பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 217

வைத்துக்கொண்டும் இருக்கும்படியானக் கூட்டத்தோருள் ஒருவர் ஓர் கலைகட்டராபீசில் செருஸ்ததாரராக வாயினும், எட்கிளார்க்காகவாயினும் அமருவாராயின் நாலைந்து வருடத்திற்குள் அந்த ஆபீசி முழுவதும் பிராமணரென்று சொல்லிக்கொள்ளுங் கூட்டத்தோரையே காணலாம்.

இத்தகைய செயலால் சகல வகுப்பாரின் விருத்தியைக்கருதி சகலரையுஞ் சுகம் பெறச் செய்கிறவர்கள் ஐரோப்பியர்களா நமது தேயத்தோரா சீர்தூக்கிப் பாருங்கள்.

யீதன்றி நீரிலேனும், நெருப்பிலேனுங் குடிகளுக்கு ஆபத்துவந்து விடுமாயின் அடி சேஷி, அடா சுப்பாவென்று தங்களினத்தோரைமட்டுந் தேடிக்கொண்டு தங்களெதிரில் நீரிலேனும், நெருப்பிலேனும் தவிப்பவர்களை தூரவிலகிக்கொண்டே அடா, அவனென்னசாதி அடியா, அவளென்ன சாதியெனக் கேட்டுக் கொண்டிருப்பார்களன்றி சீவகாருண்யமென்னும் சிந்தையே அவர்களிடங் கிடையாது.

தங்களுக்குத் தாங்களே பெரியசாதி என்னும் பெயரை வைத்துக்கொண்டும் பெரியச்செயலாம் சீவகாருண்யம் இல்லாமற்போமாயின் அவர்களை சுயனலப்பிரியர்களென்று கூறலாமா, பொதுநலப்பிரியர்களென்று புகழலாமா சீர்தூக்கிப்பாருங்கள்.

சாதித்தலைவர்கள் என்போர் தருமஞ்செய்வதாயின் தங்கள் சுயசாதியோர்களுக்கே செய்துக்கொள்ளுவதன்றி ஏனையவகுப்போரை நெருங்கவிட மாட்டார்கள். இத்தகைய சுயநல தருமச்சிந்தையையுடையவர்கள் பஞ்சகாலம் வந்துவிடுமாயின் யாருக்கு தானம் ஈய்ந்து உயிர்பிச்சை அளிப்பார்கள் என்பதை தாங்களே தெரிந்துக் கொள்ளவேண்டியதுதான்.

தேயத்தோர் குணபேதங்களையும் செயல்பேதங்களையும் நன்காராயாது எம்மெய் ஐரோப்பியரைச் சார்ந்தவனென்றும் எமது பத்திரிகையை ஐரோப்பியர் வாலென்றும் அவமதிப்பாய்க் கூறுவது அழகின்மெயேயாம். ஒவ்வொன்றையுந் தேறவிசாரித்துக் குறைகூறுங்கள். ஆழ்ந்தறிந்து அவமானப்படுத்துங்கள். வீணே புறங்கூறாதிருக்க வேண்டுகிறோம்.

- 3:28; டிசம்பர் 22, 1909 -


101. நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் விவசாயவிருத்தியை விரும்புவார்களாயின் குடிகளின் குறைகளை நேரிற் சென்று விசாரிக்கும்படி வேண்டுகிறோம்

பெரும்பாலும் தென்னிந்தியாவிலுள்ள விவசாயக் குடிகளுள் தாசில்தார், முநிஷிப்பு, கணக்கன் முதலானவர்கள் தங்கள் பெயர்களால் பூமிகளை வாங்காவிட்டாலும் தங்கள் குடும்பத்தோர் பெயராலேனும் வாங்கி அநுபவித்துவருகின்றார்கள்.

இவற்றுள் சாதி வித்தியாசமாகிய பொய்க் கட்டுப்பாட்டினால் சாதித் தலைவர்களாயுள்ளவர்களுக்கு மட்டிலும் சகல சுகமும் காணலாம். தாழ்ந்த வகுப்பினரென்போர் நாளுக்குநாள் தாழ்ந்து உள்ளபூமிகளையும் ஊரையும் விட்டு ஓடவேண்டியதே அநுபவமாகும்.

பூமியை உழுது பண்படுத்தி சீருக்குக் கொண்டுவரவேண்டியவர்கள் ஊரைவிட்டு ஓடிவிடுவார்களாயின் சோம்பேரிகளால் பூமிவிருத்தி பெறுமோ, ஒருக்காலுமில்லை.

கிராம உத்தியோகஸ்தர்களுக்குள் சிற்சில பூமிகள் வைத்துக்கொண்டு பணச்செலவில்லாமலே பண்ணையாட்களால் வேலை வாங்கவும், பணச்செலவில்லாமலே ஏறு உழுது பயிர்செய்யவும் வேண்டுமென்கின்றார்கள். இவ்வகையானக் கஷ்டங்களை சகிக்காது தங்கள் பூமிகளைப் பார்த்துக் கொண்டும், தங்கள் வேலையிலிருந்துவிடுவார்களாயின் அவர்களை ஏதேனும் வேறுவகையாற் குற்றஞ்சாட்டி, கெடுத்து ஊரைவிட்டோட்டுகின்றார்கள்.