வெள்ளியங்காட்டான்
“காசுபண மிதுவெல்லா மெதற்கா” யென்றேன்
“கவிஞர்புறப் படுங்கால்கைச் செலவுக்” கென்றாள்.
நேசமொடு நின்பணத்தை யெடுத்துக் கொண்டு
நேரத்தி லூர்போய்ச்சே' ரென்று சொல்ல
யோசித்தேன்; யோசனையைத் தன்யூ கத்தால்
உணர்ந்தவுடன் தாரா, 'வேண்டாமே' யென்று
பாசத்தால் கண்சமிக்கை செய்தாள்; வீட்டில்
படும்பாட்டை யுங்குறிப்பால் படிக்க லானாள்.
திறந்தவிட வாய்திறந்த படியே நின்று
திருதிருவென் றிதைப்பார்த்துத் திகைத்துத் தன்னை,
மறந்திருக்கும் மோர்க்காரி பாக்கி வேறு
மனத்தைமிக வருத்திற்றங் கென்ன செய்ய?
இறந்தாலுந் தேவலைபோ லிதய மென்னிற்
றிவ்வுலகத் தியல்பிழிந்த தாயிற் றென்றே
பறந்து பறந் தழைத் தவனும் பரிவாய்ப் போனாள்;
பரவசமாய்ப் பணமெண்ணிப் பார்த்தாள், தாரா!
சற்றுவெளி யேசென்று வந்தா லிந்தச்
சங்கடமெல் லாமும்சா மெனநா னெண்ணி
முற்றத்தில் காலிட்டேன், தாரா வந்தென்
முன்னின்று வழிமறித்து முகத்தூ டென்னை
உற்றுப்பார்த் தாள்; வெளியே போகா தீந்நீர்!
ஒருநொடியி லுணவளிப்பே னுண்டு குத்தி
இற்றைக்கே னும்சற்றிங் கின்னல் தீர
இளைப்பாறி யின்புறுங்க ளென்றா ளன்றே!
114