உள்ளடக்கத்துக்குச் செல்

கவியகம், வெள்ளியங்காட்டான்/எழு!

விக்கிமூலம் இலிருந்து

எழு

ஆடிய தொட்டிலி லுள்ள குழந்தையை
அன்புக் கரங்களினால் - அன்னை
வாடும் பயிரினை நாடும் மழையென
வந்தெடுத்துத் தழுவ,
கூடிய தூக்கம் தெளிந்தவை யாகித்தம்
 கோமளக் கண்மலர்ந்து - வண்டினம்
பாடிய இன்னிசைப் பாடலைக் கேட்டதும
பரவச மாய்ச்சிரிக்க.

பூமி முழுவதும் போர்த்து மறைத்தஇப்
புன்மை இருள்படலம் - சற்றும்
தாமத மின்றித் தயாளபமில்லா தவர்
தம்மகம் சேர்ந்ததென.
சேமமாய்த் துங்கி விழித்தன மென்றுநம்
சிந்தை பரவசமாய் - எழில்
தாமரை யாதி மலர்களும் தையலர்
தம்முகம் போல்மலர.

கண்படும் வேளையில் கண்கள் நடுங்கஇக்
காங்குல் முழுவதுமே - பெய்த
வெண்பனி வேதனை செய்தது வென்று
வெகுண்டன வாயெழுந்து
பண்பும் பயனுமில்லாத பனியேநீ
பாழாகிப் போவெனவே - மிகப்
புண்படும் நெஞ்சுடன் வைவன போலுமப்
புட்கள் குரலடங்க.

பொன்னொளி வீசிக் கதிரவன் தோன்றுமுன்
புன்னகை பூத்துடனே - என்றும்
என்னுயி ருக்குயி ராகித் திகழ்ந்திடும்
இன்பத் தமிழ் மொழியே
உன்னையு மென்னையு முய்விக்க வுள்ள
உயர்ந்த சுவைக்கவிதைக் - கலை
தன்னை வளர்க்கத் தலைநிமிர்ந் தேயெழு
தாரணி யோங்கிடவே!