கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்/002-010

விக்கிமூலம் இலிருந்து



இந்த உலகம் -

இதுவரை
முட்காடாக வலித்தது;
இப்போது
முல்லைக்காடாக மணக்கிறது.

இதுவரை
எரிமலையாகத் தகித்தது;
இப்போது
பனிமலையாகக் குளிர்கிறது.

இதுவரை
கானல் நீராகக் கசந்தது;
இப்போது
காவிரி நீராக இனிக்கிறது.

என் எண்ணங்களில் பாடும்
கன்னங் கரிய குயிலே,

எல்லாம் உன் ரசவாதம்தான்!

 

12
                     




நீ முதல்முறை
என்னைத் தலைசாய்த்துக்
கடைக்கண்ணால் பார்த்தபோது
என் உள்ளத்தில்
முள் பாய்ந்தது.

அதை இன்னும் எடுக்கவில்லை.

முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்?

எங்கே, இன்னொரு முறை பார்.

 

13



நீ வானத்தைப் பார்;
சூரியன் குளிரட்டும்.

நீ பூமியைப் பார்;
பாலைவனங்கள் குளிரட்டும்.

நீ என்னையும் பார்;
என் இதயமும்
கொஞ்சம் குளிரட்டுமே!

 

14



கிழக்கிலிருந்து
அரசியல் மேதை ஒருவன்
வரப்போகிறான் என்கிறார்கள்;
அவன்
எந்தத் திசையிலிருந்து
வந்தால் தான்
எனக்கென்ன?

மேற்கிலிருந்து
விஞ்ஞானி ஒருவன்
வரப்போகிறானாம்
நாகரிகவேட்பாளர்கள்
அந்தத் திசையைப்
பார்த்துக்கொண்டிருக்கட்டும்
எனக்கென்ன ?

வடக்கிலிருந்து
ஞானி ஒருவன்
வரப்போகிறானாம்;
அவன் உபதேசங்களுக்காகக்
காதைத் திறந்து வைத்திருப்போர்
அந்தத் திசையை நோக்கிக்
கண்ணையும் திறந்து வைத்திருக்கட்டும்.

எனக்குத்
தெரிந்திருக்கும் திசையெல்லாம் -
தேவையுள்ள திசையெல்லாம்
ஒரே ஒரு திசைதான்.

என் தென்றலே,
நீ வரும் திசைதான்.

 

15


உன்னால் தினமும் தவிக்கிறேன்.
ஒவ்வொரு கணமும் துடிக்கிறேன்
என்பது உனக்குத் தெரியாதா?

தெரிந்தும்
கொஞ்சமும் இரக்கமில்லாமல்
இதமாக ஒன்றும் சொல்லாமல்
விரைந்து செல்கிறாயே!
காயப்படுத்திவிட்டுக்
கட்டுப் போடாமல்
பறந்து செல்கிறாயே!

நடைவண்டி பழகும்
நாத சொரூபம் மேல்
மிதிவண்டியை ஏற்றிவிட்டு
வேக வேகமாக ஓடும்
கல் நெஞ்சக் காரனைப் போல்
நடந்து கொள்கிறாயே!

இது நியாயமா?

 

16

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)


என் நாசியால்
சந்தனத்தையும் சவ்வாதையும்
மோந்து மகிழ்ந்திருக்கிறேன்.

சண்பகத்தையும் மல்லிகையையும்
மோந்து சுவைத்திருக்கிறேன்.

இப்போது
உன் வண்ணப் பாதங்களையும்.
பாதங்கள் முத்தமிட்ட மண்ணையும்
மோந்து பார்க்கும்
மோகவெறி கொள்கிறேன்.

 

17



நாட்டு வைத்தியம் தெரிந்த ஒருவர்,
மாலை வெயில் உடலுக்கு நல்லது -
மாலைக்காற்று உடலுக்கு நல்லது -
என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

நானோ,
உடலின் பூரிப்புக்கும்
உயிரின் பசுமைக்கும்
பார்வை விருந்தைப்
பரிமாறிக் கொள்ளும்
மாலைச் சந்திப்புத்தான் நல்லது
என்று கூற நினைத்தேன்.

அப்படிக் கூறினாலும்
அவருக்கு எங்கே
விளங்கப் போகிறது?

பாவம்,
அவர் நாட்டு வைத்தியம்
மட்டும் தெரிந்தவர்!

 

18




பாகவதர் சொல்கிறார்:
பகவான் ஒருவன்தான் புருஷன்;
மற்றவர்கள் பெண்கள்.

நான் சொல்கிறேன்:
நீ ஒருத்திதான் பெண்;
மற்றவர்கள்.....

ஒரு தரமல்ல
மூன்று தரம் சொல்கிறேன்:

என் மாதவிக் கொடியே!
நீ ஒருத்திதான்
பெண் ! பெண்! பெண் !

 

19



உன் கை
தொட்டதைத் துலங்கச் செய்யும் கை
என்பது எனக்குத் தெரியும்.

பாவங்களையும் விகாரங்களையும்
போர்த்தி வைத்திருக்கும்
என் புலால் உடம்பைத் தொடு;
புனிதமாக்கு.

இரும்பாக இருக்கும் என்னைப்
பொன்னாக்கு.

உப்புநீராக இருக்கும் என்னை
உண்ணும் நீராக்கு.

 

20

என்எழுதுகோல்
வெறும் எழுதுகோல் அல்ல.


தேசம் தழுவும்
பொதுவுடைமைக்கு
வரவேற்புரை எழுதும் போதும்

தேகம் தழுவும்
உனக்கு-
என் தனியுடைமைக்கு -
வாழ்த்துரை எழுதும்போதும்

என் எழுதுகோல்
வெறும் எழுதுகோல் அல்ல.



 

21