குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13/நமது கடமை
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்று கருதிப் போற்றுவது நமது மரபு. பாரதம், அன்பின் தாயகம்; அருளின் பெட்டகம்! கருணைக் கதிரவன் சுற்றுலாப் போதரும் திருநாடு! சமாதானத்தின் பண்ணை; எல்லாரையும்- எவரையும் ஏற்றிப் போற்றும் இனிய பண்பிற் சிறந்தநாடு. இத்தகு தாய்த் திருநாட்டின் எல்லையில் சீன அரசாங்கம் ஆக்கிரமிப்புச் செய்து, நமக்குத் தொல்லைகளைத் தந்து வருகிறது.
இமயம் நமது இலட்சியம்.
"மன்னும் இமயமலை எங்கள் மலையே"
என்று பூரிப்புடன் நாம் பாடிப் பரவும் பெரும் மலை. மண்ணகத்தில் பாய்ந்து விண்ணகத்தின் வளமெல்லாம் தரும் பேராறுகள் ஊற்றெடுத்துப் பாய்ந்து வரும் உயர்மலை. ஆறுகள் மட்டுமா? தம்மையடக்கித் தம்முடைய தலைவனை யுணர்ந்து உலகுயிர் அனைத்தும் இன்ப நலன் எய்தி மகிழ வேண்டும் என்ற நோன்பிற் சிறந்த மனிதருள் தேவர் வாழ்ந்த - வாழ்ந்து கொண்டிருக்கிற பனிமலை அமைதியின் சிகரத்திலே ஆணவத்தின் தீண்டல். விடுதலையைத் தரும் மலையின் சாரலில் ஆதிக்கத்தின் நடமாட்டம். அனுமதிப் பதற்கில்லை. அனுமதிக்க மாட்டோம். எல்லையில் தொல்லை விளைவிக்கும் சீன அரசாங்கத்தை ஒல்லையில் ஓடிப்போகும்படி செய்வது நமது தலையாய கடமை.
சுதந்திரத்திற்குப் பிறகு, நம்முடைய நாட்டின் பொது வாழ்வில் எங்கோ ஒரு தொய்வு ஏற்பட்டது. வேண்டாத வீண் போட்டிகள், தனிக்குடித்தன உணர்ச்சிகள் தோன்றி வளர்ந்தன. இவையெல்லாம் “எல்லையில் சீனன்” என்று கேட்டவுடன் எங்கோ ஓடி மறைந்து விட்டன. பாரததேசம் பொங்கி எழுந்து நிற்கிறது. கங்கு கரையற்ற தேசீய உணர்ச்சி! மக்களாட்சியின் தனிப்பெருந் தலைவராக - இந்நாட்டு மக்களின் நல்வாழ்வில் கரைந்து-கலந்து-ஒன்றாகி ஒருருவாக நிற்கும் மாசற்ற மாணிக்கமாகத் திகழும் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பின், மலர்ந்த முகத்துடன், மலைபோல் வீங்கிய தோள்களுடன் நிமிர்ந்த நடை போடுகின்றனர். உயிர் முதல் உடைமைவரை எந்த விலையையும் கொடுக்க அவர்கள் துணிந்து நிற்கின்றனர், தாயகத்தின் எல்லை காக்க.
எல்லையில் - போர்க்களத்தில் - காளையர் போர் புரிகின்றனர். இங்கு நமக்கென்ன வேலை? என்ற சிந்தனையில் நாம் செயல்பட வேண்டும். இத்தகு அவசர நிலையில் உள்நாட்டுச் சூழ்நிலையும் வலிமைப்படுத்தப் பெறவேண்டும். இந்த நேரத்தில் நமக்குள் அறிந்தோ, அறியாமலோ, தோன்றி உருவாகும் சில்லரைச் சிக்கல்களைத் தூக்கி மூட்டை கட்டி, நாட்டின் எல்லையில் எறிந்தால் சீனனை எறிந்தது போலாகும். நாட்டின் அமைதிக் காலத்தை விட அவசரக் காலத்தில் பல்வளங்களும் கொழிக்கும்படி செய்யவேண்டும். ஒன்றுக்குப் பத்தாக விளைந்து குவியும் செந்நெல் சீன அரசாங்கத்தை விரட்டும்! கழனியிலும், ஆலைகளிலும், தொழிற்சாலைகளிலும் உழைப்பினால் ஆன பொருள்களைச் செய்து மலைபோல் குவிப்பது நமது கடமை.
கேட்பதற்கே செவிகள், ஆனாலும் கேளத் தகாதனவற்றைக் கேட்டது கேட்டினை விளைவிக்கும். எப்பொழுதும், இல்லாத பொல்லாத வதந்திகளைக் கேட்கவேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. ஆனாலும், “தீக்குறளைச் சென்றோதும்” வதந்திச் செய்தியாளர்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவர். அது அவர்களுடைய தொழில். அவர்களுக்குப் பொழுபோக்கும்கூட. ஆதலால் யுத்த சம்பந்தப்பட்டவரை வானொலிச் செய்திகளே சரியானவை என்று கருதிப் போற்றுதல் வேண்டும்.
பாரதம் சுதந்திர நாடான பிறகு நடைபெறும் முதல் மக்கள் யுத்தம் இது. நம்முடைய எதிரி போருக்கென்றே திட்டமிட்டு வளர்ந்தவன். நாமோ, மக்களின் நலன்களுக்குரியவற்றைத் திட்டமிட்டுச் செய்து முன்னேறியிருக்கிறோம். அதன் காரணமாகப் போர்முறை கடினமாக இருக்கும் என்று கருதுவதில் தவறில்லை. இத்தகு அவசரகால சந்தர்ப்பங்களில் எல்லோரும்-நாட்டுமக்கள் அனைவரும் தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்ளப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இயன்றவரை, எல்லோரும் போர்ப்பயிற்சியும் முதலுதவிப் பயிற்சியும் பெற வேண்டும். அப்படிச் செய்வது நமது கடமை.
நாம் உலக வல்லரசு நாடுகளை நோக்கிப் “பல ஆண்டுகளாகப் படைக் கலங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்-பாரில் சமாதானம் செழிக்க உதவி செய்யுங்கள்” என்று கூறி வந்தமையின் காரணமாக, நாம் படைக் கலங்களைத் தேவையான அளவிற்குத் தயார் செய்து வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், எதிர்பாராதவண்ணம், உலக மனித சமுதாயத்தினுடைய சுதந்திரத்தின் பகைவர்களாக - கொலையிற் கொடிய அரசாகத் திகழும் சீன அரசாங்கத்தை எதிர்த்துதாக்கியழித்து நாசமாக்கி- நம்மையும் நம்முடைய சுதந்திரத்தையும் அவ்வழியே மனித சுதந்திரத்தையும் காப்பாற்றும் அவசியம் ஏற்பட்டுவிட்டது. அதற்குரிய படைக்கலங்கள் தேவை. நமக்குத் தேவையான படைக்கலங்களை நாம் மிகுதியான பொருள் கொடுத்தே வாங்க வேண்டியிருக்கிறது. படைக்கலம் வாங்க ஏராளமான பொன்னும் பொருளும் தேவை. அன்றாட வாழ்க்கையில், சிக்கன முறையினைக் கையாண்டு பொருளைச் சேமித்துச் சீன அரசாங்கத்தை விரட்டியடிக்கத் தரவேண்டும். மாந்தர்க்கு அழகு தருவது சுதந்திர வாழ்க்கையே யாகும். சுதந்திரத்திற்கு ஆபத்து என்ற குரல் கேட்கும் பொழுது அணிகலன்களில் அழகைப் பார்க்கலாமா? தாயகம் காக்கத் தங்கம் தாருங்கள். அரசினர் ஒவ்வொரு நகரத்தையும் கிராமத்தையும் வலிமையிலும் வளத்திலும் தற்காப்பிலும் சிறந்து விளங்கும் கோட்டை களாக்கத் திட்டமிட்டுத் திறனுடைய தொண்டர்படை அமைக்கின்றனர். நெஞ்சில் உரமும் உறுதியும் உடையவர்கள், போனால் வராத-வர முடியாத இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தொண்டர் படையில் சேருங்கள்! சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபடாத-ஈடுபடமுடியாமல் சுதந்திரத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிற பலருக்குத் தேசத் தொண்டு செய்ய இது ஏற்ற தருணம்.
நாற்பத்தாறு கோடி மக்களின் இதயத்தில் இடம் பெற்றிருக்கிற நேருவே நமது தலைவர். அவரது தலைமையை நாம் ஏற்றுப் போற்றி, நாட்டுக்கேற்ற நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடித்து-உள்நாட்டின் வளர்ச்சிக் குரிய் திட்டங்களை நிறைவேற்றிப் பொன்னும் பொருளும் குவித்து எல்லையில் தொல்லைதரும் சீன அரசாங்கத்தை விரட்டுவது நமது கடமை.
- ↑ பொங்கல் பரிசு