உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தாழ்த்திப் பலவகையாலும் நசித்துவந்த வஞ்சினர்கள் முன்பு நீதியும் நெறியுமமைந்த பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையால் பற்பல சாஸ்திரங்களையும். அநுபவங்களையும் ஆய்ந்து பூர்வ பெளத்த தன்மத்தை நசித்துத் தங்கள் பொய்ச்சாதி வேஷங்களையும், பொய்ப்போதகங்களை படம் பலுக்கிக் கொள்ளுவதற்கே பூர்வபெளத்ததன்ம வைராக்கிகள் யாவரையும் பறையரென்றுத் தாழ்த்திப் பாழ்படுத்தி வருகின்றார்கள் என்றறிந்து மறுபடியும் தங்களுக்குள் பெளத்த சங்கங்களை நாட்டி மற்றொருவனுடைய சாதிக் கட்டுக்குள் நாங்களடங்கினவர்களல்லவென்று தங்கள் செயல்களை நடத்தி வருவதுமன்றி இந்துக்கள் செயல்கள் வேறு பௌத்தர்கள் செயல்கள் வேறாதலின் இந்துக்களுடன் எங்களை சேர்க்காது இந்திய பெளத்தர்களென வேறாகப் பிரிக்கும்படி இராஜாங்கத்தோருக்கு விண்ணப்பம் அனுப்பி வேறாகவும் பிரித்துக்கொண்டார்கள்.

இதனைக் கண்ணுற்றுவந்த சாதிபேதமுள்ளோர் மனஞ் சகியாது இனி நம்முடைய. டிப்பிரஸ் கிளாஸ் மிஷனில் இந்திய பௌத்தர்களை சேர்த்து பழைய சாதிகளை சொல்லிவருவதற்கு முடியாது, சிலப்பொய் போதகர்களைக் கொண்டே டிப்பிரஸ்கிளாஸ் மிஷனென்னும் ஓர்க் கூட்டத்தை ஏற்படுத்திவிட்டால் பௌத்தர்களிலும் சாதிவகுப்பு ஏற்படுத்திவிடலாமென்னுங் கெட்ட யெண்ணங்கொண்டு பெளத்ததன்மங்களின் சாராம்ஸம் முற்றும் அறியாதவர்களை அடுத்து பெளத்தருக்குள் டிப்பிரஸ் கிளாஸ் மிஷனை ஆரம்பிக்கப்பார்க்கின்றார்கள்.

அவ்வகை ஆரம்பிப்போர் யாதார்த்த போதகர்களாயிருப்பார்களாயின் பெரியசாதி சின்னசாதியென்று பாராமலும், கனவான் ஏழையென்று கவனியாமலும் வலியன் மெலியனெனப் பாராமலும், கற்றோன் கல்லாதவனெனக் கவனியாமலும், தங்களது சத்தியதன்மத்தை சகலருக்கும் பொதுவாகப் போதிப்பார்கள். அங்ஙனமிராதப் பொய்ப் போதகர்களாதலின் தங்களுக்குள் விடாது பற்றிநிற்கும் சாதி கர்வத்தினாலும், தன் கர்வத்தினாலும் ஏழை மக்களை டிப்பிரஸ் கிளாஸ் டிப்பிரஸ் கிளாசெனத் தாழ்த்தி தங்கள் அசத்தியதன்மங்களைப் போதிக்க ஆரம்பிப்பார்கள். அத்தகைய அசத்தியர்களின் போதமானது தேய்பிறைபோல நாளுக்கு நாள் தேய்ந்து நாசமடையுமேயன்றி சத்தியதன்மத்தைப்போல் நாளுக்குநாள் மெல்லென வளர்ந்து பூரணமடையமாட்டாது. சத்தியதன்மப் பிரியர்களுக்கு ஈதோர் எச்சரிப்பாகும். ஜாக்கிரதா. ஜாக்கிரதா.

- 4:47: மே 3, 1911 -


205. அய்யர் கிளாசென்பவன் யார் சுப்பிரஸ் கிளாசென்பவன் யார்

சருவ வுயிர்களையுந் தன்னுயிர்போல் பாதுகாப்பவன் அய்யர் கிளாஸ், சகல வித்தையிலும் சிரேஷ்டம் பெற்றவன் அய்யர் கிளாஸ், புத்தியில் மிகுத்தவன் அய்யர் கிளாஸ், கையில் சிறந்தவன் அய்யர் கிளாஸ், சன்மார்க்கத்தில் மிகுத்தவன் அய்யர்கிளாஸ், சாதிபேதமென்னும் பொறாமெய் குணங்களை ஒழித்து மநுகுல ஒற்று மெய் அடையச் செய்பவன் அய்யர்கிளாஸ், தன்தாரமிருக்கப் பிறந்தாரம் இச்சியாதவன் அய்யர் கிளாஸ், அன்னியர் பொருள் ஆளின்றி கிடக்கினும் அதனைக் கைப்பற்றாதவன் அய்யர் கிளாஸ், மதுபானத்தைத் தன் பணச் செலவின்றி ஒருவன் இலவசமாகக் கொடுக்கினும் அதனை கைப்பற்றாதவன் அய்யர்கிளாஸ், சீவயிம்சையைக் கனவிலுங் கருதாதவன் அய்யர்கிளாஸ், தன் மனங் கொதிக்கப் பொய்யைச்சொல்லி பொருள்பறியாதவன் அய்யர்கிளாஸ் இதுவே உலகிலுள்ள விவேக மிகுத்தவர்களால் ஓதிவைத்த சிறந்தப் பெயராகும். இவர்களே மக்களில் மேலானச் செயலையுடையவர்களாதலால் மேன்மக்கள் என்றும் பெரியசாதனமுடையவர்களாதலால் பெரியசாதியோரென்றும், சிறந்த குணமுடையவர்களாதலால் மேதாவியரென்றும், சருவசெயலிலுஞ் சிறந்தவர்களாதலால் பெரியோர்களென்றும், நற்செயலில் சிறந்த புருஷர்களாதலால் மகான்களென்றும் அழைக்கப்பெற்றார்கள்.