உள்ளடக்கத்துக்குச் செல்

பறவை தந்த பரிசு-2/தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை

விக்கிமூலம் இலிருந்து
439112பறவை தந்த பரிசு-2 — தவிட்டுக்கு வாங்கிய பிள்ளைபாவலர் நாரா. நாச்சியப்பன்
தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை

பொன்னப்பர் ஒரு பெரிய பணக்காரர். அவர் மனைவி பெயர் தங்கம்மாள். அவர்கள் வீட்டில் பணம் நிறைய இருந்தது. சொன்ன வேலையைச் செய்ய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் பேசிச்சிரித்து விளையாட ஒரு பிள்ளை இல்லை. கொஞ்சிப் பேசி மகிழ ஒரு குழந்தை இல்லையே என்று அவர்களுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது.

ஒரு நாள் ஒரு மனிதன் அவர்கள் வீட்டுக்கு வந்தான். அவன் கையில் ஓர் அழகான பெண் குழந்தை இருந்தது. தங்கம்மாள் அத்தப் பெண் குழந்தையைப் பார்த்தாள். அவளுக்கு அந்தப் பெண் குழந்தைமீது ஆசை ஏற்பட்டது. அவள் பொன்னப்பரிடம், "எனக்கு அந்தக் குழந்தையை வாங்கித் தாருங்கள்" என்று சொன்னாள்.

அதற்குள் அந்த மனிதன் பேசத்தொடங்கினான். "ஐயா நான் ஓர் ஏழை. என் பெயர் கண்ணப்பன். என் மனைவி பெயர் கண்ணம்மாள். நாங்கள் பால்காரர்கள். எங்களிடம் இரண்டு பசுமாடுகள் இருக்கின்றன. அந்த மாடுகளுக்குப் போடத் தவிடு இல்லை. இந்தப் பெண் குழந்தை எங்களுடையது. இதை வைத்துக்கொண்டு எங்களுக்கு ஒரு வண்டித் தவிடு தாருங்கள்" என்றான்.

பொன்னப்பர் வீட்டில் பத்து மாடுகள் இருந்தன. அவற்றிற்குப் போடுவதற்காக அவர் ஒர் அறை நிறையத் தவிடு வைத்திருந்தார். அந்தத் தவிட்டில் ஒரு வண்டி தவிடு அள்ளிக் கொடுத்து விட்டு அந்தப் பெண் குழந்தையை வாங்கிக் கொண்டார்.

தங்கம்மாள் அந்தக் குழந்தையை ஆசையாக வளர்த்து வந்தாள். அந்த அழகான பெண் குழந்தைக்கு முத்துமணி என்று பெயரிட்டாள். முத்துமணியும் தங்கம்மாளிடம் அன்பாக இருந்தாள்.

முத்துமணி தங்கம்மாளை "அம்மா! அம்மா!" என்று தன் சின்ன வாயால் கூப்பிடுவாள். உடனே தங்கம்மாளுக்கு இன்பம் ஏற்படும். "கண்ணே!" என்று முத்துமணியைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு முத்தமிடுவாள்.

முத்துமணி ஒவ்வொரு நாளும் பெரியவளாக வளர்ந்து கொண்டே வந்தாள். அவளுக்குத் தான் இன்னொரு வீட்டுப் பிள்ளை என்பது தெரியாது. தன்னைத் தன் அப்பா விற்றுவிட்டார் என்பதும் தெரியாது. தங்கம்மாள் தன்னை விலைக்கு வாங்கி வளர்க்கிறாள் என்பதும் தெரியாது.

தங்கம்மாள்தான் தன் அம்மா என்று அவள் எண்ணிக்கொண்டிருந்தாள். பொன்னப்பர்தான் தன் அப்பா என்று அவள் நம்பிக்கொண்டிருந்தாள்.

முத்துமணியைப் பெற்ற தாய் கண்ணம்மாளும், அவள் தந்தை கண்ணப்பரும் வேறு ஒர் ஊருக்குப் போய்விட்டார்கள். முத்துமணியைத் தவிட்டுக்குக் கொடுத்து விட்டாலும் அவர்களுக்கு எப்பொழுதும் அவள் நினைவாகவே இருந்தது.

இருந்தாலும் அவர்களால் என்ன செய்யமுடியும்? கொடுத்த பிள்ளையைத் திரும்ப வாங்க முடியுமா? முத்துமணியிடம் உயிரை வைத்திருந்த தங்கம்மாள் அவளைத் திருப்பிக் கொடுப்பாளா? அதனால் அவர்கள் முத்துமணியின் நினைவு இருந்தாலும் அவளைப் பார்க்காமலே இருந்து விட்டார்கள்.

முத்துமணிக்கு ஐந்து வயது வந்தது. பொன்னப்பரும் தங்கம்மாளும் அவளைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதென்று முடிவு செய்தார்கள். அவ்வாறே ஒரு சிறிய பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்கள். அந்தப் பள்ளி கூடத்தில் குழந்தைகள் வகுப்பு, முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு என்று நான்கு வகுப்புக்கள் இருந்தன. குழந்தைகள் வகுப்பில் முத்துமணியைச் சேர்த்து விட்டார்கள்.

குழந்தைகள் வகுப்புக்கு ஆசிரியையாக இருந்த பெண்மணியின் பெயர் பவளக் கொடியம்மாள். பவளக் கொடியம்மாள் குழந்தைகளிடம் மிக அன்பாக இருந்தாள். அவள் முத்துமணிக்கும் மற்ற குழந்தைகளுக்கும் ஆனா ஆவன்னா கற்றுக் கொடுத்தாள். ஒன்று இரண்டு நூறுவரை சொல்லிக் கொடுத்தாள். படங்களைக் காட்டிக் காட்டிப் பாடம் சொல்லிக் கொடுத்தாள். 'நிலா நிலா வா வா’ என்பது போன்ற அழகான பாட்டுக்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்தாள். நல்ல விளையாட்டெல்லாம் பழக்கி வைத்தாள்.

பள்ளிக்கூடம் நன்றாக இருந்தது. முத்துமணி நாள் தவறாமல் பள்ளிக்கூடம் போய் வந்தாள். முத்துமணியுடன் பச்சைமணி என்ற ஒரு சிறுமி படித்து வந்தாள். அவளும் குழந்தைகள் வகுப்பில் தான் படித்தாள். முத்துமணியும் பச்சைமணியும் வகுப்பில் பக்கத்தில் பக்கத்தில் இருந்தார்கள். அதனால் அவர்களுக்குள் நட்பு வளர்ந்தது. இரு வரும் சேர்ந்தால் பேசிக்கொண்டிருப்பார்கள். ஒன்றாக விளையாடுவார்கள்.

முத்துமணி ஒவ்வொரு நாளும் நல்ல நல்ல சட்டையும் பாவாடையும் அணிந்துகொண்டு போவாள். தங்கம்மாள் அவளுக்குப் புதுப்புது மாதிரியாகச் சடை பின்னி அழகுபடுத்தி அனுப்புவாள்.

பச்சைமணியின் பெற்றோர் ஏழைகள்.

அவள் எப்பொழுதும் பழைய சட்டையும் பாவாடையும்தான் அணிந்து வருவாள். அவை சில இடங்களில் கிழிந்துபோய் ஒட்டுப்போட்டுத் தைத்திருக்கும்.

பச்சைமணிக்குத் தானும் முத்துமணியைப்போல் அழகாக இருக்க வேண்டுமென்று ஆசை ஏற்பட்டது. முத்துமணியைப்போல் விலை மிகுந்த பாவாடையும் சட்டையும் வேண்டுமென்று அவளுக்கு ஆசையாயிருந்தது.

பச்சைமணி ஒருநாள் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படும்போது அழுதாள். "ஏன் அழுகிறாய்?" என்று பச்சைமணியின் அம்மா கேட்டாள்.

எங்கள் பள்ளிக்கூடத்தில் முத்துமணி என்று ஒரு பெண் இருக்கிறாள். அவள் எப்போதும் அழகழகான பாவாடை கட்டிக்கொண்டு வருகிறாள். நல்ல நல்ல சட்டை போட்டுக் கொண்டு வருகிறாள். அது மாதிரி எனக்கும் புதுச்சட்டையும் பாவாடையும் வேண்டும்" என்று சொல்லிப் பச்சைமணி அழுதாள்.

பச்சைமணியின் அம்மாவுக்கு முத்துமணியைப் பற்றி எல்லாம் தெரியும். ஏனென்றால் அவர்கள் வீடு பால்கார கண்ணப்பர் முன்பு இருந்த தெருவிலேயே இருந்தது. கண்ணப்பர் முத்துமணியைக் கொண்டு போய்த் தவிட்டுக்குக் கொடுத்துவிட்டு வந்ததும் அவளுக்குத் தெரியும்.

"பச்சைமணி, அழாதே! அந்த முத்துமணி தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை. அவள் புதுப்பாவாடையும் பட்டுச்சட்டையும் போட்டால் உனக்கென்ன? நீ அம்மா வீட்டுப் பிள்ளை அருமையான பிள்ளை! உனக்கு எதற்குப் புதுப்பாவாடையெல்லாம்" என்று பச்சைமணியின் அம்மா சொன்னாள்.

"அன்று பள்ளிக் கூடத்துக்குப் போன பச்சை மணி முத்துமணியைப் பார்த்து," தவிட்டுப் பிள்ளை! தவிட்டுப் பிள்ளை!" என்று கேலி பண்ணினாள். இதைக் கேட்டுப் பள்ளிக் கூடத்தில் இருந்த மற்ற பிள்ளைகளும் அவளைத் "தவிட்டுப் பிள்ளை! தவிட்டுப் பிள்ளை" என்று கேலி செய்தார்கள்.

முத்துமணி பச்சைமணியைப் பார்த்து, "நீ ஏன் என்னைத் தவிட்டுப் பிள்ளை என்கிறாய்?" என்று கேட்டாள்.

"நாங்கள் எல்லோரும் எங்கள் அம்மா வயிற்றில் பிறந்தோம். உன்னை உன் அம்மா பெறவில்லை. ஒரு வண்டி தவிடு கொடுத்து உன்னை வாங்கினாள், அதனால் நீ தவிட்டுப் பிள்ளை!" என்று சொன்னாள் பச்சைமணி.

உடனே எல்லாப் பிள்ளைகளும் கொல்லென்று சிரித்தார்கள். "தவிட்டுப்பிள்ளை!தவிட்டுப்பிள்ளை!" என்று கத்தினார்கள். முத்துமணிக்கு அழுகை அழுகையாக வந்தது.

கண்ணிர் விட்டு அழுது கொண்டே, அவள் பள்ளிக்கூடம் விடுவதற்கு முன்னால் வீட்டுக்குத் திரும்பி விட்டாள்.

முத்துமணி ஒருநாளும் அழுததில்லை. அன்று அவள் அழுதுகொண்டு வந்ததைப் பார்த்ததும் தங்கம்மாளுக்குப் பொறுக்கவில்லை.

"முத்துமணி, முத்துமணி, ஏன் அழுகிறாய்?" என்று துடிதுடித்துப் போய்க் கேட்டாள் தங்கம்மாள்.

"அம்மா...! அம்மா...! நான் தவிட்டுக்குவாங்கிய பிள்ளையாமே! பச்சைமணி சொல்கிறாள்..." என்று சொல்லி முத்துமணி அழுதாள்.

"என் கண்ணே, அவள் சும்மா சொல்கிறாள். பொய்" என்று சொல்லி அவள் அழுகையை நிறுத்த முயன்றாள் தங்கம்மாள். முத்துமணியின் கண்களையும் கன்னத்தையும் துடைத்துவிட்டாள்.

"இல்லை அம்மா. நீங்கள்தான் பொய் சொல்லுகிறீர்கள்! என்னைப் பெற்ற அம்மா யார்? அவர்களை நான் பார்க்க வேண்டும். என்னை அவர்களிடம் கொண்டுபோய் விடுங்கள்!"என்று சொல்லி அழுது கொண்டேயிருந்தாள் முத்துமணி.

"முத்துமணி, நான் தான் உன்னைப் பெற்ற அம்மா! அந்தப் பெண் உன்னை அழவைத்து வேடிக்கை பார்ப்பதற்காகச் சொல்லியிருக்கிறாள். அழாதே கண்ணே!"என்று மேலும் ஆறுதல்சொல்லித் தேற்றினாள் தங்கம்மாள்.

முத்துமணி அழ அழத் தங்கம்மாளுக்கும் அழுகையாக வந்தது. அம்மாவும் அழுவதைக் கண்டதும் முத்துமணி பொங்கிவந்த தன் அழுகையை யெல்லாம் மிக முயன்று அடக்கிக் கொண்டாள். ஆனால், தன்னைப் பெற்ற உண்மையான அம்மாவைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று மனத்துக்குள் முடிவு கட்டிக் கொண்டாள்.

தங்கம்மாளிடம் எப்போது கேட்டாலும் அவள் "நான் தான் உன்னைப் பெற்ற அம்மா! உன் அப்பாவை வேண்டுமானாலும் கேட்டுப்பார்!"என்று சொன்னாள். ஆனால் முத்துமணிக்கு மட்டும் தன்னைப் பெற்ற அம்மா வேறு யாரோ இருக்கிறார்கள் என்றே தோன்றியது.

முத்துமணி ஒருநாள் யாருக்கும் தெரியாமல் கட்டுத்துறைக்குப் போனாள். கட்டுத்துறையில் மாடுகளுக்குப் புல் போட்டுக் கொண்டிருந்தான் கந்தன். கந்தன் மாடு மேய்ப்பவன். அவனிடம் முத்துமணி போய் "கந்தா, எனக்கு ஓர் உதவி செய்வாயா?"என்று கேட்டாள்.

"என்ன?"என்று கேட்டான் கந்தன்.

"என்னைப் பெற்ற அம்மாவை நான் பார்க்க வேண்டும். அவர்களிடம் என்னைக் கூட்டிக் கொண்டு போய் விடுகிறாயா?" என்று கேட்டாள்.

கந்தனுக்கு முத்துமணியின் உண்மையான அம்மாவையும் அப்பாவையும் நன்றாகத் தெரியும். ஆனால், அவர்கள் அப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது.

"குழந்தாய்! உன்னைப் பெற்ற அம்மா இந்த ஊரில் இல்லையே!" என்றான் கந்தன்.

"எந்த ஊரில் இருந்தாலும் சரி. கந்தா, நீ என்னை கூட்டிக் கொண்டு போய் விட்டால் ஒரு ரூபாய் தருகிறேன்" என்றாள் முத்துமணி.

முத்துமணி கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலி போட்டிருந்தாள். கைகளில் தங்கக் காப்புகள் போட்டிருந்தாள். காதுகளில் வைரத்தோடு போட்டிருந்தாள். கந்தன் மனத்தில் ஒரு பயங்கரமான எண்ணம் தோன்றியது. முத்துமணியை ஏமாற்றி அவற்றை யெல்லாம் பறித்துக் கொண்டு விட வேண்டும் என்று அவன் நினைத்தான்.

"குழந்தாய், உன் அம்மா இருக்கிற ஊருக்குக் காட்டுப் பாதையாகப் போக வேண்டும்" என்று சொன்னான் கந்தன்.

"எந்தப் பாதையாக இருந்தாலும் சரி, நீ என்னைக் கூட்டிக் கொண்டு போய் விடு" என்று சொன்னாள் முத்துமணி.

"சரி, இன்று இரவு அப்பாவும் அம்மாவும் தூங்கிய பிறகு கட்டுத் துறைக்கு வா. நான் வைக்கோல் போர் அடியில் படுத்திருப்பேன். என்னை எழுப்பு. நான் உன்னைப் பெற்ற அம்மாவிடம் கூட்டிக் கொண்டு போகிறேன்" என்றான் கந்தன்.

"இப்போதே போவோம். புறப்படு’"என்றாள் முத்துமணி.

"ஐயையோ! வேண்டாம். அப்பா அம்மாவுக்குத் தெரிந்தால் போக விட மாட்டார்கள்" என்றான் கந்தன்.

"சரி, இரவு பத்துமணிக்கு வருகிறேன். நீ விழித்துக் கொண்டிரு" என்று சொல்லி விட்டு முத்து மணி வீட்டுக்குள் போனாள்.

அன்று இரவு சாப்பாட்டுக்ப் பிறகு எல்லாரும் தூங்கி விட்டார்கள். ஆனால் முத்துமணி மட்டும் தூங்கவில்லை. வீடு முழுவதும் ஒரே அமைதியாக இருந்தது.

இரவு மணி பத்து அடித்தது. முத்துமணி மெதுவாகப் படுக்கையிலிருந்து எழுந்தாள். ஓசைப்படாமல் கதவைத் திறந்து கொண்டு கட்டுத்துறைக்குச் சென்றாள்.

அங்கு கந்தன் சொன்னபடி வைக்கோல் போரில் படுத்திருந்தான். அவன் முத்துமணியைக் கண்டவுடன் எழுந்தான். அவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

இரண்டு பேரும் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்கள். காட்டுப் பாதையில் நடந்து சென்றார்கள்.

காட்டுப் பாதையில் கண் தெரியாத இருட்டாக இருந்தது. தொலைவில் எங்கோ ஒரு சிங்கம் முழக்கம் செய்தது. அதன் எதிரொலி பயங்கரமாகக் கேட்டது. ஒரு பக்கத்தில் நரிகள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. காட்டுப் பூச்சிகளின் சத்தம் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. ஆந்தைகளும், வெளவால்களும் பறந்து கொண்டிருந்தன.

முத்துமணி இவற்றை யெல்லாம் கண்டு பயப்படவில்லை: கந்தன் கையைப் பிடித்துக் கொண்டு அவள் நடந்து சென்று கொண்டிருந்தாள். தன்னைப் பெற்ற அம்மாவைப் பார்க்க போகிறோம் என்ற ஆசை அவளைத் தள்ளிக் கொண்டு சென்றது.

நடந்து நடந்து முத்துமணிக்குக் கால் வலித்தது."கந்தா, அம்மா ஊர் இன்னும் எவ்வளவு தொலையிருக்கிறது?" என்று கேட்டாள்.

"இன்னும் எவ்வளவோ தொலையிருக்கிறது. உனக்குக் கால் வலித்தால் இங்குக் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்து விட்டுப் போவோம்" என்று சொன்னான் கந்தன்.

சரியென்று வழியில் இருந்த ஒரு பெரிய கல்லின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டாள் முத்துமணி. கந்தனும் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். முத்து மணிக்குத் தூக்கம் வருவது போல் இருந்தது. கல்லின் மேல் சாய்ந்து சற்றே கண்களை மூடினாள். சிறிது நேரத்தில் நன்றாகத் தூங்கத் தொடங்கி விட்டாள்.

கந்தன் இதுதான் சமயம் என்று அவள் காதிலும் கழுத்திலும் கையிலும் இருந்த நகைகளை யெல்லாம் கழற்றிக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டான். நட்ட நடுக் காட்டில் முத்துமணி தன்னந்தனியாகக் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் கண்விழித்தபோது பொழுது நன்கு விடிந்து விட்டது. எங்கும் ஒரே வெளிச்சமாய் இருந்தது. காட்டுப் பறவைகள் அங்கும் இங்கும் பறந்து சென்று இரை தேடிக்கொண்டிருந்தன. ஒரு புள்ளிமான் குட்டி துள்ளித் துள்ளி ஓடுவது வேடிக்கையாக இருந்தது. குரங்குக் குட்டிகள் கிளைக்குக் கிளை தாவிப்பாய்ந்தும் குட்டிக்கரணம் போட்டும் வேடிக்கை விளையாட்டுகள் ஆடிக் கொண்டிருந்தன: அவை ஒன்றன் வாலை ஒன்று பிடித்துக் தொங்கி ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் பாலம் அமைத்தன. அந்தக் குரங்குப் பாலத்தின் மீது சில குரங்குகள் நடந்து சென்றன.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்துமணி, "கந்தா, இந்தக் குரங்குகள் எவ்வளவு அழகாய் விளையாடுகின்றன!" என்று சொல்லித் திரும்பினாள். பக்கத்தில் கந்தனைக் காணாமல் திடுக்கிட்டுப் போனாள்.

"கந்தா...கந்தா!’’ என்றுகூவினாள் முத்துமணி. காட்டில் அவளுடைய குரலின் எதிரொலி தான் கேட்டது. கந்தனைக் காணவில்லை. அவனைத் தேடிக் கொண்டு புறப்பட்டாள். காட்டில் அவளுக்குப் பாதையே தெரியவில்லை.

திடீரென்று அவள் தன் கையில் காப்புகள் இல்லாததைக் கவனித்தாள். பிறகு சங்கிலியும் தோடும் காணாமல் போனதையும் அறிந்து கொண்டாள். கந்தன்தான் அவற்றைக் திருடிக் கொண்டு தன்னைக் காட்டில் விட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

அவளுக்குப் பசியெடுத்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

பெற்ற அம்மா எங்கே இருக்கிறாளோ; எப்படி இருக்கிறாளோ; அவளைக் கண்டு பிடிக்க முடியுமோ; முடியாதோ? என்றெல்லாம் நினைத்த போது அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.

அப்போது அந்தப் பக்கமாக ஒரு பச்சைக்கிளி பறந்து வந்தது. முத்துமணி அழுது கொண்டிருந் ததைப் பார்த்து அதற்கு இரக்கமாக இருந்தது.

"பாப்பா...பாப்பா ஏன் அழுகிறாய்?"என்று கேட்டது பச்சைக்கிளி.

"என்னைப் பெற்ற அம்மா தவிட்டுக்கு விற்று விட்டாள். நான் அவளைத் தேடிக் கொண்டு புறப்பட்டேன். கூட வந்த கந்தன், என் நகைகளைத் திருடிக்கொண்டு ஓடிவிட்டான். எனக்குப்பசிக்கிறது" என்றாள் முத்துமணி.

"கொஞ்சம் இரு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளி பறந்துசென்றது. அது நேராக ஒரு வாழைத் தோட்டத்துக்குச் சென்றது. அந்தத் தோட்டத்துக்கு ஒரு குரங்குக் குட்டி காவல் இருந்தது.

"குரங்கண்ணா, குரங்கண்ணா! ஒரு சின்னப் பெண்ணுக்கு வயிறு பசிக்கிறது! அந்த நல்லபெண்ணுக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுங்கள்" என்று கேட்டது பச்சைக்கிளி.

குரங்கு உடனே ஒரு வாழை மரத்தில் ஏறி ஒரு சீப்பு வாழைப்பழம் பறித்துக் கொண்டுவந்து கொடுத்தது

பச்சைக்கிளி அந்த வாழைப்பழச் சீப்பைச் கொண்டுவந்து முத்துமணியிடம் கொடுத்தது. முத்துமணி அதைத் தின்று பசியாறினாள்.

"முத்துமணி, உன்னைப் பெற்ற அம்மாவை நான் பார்த்ததில்லை. ஆனால், நீ என் கூடவந்தால் நாம் ஊர் ஊராகச் சென்று உன் அம்மாவைத் தேடலாம்"என்று கூறியது பச்சைக்கிளி.

பச்சைக்கிளியுடன் முத்துமணி காட்டைக் கடந்து சென்றாள். அவளுக்கு பசி யெடுத்தபோது அது எங்காவது போய் ஏதாவது பழமோ சோறோ பலகாரமோ கொண்டுவந்து கொடுக்கும். ஒவ்வோர் ஊராகச் சென்று அவள் தன்னைப் பெற்ற அம்மாவைத் தேடினாள்.

வழியில் கண்டவர்களை யெல்லாம் பார்த்து, "என்னைப் பெற்ற அம்மா என்னைத் தவிட்டுக்கு விற்றுவிட்டாள். நான் அவளைத் தேடி வந்திருக்கிறேன். உங்களுக்கு அவளைத் தெரியுமா? தெரிந்தால் காட்டுங்கள்" என்று கேட்டாள்.

"பெற்ற பிள்ளையைத் தவிட்டுக்கு விற்ற அம்மாவை நாங்கள் பார்த்ததில்லை" என்று ஒவ்வொரு வரும் பதில் சொல்லி விட்டார்கள்.

இப்படிப் பல ஊர்கள் சுற்றிவிட்டு முத்துமணி ஒரு சின்ன ஊருக்கு வந்தாள், ஒருநாள் அந்த ஊர்க் கோயில்வாசலில் அவளும் பச்சைக்கிளியும் நின்று கொண்டிருந்தார்கள்.

அந்தக் கோயில் வாசலில் ஒர் அம்மா பொங்கல் வைத்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா நீங்கள் எதற்காகப் பொங்கலிடுகிறீர்கள்?" என்று கேட்டாள் முத்துமணி.

"தெய்வத்துக்கு"என்றாள் அந்த அம்மா.

"தெய்வத்துக்கு என்றால் எதற்கு? தெய்வமா சாப்பிடுகிறது?" என்று கேட்டாள் முத்துமணி.

"அப்படிப் பேசாதே! என் மகள் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகப் பொங்கலிடுகிறேன்.

தெய்வத்துக்குப் படைத்துவிட்டு அந்தப் பொங்கலை உன்னைப் போல் சின்னப் பிள்ளைகளுக்குக் கொடுப்பேன்"’ என்றாள் அந்த அம்மா.

"அம்மா நீங்கள் நல்ல அம்மாவாகஇருக்கிறீர்கள். எனக்கும் என் பச்சைக்கிளிக்கும் பொங்கல் தருவீர்களா?" என்று கேட்டாள் முத்துமணி.

"கொஞ்சம் இரு, தெய்வத்துக்குப் படைத்து விட்டுத் தருகிறேன்" என்றாள் அந்த அம்மா.

தெய்வத்துக்குப் படைத்து முடிந்ததும் அந்த அம்மா முத்துமணிக்கும் பச்சைக்கிளிக்கும் இரண்டு இலைகளில் பொங்கல் வைத்துக் கொடுத்தாள். முத்துமணி அந்தப் பொங்கலை வாங்கித் தின்றதும், "அம்மா, உங்கள் பொங்கல் மிக அருமையாக இருக்கிறது. என் அம்மாவைத் தேடிக் கண்டுபிடித்ததும், இதுபோல் பொங்கல்வைத்துத் தரச்சொல்லுவேன்!’’ என்றாள்.

"குழந்தாய், உன்னைத் தேட வைத்து விட்டு உன் அம்மா எங்கே போய்விட்டாள்?" என்று அந்த அம்மா கேட்டாள்.

"அம்மா, என்னைப் பெற்ற அம்மா என்னைத் தவிட்டுக்கு விற்றுவிட்டாள். நான் அவளைத் தேடிக் கொண்டு திரிகிறேன். உங்களுக்கு என் அம்மாவைத் தெரியுமா? எனக்கு காட்டுகிறீர்களா!" என்று கேட்டாள் முத்துமணி.

"ஆம் அம்மா, பத்து நாளாகத் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்று சொன்னது பச்சைக்கிளி.

"மகளே, உன்னை வளர்த்த அம்மாவின் பெயர் என்ன?" என்று கேட்டாள் அந்த அம்மா.

"தங்கம்மாள்" என்றாள் முத்துமணி.

" ஐயோ! நான் தான் உன்னைப் பெற்றெடுத்து விற்ற பாவி!" என்று சொல்லி முத்துமணியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கோவென்று அழுதாள் அந்த அம்மா.

"ஆ! நீங்கள்தான் என்னைப் பெற்ற அம்மாவா! அம்மா, அம்மா உங்களைத் தேடிக் கண்டுபிடித்து விட்டேன்" என்று மகிழ்ச்சியோடு கூவினாள் முத்துமணி.

"என் தங்க மகளே, வா வீட்டுக்குப் போவோம்" என்று முத்துமணியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனாள் கண்ணம்மாள். பச்சைக்கிளியும் அவர்கள் கூடச் சென்றது, கண்ணப்பரும் தன் மகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

முத்துமணி கண்ணம்மாளிடம், பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் தன்னைக் கேலி செய்ததையும், தான் அம்மாவைத்தேடிப் புறப்பட்டதையும் கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அப்போது'அங்கே வீட்டுவாசலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. அந்த வண்டியிலிருந்து ஒரு வேலைக்காரன் இறங்கி வந்தான்.

"அம்மாமுத்துமணி வீட்டைவிட்டு ஓடிவிட்டாள். தங்கம்மாள் அதே ஏக்கமக்க நோயுடன் இருக்கிறார்ள். நாளுக்குநாள் காய்ச்சல் அதிகமாகிக் கொண்டு வருகிறது. முத்துமணி முத்துமணி என்று எப்பொழுதும் பிதற்றுகிறார்கள். முத்துமணியைப் பார்க்காவிட்டால் இறந்து விடுவார்கள் என்று மருத்துவர்கள் கூறு கிறார்கள். முத்துமணி இங்குவந்திருந்தால் அவளைக் கூட்டிக் கொண்டு உங்களை உடனே புறப்பட்டுவரச் சொன்னார்கள்" என்றான் அந்த வேலைக்காரன்.

இரக்க மனம்படைத்த கண்ணம்மாள், முத்து மணியையும் கூட்டிக்கொண்டு கண்ணப்பருடன், அதே குதிரை வண்டியில் ஏறிப் புறப்பட்டாள். பச்சைக்கிளியும் அவர்களுடன் புறப்பட்டது. அன்று மாலை குதிரைவண்டி பொன்னப்பர் வீட்டின் எதிரில் வந்து நின்றது.

எல்லாரும் இறங்கி உள்ளே சென்றார்கள். தங்கம்மாள் ஒர் அறையில் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். முத்துமணி," அம்மா!" என்று சொல்லிக் கொண்டு அருகில் சென்றாள்;" வந்துவிட்டாயா கண்ணே! இனி நான் பிழைத்துவிடுவேன்"என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள் தங்கம்மாள்:

பொன்னப்பர் கண்ணப்பரைப் பார்த்து, இனி நீங்களும் இங்கேயே இருந்துவிடுங்கள். உங்களைப் பிரிந்து முத்துமணியால் இருக்க முடியாது. முத்துமணியைப் பிரிந்து எங்களால் இருக்க முடியாது. ஆகவே எல்லோரும் ஒன்றாய் இருப்போம்" என்றார்.

கண்ணப்பர் 'ஆகட்டும் அப்படியே இருக்கிறோம்' என்றார்.

அன்று முதல் எல்லோரும் ஒன்றாகவும் நன்றாகவும் இன்பமாகவும் இருந்தார்கள்.

முத்துமணி தனக்கு உதவி செய்த பச்சைக்கிளியையும் தன்னுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டாள். அதற்கு நாள்தோறும் பாலும்பழமும் கொடுத்து, அதனுடன் பேசிச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

மாடுமேய்க்கும் கந்தன், அவளுடைய நகைகளை யெல்லாம் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து பொன்னப்பரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.