உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/குழந்தையும்-பொற்கிண்ணமும்

விக்கிமூலம் இலிருந்து

8


குழந்தையும் - பொற்கிண்ணமும்


செல்வம் கொழிக்கும் வீடு. பொற்கிண்ணங்கள் நிறைய புழக்கத்தில் உள்ள வீடு. ஐந்து வயது நிரம்பாத இளம் குழந்தையின் கையில் பொற்கிண்ணம் ஒன்று கிடைத்துவிடுகிறது. அந்தக் குழந்தைக்குப் பொற்கிண்ணத்தின் மதிப்புத் தெரியுமா? அல்லது அதைப் பயன்படுத்தும் முறைதான் தெரியுமா ஒன்றும் தெரியாது. அந்தத் தங்கக் கிண்ணத்தைத் தூக்கி எறிந்துவிட்டாலும் வியப்பதற்கில்லை, பொற்கிண்ணத்தைக் கேட்டாலும் கொடுத்துவிடும் பொன்னின் அருமை தெரியாத அறியாக் குழந்தை அது.

அதுபோலவே ஆன்மாக்களிலும் அறியாக் குழந்தைகள் உண்டு. உடலால் மூத்திருந்தாலும்-உயிரால் குழந்தைமையில் நிற்போரே மிகுதி. இக்குழந்தைகளின்மேல் கொண்ட கருணையின் காரணமாக இறைவனே எளியனாக வலியவந்து ஆண்டுகொண்டு அருளை வழங்கினாலும் பாராட்டுவதில்லை; திருவருளின் அருமையை உணர்வதில்லை.

முன்னின்று பொழியும் திருவருளை விட பொன் பெரிது-வாழ்வு பெரிதெனக் கருதி திருவருளை அனுபவிக்காமல் அல்லல் வழிப்பட்டுழல்வது உலகியற்கை. எளிமையைப் பெருமையாகக் கருதிப் போற்றுவது சால்புடையோர் மரபு; எளிமையை ஏமாளித்தனமெனக் கருதி ஏமாற்ற முயல்வது புன்மையாளர் மரபு. முயன்று பெற்றால் அப்படிப் பெற்றது அற்ப அளவிளதாயினும் ஆரா மகிழ்ச்சியுறுவர். அமைதி பெறுவர். முயலாது வந்தது பெருமைக்குரிய அளவினதாயினும் மகிழ்ச்சி யுறுவதில்லை. காரணம் எளிமையின் தத்துவம் அறியாமையே. இக்கருத்தினை மாணிக்கவாசகர் தம்மீது ஏற்றிப் பாடுகின்றார். அழகான பாடல் - ஆழமான பாடல், உள்ளத்தை தொட்டு உணர்த்தும் திருப் பாடல்.

மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்குபொற் கிண்ண மென்ற லால்
அரியை என்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்வெண் ணீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பருள் மெய்ம்மை மேவினார்
பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ
போவதோ சொலாய் பொருத்தமாவதே.

நினைக்குந்தொறும் இன்பநலமளிக்கும் சுவைமிக்கப் பாடல், இறைவன் பேரருளாளர், அருட்செல்வியைப் பங்கிலேயுடையவன். தூயவெண்ணீறணிந்தவன். இறைவன், ஏன் வெண்ணீறணிகின்றான்?

வினை வழிப்பட்டுழலும் உயிர்கள் நீறணிவது இயற்கை ஆனால் வினையில் நீங்கிய முதல்வன் நீறணிவது ஏன்? குழந்தைகளுக்கு நோய் எனில் குழந்தைக்கு மருந்து கொடுப்பதில்லை. பத்தியமும் இடுவதில்லை. குழந்தையின் நோய்க்குத் தாயே மருந்து குடிக்க வேண்டும். பத்தியமும் பிடிக்க வேண்டும். ஆதலால் தம்மைத் தொழுதெழுவார் வினைவளம் நீறெழ நீறணிகின்றான். அத்தகு கருணைப் பெருங்கடல் வலிய மணிவாசகரை ஆட்கொண்டது.

அப்படி ஆட்கொள்ளும் போது திருவருளை உணர்ந்த மெய்யறிவாளர்கள்—அன்பர்கள் திருவருள் நலம் பெறுகிறார்கள், பொய்யர்கள் பொய்யாகி உலகத்திலேயே உழல்வார்கள். இப்படி என்னைப் பொய்யுலகில் விட்டுவிட்டுப் போகலாமா? என்று இறைவனை இரந்து கேட்கிறார் மாணிக்கவாசகர். அவருக்காகவா? நமக்காகத்தான்! பாடல் படித்து ஓதிப்பயன் பெறுதற்குரியது.