பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இந்த நூற்றாண்டில் மறைந்த இரண்டு பெரும் புலவர்கள் தமிழுக்கு ஆக்கத்தை அளித்துப் புகழ் படைத்தனர். ஒருவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்; மற்றொருவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள். பாரதியார் அற்புதமான புதிய கவிதைகளைப் பாடித் தமிழ் மகளை அலங்கரித்தார். ஐயரவர்களோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய சங்க நூல்களையும் வேறு பழைய காவியங்களையும் கண்டெடுத்து ஆராய்ந்து அருமையான முறையில் பதிப்பித்து உதவினார்கள். அந்த நூல்களால் உலகம் முழுவதும் தமிழின் தொன்மையையும் பெருமையையும் பண்டைத் தமிழ் நாகரிகத்தையும் தெரிந்துகொண்டது. வெவ்வேறு நாடுகளில் உள்ள பேரறிஞர்கள் தமிழில் ஈடுபட்டு ஆராய்ச்சி செய்யலானார்கள். அதன் பயனாக உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றன, இனியும் நடைபெறும்.

கம்பராமாயணம், வில்லி பாரதம் போன்ற நூல்களோடு நின்றிருந்த தமிழ் இலக்கியத்தின் விரிவு புலப்பட்டது. இவ்வளவு பழைய காலத்திலே தமிழ் நாட்டின் நாகரிகம் இத்தகைய சிறப்புடன் இருந்தது பெரு வியப்புக்குரியது என்று பலரும் பாராட்டினார்கள். தொன்மையான நூல்களாக இருந்தாலும் சங்க நூல்கள் இன்றும் கற்பவர்களுக்கு இனியனவாய் உள்ளன.

இத்தகைய சங்க நூல்களைக் கண்டெடுத்து உதவிய டாக்டர் ஐயர் உரைநடையிலும் பல நூல்களே எழுதினார். அவர் பதிப்பித்த மணிமேகலைக்கு அங்கமாக மணிமேகலைக் கதைச் சுருக்கத்தையும், புத்தர், சங்கம், தர்மம் என்னும் மும்மணிகளைப்பற்றியும் எழுதினார். பெருங்கதைக்கு அங்கமாக உதயணன் சரித்திரத்தை எழுதினார்.

இவற்றையெல்லாமல் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வரலாற்றையும் வேறு பலருடைய வரலாறுகளையும் எழுதி உதவினார். ஏடு தேடியபோது தாம்பெற்ற அநுபவங்களை எடுத்துரைத்தார். சங்க நூல்களில் கண்ட பல செய்திகளைக் கட்டுரை வடிவில் எழுதினார். அவர் பதிப்பித்த