானிட சமுத்திரமே நானென்று கூவு!

பிறப்பிலே எங்கும் பேத மில்லை

உலகம் உண்ண உடுத்த உடுப்பாய்

புகல்வேன்! உடைமை மக்களுக்குப் பொது
 
புவியை நடத்து பொருவில் நடத்து

(பாரதிதாசன் கவிதைகள் 1 தொகுதி ப 54)


என்பது பாரதிதாசன் பாடல்.


ஆதலால் ஒழுக்கம் என்பது தன்னுடைய நாட்டொடு தன்னோடு வாழ்கின்ற மக்களோடு இசைந்து வாழ்தலே ஒழுக்க நெறியாகும். உடலுறுப்புகளின் பசியம் தோன்றத் தான் செய்யும். இது மாறாத இயற்கைநியதி. இவைகளை வைத்து மட்டும் குடிமக்கள் தரத்தினை உரிமைகளை நிர்ணயித்தல் கூடாது. வளரும் காலத்திற்கேற்ப அந்தக் காலச் சூழ்நிலைகளுக்கு இசைந்த அறிவும் உணர்வும் ஒழுக்க அமைவும் உணர்ந்திருக்கிறதா என்று ஆராயவேண்டாமா? முடியாட்சி துன்பம் விளைவித்ததை உணர்ந்து குடியாட்சி அமைத்த பிறகு குடியாட்சியின் தலைவராக வந்து அமர்வோர் பலர் முன்னிலையில் முடி சூடிக்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தலும், முடியாட்சி மன்னர்களைப்போல மக்கள் மன்றத்தில் நடந்துகொள்ளுதலும் இவர்கள், தாம் வாழும் காலத்திற்கிசைந்தவாறு வளர்ச்சியடையவில்லை என்பதைப் புலப்படுத்தவில்லையா? ஆத்லால் நாட்டு மக்களோடு அவர்கள் உரிமைகளுக்கெல்லாம் தான் ஒப்புறுதியளித்துப் பாதுகாப்பளிக்கத்தக்க வகையில் வாழவேண்டும். நல்லகுடிமக்கள் நாட்டில் சிறந்து விளங்கினால் வழிவழியாக அந்தப் பண்பாடு சிறந்து விளக்கமுற்று வளர்ந்துவரும்.

திருக்குறளுக்குச் சாதிமுறை உடன்பாடன்று. சாதிமுறை அயல்வழக்கு. சாதி முறையில் பிறப்பே ஆட்சி செய்யும். பிறப்பே சாதிமுறையை உறுதிப்படுத்தும். அந்நெறியல்லா முறைப்படி இழிவாகப் பிறந்தவனானாலும் அவன் கல்வி கேள்விகளால் மாறி வளரும் வளர்ச்சியைச் சாதிமுறை ஏற்பதில்லை; இல்லை. அங்ஙனம் பிறந்தவர்கள் கல்வி கேள்வி பெறுவதற்குரிய உரிமையும் பெறமாட்டார்கள். இந்தக் கொடுமையான, வள்ளுவத்திற்கு முரணான சாதி முறைகள் தாம் பிற்காலத் தமிழகத்தை நிலை அழியச் செய்தன; இன்றும் அழித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சாதிமுறைகள் வள்ளுவத்திற்கு முற்றாக உடன்பாடில்லை. ஆனால் குடி, குலம் ஆகியவற்றில் வள்ளுவம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இன்றைய மனிதஇயல் விஞ்ஞான நுண்ணறிவும்கூட குடி, குலம் ஆகியவற்றின் வழி இயல்பில் அமையும் சில திறன்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் இது தேக்கமுடைய மனப்போக்கு அல்ல. வளர்ச்சிக்குச் சில தலைமுறைகள் ஆகும் என்பதே இந்த விஞ்ஞானக் கருத்தின் முடிவு. சிறந்த பெற்றோர்களுக்குப் பிறந்து சிறந்து சுற்றச் சூழலில் வளரும் குழந்தைகள் சில நல்வியல்புகளை எளிதில் பெறுவர். இது குல அமைப்பு.

“.............................பெறுதற்கரியதம் குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்"

                            (கம்ப, நாட்டு.38)

என்று கம்பனும் கூறுவான். குடி அதனினும் விரிந்தது. அதுமொழிவழிப்பட்ட ஒரு நாட்டு வழிப்பட்ட சூழலைக் குறிப்பது. அக்குடிமக்களின் சீலங்கள் எளிதில் அடுத்த தலைமுறையினருக்குக் கிடைக்கும் என்ற படிப்பினையைக் குடிமை என்ற அதிகாரத்தில் திருக்குறள் விரித்துக்கூறுகிறது. ஒரு நாட்டுக்கு வளத்தையும் பெருமையையும் சேர்ப்பவர்கள் அந்நாட்டுக் குடிமக்களேயாவர். சிறந்த குடிமக்கள் அமையாத நாட்டில் இயற்கை யமைவுகளைக் கூடப் பயன்படுத்தாமல் துன்புறுவர். அதனால் வள்ளுவம் காட்டும் குடிமைப் பண்புகளை இந்திய நாடு முறைபிறழாது நடைமுறைப் படுத்துமானால் புரட்சியில் வளர்ந்த நாடுகளை விடவும் மேலான சிறப்படையக்கூடும்.

ஒரு நாட்டு அரசியல் சிறப்பாக அமைய நல்ல நாடு அமையவேண்டும். நல்ல நாடு அமைய நல்லாட்சி வேண்டும். இதில் எது முதலில் அமையவேண்டும்? இதில் முதல்நிலைத் தகுதியுடையது நன்மக்களும் நல்லாட்சியுமேயாம். நாட்டுக்கென்று தனி இயல்பில்லை, அதற்கென்று இயல்புகளைச் சேர்ப்பது மக்களும் ஆட்சியுமேயாம். இதனை,

"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே” }} (புறம். 187)

என்ற புறநானூற்றுப்பாடல் வழி அறிக.

ஒரு சிறந்த நாட்டுக்கு முதல் இலக்கணம் வறுமை யின்மைதான். "பொன் வேண்டேன், பொருள் வேண்டேன்" என்று பாடிய மாணிக்கவாசகரும்கூட வறுமையை "நல் குரவு என்னும் தொல்விடம்" என்று குறிப்பிடுகிறார். வறுமையிற் கொடுமை எது? என்று வினவுகிறார் திருவள்ளுவர்.

"இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது" (1041)

என்பது குறள். "நெருப்பினுள்ளும் தூங்கலாம். ஆனால் வறுமையோடு வாழ்தல் அரிது” என்று வள்ளுவம் கூறுகிறது. நேற்று வறுமை இருந்திருக்கலாம். ஆனால் இன்றும் திருக்குறள் ☆ 215

வறுமையா? என்று வள்ளுவர் கேட்கும் கேள்வியில் ஆயிரமாயிரம் சிந்தனைப் புதிர்கள் அடங்கியுள்ளன.

"இன்றும் வருவது கொல்லோ? நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு" (1058)

என்பது திருக்குறள். “இன்றும் வருவது கொல்லோ" அம்மம்ம. வினாவில் தான் எவ்வளவு அழுத்தம்: சாடுதல்? நினைந்து பார்க்க நெஞ்சில்லாமல் போய் விட்டதோ? 'இன்றும் வருவது கொல்லோ' என்ற வினாவில் திருவள்ளுவர் எதை எதைச் சாடுகிறார் என்று கூர்ந்து நோக்குங்கள். நேற்று வறுமை இருந்தது; அது நேற்றைய தவறாக இருந்து தொலையட்டும். நேற்றைப் பட்டறிவு என்னாயிற்று? நேற்றிருந்த வறுமையை மாற்றி ஒருவருக்கொருவர் துணை நின்று வாழத்தானே சமுதாய அமைப்பு தோன்றிற்று? அந்தச் சமுதாய அமைப்பு இன்று உயிர்ப்போடிருக்கிறதா? உணர்வோடு தொழிற்படுகிறதா? அது ஏற்றுத் தாங்கி வளர்ப்பதற்குப் பதிலாகக் கேவலமாகப் பழிக்கிறதே! ஏழை என்று ஏளனம் செய்கிறதே! ஏளனத்திற்குப் பயந்து ஒளிந்து வாழக் கடனாளியாக்குகிறதே! கடன் வாங்கும் திறனில்லையானால் மரண வழிக்குச் செலுத்துகிறதே! இன்றைய சமுதாய அமைப்பு, தாங்கும் அமைப்பாக இல்லை. அது சுழன்றடிக்கும் சாட்டைபோல் இருக்கிறது. இது சமுதாய அமைப்பன்று. இஃதொரு கூட்டம். அவ்வளவுதான். பயன் என்ன? இந்த வறுமையை மாற்றத்தானே மனிதகுலத்தின் தலைவனாகக் கடவுளைக் கண்டோம். அவன் தந்தை தாய்; அவன் மக்கள் நாம்; அவனுடைய பிள்ளைகளில் வல்லார் மாட்டார் என்ற வேறுபாடு இல்லை. இந்தப் பொது நெறிகண்டு கூடியுழைத்து உண்டு மகிழத்தானே கடவுள் நெறியைக் கண்டோம். அதைக்கண்ட பிறகும் இன்னும் வறுமையென்றால் அக்கடவுள் நெறி என்னாயிற்று? ஆம். கடவுள் புரோகிதர்களிடத்தில் சிக்கிவிட்டார். சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தருவதில்லை. காரணம் பூசாரிக்குப் பணப்பெட்டி நிறைய வேண்டும். அவர் வல்லார் பக்கம் சார்ந்து மாட்டாதாரை ஒதுக்கி வல்லாரின் செல்வக் குவிப்புக்குக் கடவுளைக் காட்டி நியாயம் கற்பித்துக் கொழுத்து வளர்கின்றார். கடவுள் நம்பிக்கையுடயோரின், நீதிக்குப் புறம்பான இச்செயல்தானே, நாத்திகத்தைத் தோற்று வித்தது? கடவுள் நெறி தோன்றிய பிறகும் "இன்றும் வருவது கொல்லோ?" என்றால் கடவுள் நெறி எதற்காக? அது கிடக்கட்டும். தமக்கு எவ்வளவுதான் பற்றிருந்தாலும் கடவுள் நெறியின் வழியும் கடவுள் தன்மையுடைய நீதியின் சார்பிலும் இயங்க மனமில்லாமல் கடவுளுக்கு அர்ச்சனைகள் செய்து கொண்டே கடவுள் தன்மைக்கு மாறான செயல்களே நடைபெற்றன. அதனால் அரசியல் நெறியைக் கண்டோம். மனிதர்களின் உறவுகளுக்கும், பொருளியல் நெறிகளுக்கும் ஒழுங்கு முறைகளைக் கண்டோம். வல்லார்க்கும், மாட்டார்க்கும் ஒத்த வாய்ப்புகளும், வாழ்வும், நியாயமும், நீதியும் வழங்கவே அரசியல்முறை தோன்றியது. அது தோன்றியும் என்னாயிற்று? அரசியல் வாய்ப்புடையார் வீட்டின் வாசலில் காத்துக்கிடக்கும் சேவகத் தொழில் செய்வதாக மாறிவிட்டதே! எங்கு நாட்டின் நிதியியலை முறைப்படுத்தி நிர்வகிக்கின்ற அரசு தோன்றவில்லையோ, அங்கு அரசை ஆட்டிப் படைக்கின்ற தனியார் நிதிக்குவியல் தோன்றும் என்ற சிந்தனைக்குரிய வாக்கு நினைவிற் கொள்ளத்தக்கது. அதனாலன்றோ முறையான நிதியியல் ஆட்சியியல் நடத்தாது நாட்டில் வறுமையாளர்களை வளர்த்து மக்களை இரந்து வாழ்பவர்களாக ஆக்கும் அரசு 'பரந்து கெடுக' என்றது. வள்ளுவம்.

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்” (1062)

என்பது குறள். இங்கு "இயற்றியான்" என்ற சொல் கடவுளைக் குறிக்காது. கடவுள் என்பது குணமேயாம்; குணியன்று. பண்பேயாம், பண்பியன்று. "இயற்றியான்” என்பதால் குணங்களாகவே விளங்கும் கடவுளைக் குறிக்காது அரசையே குறிக்கும். நாட்டை வளமுள்ள நாடாக ஆக்க வேண்டும். நம்முடைய தேவைகளை நிறைவு செய்யும் நாடாக வளர்க்க வேண்டும்; தம் தேவைகளுக்கு அயல்நாடுகளை நோக்கிச் செல்லாதவாறு தன்னிறைவுடைய நாடாக்க வேண்டும் என்பார்.

"நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல
நாட வளந்தரும் நாடு” (739)

என்று வள்ளுவம் கூறும். நாட்டில் மக்கள் தாழ்விலாச் செல்வராக விளங்கவேண்டும். தாழ்விலாச் செல்வர் என்பது அருமையான குறிப்புச் சொல். குடிமக்கள் பெற்றிருக்கிற செல்வம், அவர்கள் திறனுக்குத்தக்கவாறு அமையவேண்டும். அவர்களுடைய உழைப்புத் திறனால் படைத்துக் குவிக்கப்படும் செல்வம், மற்றவர்களால் கொள்ளை போகக்கூடாது. திறனுக்கேற்ற செல்வம்; செல்வத்துக் கேற்றதிறமை; தராசில் நிற்பதுபோல் ஒருபால் கோடாது நிற்க வேண்டும். செல்வத்திற்கேற்ற திறனில்லாது போனால் சுரண்டுமுறை, அதாவது பிறர் பங்கைத் திருடி வைத்துக் கொள்ளும் முறை அங்கு உள்ளது என்பது பெறப்படும். எனவே வள்ளுவம் படைக்கும் நாட்டில் தாழ்விலாச் செல்வரே இருப்பர். அங்குத் திறனுக்கு ஏற்ற செல்வமும் கிடைக்கும்; செல்வத்துக்கேற்ற திறனும் அமையும். இத்தகைய நாடே நாடு.

திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மூதறிஞர்; அறநெறியாளர்; அரசியல் சிந்தனையாளர். அவர் கண்டு காட்டியுள்ள அரசு ஒட்பமும் திட்பமுமுடைய அரசு. அவரது அரசியல் சிந்தனைகள் இன்றைக்கும் எதிர்வரும் காலத்திற்கும்கூட நன்மை தருவன. திருவள்ளுவர் வழியில் இந்த நாட்டை அமைத்து வழி நடத்த முயன்றிருந்தால் பிரெஞ்சு புரட்சிக்கும் சோவியத் புரட்சிக்கும் முன்னோடியாகத் தமிழகத்தில் சமுதாயப்புரட்சி தோன்றியிருக்கமுடியும்; ஆனால் அந்த நல்லூழ் இந்த நாட்டுக்குக் கிடைக்கவில்லை. வள்ளுவம் தோன்றிய காலத்தில் இலைமறை காயாகவும் அதற்குப் பிறகு வெளிப்படையாகவும் செழுந்தமிழ் வழக்காகிய வள்ளுவம் மறந்து போகும் அளவுக்கு அயல்வழக்குப் புகுந்து ஊடாடியது. மார்க்சுக்கு லெனின் கிடைத்ததைப்போல வள்ளுவத்திற்குச் சரியான செயல் மாணாக்கர்கள் கிடைக்கவில்லை. பரிமேலழகர் முதல் இன்றுவரை உரைவிரிக்கும் மாணாக்கர்களே இருந்து வருகின்றனர். வள்ளுவத்திற்கு வரலாறு படைக்கும் மாணாக்கர்கள் கிடைக்கவில்லை; பின்பற்றுவோர் கிடைக்கவில்லை. இன்றும் தமிழ்நாட்டில் படிக்கும் நூலாக, உரைவிரித்துரைக்கும் நூலாக, பட்டிமன்றத்திற்குரிய நூலாகத் திருக்குறள் விளங்குகிறதேயன்றி அஃதொரு அரசியல் நூலாக, ஓரினத்தை வழி நடத்தும் நூலாக இடம் பெறவில்லை. குருநானக்கின் சீக்கிய வேதம் இன்று பாஞ்சாலத்து மக்களை வழி நடத்தும் மறை; சட்டமும்கூட அதுதான். அந்தச் சட்டத்திற்கு முரணில்லாமல்தான் இந்திய அரசியற்சட்டம் செயற்படவேண்டும். இது அவர்கள் பெற்ற வெற்றி. முகமதியரும் அத்தகைய வெற்றி பெற்றுள்ளார்கள். கிறித்தவர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்கள் மறைவழிதான் அவர்கள் வாழ்க்கை. ஆனால் தமிழ் மக்கள் தம்மை இழிநிலையில் கற்பித்துக்கூறும் இந்து சட்டத்தின் வழிதான் இன்று வழி நடத்தப்படுகிறார்கள். வள்ளுவத்தின் வழியில் அல்ல என்பதை உணர்க.

தமிழினம் தன் தனித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளுதல் உலகத்தின் பொதுமைக்கு இடையூறன்று. தனித்தன்மை எதனோடும் இசைந்து வாழும். ஆனால் கலப்பு, தீமையைத் தரும். ஆதலால் வள்ளுவத்தின் வழியில் அறநெறியில் நல்லாட்சி கண்டு உலகிற்கோர் புதிய சமுதாயமாய் நாம் வாழத் தலைப்படவேண்டும். இதுவே வள்ளுவத்தைப் போற்றும் முறை.