குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/பாட்டும் பொருளும்

விக்கிமூலம் இலிருந்து

6


பாட்டும் பொருளும்


‘பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனும்...’ என்பது குமரகுருபரர் வாக்கு. “பாட்டின் பொருள்” என்றால் குறிப்புரை. பதவுரை, பொழிப்புரை, தெளிவுரை என்றே பெருவழக்காகப் பொருள் கொள்ளப் பெறுகிறது. பொருள் என்ற சொல் வேறு பொருள் நோக்கிலும் வழங்கப் பெற்று வருகிறது.

“தம்பொருள் என்பதம் மக்கள்” என்று திருக்குறளில் வருவதும்...“யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல...” என்று பரிபாடலில் வருவதும் நினைவிற்குரியன. தமிழ் இலக்கியங்கள் பெரும்பான்மையும் கணிதை வடிவத்திலேயே அமைந்தவை. இந்த இலக்கியங்களுக்குப் பதவுரை, பொழிப்புரை, கருத்துரை தெளிவுரை ஆகியன காணும் முயற்சியில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது. பொது மறையாகிய திருக்குறளுக்குப் பற்பல உரைகள் வெளிவந்துள்ளன. ஆயினும் திருக்குறளின் நோக்கமாகிய மெய்ப் பொருள் உரைத்தல் நடைபெறவில்லை. செம்பொருள் காணும் அறிவும் கண்டோமில்லை. அருள் நூல்களாகிய திரு முறைகளுக்கு உரையெழுதுவது மரபன்று என்ற காரணத்தால் எழுதப் பெறவில்லை.

மகா வித்துவான் தியாகராசச் செட்டியார் அவர்களை, திருவாசகத்திற்கு உரை எழுதக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்கள். அவர் “திருவாசகத்திற்கு உரை எழுத இயலாது, திருவாசகம் ஒரு ஞானபனுவல், ஞானானுபவ நூல், ஞானானுபவ பூதி நூலுக்கு உரை காண்பது கடினம், கூடாது. மேலும் எழுத வற்புறுத்தினால் “காவிரியில் விழுந்து உயிர் நீத்து விடுவேன்” என்று கூறினார். ஆனாலும் பிற்காலத்தில் திருமுறைகளுக்கும் உரைகள் சிலர் எழுதியுள்ளனர். வெளிவந்துள்ளன.

“தில்லை பாதி-திருவாசகம்பாதி என்பது ஆன்மீகப் பழமொழி. தில்லை, திருவாசகத்திற்கு உரிய இடம், ஆடல் வல்லான்-நடராசப் பெருமான் விரும்பிக் கேட்ட, விரும்பி எழுதிய பாடல்கள் திருவாசகப் பாடல்கள், இதனைச் சிவப்பிரகாச சுவாமிகள்...

“...............
திங்கள் வார்சடைத் தெய்வ நாயகன்
ஒருகலை யேனும் உணரான் அஃதான்று
கைகளோ முறிபடுங் கைகள் காணில்
கண்களோ ஒன்று காலையிற் காணும்
மாலையில் ஒன்று வயங்கித் தோன்றும்
பழிப்பின் ஒன்று விழிப்பின் எரியும்
ஆயினும் தன்னை நீ புகழ்ந் துரைத்த
பழுதில் செய்யுள் எழுதினன் அதனால்
புகழ்ச்சி விரும்பினன் போலும்
இகழ்ச்சி யறியா என்பணிவானே”

என்று நயம்படக் கூறி விளக்குகிறார். திருவாசகத்தைப் பிரதி எடுத்தவன் ஆடல் வல்லானேயாம். “ஏன், பிரதி எடுத்தான்? கடையூழிக் காலம் வரும் அல்லவா? அதாவது புலனங்கள் அனைத்தும் ஒடுங்கும் காலம்- யுகாந்தரம் என்று சொல்லப் பெறும் கடையூழி. அந்தக் கடையூழிக் காலத்தில் ஒன்றும், இருக்காது. இறைவன் மட்டுமே தனித்து நிற்பான், அப்போது ஒரு தனிமை இருக்கும். அந்தத் தனிமைத் துன்பத்தை மறப்பதற்காகப் படித்துக் கொண்டிருக்கவே திருவாசகத்தைப் பிரதி எடுத்துக் கொண்டான் என்று மனோன்மணியம் கூறும்.

“கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதியதே”

என்பது மனோன்மணியம்.

திருவாசகம் ஞானப் பனுவல்; பிறவிப் பிணி நீக்கும் அரிய பனுவல்; அல்லல் தீர்க்கும் அருமருந்து; ஆனந்தத்தை வழங்கும் இன்பத் தமிழமுது; அருளமுது; இன்ப அன்பினை அளிக்கும் அருளமுது. இத்தகு திருவாசகத்தின் பாடல்களை “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து” சொல்ல வேண்டும் என்று மாணிக்கவாசகர் கூறுகிறார்.

“பாட்டின் பொருள் உணர்ந்து” என்றால் என்ன? எழுத்து, சொல், பொருள் என்று “ரிகார்டு” அடிப்படையில் தெரிதலா? இல்லை. இங்ஙனம் எழுத்தும் சொல்லும் பொருளும் மட்டுமே நாடியதால் நம்மனோர் வாழ்க்கையில் இன்று, வாழ்க்கையின் மிகப் பெரிய பேறாகிய ஞானத்தைக் காணோம்! பக்தி இருக்கிறது! பூசனைகள் நடைபெறுகின்றன. ஆயினும், இவற்றின் பயனாகிய ஞானத்தைக் காணோம்! “ஞானத்தால் அன்றி வீடு பேறு இல்லை” என்பது மெய்கண்ட சிவம் தேறித் தெளிந்த உண்மை. பாட்டின் பொருளாவது சிவமேயாம்! மாணிக்கவாசகர் அருளிச் செய்துள்ள திருவாசகத்திற்குப் பொருள் யாதென உணர்த்துமாறு தில்லை வாழ்மக்கள் அவரைக் கேட்ட பொழுது, பொன்னம்பலத்தில் ஆடும் ஆடல் வல்லானே பொருள் எனக் காட்டினார் என்பது திருவாதவூரடிகள் புராணம்.

“நின்றபுகழ்ப் பூலியூரர் நேயமுடன் புடைசூழச்
சென்றருளுக் கிடமான செம்பொனின் அம்பலம் எய்தி
ஒன்றிய இத் தமிழ்மாலைப் பொருள் இவர் என்று உரை செய்து
மன்றத்தினிற் கடிதேகி மறைந்தனர்; அங்கு அவர் காண”

என்பது திருவாதவூரடிகள் புராணம். சிற்சபையின் பெருமையைப் போற்றும் பொழுதும்...

“தற்பரமாய்ப் பரபதமாய்த் தாவில் ‘அனுபூதியதாய்
அற்புதமாய் ஆரமுதாய் ஆனந்த நிலைய ஒளிப்
பொற்பின்தாய் அறிவறிதாய்ப் பொருளாகி அருளாகும்
சிற்பரம் ஆம் அம்பரம் ஆம் திருச்சிற்றம்பலம் போற்ற...”

என்று போற்றுவர். இப்பாடலில் “பொருளாகி அருளாகும்” என்று வரும் சொற்றொடர் அளவு நோக்குக.

கல்வியின் பயன் இறைவனின் திருவடிகள்! இறைவனின் திருவடிகளை அறிதலே ஞானம். இறைவனின் திருவடிகளைப் பற்றெனப் பற்றுதலே திருவடி ஞானம்! திருவடிப் பேற்றினை அடைதலே வீடு பேறு. பாட்டின் பொருளாக நாம் அடைவது திருவடி ஞானம்! திருவாசகத்தின் பொருள் திருச்சிற்றம்பலத்தில் நட்டமாடும் எப்பெருமானின் திருவடிகளே! அந்தத் தூக்கிய திருவடியே நமது சாதனம்; பொருள்! திருவாசகம் ஓதுவோம் இருள்மலம் கரைத்திடுவோம்! ‘யான்’ ‘எனது’ என்னும் செருக்கினை அகற்றிடுவோம்! ஆடல் வல்லானின் எடுத்த திருவடியே வாழ்க்கையின் பொருள். பாட்டின் பொருள் என்று போற்றி வாழ்வோம்! இன்ப அன்பினை எய்துவோம்.