இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவியகம்
பதற்றம்
அரைநூறு வருட வாழ்வில்
அறவழி யறிந்து றைந்தென்
னுரைசெய லொன்றி யோயா
துழைத்துப்பார்த் தாயிற் றுள்ளம்
பெரிதும் நொந் துறுதி தேய்ந்து
பெற்றது பிணிமூப் பன்றி,
ஒருசிறு நலனு முற்றிங்
குருப்படக் காண்கி லேனே!
எனவுளஞ் சலித்துத் தேக
மிளைத்தெலும் புக்கூ டாகி,
இனிவளஞ் செய்த லென்னா
லியலாதென் றிருந்தே னேங்கி!
கனிவுளங் காட்டிக் கண்ணில்
வேலையும் காட்டிக் காக்கும்
மனைவியும், 'மக்கள்' வாயில்
மண்விழுந் ததுகா' ணென்றாள்.
உகிர்சுற்றின் மீது லக்கை
ஊன்றிய தெனவே, உள்ளம்
மிகமிகப் பதறி “யென்ன?
என்னடீ! விழுந்த" தென்றேன்.
சிகையினை முடிந்த வாறே
சிரிப்பொடு வெறுப்பும் சிந்திச்
‘சுகமுடன் பூனை பாலைச்
சுடச்சுடக் குடித்த தென்றாள்.
115