உள்ளடக்கத்துக்குச் செல்

கவியகம், வெள்ளியங்காட்டான்/மகிழ்ச்சி

விக்கிமூலம் இலிருந்து


மகிழ்ச்சி


ஆற்றுக்குச் சென்றினிய நீரி லாடி
அரியதுகி லெழிலாகத் தரித்துச் சென்று,
நோற்றமண மலர்பறித்துக் கொண்டு வந்து
நோக்குறுநற் செண்டாக்கி தலையில் சூடிக்
கூற்றுவனே எனும்படியாய் அஞ்ச னத்தைக்
குழைதடவும் விழிக்கிட்டுத் திலகம் வைத்துப்
போற்றுகிற புன்முறுவல் இதழில் பூத்தும்
பொலியமனம் பூரித்துப் புனைந்து நின்றார்.

முன்றிலைநன் றாய்ப்பெருக்கிக் குளிர்ந்த நீரை
முத்திறைத்த தெனஅள்ளித் தெளித்து விட்டு
நன்றெனப்பொன் கிண்ணிதனைத் திறந்து கோலம்
நலம்பெருக நசைபெருகப் போட்டு வைத்தாள்;
அன்றலர்ந்த மலர்மணத்தை யளைந்து கொண்ட
ஆசைதனை மூட்டஅசைந்தசைந்து வந்த
தென்றல்தனில் திளைத்துலகை மறந்தான், மாலை
தேன்பாகாய் இனித்திடவந் துற்ற தென்றே!

தாமரைதன் இதழ்க்கதவு மூடக் கண்டத்
தண்குமுதம் கண்மலர்ந்து தகைமை காட்டக்
காமலரில் மதுவைநனி பருகி வண்டு
கண்மயங்கி வழிநெருடும் காட்சி தன்னை
மாமரச்சோலைக் குயில்தன் மனங்க சிந்து
மணம்புரிந்த எழில் பெடைக்குமகிழக் காட்டிக்
கோமுறையாய் இசையமுதை வடிக்கக் கேட்டுக்
குறகுளணத் தன்னிதயம் குளிர லானாள்.

மெத்தமனங் கனிந்தவன்போல் கதிரோன் தானும்
மேற்றிசையில் போய்மறைய லானான்; வானில்
தத்தமிருப் பிடஞ்சேரப் பறவை யாவும்
தம்மினத்தோ டணியணியாய்ப் பறக்கத் தங்கிக்
கத்துகின்ற கன்றுகளை நினைத்துக் கொண்டே
கறவையெலாம் விரைந்துவரும் காம நந்தி
குத்துவிளக் கேற்றியபின் தனது காதல்
கொழுநன்வரின் அவள்மகிழ்ச்சி கூறப் போமோ!