உள்ளடக்கத்துக்குச் செல்

கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்/005-010

விக்கிமூலம் இலிருந்து

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

ஒருநாள்
உனக்கு அழைப்பு விடுக்கிறேன்.
நீ என் அறை நோக்கி வருகிறாய்.

"கூப்பிட்டீர்களாமே, என்ன?”
என்று கேட்கிறாய்.
நான் விழிக்கிறேன்.

"ஒன்றுமில்லை" என்கிறேன்.
"ஒன்றுமில்லாமல்
என்னை ஏன் கூப்பிட வேண்டும்?"
உன் பார்வை வினாவாகிறது.

நான் என்ன செய்வது?
உன் நினைவைத் தவிர
என் உள்ளத்தில் வேறு 'ஒன்றுமில்லை'
என்று எப்படிச் சொல்வது?

ஓ... இது ஒரு கற்பனைதான்!


40



நீ சுவரில் சாய்ந்து கொண்டு நிற்கிறாய்.

உன் தோழி
“நீங்கள் ஏழையா, பணக்காரரா?”
என்று கேட்கிறாள்.

நான் ஏங்கல்ஸின் மாணவன்,
எனினும் வேடிக்கைக்காக
“நான் இதுவரை ஏழைதான்,
இனிமேல்தான் பணக்காரன் ஆகவேண்டும்”
என்று உன்னைப் பார்த்துக்கொண்டே
பதில் சொல்கிறேன்,

ஒரு கைத் தாமரையால்
உன் முகத் தாமரையின்
ஒரு பாதியை மறைத்தவாறு
நீ என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்.

உன் தோழிக்குப் புரிகிறதோ, என்னவோ?

இதுவும் ஒரு கனவுதான்.


41



உன்னைத்தேடி வருகிறேன்.
நீ வைக்கோற் போரில் சாய்ந்தவாறு
கரும்பைக் கடித்துக் கொண்டிருக்கிறாய்.

என் கண்,
மதுவுண்ட வண்டாகிறது.

என்மனம்,
மாங்கொழுந்தைச் சுவைத்த குயிலாகிறது.

என் வாய்,
கரும்பே இன்னொரு கரும்பைக் கடிக்கும்
காட்சி இதோ, இதோ'
என்று பாடுகிறது.


42


பல நாட்கள்
உன் பின்னால் தொடர்ந்து வருகிறேன்
பண்ணையாருக்குப் பின்னால் வரும்
கூலிக்காரனைப் போல!

சில நாட்கள்
உன் கூடவே வருகிறேன்
பாதத்தில் ஒட்டியிருக்கும்
செருப்பைப் போல!

எனினும்,
நீ உன் வீட்டுக்குள் நுழையும்போது
என்னால் பின் தொடர முடியவில்லை;
கூட வரமுடியவில்லை.

வாசலில் நின்றவாறு
உன் வீட்டையே பார்க்கிறேன் .
எல்லையில் நின்றவாறு
நாடு கடத்தப்பட்ட ஒரு தேசாபிமானி
தன் நாட்டை ஏக்கத்தோடு பார்ப்பதைப் போல!



43


“நீங்கள் புதிதாக எதுவும் எழுதவில்லையா?”
என்கிறாய்.

நான் எதை எழுதுவது?

ஒரு காலத்தில்
என் எழுத்தில் சுடர்விட்ட அழகை
எண்ணிஎண்ணிப் பெருமிதங் கொண்டதுண்டு.
இன்றோ, எதை எழுதினாலும்
சிறுமைக்கு ஆளாக நேரும்
என்ற அச்சம் பிறக்கிறது.

காரணம்.. எதை எழுதினாலும்
உன்னைப் பார்த்து எழுதியதைப் போன்ற-
படி எடுத்ததைப் போன்ற
உணர்வே தோன்றுகிறது.

இப்படித் திருடி எழுதுவது சரியா?

அப்படி எழுதுவதென்றாலும்
அசல் இருக்கும்போது எதற்காக நகல்
என்று என்னுள் கேள்வி எழுகிறது:

பிறகு எப்படி எழுதுவது?


44



நீ அந்த மணலில் அமர்ந்திருக்கிறாய்

சொர்க்கத்தின் சாவியே
உன் கையிலிருப்பதைப் போல்
ஒரு கர்வங் கலந்த ஒய்யாரத்தோடு
அமர்ந்திருக்கிறாய்.

உன் மென்மையான விரலால்
மணலில் ஏதோ எழுதுகிறாய்.
உனக்குத் தெரியாமல்
உன் பின்னால் நின்றவாறு
ஏதேனும் புதிய ஓவியம் தீட்டுகிறாயோ
என்று கவனிக்கிறேன்.
ஓவியக்கலை
உன் கூட்ப்பிறந்த கலையாயிற்றே!

நான் நினைத்ததைப் போல்
நீ ஒவியம் வரையவில்லை.

மலைக் குகைகளிலும்
கல் மண்டபங்களிலும்
எதிரொலிக்கும் சப்தம் போல்
உன் உதடுகளின் உச்சரிப்பால்
என் இதய அறைகளில்
எப்பொழுதும் எதிரொலிக்கும்
உன் திருப்பெயரை முதலில் எழுதிப்
பக்கத்தில் என் பெயரையும் இணைக்கிறாய்.

என் பெயரின்
முதல் இரு எழுத்துக்களைத்
தொடங்கும்போதே
இன்பக்காற்று
என்னை உன் முன்னால்
இழுத்துப் போடுகிறது.




அவ்வளவுதான்.....
நீ கண்புதைத்துப் பயந்தோடுகிறாய்.

சிறு குழந்தை தானாகப் பாடும்போது
மறைந்திருந்து கேட்க வேண்டும்;
எதிரில் சென்றால்,
பாதியிலேயே
பாட்டை நிறுத்தி ஓடிவிடும்.

இதை நான் மறக்கலாமா?


45


கடற்கரையில்
மணல் வீடு
கட்டிக் கொண்டிருக்கிறேன்.

என் புறமிருந்து
நீ சிரிக்கிறாய்.

நான்
பாலகாண்டத்தைப்
புரட்டுவதாக நினைக்கிறாய்.

உன் ஊடலில்
குளிர்காயும் ஆசையில்
எதுவும் பேசாமல்
ஒரு கிணறு தோண்டுகிறேன்.

“உங்கள் கிணற்றில்
நீர் சுரக்கிறதா?” என்கிறாய்

“உன் இதயத்தில்
அன்பு சுரக்கிறதா?” என்கிறேன

நீ கண்களால் மழைபொழிகிறாய்.

என் கிணறே
அந்த நீரில்
கரைந்து விடுமோ என்று
பயப்படுகிறேன்.

சமாதானப் புறாவைப்
பறக்கவிட்டு




உன் மார்புக் கூட்டில்
தலை சாய்க்கிறேன்.

கிணற்று நீரை
வெள்ளமா கொண்டுபோகும்?”
என்று நீ
மெல்ல நழுவுகிறாய்.

ஒ... இதுவும் ஒரு கற்பனை தான்.



46