குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/பாரதி தடத்தில் பாரதம்
4
தமிழ் மொழி காலந்தொறும் வளர்ந்து வந்திருக்கிறது. நாம் குறிப்பிடுவது மொழியின் வளர்ச்சியை மட்டுமல்ல: கருத்து வளர்ச்சியையும் கூட தமிழிலக்கியங்கள் தோன்றி வளர்ந்த வரலாற்றை நோக்கின் இந்த உண்மை புலனாகும்.
தமிழ், இலக்கிய வளம் நிறைந்த மொழி: அறநூல்களும் நீதி நூல்களும் நிறைந்த மொழி: தத்துவ ஞான நூல்களும் தமிழில் நிறைய உண்டு. ஆதலால், தமிழர்கள் வளர்ந்து வந்துள்ளனர். தமிழ் மொழியும் வளர்ந்து வந்துள்ளது.
ஆயினும் இடைக்காலத்தில் ஒரு தேக்கம்! தமிழர்கள் பீடு இழந்தனர்; அரசுகளை இழந்தனர்; அடிமைகளாயினர்.
இருள் நிறைந்த நிலையில் ஓர் எழுஞாயிறு தோன்றுகிறது; பலர் புகழ் ஞாயிறு தோன்றுகின்றது. அதுதான் பாரதி! பாரதி, வரலாற்றில் இடம்பெற்ற கவிஞன் அல்ல-வரலாற்றை எழுதிய கவிஞன்!
பாரதி, உப்புக்கும் கூழுக்கும் பாடியவன் அல்ல! செத்த பிறகு கிடைக்கும் சொர்க்கத்துக்கும் பாடியவன் அல்ல. பாரதி, வாழும் மாந்தருக்குப் பாடினான்.
பாரதியின் பேச்சும் மூச்சும் பாரத நாடு, பாரத நாட்டின் சுதந்திரம், பாரத சமுதாயத்தின் வாழ்க்கை!
பாரதி பேசினான்: எழுதினான்: கவிதைகள் இயற்றினான்: சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்குபெற்றான். பாரதி, வாழ்வாங்குவாழ்ந்த மனிதன்! இந்த மண்ணை, விண்ணகமாக்க வந்த கவிஞன்!
பாரதி, காலம் தந்த கவிஞன், இல்லை, இல்லை! காலத்தை உருவாக்கிய கவிஞன்! ஆம்! பாரதி, அடிமையாகவே பிறந்தான்: அடிமையாகவே செத்தான்! அவன் சடலத்தின் மீது பாரதத் தாயின் மணிக்கொடியை போர்த்த முடியாமலே செத்துப் போனான்.
ஆயினும் பாரதி, நாடு சுதந்திரம் பெறும் என்று நம்பினான்! சுதந்திரப் பள்ளு பாடினான்! பாரதி, சுதந்திரக் காற்றைச் சுவாசித்தான்! பாரதியின் ஆன்மா விடுதலை பெற்றுவிட்டது! பாரதியின் கவிதைகளில் எழுச்சி இருக்கும்: ஏற்றம் பிறக்கும்! பாரதியின் கவிதை பற்றி கவிமணி,
"சொல்லுக்குச் சொல்லழகு ஏறுமே அடா-கவி
துள்ளும் மறிவைப் போல துள்ளுமே, அடா!
கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா!-பசுங்
கன்றும்பால் உண்டிடாது கேட்குமே, அடா!"
என்று பாடினார்! பாரதியின் கவிதைகளில் சொல்புதிது! பொருள் புதிது!
"தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
என்று பாரதியால் தமிழ் ஏற்றம் பெற்றது என்று பாரதிதாசன் பாராட்டினான்!
பாரதியின் கவிதைகளில் கவித்துவம் உண்டு. உணர்ச்சி உண்டு. பாரதி, உரைநடையில் கதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியுள்ளான். பாரதியின் உரைநடை இலக்கியங்களில் தெளிவான சிந்தனை, கொள்கை, கோட்பாடுகள் இடம்பெற்றுள்ளன. பாரதியின் நெடிய கதைகள் சுவைத்துப் படிக்கத்தக்கன. அவற்றுள் சில பகுதிகள் கிடைக்காதது ஒரு பெரிய குறை!
பாரதியின் கவிதைகளிலும் சரி, உரைநடைகளிலும் சரி ஷெல்லி, விவேகானந்தர், தாயுமானார் போன்றவர்களின் தாக்கங்கள் நிறைய உள்ளன. அவர்களை ஆதரித்தும் எதிர்த்தும் பாரதி எழுதுகின்றான்.
ஆனாலும் பாரதிக்கு அவர்கள்பால் உள்ள ஈடுபாடு மிகுதி. அளப்பரிய மதிப்புணர்வும் உடையவனாகவே வளர்ந்திருக்கிறான். தாயுமானார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்துகிறான்.
பாரதி, இந்தியா, பாரத தேசம் என்றெல்லாம் கூறி மகிழ்கிறான். 'இந்தியா'-என்றே ஒரு பத்திரிகையும் நடத்தினான். பாரதி நடத்திய பத்திரிகைகள் பல. ஆனால், போதிய ஆதரவு இல்லாமல் அல்லற்பட்டான்!
ஆயினும் கடைசி வரையில் ஊனில் உயிரும், உயிரில் உணர்வும் சுதந்திர வேட்கையுடையவனாகவே இருந்தான்! "எல்லோரும் இந்தியர்" என்று பெருமையோடு எண்ணுவதில், எழுதுவதில் பாரதி அனுபவித்த இன்பம் சொல்லிக்காட்ட ஒண்ணாதது.
இந்தியா, இந்தியர் - என்ற உணர்வுகளினூடே பாரதிக்கு, "பாரத ஜாதி"யை உருவாக்குவதில் இருந்த ஆர்வம் போற்றத்தக்கது. ஆம்! பாரத நாட்டில் வாழ்வோர் பாரத ஜாதி!
பாரதி காலத்தில் இந்தியா ஒரு பெரிய நாடு! பிரிவினைக்கு ஆளாகாத அகண்ட பாரதம் இருந்தது! பாரதத்தில் இந்துக்கள் வாழ்ந்தனர். பாரத ஜாதி, ஒரு மொழிக்கும் ஒரு மதத்திற்கும் உரியதல்ல! இது கலப்பு ஜாதி! குருநானக் இந்து-இஸ்லாமிய இணைப்பில் ஒரு புதிய மதமே உருவாக்கினார். அதுதான் சீக்கிய மதம்!
இந்துக்கள், முகம்மதியர்கள் ஜாதியில் நம்மவர்களே என்பது பாரதியின் கருத்து. அதுமட்டுமல்ல, இந்துக்களுக்கும் முகம்மதியர்களுக்கும் குருதிக் கலப்பு உண்டு என்றும் எழுதுகிறான்.
"பாரத ஜாதி ஒன்று”-என்ற கொள்கை பாரதியின் கொள்கை உறுதியான நம்பிக்கை. பாரத ஜாதி ஒன்றுபட்டு நிற்கவேண்டும். பாரத ஜாதியினர் தமக்குள் இருக்கும் வேற்றுமைகளை முரசுபோல் பிரசங்கம் செய்து கொண்டிருக்கக் கூடாது என்று பாரதி அறிவுறுத்துகிறான்.
பாரத தேசத்தில் விடுதலை உணர்ச்சி வளர்ந்து வருவதை, பாரதி விளக்கி, "பாரத நாட்டின் நவீன உணர்ச்சி” என்ற கட்டுரையில் எழுதுகிறான். இந்தக் கட்டுரை "இந்தியா" இதழில் வெளியான உப தலையங்கம்.
பாரதத்தில் ஒரு நவசக்தி தோன்றியிருக்கிறது என்பது பாரதியின் கருத்து. அந்நிய ஆட்சியை, கொடுங்கோலர்களை எதிர்த்துப் போராடும் போராட்டத்தை கம்சன், காளிங்கள் ஆகியோருடன் கண்ணன் நடத்திய போராட்டத்துடன் ஒப்புமைப் படுத்துகிறான்.
"கண்ணன் சுயநலம் கருதி ஒரு காரியமும் செய்ய வில்லை. கொடுங்கோலர்களுடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதே குறிக்கோள்! அதுவும் கம்சன், காளிங்கள் திருந்துவதற்குப் போதிய காலம் கொடுத்தும் திருந்தாத நிலையிலேயே கொடுங்கோலர்களை அழிக்க வேண்டியதாயிற்று” என்று பாரதி விளக்கி எழுதுவது அறிவறிந்த விவாதம்!
இந்தியாவில் மக்களாட்சி வேண்டும். இது பாரதியின் குறிக்கோள்! ஆனால், ஆதிக்க அரசோ, மக்களின் விருப்பார்வங்களைப் புரிந்து கொண்டு ஆட்சியை ஒப்படைப்பதற்குப் பதில் பல துன்பங்களையே செய்து வருகிறது என்று பாரதி வருந்துகிறான்.
பல புதிய அவசரச் சட்டங்களைப் பிறப்பித்து, பாரத சுதந்திரப் போர் வீரர்களைச் சிறையில் பிடித்து வைக்கின்றனர். ஆயினும், பாரதப் புதல்வர்கள் பயப்படாமல் தைரியமாகத் துன்பத்தை ஏற்று அனுபவித்து வருகிறார்கள்.
சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளைத் துன்புறுத்துவதும் காலப் போக்கில் கதிரவனை நோக்கி வீசிய கல், வீசியவர் தலையில் வீழ்வது போல் ஆள்வோருக்கே துன்பமாக முடியும் என்று பாரதி எச்சரிக்கை செய்கிறான்.
பாரத நாட்டின் சுதந்திர மீட்சி பாரத நாட்டின் சராசரி மனிதக் கூட்டத்தினாலேயே நடைபெறும் என்பதும் பாரதியின் கருத்து; நம்பிக்கை! பாரத நாட்டின் விடுதலைப் போருக்கு, பரம்பொருளின் ஆதரவுண்டு என்றும் நம்பிக்கை ஊட்டுகிறான் பாரதி!
ஆனால், பரம்பொருளின் ஆதரவு பெற ஒரு நிபந்தனையையும் பாரதி விதிக்கத் தவறவில்லை. அது என்ன நிபந்தனை? "பாரதப் புத்திரர்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களைக் கட்டிச் சுருட்டி வீட்டிற்குள் வைத்துவிட்டு, தேச மாதாவின் சேவையில் தொண்டு பூண்டு வந்தால் கட்டாயமாக பகவான் அருள் தருவான்” என்பதே அந்த நிபந்தனை; நம்பிக்கை!
பாரத நாட்டு மக்களிடம் வேற்றுமைகள் பெருகி வளர்ந்தமையை, திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டுவதை நமது நாட்டு மக்கள் சென்ற காலத்தில் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏன்? இன்று வரையிலும் உணர்ந்து ஒழுக முன்வரவில்லை என்பது உண்மை.
ஆயினும் வேற்றுமைகள் மறக்கப்படுதல் வேண்டும்: ஒன்றுபடுதல் வேண்டும், அனைவரும் நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்று வளர்ந்து வந்த உணர்வை "நவீன உணர்ச்சி” என்று வியந்து பாராட்டி வரவேற்கிறான் பாரதி!
பாரதி வாழ்ந்த காலத்தில்-சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசபக்தி வளர்ந்து வந்தது! பாரதி, கடவுள் பக்தியையே மடைமாற்றி, தேச பக்தியாக்க விரும்பினான்.
பிரகலாதன், துருவன் ஆகியோர் விஷ்ணுவினிடத்தில் காட்டிய பக்தியைப் போல் நாம் நமது தேசத்தினிடத்தில் பக்தியைக் காட்டவேண்டும் என்று பாரதி அறிவுரை கூறுகிறான்.
தேச பக்தி வளர, "சுதேசியம்” என்ற தர்மத்தை அனுசரிக்க வேண்டும் என்றும் பாரதி வலியுறுத்துகிறான். பாரதி, தனது அறிவுரைக்கு அரணாக விவேகானந்தரின் உபதேசத்தைக் காட்டுகிறான்!
"எனது பாரத புத்திரர்களே! இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு நீங்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் யாதெனில், பாரத தேசத்தின் முப்பது கோடி ஜனங்களே!
மக்கள் எல்லாம் மகாசக்தியின் ஆவிர்ப் பாவங்கள்! இவர்களை நீங்கள் ஆராதனை செய்ய வேண்டும்! இவர்களுக்கே தொண்டு செய்ய வேண்டும்! இதைக் காட்டிலும் சிறந்த மதம் வேறு கிடையாது” என்பது விவேகானந்தரின் அருள்வாக்கு!
பாரதி, தேச பக்தர்களைத் தேவர்கள் என்றும், தேச பக்தியில்லாத தேசத் துரோகிகளை அசுரர்கள் என்றும் கூறுகிறான்.
தாய் நாட்டின் நன்மைக்காக அறவழியில் அமைதியாக நாடெங்கும் நல்வழிகளைக் கண்டும் அமைத்தும் தொண்டு செய்வதைத் தேசத் துரோகிகள்-அசுரர்கள் தடுக்க முயல்கிறார்கள்.
தேச பக்தர்கள் தக்க தலைமையின் கீழ்க் கட்டுப்பட்டு நாட்டுக்கு உழைத்தலையே தவமெனக் கொண்டு பணி செய்து வருகின்றனர். சில சமயங்களில் அசுரர்கள்-தேச பக்தர்களாக நடிக்கலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு நடவாது.
அசுரர்களைப் பற்றி, கவலைப்படாமல்-சிந்திக்காமல் தேச பக்தர்களின் தொண்டு நடைபெற வேண்டும். தேச பக்தர்கள் இடர்களையும் துன்பங்களையும் கடந்து தேச பக்தியில் நிலைப்பட்டு நிற்கிறார்கள். தேச பக்தர்களுக்கு வெற்றி உறுதி. இது பாரதியின் முடிபு.
நாம் சுதந்திரம் கேட்பது எந்தச் சாதியினருக்கும் மதத்தினருக்கும் அல்ல! பாரத தேவிக்காகவே சுதந்திரம் கேட்கப்படுகிறது.
பாரத தேவியின் பாரதம் பிரிவினைப்படாத பாரதம்! அகண்ட பாரதம் நாட்டு மக்களின் எதிர்கால மகத்தான இலட்சியம். பாரத நாட்டை மக்கள்தான் ஆள வேண்டும். இதுவே, பாரதியின் சிந்தனை, செயல்!
பாரதி, பழைமையில் காலூன்றி நின்றவன். அதே போழ்து, பின்னே வரும் புதுமையை வரவேற்றவன். பழைய மரத்தில்தானே புதிய புதிய தளிர்கள் துளிர்க்க வேண்டும்!
மரத்தில் துளிர்க்கும் ஒவ்வொரு துளிருக்கும் ஒரு மரம் இயல்பா? அல்லது சாத்தியமா? இல்லை, இல்லை! அது போலப் பழைமை வாய்ந்த புகழ்மிக்க இந்து சம்பிரதாயத்தைப் பாரதி நம்புகிறான். அதே போழ்து பின்னைப் புதுமைகளையும் வரவேற்கிறான்.
இந்து நாகரிகம் என்று பாரதி போற்றுவது பண்பு நலம் சார்ந்த பழைய மரபினையே! அதே போழ்து நடைமுறைக்கு இசைந்து வாராதவற்றையும் சமுதாய விரோதமானவற்றையும் வெறுக்கிறான். புதிய மதம் உருவாக்க முயலுகிறான்; புது விதிகள் செய்கிறான்.
பாரதி, தன் காலத்தில் நிலவிய இந்து நாகரிகம் கெட்டுவிட்டது என்று எழுதுகிறான்: உண்மையை ஒப்புக்கொள்கிறான். பாரதி ஒப்புக்கொண்ட உண்மையை ஹிந்து மடாதிபதிகள் ஒத்துக்கொண்டிருந்தால் வரலாறு மாறியிருக்கும்.
கெட்டுவிட்ட இந்து நாகரிகத்தைச் சீர் செய்ய ஹிந்து மடாதிபதிகள் என்றுமே முன்வர மாட்டார்கள் போலத் தெரிகிறது. உண்மையில் கூறப்போனால் ஹிந்து மடாதிபதிகள் பலராகப் போனதாலும் அவர்களுக்குள்ளேயே செல்வாக்குப் போட்டிகள் நிலவுவதாலும் யார் ஹிந்து மதக் காவலர் என்பதே புலனாகவில்லை.
இதனைப் பாரதி, 'ஹிந்து சம்பிரதாயமாகிற குளத்துக்குத் தர்மகர்த்தா இன்னாரென்பதே வெளிப்படையாகத் தெரியவில்லை. அடியார்கள் கூடித் தர்மகர்த்தா இன்னாரென்பதை முதலாவது நிச்சயப் படுத்த வேண்டும். பிறகு, தெய்வ சந்நிதியில் அவர்களுடைய குணம் திருந்தி நடக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எழுதுகிறான். பாரதி காலத்திலும் இது நடக்கவில்லை. இதுவரையிலும் நடக்கவில்லை. இனிமேலும் நடக்குமா? வரலாறுதான் கூறவேண்டும்!
பாரதி, ஹிந்து தர்மத்தைச் சுத்தப்படுத்தி ஆதரிக்கத்தக்கது எது என்றும் இந்த விஷயத்தில் மக்கள் அஜாக்கிரதை காட்டக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறான்.
ஹிந்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், தேவையான அளவு இல்லை. இதனை, பாரதி "விழித்தால் நன்றாக விழித்துவிட வேண்டும். நடந்துகொண்டு தூங்குவோர் உண்மை அறிய மாட்டார்கள்” என்று எழுதியுள்ளபடி ஹிந்து சமுதாயம் விழித்தெழ வேண்டும். இது நமது பிரார்த்தனை வேண்டுகோள்!
ஹிந்து சம்பிரதாயத்தில் நிலவிய தீண்டாமையை, பாரதி கடுமையாகக் சாடுகிறான். "பஞ்ச கோணக் கோட்டை” என்ற தத்துவார்த்தக் கதை மூலம் தெளிவாக விளக்குகிறான். அந்தக் கதையைக் கேளுங்கள்!
பாரத தேசத்தவராகிய நாம் பஞ்சகோணக்கோட்டை கற் சுவர்கள் நாலும் மேலான சாதிகள்! மண்சுவரே பஞ்சமர் என்ற ஐந்தாம் சாதி, கோட்டையைச் சுற்றியுள்ள அகழி சுதேசி அபிமானம்! பஞ்சமர்களை அநாதரவும் கொடுமையும் நிறைந்த முறையில் நாம் நடத்தி வரவில்லையா? இது நியாயமா? இந்த ஒடுக்குமுறை சுதந்திரப் போராட்டத்துக்கு அனுசரணையாக அமையுமா? என்றெல்லாம் வேதனைப் பட்டு எழுதுகிறான்.
"கடவுள் எல்லோரையும் சமமாகவே படைத்தான். கடவுள் முன்னிலையில் சாதி வித்தியாசம் நிற்குமா? பஞ்சமர்களை நாம் நடத்திய கொடுமைகளுக்கு ஈடாக நம்மை ஆங்கிலேயர்கள் துன்புறுத்துகின்றனர்.
நாம் பஞ்சமரை ஆதரித்து அவர்களுக்குக் கல்வி புகட்டி, சுசீலமான வழக்கங்களை அனுசரிக்கும்படி செய்து அவர்களையும் நமக்குச் சமமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து நாம் எல்லோரும் ஒற்றுமைப்பட்டால் நம்மை வெல்ல வல்லவர்கள் இவ்வுலகத்தில் யாரேனும் இருப்பார்களா?" என்று பாரதி கேட்கிறான்!
பாரதியின் இந்த வினாவுக்குரிய விடையைச் சுதந்திர அரசு தந்தது. ஆனால், இந்து சமூகம் தரவில்லை. இந்து சமூகம் பஞ்சமர்களை அணைப்பதன் மூலமே வளரும்; வாழும்!
பாரதி, சாதிகளை வெறுப்பவன். ஒன்றுபட்ட பாரத சமுதாயம் பாரதியின் இலட்சியம். இந்தக் கொள்கையினை "ஆவணி அவிட்டம்” என்ற கட்டுரையில் விளக்குகிறான்! நெஞ்சினைத் திறந்து வீரப்ப முதலியார் மூலம் பேசுகிறான். "பூணுலை எடுத்துப் போடுங்கள்! இந்தியா முழுவதும் ஒரே ஜாதி! ஒரே ஆசாரம்!” என்று செய்துவிட வேண்டும் என்கிறான்.
பிராமண சபை, ரெட்டி சபை, வன்னியர் சபை என்று இருக்கும்வரை இந்த இழிவெல்லாம் தீராது. ஒரே கூட்டம் என்று பேசு! பூணூல் என்ன? கீணூல் என்ன? வீண் கதை" என்று பேசுகிறான்!
இன்றைய பாரதம் - தமிழ்நாடு எங்கு போய்க்கொண்டிருக்கிறது? பாரதியின் தடத்திலா? இல்லை. இல்லை! எங்குப் பார்த்தாலும் சாதிச் சங்கங்கள்! எனதருமை நாடே! என்று விழித்தெழுவாய்? -
மேலும் பாரதி எழுதுவதைக் கேளுங்கள்! "எல்லோரையும் சமமாக்கு! ஐரோப்பியர்களைப் போல, ஜப்பானியர்களைப் போல நடப்போம்! இது பாரதியின் ஆசை!”
பாரதி சாதிகளின் சங்கமத்தை மட்டும் விரும்பவில்லை! மதங்களின் சங்கமத்தையும் விரும்புகிறான்! 1906-லேயே நாடு முழுதும் சிவாஜி திருவிழாவும் அக்பர் திருவிழாவும் கொண்டாட வேண்டும் என்று எழுதியுள்ளான்.
பாரதி பாரத சமுதாயத்தில் சமத்துவம் நிலவ உழைத்தவன். சமைத்துவமே பாரதியின் கொள்கை கோட்பாடு! இந்திய நாட்டில் சாதி, வகுப்பு வேறுபாடுகளின்றிப் பணிகளில் அமர்த்த, சுக்கிர நீதி வழி வகுத்திருக்கிறது என்ற ஆதாரத்தை எடுத்துக் காட்டுகிறான்.
"எல்லா மனிதரும் சமம் என்ற கொள்கையை, சமூக வாழ்க்கையில் ஸ்தாபனம் செய்யும் வரை மானிடருக்குள்ளே பொறாமை, பகைமை, இகல், வஞ்சனை, போர் முதலியவை நீங்கா"- என்று பாரதி அறிவுறுத்துகிறான்.
பாரதி அறிவுறுத்துவதை நாம் ஏற்போமா? நடைமுறைப்படுத்துவோமா? சமத்துவ கொள்கைக்கு, கோட்பாட்டுக்குப் பாரத மாதாவே லோக குருவாக இருக்க வேண்டும் என்பது பாரதியின் ஆசை!
மனிதனை மனிதனாக மதிக்காமல் சமத்துவமாக நடத்தாமல் கொடுமைகள் பல இயற்றுவதைப் பல கோணங்களில் பாரதி, கண்டிக்கிறான். சங்கரன் பிள்ளை உரையாடல் உயர்சாதி மனப்பான்மையைச் சாடும். சாடலுக்கு ஓர் எடுத்துக்காட்டு! சங்கரன் பிள்ளை.
தோப்புப் பெருத்த விளைநிலம்
பாழ்த்தது; தொண்டர்இறு
மாப்பு பெருத்து மனநலம்
பாழ்த்தது; மாதர்களின்
மூப்புப் பெருத்து மலையாளம்
பாழ்த்தது; முப்புரிநூல்
பாப்புப் பெருத்து மதுரைத்
என்ற பாடலைக் கூறுகிறார். இந்தப் பாடலைக் கூறுவதன் மூலம் பார்ப்பன வீட்டுப் பிள்ளைகள் நாடார் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு வர மறுப்பதை விளக்குகிறார்.
இந்தக் கட்டுரையை முடிக்கும்பொழுது, கிரீஸ் என்ற யவன தேசத்தைப் பற்றி, பைரன் என்னும் ஆங்கிலக் கவிஞன், "ஆகா! இந்த நாட்டின் இயற்கை காட்சிகள் எல்லாம் எவ்வளவு அற்புதமாகவும் அழகாகவும் இருக்கின்றன" என்று கூறியதை எடுத்துக் காட்டுகிறான்.
"கிரீஸ் தேசம் போல, ஆகமபுரத்திலும் இயற்கை காட்சிகள்-மலையும், தோப்பும், நதியும், வானும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாதபடி அவ்வளவு சுதந்திரமாகவும் இனிமையாகவும் இருக்கின்றன. மனிதர் மாத்திரம் பரஸ்பரம் நாய்களைப் போலச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதிலும் இப்படித்தான் இருக்கிறது! தெய்வமே! இதற்கெல்லாம் விமோசனம் எப்போது வரும்?" என்று கேட்கிறான்!
நமது நாடு இன்று போய்க் கொண்டிருக்கிற நிலையைப் பார்த்தால் விமோசனம் வருவதற்கே வாய்ப்பில்லை என்பது போலத் தெரிகிறது! கடவுளே! எனதருமை நாட்டை விழித்தெழச் செய்யக் கூடாதா? பாரதியின் தடத்தில் உய்த்துச் செலுத்தக் கூடாதா?
பாரதி, மானுடம் வளர, இந்த வையகம் பயனுற அன்பே ஆதாரம் என்று வலியுறுத்துகிறான். மனித குலம் இன்பத்தை அடைய வேண்டுமானால் அதற்குத் "தான்" ஆகிற கதவைத் திறந்து அன்பு வடிவமாக நிற்பதே உபாயம்! அன்பு, காதல் என்னும் பெயர் பெறும்!
"ஓங்காரமாவது காதல்! ஆணும் பெண்ணும் காதலித்து வாழ்வது கடவுட் கொடை! இயற்கை! இந்த உலகை காதல் படைக்கிறது. இந்த காதலைச் சராசரி மனிதன் வணிகமாக்குகிறான்! மிருக இச்சையுடன் கூடிக் கலைவோர் மிருகங்கள்!
காதலால் ஆன்மத் தொடர்பு கொண்டு உயிரும் உயிரும் கலப்பவர் மனிதரில் சிறந்தோர், மாமனிதர்! இந்த அறிவே ஞானம்! அன்பைத் தவிர வேறு ஞானம் கிடையாது! ஏசுவின் பிறப்பு, அன்பின் பிறப்பு, விடுதலைக்கு அன்பு என்ற கதவு திறந்தாக வேண்டும்" - என்று பாரதி எழுதி அன்பின் அருமையை விளக்கியுள்ளான்.
பாரதி, அன்பினாலேயே பெரிய சமுதாய மாற்றங்களைச் செய்ய எண்ணுகிறான். அன்பு என்பது பேசிப் பழகுவதுடன் அமையாது. அமையக் கூடாது. விருந்துக்குப் பின் அன்புக்கு விடை கொடுப்பதை பாரதி விரும்பவில்லை.
பாரதி, சமுதாய மாற்றங்களுக்கெல்லாம் அன்பு உந்து சக்தியாக விளங்க வேண்டும் என்று கருதுகிறான். அன்பு, ஆற்றல்மிக்க கருவி என்பது பாரதியின் கருத்து. பாரதி, சாவைப்பற்றி எண்ணுகிறான். பயத்தோடு அல்ல!
"இந்த உலகில் வாழும் சில நாட்கள் அன்போடு வாழ்ந்துவிட்டுப் போகக் கூடாதா? பலகோடி இன்பங்கள் அமைந்த இந்த உலகில் வாழ்கிறோமே! இதற்கு, குடிக் கூலியாக-வாடகையாக அன்பைத் தரக்கூடாதா? பிறருக்கென முயலும் நோன்பு செய்யக் கூடாதா? என்றெல்லாம் கேட்கிறான்!
பாரதி, தனது கேள்விகளுக்கு விடையில்லாமல் போகவே, இந்த உலகத்தைக் கூர்ந்து நோக்குகிறான்! அடடா! மனித உயிருக்கு எத்தனை எத்தனை கஷ்டம்? கொலை, துரோகம்! ஐயகோ, எத்தனை அநியாயம்? ஐயோ, பாவம்!” என்று சொல்லிவிட்டு, மனிதர்களுக்கு வாழும் நெறிகள் சிலவற்றை அறிமுகப்படுத்துகிறான்.
"மனிதர்களே! நமக்குள் ஒரு கட்டுப்பாடு செய்து கொள்வோமே! அந்தக் கட்டுப்பாடு யாதெனில், ஒருவனுக்கு ஒருவன் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை, பயப்படுத்துவதும் இல்லை; பயப்படுவதும் இல்லை.
மனிதர்களே! இந்த விரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இதுவே, பிழைக்கும் வழி! வாழும் நாட்கள் சிலவே! இந்த நாட்கள் சிலவற்றுக்குள்ளும் கலகம் செய்து வாழ்வானேன்? இதனால் யாருக்கு என்ன பயன்?
மனம் விட்டுப் பேசுங்கள்! கலந்து பழகுங்கள்! பரஸ்பரம் நல்லெண்ணத்தை - நம்பிக்கையை பரிவர்த்தனை செய்து கொள்ளுங்கள்! அன்பு செய்யுங்கள்! அன்பைப் பெறுங்கள்! குற்றங்களைப் பார்க்காதீர்! குணங்களையே கண்டு பாராட்டுங்கள்! குற்றங்கள் தாமே மறையும்!
மனிதனுக்கு மனிதன் பகை என்பது மூடத்தனமானது. இயற்கை நியதிகளுக்கு முரணானது. மனித நாகரிகத்தின் மூலம், அன்பே! இன்பத்தின் வைப்பு. அன்பேயாம் என்கிறான்.
அன்பு! - மனித உலகத்தில் அன்பு எளிதாகத் தோன்றி விடாது. நிலத்தில் பயிர் எளிதில் வளருமா? அதுபோலத் தான்! அன்புக்குப் பகை அழுக்காறு-பொறாமை! பொறாமைக்கு களம் வளமை-வறுமை. இருவேறு நிலைக்களன்கள்!
வெறும் சோற்றுக்கே கூடப் பஞ்சம் நிலவுமாயின் அன்பு தோன்றுமா? ஒரு சிலர் உண்டு மகிழ்ந்திடலாம்! பலர், பசியால் வாடித் துன்புறுவதாக அமைந்துள்ள சமுதாயத்தில் அன்பு பயிலுதல்-அன்பு வளருதல் இயலாது. சோற்றுப் பஞ்சத்தை நீக்கி, இங்கு வாழும் மாந்தருக்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடுவதை முதல் இலட்சியமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று மானிடம், சுவர்-வேலி இவற்றுக்கிடையே சொத்துக்களை முடக்கி சிறை வைத்துள்ளது. செல்வர்கள், அன்பு கருதியும், அறம் கருதியும் ஏழைகளுக்கு வாழ்வளிக்க முன்வர வேண்டும். அப்படி அவர்கள் வரவில்லையெனில், "நிலத்தைச் சகலருக்கும் பொது என்று அறிவிக்கவேண்டும்” என்று பாரதி முடிவு செய்கிறான்! அது மட்டுமா? உடையவர்களுக்கு ஓர் அறிவுரையும் கூறுகிறான்.
“ஏழைகள் வருந்தினால் தனக்கென்ன என்று நினைப்பவர் மூடர். பலர் அசௌகரியப்படும் வகையில் சிலர் சௌகரியம் அடைதல் இந்த உலகத்தில் சாத்தியமில்லை" என்று பாரதி தெளிவு படுத்துகிறான்!
ஏழை - பணக்காரர்களுக்கிடையில் பரஸ்பரம் அருவருப்பும் அவமரியாதையும் வளர்ந்து பகை முற்றி வருகிறது. இதன் விளைவே காவல் முறை வளர்தல், பூட்டுக்களின் பெருக்கம்! சட்டங்கள் இயற்றப்படுதல், சிறைச் சாலைகள் அமைத்தல் முதலியன. இவையெல்லாம் துன்பத்தை மிகுதிப் படுத்துமே தவிர, தீர்வு சொல்லாது; தீர்வு செய்யாது.
ஆங்கிலக் கவிஞன் பைரன், மனிதர்களை "நாய்களே!” என்று அழைத்தான். பிறகு பைரன், தான் செய்த தவற்றைத் திருத்திக் கொள்கிறான். அதாவது, மனிதர்களை நோக்க நாய்கள் பரவாயில்லை. ஆதலால் மீண்டும் "மனிதர்களே!” என்று கூறுகிறான்.
மனித குலத்தைப் பற்றியுள்ள துன்பங்களுக்கெல்லாம் ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. அதுதான் அன்பு! அன்பே தீர்ப்பு! சகோதர உணர்ச்சியே தீர்ப்பு! ஆனால் சகோதர உணர்ச்சியைப்பற்றி எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்; முழங்குகிறார்கள்! பயன் என்ன?
அன்பு செய்தல் நடைமுறைக்கு வந்தாக வேண்டும். அன்பு செய்தல் ஒழுகலாறாக அமைதல் வேண்டும். இன்பம் வேண்டுமா? அன்பு வேண்டும். அன்பில்லா விடில் இன்பமில்லை.
அன்பை மறந்துவிட்டு, துறந்துவிட்டு சொத்து பணம், பதவி, அகந்தை, மரியாதை-இவைகளில் ஆசைப்பட்டு மூழ்கி அல்லற்பட்டு ஆற்றாது அழும் மாந்தர்களே! கேளுங்கள்! இவையெல்லாம் உங்களுக்கு வேண்டுமா? அடையலாம். அடைய முடியும்!
அதற்கு ஒரே ஒரு வழி! இவையெல்லாம் மற்றவர்களுக்கும் வேண்டும் என்று ஆசைப்படுங்கள். மற்றவர்கள் அடையத் துணை செய்யுங்கள்! வாழ்வித்து வாழ ஆசைப்படுங்கள்! மகிழ்வித்து மகிழ ஆசைப்படுங்கள்! நீங்கள் விரும்பியது எல்லாம் கிடைக்கும். ஐயமில்லை! இது சத்தியம்!
அன்புண்டானால் இன்பம் உண்டென்று புத்த பகவான் கூறினார். அன்பு, தத்துவம் அல்ல! கொள்கையல்ல! கோட்பாடல்ல! அன்பு, செயல்! அன்பு செயல் வழிப்பட்டது!
அன்பென்னும் தவம் வளர, உயிர்க் குலம் ஆண் - பெண் என்று இருபாலாகப் படைக்கப் பெற்று இயங்குகிறது. ஒன்றின்பால் பிறிதொன்றினுக்கு ஈர்ப்பு, கவர்ச்சி தேவை. எல்லாம் அமைவாகப் பொருந்திக் கிடக்கின்றன. ஆனால், மனிதன் இந்த இயற்கையோடு இசைந்த அன்பு வாழ்க்கையையும் கெடுத்துவிட்டான்! கெடுத்துக் கொண்டிருக்கிறான்.
மனிதன் வாழ்க்கையில் பங்கேற்றுத் தியாகங்கள் செய்யும் மகளிரை வாழ விடுகிறானா, என்ன? பாரதி, மகளிரின் உரிமை நலன்களுக்காக எழுதினான்; பேசினான்; போராடினான்!
ஏன்? ஒருபடி மேலே போய் விவேகானந்தர் சந்நியாசியாகப் போகாமல் இல்லற வாழ்க்கையை ஏற்றிருப்பாரானால் மனித குலத்தைப் பற்றியிருந்த கலி வேரோடும், வேரடி மண்ணோடும், கல்லி எரியப்பட்டிருக்கும் என்பது பாரதியின் நம்பிக்கை.
"தவத்தாலும், பரிபூர்ணத் துறவாலும் ஏற்படும் அசையாத மனோ தைரியத்தையும் எல்லையற்ற அன்பையும் எல்லா உயிர்களிடத்தும் ஆன்ம புத்தியையும் வைத்துக் கொண்டு இல்வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே இந்து மதத்தின் முடிவான தீர்மானம்”- என்று பாரதி எழுதுவதுடன், தனது வாதத்துக்கு அரணாக சந்நியாசிகளின் பரமநாதனாகிய சிவன், பார்வதியை இடப் பாகத்தில் கொண்டருளியதையும் தவமுனிவர் வசிஷ்டர் அருந்ததியுடன் கூடி வாழ்ந்த வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுகிறான்.
துறவை, "விலங்கு" என்று பாரதி வர்ணிக்கிறான். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று கவிதையில் அறைகூவல் விடுத்த பாரதி, உரைநடையில், மகளிருக்கு எதிரான சமூகத்தை நையப்புடைக்கிறான்.
நமது மகளிருக்கு கல்வி போதிக்க வேண்டும், என்று வலியுறுத்துகிறான். அதுமட்டுமா? வருங்கால மேதைகளை உருவாக்கும் தகுதி மகளிருக்கே உண்டு என்பது பாரதியின் கருத்து; நம்பிக்கை!
நாட்டில் நல்லன நடக்க வேண்டுமா? பெரிய காரியங்கள் நடக்க வேண்டுமா? எடுக்கும் காரியங்கள் யாவும் கை கூடிவர வேண்டுமா? மகளிரின் மனோ நிலை வளர்ந்து அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் ஒன்றும் நடவாது; வெற்றியும் கிடைக்காது.
பாரதி, நிவேதிதா தேவி கூறியதாக எடுத்துக் காட்டி எழுதுவது, "ஐயோ, மாதர்களை இருட்டிலே தள்ளிவிட்டு அவர்கள் அறியாமல் நீங்கள் மேலான நிலைமைக்கு வந்துவிட முயல்வது வீண் முயற்சி! அது ஒருபோதும் நடக்க மாட்டாது" என்று நிவேதிதா தேவி கூறியபடி தேசாபிமானிகள் ஒழுகினால் நாட்டுக்கு நல்லது ஏற்படும்” என்று எழுதுகிறான்.
இந்தியா ஆழ்ந்த உறக்கத்தில் கிடப்பதற்கு மிகுதியும் காரணம் விதி வாதமே! பாரதி, விதி கொள்கைக்கு உடன்பட்டான்; ஆயினும்; நடைமுறை வாழ்க்கையில் மாறுபடுகிறான்.
விதி, விதி என்று சும்மா கை கட்டி கீழ்நிலையில் வாழ்வாரைக் கடுமையாய் கண்டிக்கிறான்.
"விதி என்பது உண்டு. ஆனால், கடவுளால் எனக்கு அருளப்பெற்ற சுய இச்சை விதி வாதத்தை மறுக்கவில்லை" என்பது பாரதியின் கொள்கை.
தனது இச்சை, சுயேச்சையானது. அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்பது பாரதியின் கோட்பாடு, பாரதி, விதியை விவேகத்தால் மாற்றலாம் என்றே நம்புகிறான்; நம்மையும் நம்பச் சொல்லி முயற்சி மேற்கொள்கிறான்.
மானிடம் சிறப்புடன் வாழ, விவேகத்துடன் வாழ்ந்து வெற்றிகளைப் பெற்று குவித்திட கல்வி தேவை. பாரதி, இன்றையக் கல்விமுறை இளைஞர்களைக் கிழவர்களாக்கும் கல்வி முறை என்று சாடுகிறான்! அதுமட்டுமா? இன்றையக் கல்வியை எண்ணி அவமானப்படுகிறான்.
பாரதி, வாழ்ந்த காலத்தில் இருந்த கல்விமுறை, நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் ஒன்றும் மாறிவிடவில்லை.
இன்றைய கல்விமுறையில் இளைஞர்கள் ஆளுமையையும் படைப்பாற்றலையும் பெறுதற்குரிய கூறுகள் இல்லை! ஏன்? இன்றைய இளைஞர்கள் ஆபத்துக்களையும் பொறுப்புக்களையும் ஏற்க அஞ்சுகின்றனர். எல்லாம் நல்லவிதமாக, சுகம் தரக்கூடியதாக அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இன்றைய இளைஞர்கள் கடின உழைப்பைப் பற்றி கனவிலும்கூட எண்ணுவதில்லை. ஏன் தாய் மொழியாகிய தமிழில் கூட இன்றைய இளைஞர்களுக்கு விருப்பம் இல்லை.
வீட்டு மொழியை கற்பதை விட்டுவிட்டு வேறு வேறு மொழிகளையெல்லாம் கற்கும் இழிநிலையை எண்ணி எண்ணிப் பொருமுகிறான் பாரதி.
தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்த வரலாற்றின் சிறப்புக்களையும் அந்த சிறப்புக்கு காரணமாக இருந்த பெரியோர்களின் வரலாறுகளையும் ஞானிகள், மகான்களைப் பற்றியும் கல்வி நிலையங்களில் போதிக்க வேண்டும்.
இன்றைய கல்வியில், பகுத்தறிவு என்ற பெயரில் தாயுமானார் அருளிச் செய்த கவிதைகளை நமது கல்லூரி மாணவர்கள் கற்கும் வாய்ப்புப் பெறவில்லையே என்று கவலைப்படுகிறான் பாரதி!
அதுமட்டுமல்ல, ஒரு தவறான-பைத்தியக்காரத்தரமான கருத்தும் இளைஞர்களிடம் பரப்பப்படுகிறது. அதாவது, யாக்ஞவல்யர், சங்கரர் முதலிய அவதார புருஷர்களைப் பற்றியும் அர்ஜூனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மகாவீரர்களைப் பற்றியும் இன்றைய இளைஞர்கள் கேள்விப்பட்டது கூட இல்லை!
ஒரோ வழி கேள்விப்பட்டாலும் அவர்கள் நவீன காலத்து, புதுமைகளைப் பற்றி அறியாதவர்கள் என்று கருதி அலட்சியப்படுத்துகிறார்கள். பழங்காலத்துப் பெரியவர்கள் அந்தக் காலத்தில் கண்ட கடுமையான செய்திகளின் அடிப்படையில்தான் பின்னைப் புதுமைகள் தோன்றி வளர்ந்து வருகின்றன என்பதை மறுத்தல் இயலாது.
பாரதி, பாரத ஜாதியினர் ஆண்மையுடன் விளங்க வேண்டும் என வற்புறுத்துகிறான். புதிய ஆத்திசூடியில் "அச்சம் தவிர்" என்றும் "ஆண்மை தவறேல்” என்றும் அருளியுள்ள உபதேசங்கள் என்றைக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்துவன.
அச்சம் நீங்கினாலே ஆண்மை விளங்கும். பயம், மிகப் பெரிய தீமை. உலக மாந்தரைப் பயத்திலிருந்து மீட்பதே முதற்கடமை. நமது நாடு புகழ்பூத்து விளங்கிய காலம் ஒன்று இருந்தது. இந்திய நாடு அடிக்கடி ஏறபட்ட அந்நியர்களின் படையெடுப்புகளோடு போராடி, போராடிக் களைப் படைந்து விட்டது.
அதுமட்டுமா? கல்வி, கலை முதலிய சாஸ்திரங்களை இழந்து நாளுக்கு நாள் பின்னடைவு பெற்று வருகிறது. மேலும், நமது மக்களிடத்தில் வீரியமும் தைரியமும் தர்ம குணமும் பிரம்ம ஞானமும் போய், அவர்கள் பொறாமை, வயிற்றெரிச்சல் முதலிய அற்ப குணங்களுக்கு இரையாகி இழிநிலையை அடைந்து விட்டனர்.
எழுமின் எழுமின் ஆட்டு மந்தையில் பழகிய சிம்மமாகி விடாதீர்கள்!” இது பாரத மக்களுக்கு பாரதியின் வேண்டுகோள்!
நமது நாட்டுக்குப் பயமற்றவர்கள் தேவை, அறிவாளிகள் தேவை; பலசாலிகள் தேவை என்று பாரதி உணர்கிறான்; உணர்த்துகிறான்! இளைஞர்கள் வலிமை பெற சிலம்பு, கஸ்ரத், கர்லா முதலியன- பாடசாலை அமைத்து, கற்றுக் கொடுக்கும்படி கிராம சபையினரை வேண்டி கேட்டுக் கொள்கிறான்.
அதற்கு கைமாறாக ஓர் ஆண்டுக்குப் பத்திரிகை இலவசமாக அனுப்புவதாகவும் எழுதுகிறான். கேடுகளுக்கெல்லாம் காரணமான பயத்திலிருந்து விடுதலை பெற்று வலிவும் பொலிவும் பெற்று விளங்கும்படி இளைஞர்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
சரீர வாதனை, இழப்பு, பசி, துன்பம் முதலியன பற்றி, கவலைப்படாமல் துணிவுடன் வாழ்க்கை நடத்தும் பயிற்சியும் முயற்சியும் இளைஞர்களுக்குத் தேவை என்பது பாரதியின் கருத்து. இந்தக் கருத்தினைப் பல நடைமுறை உதாரணங்களுடன் விளங்குகிறான்.
"மனத் துணிவற்ற சாதியினர் மண் சுமக்கக் கூட, தகுதியாக மாட்டார்கள்” என்பது பாரதியின் வாக்கு. சோதனைகளும் துன்பங்களும் துயரங்களும் மனிதனை வளர்ப்பனவேயாம்! நிலத்தில் அடிக்கப்படும் பந்து எழுவதைப் போல மனிதன் எழுந்து அயர்வில்லாமல் உழைத்தால் உயரலாம். இது உறுதி: இதுவே பாரதியின் தடம் !
பாரத தேச மக்கள் வீரியத்துடன் வளர வேண்டும்; வாழ வேண்டும். இது பாரதியின் ஆசை. பாரதி, பழைய வீரர்களின் பட்டியலைத் தருகிறான். அஃது ஒரு நீண்ட பட்டியல், அர்ஜுனன், இராமன், இராவணன், காந்திஜி பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பாரதி, வீரத்துக்குத் தரும் விளக்கம் என்ன? எடுத்த காரியத்தை இடையீடுகளையும் இடர்ப்பாடுகளையும் கடந்து முடிப்பது வீரத்தின் இலக்கணம். இது பாரதியின் கருத்து.
பாரதி காலத்தில் இந்த இலக்கணத்திற்கு பொருந்தியவர்கள் பலர் வாழ்ந்தனர். அதனாலேயே நாடு விடுதலை பெற முடிந்தது. இன்று நாட்டில் இத்தகைய வீரர்கள் வாழ்கிறார்களா?
இடரே இல்லை; உயிரைத் தரவேண்டியது இல்லை. முறையாக வேலை செய்தாலே போதும். அதையே செய்யாமல் சோம்பலில் திளைத்துச் சிறு சிறு சுகங்களில் நாட்டங்கொண்டு அற்பத்தனமான ஆதாயங்களை எண்ணி கடமையைச் செய்யாமல் புறக்கணித்துப் பொழுது போக்குகிறவர்கள் ஏராளம்! ஏராளம்!
வீரர்களை ஞான வீரர், கர்ம வீரர் என்று பிரிக்கிறான் பாரதி. வசிஷ்டர், புத்தர், கிறிஸ்து ஞான வீரர்கள், சிவாஜி, நெப்போலியன், காந்திஜி கர்ம வீரர்கள்.
சிவாஜிக்குப் பிறகு, நமது நாட்டில் வீரர்கள் தோன்றவில்லை என்று பாரதி வருந்துகிறான். ஆனந்தரங்கம் பிள்ளை போன்ற நிர்வாகிகள், துணைவர்கள் கூட கிடைப்பதில்லை என்று வருந்துகிறான். ஆனந்தரங்கம் பிள்ளை, பிரான்சு நாட்டுத் தலைவன் டூப்ளேக்கு, விளக்கு போலவும் ஊன்றுகோல் போலவும் விளங்கினார்.
பாரதி, துறவைப் பல இடங்களில் கண்டிக்கிறான். துறவு வாழ்க்கையை மறுதலிக்கிறான். ஏன்? வாழ்க்கையை மாயை என்று கூறுவதையும் பாரதி மறுக்கிறான். ஆன்மாவின் வாழ்க்கை நிலையானது; சாசுவதமானது என்று பாரதி போதிக்கிறான்.
நமது பாரத நாட்டில் சில நூற்றாண்டு காலமாகவே துறவைப்பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள். கண்டவன் எல்லாம் ஞானம் பற்றிப் பேசுகிறான். வயிற்றுப் பிழைப்புக்காக-சில காசுகளுக்காக உடலையும் ஆவியையும் விற்கத் துணிபவன் கூட ஞானம் பேசுகிறான்.
வாழ்க்கை மாயை என்கிறான். "எல்லாம் மாயை, இவ்வுலகமே பொய், கூடிணத்தில் அழிவது இல்வாழ்க்கை” என்று தனக்குத் தெரியாதவைகளைக் கூட கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பக் கூறுகிறான்.
இந்த பொய்யைப் பாரதி நம்ப மறுக்கிறான்; ஏற்க மறுக்கிறான். வாழ்தலைப் பற்றிய வேட்கையைத் துரண்டி வளர்க்க முயற்சி செய்கிறான். இந்த உலகம் நிலையானது என்று நம்பி வாழ்ந்து இந்த மண்ணையே சொர்க்கமாக்க, பாரதி நம்மை அழைக்கிறான்.
இந்த உலகம் நிலையானது. இங்கு பாங்குற வாழ்தலே சிறப்பு. செத்த பிறகு சிவலோகம் யாருக்கு வேண்டும்? இங்கு அமரர் சுகம் வேண்டும்! இது பாரதியின் ஆசை.
பாரதி, திருவள்ளுவரைப் பின்பற்றிச் "செய்க பொருளை" என்று நெறிப்படுத்துகிறான். நாடு நலம் பெற நல்ல கல்விச் சாலைகள் தேவை; தொழிற் சாலைகள் தேவை.
நிதி முட்டுப்பாடு இருப்பின் இடத்துக்கு இடம் தட்டுப்பாடுண்டாகும். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் முட்டுப்பாடுண்டாகும். செல்வம் உணவைப் போன்றது என்று கூறி ஒரு புதிய கொள்கையை உருவாக்கினான்.
அதாவது உண்ட உணவு செரிமானம் ஆவதைப் போல் ஈட்டிய செல்வமும் செலவழிக்கப் பெறுதல் வேண்டும். பணம் காத்த பூதமாகிவிடக் கூடாது.
நமது நாட்டில் செல்வர்கள் அதிகமில்லை. ஊருக்கு ஒருவர் இருந்தால் பெரிய காரியம். ஆயினும், அதைரியப்படக் கூடாது. பொருள் செய்யும் முயற்சியைத் தொடங்கிவிட்டால் வளரும். பெருகி வளரும். இது பாரதியின் நம்பிக்கை.
இந்த முயற்சியில் பாரதி, மாடாதிபதிகளையும் சம்பந்தப்படுத்துகிறான். மடாதிபதிகள் தங்களுடைய சிஷ்யர்களுக்கு ஆத்ம விசாரத்தில் பக்தி ஏற்படும்படி செய்ய வேண்டும்.
ஆத்ம விசாரத்திற்கு இரண்டு சத்ருக்கள் உண்டு. ஒன்று செல்வப் பெருக்கினால் உண்டாவது. அதாவது இந்திரிய போகம், சுகம். மற்றொன்று வறுமை. இவ்விரண்டுமே இல்லாமல் சமரச நிலைக்கு மக்கள் வந்தால் ஆத்ம ஞானத்தை ஏற்பார்கள்.
இந்நிலைக்கு ஜனங்களைக் கொண்டு வருவது மடாதிபதிகளின் கடமை. ஒவ்வொரு மடாதிபதியும் இக்கடமையை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
நமது நாட்டில் கொடிய தரித்திரத்தால் வருந்துகிறவர்கள் ஏராளம்! ஏழைகளுக்கு எவ்வாறு உதவி செய்வது? வறுமையிலிருந்தும் பயத்திலிருந்தும் எப்படி மீட்பது?
மடாதிபதிகள் அன்னதானம் செய்வதனால் வறுமை நீங்கிவிடாது. தரித்திரம் நிலையான ஏற்பாடுகளாலேயே அகலும். நிலையான ஏற்பாடு என்ன? ஒரே ஒரு வழிதான் உண்டு. ஜனங்களிடம் தொழில் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும்.
குருடனுக்குக் கோல் பிடித்து விடுவது என்றால் ஆயுட் காலம் முழுவதும் செய்ய வேண்டும். அதற்குப் பதிலாகக் கண்ணைத் திறந்துவிடுதல் மேலான உதவி. இதையே வேறு மொழியில் "நாள்தோறும் மீன் தருதலைவிட மீனைப் பிடிக்கக் கற்றுத் தருவதே மேல்” என்று கூறுவர்.
"மடாதிபதிகள் மடத்தின் மூலதனத்தில் ஒரு பகுதியைக் கொண்டும், பாதகாணிக்கையைக் கொண்டும் முதல் சேர்த்துத் தொழிற்சாலைகள் ஏற்படுத்தலாம். இதனால் மக்கள் பயனுறுவர். மடங்களின் நிதியும் அபிவிருத்தி அடையும். தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள கப்பற் சங்கத்திற்கு மடாதிபதிகள் பொருளுதவி செய்யலாகாதா? என்று கேட்கிறான் பாரதி.
மேலும் "அன்னதானம் சுவர்ணதானத்தில் செலவேயல்லாது வரவு இல்லை. தொழில்களில், வர்த்தகத்தில் முதலீடு செய்தால் வரவும் உண்டு. தரித்திரமும் ஜனங்களை விட்டு நீங்கும்.
கொடிய வறுமை நீங்கின பொழுதே ஜனங்கள் ஆத்ம ஞானத்தில் நாட்டம் கொள்வார்கள். இந்தப் புண்ணியத்தை அந்த மடாதிபதியான ஞான சிரேஷ்டர் கட்டிக் கொள்வாரோ?" என்று பாரதி அன்று கேட்டான்.ய இது நடைபெற வேண்டும்.
பாரதி, தமிழ் ஆர்வலன், பாரதி, ஆங்கிலக் கல்வியை எதிர்த்தவன். தமிழ் வழிக் கல்வியை ஆதரித்தவன், பாரதி, "சக்திதாசன்" என்ற புனைப் பெயரில் சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர் சொன்னதாகச் சில செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளான்.
அவற்றுள் முதன்மையானது. "தமிழ் நாட்டார் எப்போதும் தமிழே பேசவும், எழுதவும் வேண்டும். கற்கும் கலைகள் எல்லாம் தமிழ் வழியிலேயே கற்க வேண்டும்" என்பதாகும்.
பாரதி, தாம் எழுதிய ‘பாஞ்சாலி சபத’த்தைத் தமது எழுத்துக்கள் மூலமே அறிமுகப்படுத்துகிறான்.
பாரதி, "பொன் வால் நரி" என்றொரு கட்டுக் கதையை ஆங்கிலத்தில் எழுதினான். இதற்கு நிறையப் பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால், இந்தப் பாராட்டில் பாரதி மகிழவில்லை. ஏன்?
"தமிழில் - சொந்த மொழியில், சொந்த மூளையைக் கசக்கிப் பிழிந்து ‘பாஞ்சாலி சபதம்’ என்ற புத்தகம் எழுதி இருக்கிறேன். அது நன்றாக இருக்கிறது என்று ஒருவனும் ஒரு கடிதமும் எனக்கு எழுதவில்லை” என்கிறான்.
தாய் மொழி தமிழில் எழுதிய நூல்களைத் தமிழ் நாட்டார் படித்துப் போற்றவில்லை என்று பாரதி மனம் நொந்தான் வருந்தினான். இன்று வரையிலும் கூட இது நீடிக்கிறது.
பாரதி, கடவுள் நம்பிக்கை உடையவன். மதங்களில் நம்பிக்கை உடையவன். ஆயினும், பாரதி, இத்துறையில் தீவிரமாகச் சிந்தித்தான்; மாற்றங்களைக் காண விரும்பினான்.
பாரதி, கடவுள் வழிபாட்டுக் கொள்கையில் விவேகானந்தரை அப்படியே ஆதரிக்கிறான். விவேகானந்தர் "விடுதலையே என் மதம்” என்று கூறியவர். அவர் எழுதிய கடிதம் ஒன்றை எடுத்துத் தருகிறான்.
"முத்தி அல்லது விடுதலையே என் மதம்! இதை கட்டுப்படுத்த முயல்வது யாதாயினும் அதனை நான் போர் செய்தேனும், புறங்கொடுத்து ஓடியேனும் அகற்றி விடுவேன்.
என் வேலை முடிந்து போய்விட்டது என்ற உணர்ச்சி உண்டாகிறது. மிஞ்சிவந்தால் நான் இன்னும் மூன்று அல்லது நான்கு வருஷந்தான் உயிரோடிருப்பேன். அதற்கப்பால் என்ன நேரும் என்பதை நான் பொருட்டாக்கவில்லை.
எனினும் நான் மீட்டும் மீட்டும் ஜன்மமெடுத்து ஆயிரக்கணக்கான துன்பங்களில் உழன்றேனும் என் ஒரே கடவுள், ஒரே உண்மைக் கடவுள், நான் நம்புகிற தனித்தெய்வம்-அதாவது எல்லா ஜீவர்களின் தொகுதி, என் கடவுளாகிய தீயோர், என் கடவுளாகிய எல்லாச் சாதிகளிலும், எல்லா இனங்களிலும் என் கடவுளாகிய ஏழைகள்-இக் கடவுளை நான் தொழுதற்குரிய பேறு பெறுவேனாக!"
"இவர்களே என் இஷ்ட தெய்வம்! ஆ! மூடர்களே! உயிருடைய கடவுளையும் உலகம் எங்கும் நிரப்பிக் கிடக்கும் அவனுடைய பிரதி பிம்பங்களையும் புறக்கணித்து விட்டு கற்பனையாகிய நிழல்களைத் தேடி, ஓடி ஒருவருக்கொருவர் சண்டையும் சச்சரவும் நடத்துவதென்ன! கண்ணுக்குப் புலப்படும் கடவுளைத் தொழுங்கள்! மற்ற சிலைகளையெல்லாம் உடைத்தெறிந்து விடுங்கள்!-இது விவேகானந்தரின் கடித வாசகம்.
இந்த கருத்தை அப்படியே பாரதி ஏற்று கொண்டான்! விவேகானந்தர் கண்டு, பாரதி வழி மொழிந்த இந்த உயிர்க்குல வழிபாட்டில் நமது நாட்டின் வளர்ச்சி என்று வந்து பொருந்தும்?
பாரதி - பிரகலாதன் வரலாற்றைக் கருவியாகக் கொண்டு நம்மனோரிடம் நம்பிக்கையை வளர்க்க முற்படுகிறான். ஒருவர் ஒரு பணியில் வெற்றி பெற வேண்டுமாயின் அதற்கேற்ற அளவுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். பாரதி, பக்தியையும் நம்பிக்கையையும் "நோன்பு" என்ற பொருளிலேயே காண்கிறான்.
பாரதி, ஞானிகளைப் போற்றுகிறான். நாட்டின் நலங்காக்க ஞானிகள் தேவை என்பதையும் உணர்கிறான்., சுதந்திரப் போராட்டத்தில் கணக்கற்ற சந்நியாசிகள், ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.
பாரதி, சுப்பிரமணிய சிவாவின் தியாகத்தைப் போற்றுகிறான். "சந்நியாசிகள், ஞானிகள் லௌகீக முயற்சியில் பிரவேசித்து விபத்துக்குள்ளாவதன் முகாந்திரம் என்ன என்று பலர் ஆச்சரியமடைகின்றனர். அப்படி வியப்படைபவர்கள் கிருஷ்ணபகவான், வேதவியாசர், இராமதாஸ் முதலியவர்களின் சேவைகளைக் கவனிக்க வேண்டும்.
ஞானி, தனது சொந்த நலனைக் கருதி உழைக்கக் கூடாதே ஒழிய, உலக தர்மங்களை முற்றிலும் விட்டு விட வேண்டும் என்பது சாத்திரக் கருத்தன்று.
தன்மட்டில் யாதொரு பயனையும் கருதாமல் ஈசனுக்கும், ஈசுவர வடிவமாகிய மனித சமூகத்திற்கும் தனது செயல்களின் பலன்களை ஸமர்ப்பணம் செய்து விட்டு, தான் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே சித்தாந்தம்”-என்று எழுதுகிறான் பாரதி.
இத்தகைய சந்நியாசிகள், ஞானிகள் போற்றத்தக்கவர்கள். இவர்களால் நாட்டின் வரலாறு நனி சிறக்கும். பாரதி ஆண்மை, வீரயம், போராட்டம், யுகப்புரட்சி என்றெல்லாம் எழுதினாலும் மௌனத்தையும் வரவேற்கிறான். ஆனால் பாரதி வரவேற்கும் மௌனம், வலிமை சார்ந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஊக்கம் இல்லாதவர்களே சப்தம் போடுவார்கள்; இரைச்சல் செய்வார்கள். ஆழமில்லாத கடற் பகுதியே அலைகளால் ஆர்ப்பரிக்கும். ஆழ்கடல் மோனத் தவம் செய்து முத்தைக் கொழிக்கும்.
நல்ல முன்னேற்றம் நிறைந்த வாழ்க்கைக்குத் தங்களைத் தாங்களே ஆராய்ந்து நிறை - குறை கண்டு, திருத்தங்கள் காண்பது அவசியம். ஆனால், ஒருவழிப்படாத அசுத்தமான மனமுடையவர்கள் தமக்குத் தாமே விமர்சனம் செய்து கொள்ள ஒருப்படுவதில்லை.
மற்றவர்களுடைய விமர்சனத்தையும் ஏற்க மாட்டார்கள். மாறாக எரிச்சல் கொள்வார்கள். இத்தகையோர் சுகபோகங்களையே விரும்பி அலைபவர்கள். நல்ல நியதிகளுக்கு கட்டுப்பட்ட தூய மனமுடையவர்கள் தாங்கள் தங்களுடைய மனத்தை எதிரெதிராய் பார்த்துப் பக்குவப்படுத்தி அந்த மனத்தை ஞானத்திற்கு அடிப்படையாக்கி நல்ல காரியங்களில் ஈடுபடுத்துகிறார்கள். விவேகியானவன் தன் சத்துருக்கள் தன்னை வைது திட்டினாலும் மௌனமாகவே இருப்பான். வாயினால் மட்டும் அல்ல. மனத்தினாலும் மௌனமே சாதிப்பான். ஏன்? அவரவர்களுடைய உணர்ச்சிகளுக்கு ஏற்ப, குணங்களும் செயற்பாடுகளும் அமையும், வருந்தி என்ன பயன்?
இதற்கு எடுத்துக்காட்டாக வால்ட் விட்மன் தனது கவிதைகளை இகழ்ந்தவர்களைப் பற்றி, "அவர்களுடைய சுபாவத்திற்கு அதுதான் சரி” என்று சொன்னதை மேற்கோள் காட்டுகிறான் பாரதி.
ஞானியானவன் தன் கருத்தை, சரி என்றும், அதை உலகத்தவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் சண்டை போட மாட்டான். வாக்குவர்தம், சண்டை, மனஸ்தாபம் இவைகளை உண்டுபண்ணும் சுபாவம் தன் சத்துருக்களோடு மட்டுமல்ல, சிநேகிதர்களையும் சத்துருக்களாகச் செய்து வருகிறது.
விவேகியோ தான் அன்போடு காட்டிய மௌனத்தால், சிநேகிதர்களின் வாத்சல்யத்தைப் பலப்படுத்துகிறதோடு விரோதிகளையும் சிநேகிதர்களாக்கிக் கொள்கிறான்.
இத்துறையில் வெற்றி பெற்று விளங்கியவர் சீன நாட்டுத் தத்துவ ஞானி கன்பூக்ஷியஸ். நமது நாட்டில் புத்தபகவான். ஏன்? ஏசுவின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு. அன்பும் ஞானமும் கூடிப் பிறந்த மௌனம் இம்மையிலும் வெற்றிகளைத் தரும். இன்ப அன்பு கலந்த அமைதியையும் தரும்.
பாரதி, பக்தி நெறியில் நம்பிக்கை உடையவன். ஒருவனுக்கு மெய் பக்தி உதயமானதும் அவன் எவருக்கும் எளியவனாய் எவற்றையும் நேசிக்கிறான்.
ஆகவே, அவன் எவருக்கும் அன்பு, தியாகம் அடிப்படையில் அடிமையாகிறான். அவன் எந்த உயிருக்கும் தொண்டு செய்தலை ஆர்வ விருப்புடன் செய்வான். தனக்கெனச் சிறிதும் பெருமை தேடாது எவருக்கும் பெருமை உண்டுபண்ணுகிறவன் எவனோ, அவனே, எல்லோரும் ஏத்திப் புகழும் ஈசுவரன், பெயருக்குத் தகுதியானவன்.
விருக்ஷம் தனது சுபாவத்தைக் காட்டியே வளருகிறது. நாம் எப்படி நடத்திய போதிலும் அது கவனிக்கிறதும் இல்லை; கவலைப்படுவதும் இல்லை. கிளைகளை வெட்டினாலும் கிளைத்து வளர்ந்து நமக்கு நிழல் கொடுக்கும் சுபாவத்தை விடுகிறதில்லை. இதுவே, பக்தியின் இலக்கணம்.
இந்த மாதிரிப் பக்தியின் வளர்ச்சி நாட்டுக்கு நல்லது. இன்று பக்தி, யாத்திரைகளாகவும் திருவிழாக்களாகவும் தண்ணீர் தெளிக்கும் விழக்களாகவுமே (கும்பாபிஷேகம்) அமைந்து வருகின்றன. பாரதியின் தடத்தில் பக்தி நெறி வளர்ந்தால் பாரதம் சிறக்கும்.
நம்முடைய தேசமானது இன்று பல அல்லல்களுக்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் நாம் வாளா இருக்கலாமா? "கிராமத்திற்குக் கஷ்டம் வந்தால் குலத்தையும் விட்டுவிடு" என்று சொல்லியிருக்கவில்லையா?
நமது பாரத ஜாதிக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரு பிரிவு! இது நீதியா? இந்தத் தாழ்த்தப்பட்டவர்களை நாமே நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டாமா? தாழ்ந்த எரு, குப்பைகளைத் தள்ளிவிட்டால் நல்ல புஷ்பங்களும் பயிர்களும் விளையுமா? கரியைத் தள்ளி விட்டால் நெருப்பு உண்டாகுமா?
ஆதலால், பெற்றோர்களே, பாரதியின் தடத்தில் உங்கள் பிள்ளைகள் யாவரையும் தேசத்திற்கு நன்மை செய்ய அனுப்புங்கள்!
பாரதி, காலத்தை உருவாக்கிய கவிஞன்! பாரதி ஒரு சகாப்தம்! பாரதியின் சிந்தனைகள் உரைநடையில் சிறந்து விளங்குகின்றன. பாரதி, ஒன்றுபட்ட இந்தியாவை - பிரிக்கப்படாத இந்தியாவை தரிசனம் செய்கிறான்! நம்மையும் தரிசனம் செய்யுமாறு செய்கிறான்.
பாரதத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒரு ஜாதி! அதுதான் பாரத ஜாதி என்று கூறுகிறான். பாரதம் ஒரு பழைய நாடு! பாரத நாட்டில் ஒரு நவீன உணர்ச்சி வளர்ந்து வருவதை பாரதி உணர்ந்து வரவேற்கிறான். தேச பக்தியின் அவசியத்தை உணர்த்துகிறான். பாரதி, இந்து சம்பிர தாயத்தை நம்பி வரவேற்கிறான். ஆனால் சமத்துவத்திற்கும் - சமரசத்திற்கும் உடன்படாதவையை மறுக்கிறான்.
பாரதியின் பேச்சும் மூச்சும் சமத்துவம், சமரசம் ஆகிய கொள்கைகளாகும். சமத்துவம், சமரசம் பாரதியின் தடம்! பாரதி தடத்தில் நாம் அனைவரும் செல்ல வேண்டும்!
பாரதியின் தடம் அன்பு, அறம், ஆண்மை, வீர்யம், சமத்துவம்! இந்தத் தடத்தில் அடிமாறாது நாம் சென்றால் நாடு வளரும்!