உள்ளடக்கத்துக்குச் செல்

கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்/001-010

விக்கிமூலம் இலிருந்து




உன்னை வரவேற்கிறேன்.

என்னை மீண்டும்
இசைக்க வைக்க வந்துள்ளாய்;
உன்னை வரவேற்கிறேன்.

நான் மகரயாழ்;
உன் மணிக்கரம்
தீண்டினால் போதும்.

என்னால்
உனக்குப் பெருமை வரும்;
உன்னால்
எனக்கு வாழ்வு வரும்.

உன்னை வரவேற்கிறேன்.


1

நீ இவ்வளவு காலம்
எங்கிருந்தாய்?

பதினைந்து பதினாறு கார்த்திகைக்குப்பின்
ஒரு நிலவறையிலிருந்து
பதப்படுத்தப்பட்டு வெளிவந்த
வீறுமிக்க மதுவைப் போல் ...

பதினாறு பதினேழு மார்கழிக்குப் பின்
ஒரு களங்கமற்ற இதயத்தில்
கருவாயிருந்து
கலை அலங்காரத்தோடு உருவாகி வந்த
ஓர் உயிருள்ள காவியம் போல் ...

பதினேழு பதினெட்டுத் தைக்குப் பின்
ஒரு சின்னஞ் சிறிய தீவில்
ஒதுங்கியிருந்து
வைரக் குப்பையோடு கடல்வாசல் வந்த
ஒரு சுதேசிக் கப்பலைப் போல் ...

நீ என் கண்ணைக் கவர்கிறாய்,

உன் வருகையால்
இன்பச் சிகரத்தைக்
கையால் எட்டித் தொடுகிறேன் ...

என்றாலும்
இவ்வளவு காலமும்
உன்னைக் காணாமல்
வீணாகப் போய்விட்டதே
என்று எண்ணிக்
கவலைப் பள்ளத்தில் கால் வழுக்கி
விழவும் செய்கிறேன்.


2



நீ எனக்குத் தாகவெறி தந்தாய்
பிறகுதான் -
என் இதயம்
வறண்ட நிலமாய்க் கிடந்தது
எனக்குப் புரிந்தது

நீ என்னிடத்தில் பசியைக் கிளறினாய்;
பிறகுதான் -
என் ஆன்மா
ஒட்டிய வயிறாய் இருந்தது
எனக்குப் புரிந்தது.

உன்னால்
இந்தத் தாகம், இந்தப் பசி
நிரந்தரமாகத் தணியும்,

காரணம்
நீ ஆகாய கங்கை!
அமுத சுரபி!


                                  


3



நியூட்டன்
புவியீர்ப்புச் சக்தியைக்
கண்டுபிடித்தான்.

நான்
என் உயிர் ஈர்ப்புச் சக்தியைக்
கண்டு பிடித்தேன்.

என் கண்டு பிடிப்பே,
நீ வாழ்க.
   


4



இலக்கியத் துறையிலிருந்து
விமர்சனத் தோணி ஓட்டும்
என் சகோதரர் ஒருவர்...

காதல் என்பது
பொய்யா மெய்யா
என்று கேட்டார்,

ஓ... நல்ல வேளை!
சரியான நேரத்தில்
உன்னைச் சந்தித்தேன்.

இல்லாவிட்டால்
தவறான விடையைச்
சொல்லியிருப்பேன்.

5



நீரிலே நெடுநாட்களாகக் கிடந்தாலும்
கருங்கல் கரைவதில்லை;

ஓராயிரம் இளம் பார்வைகளில்
மூழ்கியும்
முன்பெல்லாம்
என் மனம் கரையவில்லை.

இன்று - இது என்ன அதிசயம்!

ஒரே வினாடியில்
உன் ஈரப் பார்வையில்
என் மனம் உப்பாகி விட்டதே!

6


‘உலகப்பன் பாட்டைப்’ படித்துவிட்டு
நிலத்தை மீட்கப் போனேன்.

நிலத்தைப் பறிக்கப் போகிறேன்
என்று என்னைக்
கைது செய்தார்கள்

என் புரட்சி வாய்ந்த
மனத்தைப் பறித்துப் போகிறாயே -
இந்த நாட்டுச் சட்டம்
உனக்குச்
சாதகமாகத் தானே இருக்கிறது!

7



உனக்கென்ன -
ஒரு பார்வையை
வீசிவிட்டுப் போகிறாய்...
என் உள்ளமல்லவா,
வைக்கோலாய்ப்
பற்றி எரிகிறது.

உனக்கென்ன -
ஒரு புன்னகையை
உதிர்த்துவிட்டுப் போகிறாய்...
என் உயிரல்லவா,
மெழுகாய்
உருகி விழுகிறது.

உனக்கென்ன -
போகிறாய்... போகிறாய்...
என் ஆன்மாவல்லவா,
அனிச்சமாய்
உன் அடிகளில் மிதிபடுகிறது.

8

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

மலைத்தொடர்கள்
ஆகாயத்தில்
அலையும் மேகங்களை
இழுத்தணைத்துக் குளிர்வித்து
இன்ப வியர்வையைச்
சிந்த வைக்கின்றன.

கற்கள்
ஒன்றோடொன்று உராய்ந்து
பிஞ்சுச் சுடர்களைப்
பெற்றெடுக்கின்றன.

ஆறுகள்
ஆசை மலர்களை ஏந்திச் சென்று
கடல்தேவன் மேனியில் துரவிக்
காதல் அருச்சனை
செய்கின்றன.

நீயும் நானும்
இந்த ஊமை நாடகங்களை
ஏன்
உண்மையாக்கக் கூடாது?

விலகி நின்று
வேடிக்கை பார்க்கவா
பிறவி எடுத்தோம்?

இப்படி
இருவராயிருந்தால்
இந்த உலகம் நம்மைத்
தீண்டத் தகாதவர்களாய்
ஒதுக்கிவிடும்.


9


என் வீட்டு முற்றத்தில் பெய்யும் மழை
உன் வீட்டு முற்றத்திலும் பெய்கிறது.

என் தோட்டத்தில் பாடும் குயில்
உன் தோட்டத்திலும் பாடுகிறது.

என் கண்ணில் படும் நிலா
உன் கண்ணிலும் படுகிறது.

என் இதயத்தில் நுழையும்
காதல் மட்டும்
உன் இதயத்தில் நுழையவில்லையா?


10



என்னுடைய நண்பர்களே
என்னைக்
கர்வம் பிடித்தவன் என்கிறார்கள்.

என் அறையில்
முத்துக்களையும் மணிகளையும்,
குவித்து வைத்திருக்கவில்லை.

என் தலையில்
நிலா ஒளிவீசும்
மகுடம் தாங்கி
கங்கை கொண்ட
இராசேந்திரன் போல்
உலா வரவில்லை.

என் உடலில்,
பட்டணிந்து பகட்டவில்லை.

பிறகு ஏன்
இப்படிப் பேசுகிறார்கள்?

ஓ... காரணத்தைக்
கண்டு கொண்டேன்.
நீ என்னை நேசிக்கிறாய்.

அதனால்தான்
அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள்.



11