216 / அயோத்திதாசர் சிந்தனைகள்
அமிதவாதிகள் இருக்கின்றார்களேயன்றி இராஜதுரோகிகள் ஒருவருமில்லையென்று கூறினுங் கூறுவர். அக்கூற்று வீணேயாகும். எங்ஙனமென்பீரேல் தற்காலம் நமது தேசத்தைக் கண்ணாரக்கண்டுக் குறைவு நிறைவுகளை சீர்படுத்தவேண்டுமென்று வந்துள்ள கவர்னர் ஜெனரலானவர் இந்திர தேச சக்கிரவர்த்தியின் பிரதிநிதியேயாகும். அதாவது இந்திரதேசச் சக்கிரவர்த்தியாகிய ஏழாவது எட்வர்ட் இறைவனே இவ்விடம் வந்துள்ளாரென்று ஏற்க வேண்டும்.
இவரையே சக்கிரவர்த்தியென்று எண்ணி சகல ஆனந்தங்களுங் கொண்டாட வேண்டியிருக்க அவ்வானந்தச் செயல்களைவிட்டு குரோதச் சிந்தனையால் கோபாவேஷங் கொண்டு வெடிகுண்டெறிய ஏற்பட்டவர்கள் இராஜ துரோகிகளல்லவா. அவர்களை இன்னர்தானென்று இதுவரையிலுங் காட்டிக்கொடாதவர்கள் யாவரும் ராஜதுரோகிகளல்லவா. வாக்குறுதிக்கும், பொருளுதவிக்கும் உதவியாயுள்ளவர்கள் ராஜ துரோகிகளல்லவா.
இத்தகைய கொடூர சிந்தையும் வஞ்ச நெஞ்சமும் உள்ளவர்கள் அருகில் வாசஞ் செய்வதுங் கொடிதல்லவோ.
பிரிட்டிஷ் ஆட்சியில் அடங்கியுள்ள சில மித்திரபேதச் சத்துருக்கள் நாங்கள் ராஜவிசுவாசிகள் நாங்கள் ராஜவிசுவாசிகளென்று சொல்லிக்கொண்டே பசுவின் தோலை போர்த்துலாவும் புலிபோலிருப்பவர்களும் இங்கிருப்பதாக விளங்குகின்றது.
அத்தகைய வஞ்சநெஞ்சமுள்ள பாபிகளை குடிகளே கண்டுபிடித்து இராஜாங்கத்தோரிடம் ரூபித்து விடுவார்களாயின் நமது தேசமுந் தேசத்தோரும் அமைதியும் ஆற்றலுமுற்று களங்கமற்ற வாழ்க்கை பெருவார்கள்.
- 3:27; டிசம்பர் 15, 1909 -
100. ஐரோப்பியரை புகழ்ந்து கூறுவது அன்னோர் சார்பாமோ
அன்பார்ந்த நேயர்களே! நாம் நமது பத்திரிகையிற் கூறிவரும் சீர்திருத்தங்கள் யாவும் பொதுநலங்கருதி கூறிவருகின்றோமன்றி சுயநலங் கருதினோமில்லை.
ஆதலின் ஐரோப்பியரது குணாகுணங்களையும், அவர்களது வித்தியா விருத்திகளையும் அவர்கள் செய்துவரும் பொதுநலப்புண்ணியங்களை தன்னவரைப்போல் அன்னியர்களைப் பாதுகாக்குஞ் செயல்களையும், சகலவகுப்போரையும் பேதாபேதமின்றி சுகமளித்தாளும் அன்பின் மிகுதியையும் ஓர் தராசுதட்டிலிட்டு நமது தேசத்தோர் செயல்கள் யாவையும் ஓர் தராசு தட்டிலிட்டுப் பார்ப்போமாயின் யாம் ஐரோப்பியர்களை புகழ்ந்துவரும் சுகம் எளிதில் விளங்கும்.
அதாவது ஓர் ஐரோப்பிய துரைமகன் தேசத்திய கலைக்ட்டர் ஆபீசுக்கு அதிபராகவந்து அமர்வாராயின் அவரைச்சார்ந்த ஐரோப்பியர்களை டிப்ட்டி கலைக்ட்டராக வாயினும், செருஸ்ததாரர்களாவாயினும், தாசில்களாகவாயினும் சேர்த்துக் கொள்ளுகின்றார்களா, கிடையாது. சகல வகுப்போர்களையுந் தங்கள் வகுப்பினர்கள்போற் கருதி தாழ்ந்தவன் உயர்ந்தவனென்னும் பேதம்பாராது சகலரும் மனிதவகுப்போர்களேயென்றுணர்ந்து சகல வகுப்பாருக்கும் சமரச சுகமளித்து வருகின்றார்கள்.
யீதன்றி இத்தேசத்து குடிகளுக்கு நீரினாலேனும் நெருப்பினாலேனும் ஓர் விபத்து நேரிடுமாயின் தங்கட் பிராணனையும் தேகசுகத்தையுங் கருதாது முன்வந்து ரட்சிக்கின்றார்கள். கொடிய பஞ்ச காலம் வந்துவிடுமாயின் தங்களாற் கூடியவரையில் வேண்டிய முயற்சிகளெடுத்து பஞ்சத்தை நிவர்த்திக்கத்தக்க ஏதுக்களைத் தேடி ஏழைகளின் அருகிற்சென்று அவர்களுக்கு சமைத்துள்ள சாதங்களையுங் கஞ்சிகளையும் தாங்கள் முதற் புசித்துப்பார்த்து ஏழைகளுக்களித்து உயிர்பிச்சைத் தருகின்றார்கள்.
இரட்சண்ணியவான்களாம் ஐரோப்பியர்களின் காருண்யச்செயல்களையிம்மட்டில் நிறுத்தி நமது தேசத்தில் சாதித்தலைவர்களென்றும், சகலசாதியோருக்கும் பெரியசாதிகள் என்றும் பிராமணர்களென்றும் பெயர்