கவியகம், வெள்ளியங்காட்டான்/உதவிகள்

விக்கிமூலம் இலிருந்து
உதவிகள்

கருத்தொடு கண்ணைக் கவருமோ ரோவியக்
காட்சியாய் வைகறையை - மிகப்
பொருத்த முடனெனக் காகப் பருதி
புதுக்கியே வைக்கிறது!

ஊருல கத்தினைக் காணவே கானல்விட்
டோடி வருமருவி - என்னைச்
சேர அழைத்துடல் மாசைக் கழுவிச்
சிறக்க விடுகிறது!

தன்னிகரற்ற தமிழெனும் கன்னி
தனிப்பற்று கொண்டவளாய்ப் - பின்னர்
என்னை யமர்த்தி யமிழ்தினை யுட்ட
இதயம் நிறைகிறது!

பற்றற்ற வானகப் பள்ளியில் பாடும்
பறவையினங்களெலாம் - இசை
கற்றுத் தெளிந்திட முற்று முதவிக்
களிப்புறச் செய்கிறது!

சிரிப்பு மனமலர் சிந்திடு மென்னருஞ்
செல்வச் செடிகொடிகள் - கலை
விருப்புக் கிணங்கியே மெளன நிலையை
விளக்கிக் கொடுக்கிறது!

குறையென்று கூற எதுவொன்று மற்ற
குவலயத்தில் படுத்தால் - கோல
நிறைமதி யென்னுள் மின்புறப் போர்த்த
நிலவை விரிக்கிறது!

தென்ற லிறுதியாய் வந்துநன் றென்னவே
தேகம் தனைத்தழுவி - கருத்
தொன்ற விரவிக் கவிதை யியற்றி
உதவியும் செய்கிறதே!