கவியகம், வெள்ளியங்காட்டான்/புறப்பாடு

விக்கிமூலம் இலிருந்து
புறப்பாடு

நடந்து கொண்டி ருக்கிறேன்
நாடொறும்நானாவலாய்,
கடிந்தெரிக்கும் வெயிலிலும்;

கலங்கிப் பெய்யும் மழையிலும்!
நடந்து


நிலத்தில் துள்ளி வீழ்ந்தமீன்
நீர்க்குள் பாய்ந்து நீந்தல்போல்
நலித்த இரவு கழிந்ததும்:

நகரும் ஞாயி றெழுந்ததும்!
நடந்து


பொய்பொறாமை யெனுமுளப்
புழுதி வியர்வை போகவே
மெய்மை நதிக ளாடிமென்

மேலுந் தூய்மை யாகவே
நடந்து


'பொறுமை' யென்ற பொருளுடன்
'புலமை' யென்ற துணையுடன்
'சிறுமை' யென்ற பிணிகளைச்

சிதற டிக்க எண்ணியே!
நடந்து


பரந்து வீசுங் காற்றினில்
பரிம ளங்க லந்ததைப்
புரிந்து கொண்ட மதுகரம்

பூவை நாடிப் போதல்போல்!
நடந்து

தேனெ னத்தி கழ்ந்திடும்
செந்த மிழ்நன் னாட்டையே
வானெனத்து லக்கிடும்

வல்ல மைகை கூடவே!
(நடந்து)


கடலை நோக்கி யோடுமோர்
கட்டிலாத அருவிபோல்
உடலை யூக்கி, யொளிநிறைத்

துலகை மேம்படுத்தவே
(நடந்து)