உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5/வாழ்க்கை நெறி

விக்கிமூலம் இலிருந்து




6


வாழ்க்கை நெறி


புகழ்! - அதுவே மனித வாழ்வின் இலக்கு. புகழ்பட வாழாத வாழ்க்கை, புழுவனைய வாழ்க்கை. ஆனால், எது புகழ்? வழிவழியாக வரும் குடும்பத்தின் சார்பாக வருவது புகழா? வழிவழி பெற்ற வளத்தின் துணைகொண்டு பெறுவது புகழா? இச்சைபேசி இரைப்பை நிறைப்போர் பிழைப்பு கருதி முகமனாகக் கூறுவது புகழா? இல்லை! இல்லை! தன்னுடைய முயற்சியால் செய்த சோதனைகள் மூலம் பெறுவதே புகழ்! மறக்கும் இயல்புடைய மனித சமுதாயத்தில் அம் மக்கள் மறக்கமுடியாமல் நினைவுகூறத்தக்க வாழும் வகையதே புகழ். மனிதகுல வரலாறு என்ற பேராற்று வெள்ளத்தால் முடி மறைக்கப்பெறாமல் அல்லது இழுத்தெறியப் பெறாமல் அந்த வெள்ளத்தில் எதிர் நீச்சல் செய்து காலகாலத்திற்குக் காலூன்றி நிற்க வல்லாரே உண்மையில் புகழ் பெற்றோர் ஆவர்.

ஒத்த கொள்கையுடையோர் புகழ்தல் இயற்கை உடனுறைந்து வாழ்கின்றவர்கள் புகழ்தலும் தவிர்க்க முடியாதது. அன்பால், பரிவால், பாசத்தால் பிணைக்கிப் பட்டவர்கள் புகழ்தல் இயற்கை. அன்பினால் பிணைக்கப் பட்டவர்களின் கண்ணுக்குக் குற்றங்கள் தெரியா. குணங்களே தெரியும். ஆதலால், அன்பில் ஆர்வார் புகழ்தல் புகழேயானாலும் நூற்றுக்கு நூறு புகழாகாது. உண்மையான புகழ், பகைவரால் புகழப் படுவதேயாகும். ஆனால், இன்று வளர்ந்து வந்துள்ள சமுதாய மனப்போக்கில் பகைவரால் புகழப்பெறுதல் எளிதெனத் தோன்றவில்லை. ஒருவருக்கொருவர் பகைவராயிருப்பதிலும்கூட நெறி உண்டு; முறை உண்டு. நெறி தவறிய பகை உணர்ச்சி பண்பாடு ஆகாது. அதுமட்டுமல்ல, அதற்குப் பகை என்றும் பெயரில்லை. கயமை என்றே சொல்லவேண்டும். உண்மையான பகை, இலட்சியங்களின் பாற்பட்டதாக இருக்கும்; அவரவர் தம் இலட்சியத்தை அடைவதில் போட்டி இருக்கும். அவ்வழிபட்ட பகையே பகை. அந்தப் பகைமை உயர்வில் போட்டி போடுமே தவிர, இகழ்ச்சியில் போட்டி போடாது. அந்தப் பகைமை களத்தில் சந்திக்குமே தவிர அங்கு மறைவான சூதுக்கு இடமில்லை. விவாதம் இருக்குமே தவிர வசை இருக்காது. அப்படிப்பட்ட பகைவர் கண்ணின்று கண்ணறச் சொல்வர். ஆனால் ‘முன் இன்று பின்’னோக்கும் சொல்லைச் சொல்லமாட்டார்கள். ஒருவருடைய உரிமைக்கும், உடைமைக்கும், கல்விக்கும், புகழுக்கும் நெறிவழிப்பட்ட பகை இடையூறு செய்யாது. இன்றோ, பகை இலக்கணத்திற்குரிய பகைமை எங்கும் இல்லை. கயமைத்தனமே களிநடம் புரிகிறது. சிறுமை, குற்றமே தூற்றிவிடும் என்பதைப் போல், அத்தகையோர் குற்றமே தூற்றுகிறார்கள்; குணங்களைப் பார்க்க மறுக்கிறார்கள்; பாராட்ட மறுக்கிறார்கள். எப்படியும் கேடு செய்ய வேண்டுமென்றே நினைக்கிறார்கள். கயமைத் தனத்தால் காரியக்கேடு செய்கிறார்கள். இந்த யுகத்தில் விழுமிய புகழ் பெறுதல் அரிது. ஏனெனில், நெஞ்சுதலந்த நட்புடையோரும் நாட்டில் கிடைப்பதில்லை. நெறி வழிப்பட்ட பகைவரும் இல்லை. ஆதலால், எங்கும் நிகழ்வது முருகன் படலமே. மேடையெல்லாம் நாறுவது தூற்றுதலே. தாள்கள் எல்லாம் தாங்கிவருவது தரங்குறைந்த எழுத்துக்களே! என் செய்வது? புறநானூறு காட்டும் பொதுநெறி பரவினால் இந்த அவலம் அகலும்.

கோவூர்க்கிழார், கிள்ளிவளவனைப் பாராட்டுகின்றார். கிள்ளிவளவன் சோழப் பேரரசன் வெற்றிவாகை சூடியவன்; களத்தில் பகைவரைச் சந்தித்தவன். ஆயினும் அவனுடைய ஆண்மை, பகைவராலும் புகழ்ந்து கூறப்பெற்றது. ஒருவழிப்பட்ட பொருட்கள் உரைகல்லாக முடியாது. மாறுபட்ட பொருள்களே உரைகல்லாக முடியும். அதுபோல் கிள்ளிவளவன் புகழைக் கோவூர்க்கிழார் புகழ்ந்ததைவிட கிள்ளிவளவனுடைய பகைவர்கள் புகழ்ந்திருக்கிறார்கள், கிள்ளிவளவன் ஆண்மையும் நிறைநல் ஆண்மை. அவன்றன் பகைவரும் பாடறிந்து ஒழுகும் பண்பினர். இதனைக் கோவூர்க்கிழார் “பகைவர் புகழ்ந்த ஆண்மை” என்று பாராட்டுகின்றார். இன்று நாட்டிடை வாழும் கயமை வீழ்க! நற்பகை வளர்க! பகைவர் புகழும் ஆண்மை வளர்க!

நின்னோர் அன்னோர் பிறரிவன் இன்மையின்
மன்னெயில் முகவைக்கு வந்திசின் பெரும
பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்குத்
தாவின்றி உதவும் பண்பின் பேயொடு
கணநரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
செஞ்செவி எருவை குழீஇ
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே.

- புறம் 373