உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/ஞானப்பனுவல்

விக்கிமூலம் இலிருந்து
5
ஞானப்பனுவல்

தமிழில் தோன்றியுள்ள திருவாசகம் போல் உயிர்த் துடிப்புள்ள ஒரு நூல் உலகில் வேறு எம்மொழியிலும் தோன்றியதில்லை. உயிர்த் துடிப்புக்கு வார்த்தை கொடுத்த ஒரு நூல் உண்டென்றால் அது திருவாசகம்தான். மனிதனின் உள் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அவனைத் திருவருள் இன்பத்திற்கு அழைத்துச் செல்லுகிறது அது. திருவருளிடத்து நம்மை அழைத்துச் செல்வதனாலேயே அதற்குத் திருவாசகம் என்று பெயர் ஏற்பட்டிருக்குமோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்லும் பாதையை நாம் கோயம்புத்தூர்ச் சாலை என்று குறிப்பிடுவது போல! உறுதிப்பாடு நிறைந்த உள்ளத்தில் எழுந்த ஒப்பற்ற ஞானப் பனுவல் திருவாசகம்.

தேன், வசதியும் வாய்ப்பும் உடையவர்கள் வீட்டில் உணவாகவும், சாதாரண மக்கள் வாழ்வில் மருந்தாகவும் பயன்படும் ஓர் அற்புதப் பொருள். அதிலும், ஒரு பூத்தேன் எத்துணை உயர்ந்தது! எவ்வளவு சிறந்தது என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும். மாணிக்கவாசகர் ஒரு தேனீ போல, சிவபெருமானின் ‘திருவடி மலர்’ தவிர வேறு எம்மலரினும் உட்காராத-நுகராத-தேன் சேகரிக்காத ஓர் அதிசயத் தேனீ, இப்படிச் சிவபெருமானின் ‘திருவடி மலரையே’ நாடிச் சென்றது. இன்பத்தை - இறவாத இன்பத்தை நுகரத்தானே தவிர வெறும் பெருமையோ சிறப்போ கருதியன்று. அத் திருவடி மலரில் அவர் பெற்ற அனுபவத்தின் எச்சமே திருவாசகம். இவ்வாறு எச்சமும் மிச்சமுமான திருவாசகமே இத்துணை இனிமை பயக்கிறது என்றால், முழு இன்பத்தையும் பெற்ற மாணிக்கவாசகரின் அனுபவம் முழுவதையுமே நாம் பெற்றால் எவ்வளவு இன்பமாக இருக்கும்!

நாடு திசைமாறிப் போய்க் கொண்டிருந்த நிலையில், மக்களை அவர்களின் முயற்சியின் வழியாகவே திருவருள் இன்பத்தையடையச் செய்யும் பணியில் ஈடுபட்டார் மாணிக்கவாசகர். பருவத்திற்கும் தொழிலுக்கும் ஏற்ப அவர்களை அவர்கள் தம் வழியிலேயே செலுத்தி இறையருள் இன்பத்தை எய்துவிக்க அம்மானை, பொற் சுண்ணம், ஊசல் முதலிய பல்வேறு பாக்கள் பாடினார். மக்கள் மீதுள்ள கருணைப் பெருக்காலேயே அவர் இவ்வாறு செய்திருப்பார் என்று கருதுவதும் தவறாகாது.

“சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?” என்கிறார் மாணிக்கவாசகர். இன்று, போட்டி போட்டுக் கொண்டு புற அழகைப் பெருக்குதற்கான ஆர்வமும் சாதனைகளும் அளவு கடந்து பெருகியுள்ளன. புற அழகு மட்டும் போதாது-அக அழகும் வேண்டும் என்று வலியுறுத்தினார் மாணிக்கவாசகர்.

பால் பானையை உட்புறத்தே கழுவாமல் வெளியே மட்டும் தேய்த்துக் கழுவிவிட்டுப் பாலை ஊற்றிக் காய்ச்சினால் அந்தப் பால் எப்படியிருக்குமோ அப்படித் தான் இருப்பார்கள் சித்தம் அழகில்லாதவர்கள். பசுவை உடல் முழுதும் நன்றாகத் தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டி விட்டுப் பால் கறக்கும் மடியை மட்டும் கழுவாமல் விட்டு விட்டால் அந்தப் பால் எப்படி இருக்குமே அப்படித்தான் இருப்பார்கள் சித்தம் அழகில்லாதவர்கள்.

மனித வாழ்வின் ஊற்றுக்கண் சித்தம். சிந்தனை, எண்ணம், செயற்பாடு அனைத்தும் சித்தத்திலிருந்தே பிறக்கின்றன. சித்தம் அழகில்லையானால் நல்ல சிந்தனை தோன்றாது - நல்ல எண்ணங்கள் தோன்ற மாட்டா - நல்ல எண்ணங்கள் இல்லையானால் நல்ல செயற்பாடு தோன்றாது.

இரத்தம் கெட்டால் நோய் ஏற்படுவது போல, சித்தம் கெட்டால் சீரழிவுகளே ஏற்படும்.

சித்தம் அடித்துக் கொண்ட பிறகேதான் கைகள் அடித்துக் கொள்ளும்.

நீண்ட நெடு நாட்களுக்கு முன்பே நம் நாட்டில் சித்தத்தை அழகுபடுத்தும் முயற்சி தோன்றிவிட்டது. சித்தத்தின் அழகுபற்றிப் பேசப்பட்டு வருகிறது- ஓரளவு காப்பாற்றப்பட்டும் வருகிறது. இன்று பலர் சித்தம் அழகுடையராக இல்லாமையாலேயே உலகில் போரும் புயலும் ஏற்படுகின்றன.

மனத்தில் மாசின்றி இலட்சியத்தில் பெரு விருப்புடையவர்களாக நாம் விளங்க வேண்டும். கடமையைக் கடமையாகச் செய்ய வேண்டும். அதுவே அறம் எனப்படுவது. சமுதாய நிர்ப்பந்தத்திற்காகச் செய்வோம் என்று செய்வது அறத்தின்பாற்பட்டதன்று. சுயமாகச் சிந்தித்து-நிர்பந்தத்திற்குக் கட்டுப்படாமல் செயல்படுவதே சிறந்த அறம். இந்த அறச்செயல் உணர்வு பெருக வேண்டும். பொதுவாக, இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே தட்டில் ஒரு சேர வைத்து உண்ணுகின்ற நிலை பெற வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் இன்பமும் ஏற்படலாம்-துன்பமும் ஏற்படலாம். இரண்டையும் ஒரு சேர மதிக்கும் பக்குவ நிலைபெற வேண்டும். சிலர் தமக்கு ஆதாயம் இருக்கும் போது—தமது புகழுக்கும் மரியாதைக்கும் இழுக்கு நேராத போது அன்புடையவர்களாக இருப்பார்கள். அதில் ஒன்றும் சிறப்பில்லை. ஆதாயத்திற்கும் புகழுக்கும் மரியாதைக்கும் இடையூறு நேர்ந்தபோதும், அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு அன்புடையவராக வாழ்தலே சிறப்பாகும். அதுதான் சமய வாழ்வு. புகழையும், பயனையும் எதிர் பார்த்துச் செயற்படுவது சமய வாழ்வு ஆகாது.

திருவாசகத்தை ஓதுகின்றவர்கள் உள்ளத்தில் அது ஓர் ஒலியை உண்டாக்குகிறது. அந்த ஒலி ஒரு பெரும் புரட்சியை உண்டாக்குகிறது. அது நம்மைப் பற்றிச் சிந்திக்க செய்கிறது. நம்மிடத்தே இருக்கும் குறைகளையும் நிறைகளையும் அது காட்டுகிறது. பொதுவாக, சராசரி மனிதனும் குறையைச் சுட்டிக் காட்டுவான். குறைகளைச் சுட்டிக்காட்டி, அக்குறைகளைக் களையும் வழிகாட்டி, நிறையையும் காட்டுபவன்தான் சிறப்புடையவன், நோயாளியைக் கேட்டால் அவனே கூறி விடுவான் தனக்கு இன்ன நோய் என்று. நோயைக் கூறுவதோடு நோய் நீக்கும் மருந்தையும் கூறுகிறவன் ‘மருத்துவன்’ எனப்படுவான். இதனாலேயே மாணிக்கவாசகர், ‘குறைவிலா நிறைவே கோதிலா அமுதே!’ என்று இறைவனைப் பாராட்டுகிறார். மாணிக்கவாசகர், ஆன்மாவைப் பிடித்தாட்டும் நோய்காட்டி, அந்நோய் அகன்றொழிய மருந்தும் காட்டினார்.

திருவாசகத்தில் நமது ஆன்மா தோயத் தோயச் சில இரசாயன மாறுதல்கள் ஏற்படும். திருவாசகத்தில் நமது சித்தத்தை ஊறப் போட்டால், ஊறிய பிறகு, ஒரு சிறந்த அற்புதம் நிகழ்கிறது.

ஊறுகாயை நாம் அறிவோம். ஊறுகாய்க்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. காய் நன்றாக ஊறிய பிறகுதான் அது ஊறுகாய் என்று பெயர் பெறுகிறது. ஊறுகாய், நாம் உண்ட பெருந்தீனியை—கடினமான உணவைச் செரிக்க வைக்கும். எனினும், தன் மணம் சிறிதும் குன்றாமல் கமழ்ந்து கொண்டிருக்கும். அது போலவே, நமது உள்ளத்தை — ஆன்மாவை திருவாசகத்தில் ஊறச் செய்துவிட்டால் நம் தீய வினைகள் அனைத்தும் செரிக்கும்—திருவாசகத்தின் செம்மணம் கமழும்!

சித்தத்தில் நாள் தோறும் அன்பு மலர வேண்டும். சிவபெருமானின் திருவருளைப் பெற்றுத் தரும் சாதனம் அன்புதான். அந்த அன்பை நெகிழச் செய்வதற்குரிய சாதனம்தான் வழிபாடு. வழிபாடு நிகழ்ந்து அகத்தே அன்பு நெகிழவில்லையானால் அந்த வழிபாட்டால் எத்தகைய பயனும் இல்லை. இறைவனிடத்து அன்பு செலுத்த-அவன் நாமத்தை உச்சரித்து, அவன் திருவடிப் போதுக்கு நறுமண மலர் சூட்டித் திருவடிக் கமலங்களில் நீர் ஊற்றுதல் போதும். ‘யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை’ என்றார் திருமூலர். பூவும், இலையும், நீரும் தூய்மையானவை. இன்று திருக்கோயில்களில் பூவும் இலையும், நீரும் வாணிகப் பொருள்களாகிவிட்டன. பூவையும், இலையையும் காசு கொடுத்து வாங்காமல் அவற்றை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். புண்ணியப் பொருள்களான பூவும் நீரும் இறைவனுக்கு நிறையக் கிடைக்கக்கூடிய சூழலைத் தமிழகக் கோயில்களில் உருவாக்க வேண்டும். மாசில்லாத எண்ணத்தோடு, சீல முடைய-மிக்குயர்ந்த நம் நெறியை மக்களிடத்துப் பரப்ப முற்பட வேண்டும். இதனால் வருகிற இன்பதுன்பங்களைப் பற்றிக் கவலை கொள்ளக்கூடாது. மெய்யடியார்கள் வினையைப் பற்றியும் அவ்வினைவழி வரும் துன்பங்கள் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். ‘முத்தர் மனமிருக்கும் மோனத்தே’ என்பதுபோல அவர்கள் இறைவன் திருவடி நீழலையே எப்போதும் சிந்தித்திருப்பர். தம்மினின்றும் மாறுபட்டவர்களிடத்தும் அவர்கள் அன்பாகவே நடந்து கொள்வார்கள். அவர்களைப் போல நாமும் நம்மினின்றும் மாறுபட்டவர்களிடத்து தூய அன்பு காட்ட வேண்டும். அவர்களுக்காக நாம் ஆத்மார்த்தீகமாகப் பிரார்த்தனை செய்து அவர்களையும் நம் வழிக்குத் திருப்பிக் கொணர்தல் வேண்டும். நம்மை நோக்கி வருகிற துன்பங்களைக் கண்டு நாம் சோர்ந்துவிடக் கூடாது. பற்றை விட்டால் துன்பமில்லை என்பார்கள். ‘பற்று விடுதல்’ என்றால் ‘பற்றை ஒழித்துவிடுதல்’ என்பது பொருளல்ல. பற்றை வேறு திசையில் திருப்பிவிட வேண்டும். இதற்கு மடை மாற்றுதல் என்று பெயர். நமது தேவைகள் பிறருக்கும் உண்டு என்று கருதித் திசை மாற்றிவிட வேண்டும்.

அகங்கனிந்த அன்போடு திருவாசகத்தை ஓதுகிற பண்பு ஏற்பட்டால், நாம் உயர்வும் உய்தியும் பெறுவோம். திருவாசகத்தை ஓதியுணர்ந்து அழ வேண்டும். அவ்வாறு அழுதால் இல்லங்கள் தோறும் எழுந்தருளிப் பொற்பாதம் காட்டும் இறைவனை-குறித்த காரியத்தைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க வல்லானை நாம் நமது சேவகனாகப் பெறலாம். ஆம். இறைவன் ஏவல் செய்வான். அவன் நமக்கு ஞானம் தருவான்-சீலம் தருவான்-எல்லா நலன்களும் தருவான். அவனை நாம் பெற, அவன்பால் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க வேண்டும்.