உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/மாவுட்க் கூர்ந்தோ

விக்கிமூலம் இலிருந்து

78 மாவுடக் கூர்ந்தோன்


பல்கலை தெரித்த வல்லோ னாயினுஞ்
செல்வக் குவைதுயில் குரிசி லாயினும்
வெல்வோ னிறத்த விறலோ னாயினும்
மாவுடக் கூர்ந்தோன் போல
நாவடக் கில்லோன் நலியவும் படுமே!

பொழிப்பு:

பல்வகைக் கலைகளையும் கற்றுத் தெளிந்த வல்லமையுடையோனாயினும்,செல்வக்குவியலுக் கிடையே துயிலுகின்ற பெருமகனாயினும், தன்னை வெற்றி கொள்ளத் தக்க மாற்றாரை இல்லாத மாவீரனாயினும் யானையேற்றத்தை மேற்கொண்டவன் போல நாவையடக்கும் திறமில்லாதவன் துன்புறுத்தப்படுவான்.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

கலைத்திறத்தால் சிறந்தோனாயினும், பொருள் வளத்தால் மிக்கோனாயினும், தறுக்கண்மையால் உயர்ந்தோனாயினும் ஒருவன் நாவடக்கம் உடையவனாய் இருத்தல் வேண்டும் எனவும் அல்லாக்கால் யானையேற்றம் மேற்கொண்டவன் அதனை அடக்கும் திறமிலியாயின் நலியப்படுமாறு போல நாவை அடக்க மாட்டாதவன் நலியப்படுவான் என வலியுறுத்துவது இப்பாட்டு.

பல்கலை தெரித்த வல்லோன் ஆயினும்- பலவகைக் கலைகளையும் கற்றுத் தேர்ந்த வல்லமையுடையோனாயினும்.

தெரிந்த - தெரிந்த என்பதன் வலித்தல் வேறுபாடு. இனி தெரித்த என்பதற்குப் பலருமறியுமாறு வெளிப்படுத்திக்காட்டிய எனினுமாம்.

செல்வக் குவை துயில் குரிசில் ஆயினும் -பல்வகைச் செல்வங்களும் நிரம்பிய குவியலுக்கிடையே துயில் கொள்ளும் பெருமகன் ஆயினும்,

குவை-குவியல்

வெல்வோன் இறத்த விறலோன் ஆயினும் -வெற்றி கொள்வேன் இல்லாத பெருவீரன் ஆயினும் 

வெற்றி கொள்வோன் இல்லாதான் எதிரிலி.

இறத்த நீங்கிய இல்லாத

விறலோன் ஆற்றல் மிக்க வீரன்.

மா உடக்கு ஊர்ந்தோன் போல - யானையை அடக்கும் திறமில்லாது யானையேற்றம் மேற்கொண்டு சென்றோனைப் போல.

மா-யானை

உடக்குதல்-செலுத்துதல். மாவுடக்கு என்றது யானை யேற்றத்தை மா வென்பது குதிரையுமாகலின் குதிரையேற்றம் என்னலுமாம். ஆயினும் அஃது ஈண்டைக்குச் சிறவாது யானையேற்றம் ஊர்ந்தோன், யானையேற்றம் மேற்கொண்டோன் என்றவாறு.

யானையை அடக்கமாட்டாதவன் என்பது மேற்பொருளின் கண்நின்ற நாவடக்கில்லோன் என்பதனாற் பெறப்பட்டது.

நாஅடக்கு இல்லோன் - நாவை அடக்க மாட்டாதவன்.

நாவடக்கமாவது செருக்கொடும் வரம்பிகந்தும் பேசாமை,

நவியவும் படுமே- பேச்சின் பயனை இழத்தலோடு வருத்தவும் பெறுவான். வருத்தவும் என்பதன் உம்மையால் பேசுதலாற் பெறத்தக்க பயனை இழத்தல் பெறப்பட்டது.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண் மொழிக்காஞ்சி என்னுந் துறையுமாம்.