குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/நிலவுலகம் நிலத்திற்கு அடிப்படை
புறநானூறு புறத்துறைபற்றித் தோன்றிய இலக்கியம். ஆனாலும் ஆங்கு அகநிலைபற்றிய அறநெறிச் சார்புடைய அறவுரைகள் இல்லாமலில்லை. புறநானூற்றில் சமூக நெறிவழி முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதிக்குப் புரவலனாகவும், புலவனாகவும் விளங்கிய பெருமைஉண்டு, மன்னன் இளம்பெருவழுதி உலகியலின் நடைமுறை “மன்னர் முடியில் இல்லை; படையில் இல்லை; பண்பாட்டில்தான் நிற்கிறது” என்று கூறிய பாடல் உலக இலக்கியங்களிலே சிரஞ்சீவித் தன்மை வாய்ந்தது ஆகும்.
இந்நிலவுலகம் இருந்தது; இருந்துகொண்டிருக்கிறது. இனிமேலும் இருக்கும்; இந்நிலவுலகத்தின் நிலையான தன்மைக்கும் அதன் வளர்ச்சிக்கும் என்றும் இடையீடு இல்லை. இருக்கவும் முடியாது. நிலவுலகத்தின் உயிர் வாழ்க்கை ஆற்றொழுக்கனையது. இங்ஙனம் இடையறாது உலகியல் இயங்கிக் கொண்டிருப்பதற்கு அடிப்படை எது? ஆதாரம் எது?
இந்த நிலவுலகம், பல வல்லரசுகளைக் கண்டதுண்டு. ஆனால் அந்த வல்லரசுகளும் கூட நிலவுலகத்தைப் போல நிலையாக அமையவில்லை; வீழ்ந்துபட்டன. வரலாற்றுப் புத்தகத்தில் சில பக்கங்களை அடைத்துக் கொண்ட பெருமைதான் வல்லரசுகளுக்கு உண்டு. இந்த நிலவுலகத்தை எடுத்துக் கவிழ்த்து விடுவதைப் போன்று நிகழ்ந்த கொடிய போர்கள் எத்தனை? எத்தனை? நிலவுலகத்தின் அணியென விளங்கும் ஆறுகளைச் செந்நீரால் கலக்கிய போர்கள் நிகழ்ந்ததுண்டு. ஆனாலும் நிலவுலகம் தனது நிலையான இயல்பை இழந்துவிடவில்லை. அழிந்துவிடவும் இல்லை. ஆறுகளோடு போட்டி போட்ட செங்குருதி ஆறுகள் சில நாட்களே ஓடின. ஆனால் வளமூட்டும் பேராறுகள் ஓடிக் கொண்டேயிருக்கின்றன.
ஆக அரசுகளால் நிலவுலகம் வாழவில்லை. காவியங்களால்தான் நிலவுலகம் வாழ்கிறதா? இல்லை! இல்லை!! கடவுளால்தான் நிலவுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறதா? இல்லை. இல்லை! கடவுள் தன்மையால் உலகம் வாழ்ந்தது; வாழ்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் வாழும், கடவுள் தன்மை! அப்படியென்றால் என்ன? சமயக் கோலங்களா? பக்தி உணர்ச்சியா? இல்லை. இல்லை! இவை கடவுள் தன்மையைப் பெறும் சாதனங்களே தவிர இவையே கடவுள் தன்மை ஆகா, அங்ஙனமாயின் கடவுள் தன்மை என்பதுதான் என்ன?
உயிர்க்குலம் கூடி உண்டு மகிழ்ந்து வாழவேண்டும். கூட்டு வாழ்க்கை கோபுரம் போல உயர்வைத் தரும். தனிமை வாழ்க்கை அசுர வாழ்க்கை, அருளியலுக்கு முற்றும் புறம்பானது. அதனாலன்றோ “பகுத்து உண்க” என்று வள்ளுவம் ஆணையிட்டது. தாயுமானாரும் “காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்” என்றார். பிறர் பசிக்க ஒருவர் உண்ணும் வாழ்க்கை நாகரிகமற்ற வாழ்க்கை; இத்தகைய தீய பழக்கம் உடையவரிடம் அன்பு மலராது. அறநெறியும் கால் கொள்ளாது. அருளியலும் சாராது; இத்தகையோர் கோடி அருச்சனை செய்தாலும் அவர்களுக்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை. புண்ணிய மூர்த்தியாகிய இறைவன் இவர்களைப் “பொக்கு” எனப் புறத்தே ஒதுக்கித் தள்ளுவன். வையகம் உண்ண உண்ணுதலே அருளியல் வாழ்க்கை கடவுள் தன்மை.
வெறுப்பு, ஒரு நற்பண்பல்ல, தீய பண்பு, விருப்பும் வெறுப்பும் ஆட்சி செய்யும் மனத்தில் தன்னலமே ஆட்சி செய்யும். ஆங்கு, அன்பு ஊற்றுக்கண் அடைபடும். அதன் காரணமாகச் சிந்தனையிலும், செயலிலும் அறமல்லாதன தோன்றும். யாரோடும் வெறுப்புக் கொள்ளுதல் கூடாது. அதனால் தீயவர்களையும் வெறுக்கக் கூடாதா? என்ற வினா எழலாம். தீயவர்களையும் கூட வெறுத்து ஒதுக்குவதால் அவர்கள் மாறப் போவதில்லை. மாறவும் முடியாது.
ஒருவரிடத்தில் தீமை என்பதும் அவராக எடுத்துக் கொண்டது அல்ல. தீமை என்று கருதி அறிந்துகொண்ட பிறகு எடுத்துக்கொண்டது அல்ல. பிறப்பின் சார்பும், சூழ்நிலையும் அதற்குக் காரணங்கள். ஆதலால் தீயோரை வெறுத்துப் பயனில்லை. தீமையை வெறுக்க வேண்டும். தீமையை வெறுத்து, அத்தீமையினின்றும் அதில் சிக்கியவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் தீயன கொண்டு ஒழுகுவாரிடம் நமக்குக் கங்கு கரையற்ற அன்பும், பாசமும் பரிவும் வேண்டும். தீமையைக் கூட நேரடியாக வெறுத்துப் பயனில்லை. தீமை ஒருவகைக் காரியமே!
தீமை தோன்றுதற்குரிய காரணங்கள் பொருந்தாச் சமூகப் பழக்க வழக்கங்களேயாகும். உத்தரவாதமில்லாத வாழ்க்கை முறையும், சமூக நியாயங்களினின்றும் மாறுபட்ட நீதிநெறிக் கோட்பாடுகளாலும், சமூக சமநிலைக் கொள்கை முரண்பாட்டினாலும் வெறுப்புத் தோன்றுகிறது. இக்காரணங்களை மாற்றினால் தீமை தானே குறையும். அதனால் யாரோடும் வெறுப்புக் கொள்ளாது, ஒத்தார், மிக்கார், தாழ்ந்தார் என்ற வேறுபாடின்றி வெறுக்காது அன்பு காட்டிப் பழகுதல் கடவுள் தன்மை.
உயிர்க் குணமே ஓயாது தொழிற்படுவது. உயிர்ப்பு என்பது உண்ணல் உறங்கலால் மட்டும் புலப்படுவதன்று. உயிர்ப்பின் உண்மையான அடையாளம் அறிவறிந்த ஆள் வினையில் ஓயாது ஈடுபடுதல். துன்பம் அச்சத்திற்குரியது தான். ஆனால் அஞ்சுவது பேதைமை. துன்பத்திற்கு அஞ்சாமல் துன்பத்திற்குரிய காரணங்களைக் கண்டு அஞ்சுதல் அறிஞர் தொழில்.
துன்பம் சோர்வைத் தரும். சுறுசுறுப்பைக் கெடுக்கும். தாழாது உயற்றும் உயரிய முயற்சிக்கு இடையூறு செய்யும். கவலையைத் தந்து கடு நரகத்தில் ஆழ்த்தும்; அழச் செய்து அழிக்கும், இவை கடவுள் தன்மைக்கு மாறானவை. கோழைகளும், அடிமைகளும், சோம்பேறிகளும், அஞ்சி அழுபவர்களும் ஆண்டவன் சந்நிதியைக் கெடுக்கும் பாவிகள்! இவர்கள் சைத்தானின் பூசாரிகள்; பாதுகாவலர்கள். “அஞ்ச வருவது யாதொன்றுமில்லை. அஞ்சுவதும் இல்லை” என்று அஞ்சாமல் அயராமல் ஆள்வினையில் ஆர்வலராகி ஓயாது முயற்சியில் ஈடுபடும் பண்பே கடவுள் தன்மை!
பிறரிடத்து அச்சத்தைத் தோற்றுவிக்கும் வாழ்க்கை நன்றன்று. கொடிய விலங்குகளைக் கண்டே உயிர் வர்க்கம் அஞ்சலாம். அஃது இயற்கை. ஆனால் அந்தக் கொடிய விலங்குகளைக் கூடப் பிடித்துப் பழக்கப்படுத்தினால் அவை அச்சம் தருவதில்லை. மாறாக மகிழ்ச்சியும் தருகின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனித உலகம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பகுத்தறிவைப் பெற்றிருந்தும், வேதங்கள் பலவற்றைப் பெற்று ஓதியிருந்தும், நிலவுலகத்தின் பரப்பில் குறிப்பிடத்தக்க அதிக அளவு பரப்பைக் கோயில்களுக்கு என்ன பக்குவப்பட்டிருக்கிறது? மனிதன் இன்னமும் பதப்படுத்தப் பெறாத கச்சாப் பொருளாகவே இருக்கிறான்.
மனிதனுடைய மிரட்டல் ஓய்ந்ததா? உருட்டல் ஒடுங்கிற்றா? அரட்டல் அடங்கிற்றா! ஒன்றும் இல்லை. தன்னைக் கண்டு பிறர் அஞ்சுவதையே பெருமையென்று கருதுகின்ற ஒரு போலி நாகரிகம் உருவெடுத்து வளர்ந்துள்ளது. இது சராசரி மனித வாழ்க்கைக்குக் கூட முரணானது. பிறர் கண்டு அஞ்சத் தகுந்தவைகளுக்குத் தாமும் அஞ்சி, அவற்றினின்றும் விடுதலை பெறுதலே கடவுள் தன்மையைச் சார்ந்த வாழ்க்கை
நக்கீரர் “பலர் புகழ் ஞாயிறு” என்பார். பெரும்பாலும் இலக்கிய உலகத்தில் புகழுக்குரியது ஞாயிறே என்று பாராட்டப் பெறுகிறது. அடுத்து இறைவன் “பொருள் சேர் புகழ்” என்று பாராட்டப் பெறுகின்றான். புகழ் மிக மிக உயர்ந்தது. அது எளிதில் கிடைப்பதன்று. இன்று உலகியற் பொருட்களுக்குப் “போலி” உண்டாகியிருப்பதைப் போலவே, புகழிலும் போலி உண்டாகி வளர்ந்து வருகின்றது. ஏன்? இன்று புகழ் ஒரு விளம்பரப் பொருளாகிவிட்டது.
புகழ் செய்திப் பத்திரிகையில் பெயர் வருவதா? இல்லை! இல்லை!! “மாப்பிள்ளை விநாயகர் சுருட்டுப்” பெயரும்தான் பத்திரிகையில் வருகிறது. குற்றக் கூண்டில் நின்று கடுந்தண்டனை பெற்றவன் பெயருந்தான் பத்திரிகைகளில் வருகிறது. இவையெல்லாம் புகழாமோ?
இன்றைய சமுதாய அமைப்பில் வலிமையற்றோர், வலிமையுடையோரைச் சார்ந்து வாழ்தல் தவிர்க்க முடியாத தாகிவிட்டது. இங்ஙனம் சார்ந்து வாழ்பவர்கள் தாம் சார்ந்திருப்பவர்களைப் புகழ்ந்து கூறிடும் வார்த்தைகள். அம்மம்ம! ஆயிரம்! ஆயிரம்!! எல்லாம் உங்களால்தான். நீங்கள் இல்லாவிட்டால் எங்கள் கதி என்னாவது? உங்கள் காலத்தில்தான் இவையெல்லாம் நடக்கின்றன. கர்ண னாவது? பாரியாவது? இன்று உங்கள் கொடையைப் பார்த்தால் அவர்கள் வெட்கிப் போவார்கள்!” என்றெல்லாம் துதி செய்து, முகஸ்துதியையே மூலதனமாக்குவார்கள். முகஸ்துதியில் மயங்கிச் சில காசுகளை வாரிக் கொடுத்துப் புகழ்ச்சியைப் பெறுதலும் புகழாமோ?
மலரினின்றும் மணம் முகிழ்ப்பதைப் போல ஒருவனுடைய வாழ்க்கையினின்று புகழ் முகிழ்க்க வேண்டும். உண்மையான புகழினைப் பெறுதலே வாழ்க்கையின் நோக்கம். அதனாலன்றோ திருவள்ளுவர் ‘புகழ்’ என்ற ஒரு தனி அதிகாரம் ஓதினார். புகழ் எளிதில் கிடைப்பதன்று. எளிதில் கிடைப்பதும் புகழன்று. அது அப்பட்டமான முகஸ்துதி: வியாபாரம்: வேசித்தனம். இத்தகைய புகழால் வையகம் வளராது; வாழாது.
புகழ் தன்னல மறுப்பில் பிறர் நல வேட்கையில் தோன்றுவது. உயிரையும் வெறுத்த உயர் அறநெறி வாழ்க்கையில் புகழ் தோன்றும். அத்தகைய புகழுக்கு உயிரையும் பணயம் வைத்து வாழ்தலே கடவுள் தன்மை யுடைய வாழ்க்கை!
பழிக்கப்படுவது பழி; புகழுக்கு எதிரானது பழி; பழி சைத்தானின் கோட்டை! பேய்களின் கூடாரம்! சராசரி மனிதனால் கூட பழியில் சிக்கி வாழும் வாழ்க்கை வெறுக்கத் தக்கது. ஆனால் இன்று புகழாவது பழியாவது? எப்படியாவது வாழ்ந்தால் சரி என்ற தவறான கொள்கை மேலோங்கி வருகின்றது.
உயிரைத் தாங்க வழங்கிய உடல், உயிரை நலிய வைக்கும் பொதி சதையைச் சுமந்து கொண்டு, வீணில் உண்டு, பழியைச் சுமந்து செத்துக் கொண்டிருக்கும் வேடிக்கை மனிதர் பலரைக் காண்கின்றோம். அவர்கள் தற்செயலாக மனிதராகப் பிறந்துவிட்டனர். அவர்களுக்கு எல்லாம் வாணிகமே! ஆனால் உயர் புகழை விரும்புபவர்கள் மறந்தும் தம்மைப் பழி தீண்டாதவாறு தம்மைப் பாதுகாத்துக் கொள்வர்.
உலகமே அவர்களுக்குக் கிடைப்பதாக இருந்தாலும் கடவுள் தன்மையுடைய புகழை விரும்பாமல் பழியை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளார்கள். பழியுடன் வரும் எதனையும் ஏற்கார். இதுவே கடவுள் தன்மை!
உண்மையான புகழ் அயர்வினை அகற்றும்; ஆள் வினையைத் தரும். உலகியலை ஓயாது தொழிற்படுத்த உறுதுணை செய்யும். வாழும் உலகிற்கு அயர்வு முதற்பகை. அயர்ச்சி அறிவைக் கெடுக்கும்; ஆர்வத்தைச் சிதைக்கும்; உழைப்புத் திறனை உருக்குலையச் செய்யும். ஒழுக்கத்தைக் கெடுக்கும். மயக்கத்தைத் தரும் முடிவாக இம்மையில் கொடுந் துன்பத்தையும், மறுமையில் நரகத்தினையும் தரும்.
அயர்வினைச் சார்ந்தோரை ஆயிரம் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது. அறிவறிந்த ஆள்வினை யுடையார் அயர்ச்சி உறுதலிலார். அவர்களைத் தோல்வி களோ, துன்பங்களோ, இகழ்ச்சியோ, அயர்வினை அடைந்திடும்படி செய்ய முடியாது. பெற்ற தோல்விகளைப் படிப்பினையாக்கி, வெற்றிப் படியாக்கி ஓயாது பயணம் செய்வர். இங்ஙனம் வாழ்பவர்தாம், உண்மையான கடவுளின் பக்தர்கள். நில உலகத்தின் இயக்கத்திற்கு உயிர்ப்பாக விளங்குபவர்கள்: இதுவே, அயர்விலா வாழ்க்கையின் கடவுள் தன்மையின் சாரம். அதனாலன்றோ “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற சிறந்த கோட்பாடு தோன்றலாயிற்று. அயர்விலா வாழ்க்கை அறனைத் தழுவிய அருளியல் வாழ்க்கை! அதுவே கடவுள் தன்மை!
தனியே உண்ணாதவராக, வெறுப்பிலராக, சோர்விலராக பிறர் அஞ்சுவது அஞ்சுபவராக உயிரைக் கொடுத்தும் புகழ் வேட்பவராக, பழியைச் சுமக்காதவராக அயர்விலாதவராக விளங்கி வாழ்தலே, வாழ்வாங்கு வாழ்தல். இத்தகு இனிய சிறந்த பண்புகள் இருப்பினும் போதாது. அவர்கள் ஓயாது முழு முயற்சியில் ஈடுபடவேண்டும். முயற்சி யென்பது வான்மழையை நிகர்த்தது. முயற்சி உடையாரையே முன்னவன் வாழ்விக்கின்றான். முயற்சியுடைய வாழ்க்கை ஒரு தவம். அதுவும் தனக்கென முயலாது பிறருக்கென முயலும் பண்பு சாலச் சிறந்தது.
இன்றைய மனிதனோ தனக்கெனவே முயல்கின்றான். தனக்கு ஆதாயம் இல்லாததை அவன் செய்ய விரும்புவதில்லை. அதனாலேயே உலகத்தில் துன்பம் வளர்ந்து வருகின்றது. தனக்கென வாழாது பிறருக்கென முயலுதலே உயரிய கடவுள் தன்மை! “குறியொன்றும் இல்லாத கூத்து” என்று இறைவன் ஞானக் கூத்தைக் குறிப்பிடுவர். வாழ்வித்து வாழ்தலும், மகிழ்வித்து மகிழ்தலுமே தவம். இத்தகைய சிறந்த தவம் செய்வோர் சிலராவது உலகில் தொடர்ந்து வாழ்ந்து வருவதால்தான் இந்த உலகம் இருந்தது; இருந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் இருக்கும்.
நிலையான உலகியல் இன்பமுற அமைந்து விளங்க நாம் அனைவரும் இந்த இயல்புகளைப் பெற்று உலகியலுக்கு ஒயாது இயக்கத்தைத் தருவோமாக! வையகத்தை வாழ்வித்து வாழ்வோமாக!
உண்டாலம்ம இவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே! முனிவிலர்
துஞ்சலு மிலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா, நோன்றாட்
பிறர்க்கென முயலுதர் உண்மை யானே!
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
குறள்