புலவர் த. கோவேந்தன்
207
1924 முதல் 1927 வரையில் இவர் சிதம்பரத்தில் ராஜா அண்ணாமலை செட்டியார் நிறுவிய தமிழ்க் கல்லூரியின் தலைவராக இருந்தார். அங்கிருந்து ஒய்வு பெற்ற பிறகு சென்னைக்கு வந்து தம் பதிப்புத் தொண்டை நடத்தி வந்தார். அதோடு தம்முடைய அனுபவங்களை இனிய தெளிவான உரைநடையில் எழுதத் தொடங்கினார். பல பத்திரிகைகளின் மலர்களுக்குக் கட்டுரைகள் வழங்கினார். கலைமகளில் ஒவ்வொரு மாதமும் ஒரு கட்டுரை எழுதி வந்தார்.
இவருடைய கட்டுரைகளையும் அனுபவ வரலாறுகளையும் ஆர்வத்துடன் தமிழ் நாட்டினர் படித்து இன்புற்றனர். அக்கட்டுரைகளில் தமிழின் பெருமையும், பல பெருமக்களுடைய வரலாறுகளும், பண்பாடும் வெளியாயின. பல பெரியார்களுடைய வரலாறுகளை இவர் எழுதி வெளியிட்டார். தம் ஆசிரியராகிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை இரண்டு பாகங்களில் விரிவாக எழுதி 1933, 1934ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார். தியாகராச செட்டியார் சரித்திரம், கோபால கிருஷ்ண பாரதியார் சரித்திரம், மகா வைத்தியநாதையர் வாழ்க்கை வரலாறு, கனம் கிருஷ்ணையர் வரலாறு ஆகியவற்றை எழுதினார்.
நந்தனார் சரித்திர ஆசிரியராகிய கோபால கிருஷ்ண பாரதியாரிடம் இவர் இளமையில் சிலகாலம் இசைப்பயிற்சி பெற்றவர். இவர் எழுதிய பலவகைக் கட்டுரைகள் நான் கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும், நல்லுரைக் கோவை, நினைவு மஞ்சரி ஆகிய புத்தகங்களாக வெளியாகியுள்ளன. 1927ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவில் சங்க காலத்தைப் பற்றிப் பத்துச் சொற்பொழிவுகள் ஆற்றினார். அவை, ‘சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும் என்ற பெயரோடு புத்தக வடிவில் வந்திருக்கின்றன.
அரசாங்கத்தார் இவருக்கு 1906ஆம் ஆண்டில் மகாமகோபாத்தியாய என்ற பட்டத்தை அளித்தனர்.