பக்கம்:சமணமும் தமிழும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சமணமும் தமிழும்


கறிகள் சிற்றுண்டி முதலிய உணவுப் பொருள்கள் பருகும் பால் பாயசம் முதலிய பானவகைகள், சந்தனம் வாசனைத் தைலம் மல்லிகை ரோசா முதலிய நறுமணப் பொருள்கள், குதிரை மாடு முதலிய ஊர்திகள், பஞ்சணை முதலிய சயனப் பொருள்கள், காலில் அணியும் பாதரக்ஷை முதலிய போகப் பொருள்கள் ஆகிய இவற்றில் இன்னின்ன பொருள்கனை உபயோகிப்பதில்லை என்று விரதம் செய்து கொள்ளுதல். இவை பொய், களவு, கொலை முதலியன செய்யா திருப்பதற்கு உதவியாக உள்ளன.

சிக்கை என்பது சிக்ஷாவிரதம். இது நான்கு வகைப்படும் அவை:- தேசாவதாசிகம், ஸாமாயிகம், புரோஷதோபவாசம், அதிதி ஸம்விபாகம் என்பன. இவற்றைச் சற்று விளக்குவோம்.

தேசாவதாசிகம் என்னும் விரதம் மேலே கூறப்பட்ட திசை விரதம் போன்றது, இந்தத் திசையில் இந்த எல்லைக்கு அப்பால் செல்வதில்லை என்று உறுதிசெய்து கொண்டு அதன்படி நடத்தல்.

சாமாயிக விரதம் என்பது தியானத்தில் அமர்ந்திருத்தல். குறைந்த அளவு நாற்பத்தெட்டு நிமிடமாவது கோயிலிலோ அல்லது வீட்டிலோ அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்வது. இதைக் காலை நடுப்பகல் மாலை என்னும் மூன்று வேளைகளில் செய்யலாம். ஆனால், காலையில் செய்வதே சிறந்தது. சாமாயிகம் செய்யும்போது மனம் வாக்குக் காயங்களினால் பாவச் செயல்களை நினைக்காமலும் பேசாமலும் செய்யாமலும் இருக்கவேண்டும்.

புரோஷதோபவாசம் என்பது போசத விரதம் என்றும் சொல்லப்படும். ஓரிரவும் ஒரு பகலும் ஆகிய ஒரு நாள் முழுவதும் உணவு கொள்ளாமலும் நீர் அருந்தாமலும் உயர்ந்த ஆடை அணிகள் அணியாமலும் இணை விழைச்சு இல்லாமலும் விரதம் காத்தல். இந்த விரதத்தை மாதத்தில் நான்கு நாள் செய்யவேண்டும். பிற்காலத்தில் துறவு கொள்ள விரும்பும் சமணர் இந்த விரதத்தை மாதத்தில் ஆறு