கவியகம், வெள்ளியங்காட்டான்/புத்தகம்

விக்கிமூலம் இலிருந்து
புத்தகம்


எத்தனையோ ஏற்ப இருந்துமிலை யிங்கொருநற்
புத்தகம் போலும் பொருள்.

தத்தம் தருமம், தகுதி - தாமுயர்த்திப்
புத்தகம் நல்கும் புகழ்.

பித்தம் பிடிவாதம் பேதைப் பிணிதீர்க்கும்
வைத்தியன்காண் வாழ்விற் கது.

குத்தும் வழக்கும் குடியழிவு மாய்க்கழியும்
புத்தகம் புல்லார்ப் பொழுது.

புத்தகத்துள் தோய்ந்து புலன்கூர்மை யுற்றவனைச்
சத்தியாயக் காணும் சகம்.

'சொத்து சுகமனைத்தும் சொப்பனமே' என்பவர்க்கும்
புத்தகமே யாகும் புகல்.

புத்தகத்தைப் போற்றிப் புலன்புகுத்தாப் பூதவுடல்
இத்தரைக்கோ ரின்னாச் சுமை.

நித்தமும் புத்தகத்துள் நெஞ்சம் பதிப்பவனை
வித்துவானாக்கும் விதி.

சித்தத்துள் சீராய்ச் சிறந்ததனைச் சேமித்தோன்
புத்தகமாய்ப் பூப்பான் புறம்.

சத்தியமே சார்பாம் சார்ந்தகருத் தேபாவாம்
புத்தகமே தெய்வம் புவிக்கு.

புத்தகத்தைப் போற்றிப் புதுப்புத் தகமாவேள்
புத்தகம்நா னேபுத் தகம்.

புத்தகமாய் மாறுங்கள் புலவர்காள்! புத்தரைப்போல்,
புத்தகம் பொன் போலும் பொருள்.