கவியகம், வெள்ளியங்காட்டான்/முகவுரை
சத்தியத்தின் பாதை என்னவோ மிகக் கடினமானது தான். ஆயினும் கவிஞன் அதைக் கடந்து செல்லத் தயங்குவதில்லை. பொய்மை எனும் இருட்டு அவனின் எழுத்து என்னும் இதயத்தைக் கொன்றுவிடும். ஆதலால் தான் அவன் சத்தியம் என்னும் விளக்கை உடன் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
'தென்றலிலே நிலவுகலந் திடுத லொப்போ?
திருக்குறளில் வாழ்வுகலந் திடுத லொப்போ?
மன்றலிலே முல்லைகலந் திடுத லொப்போ?
மதுரவிசை தமிழில்கலந் திடுத லொப்போ?'
கவிஞன் ஒப்பு நோக்குகிறான் தீர்மானிக்க முடியாமல் -
நாட்டினிலே ஊரூராய் திரியும் துன்பம்
நல்லவர்கள் யாரெனவே தேடும் துன்பம்
ஏட்டினிலே பொருளுணர்ந்து தேர்ச்சி யெய்ய
இரவினிலே கண்விழித்து கற்கும் துன்பம்
வீட்டினிலே மூட்டை யெனும் பூச்சியாலே
விளைகின்ற துன்பத்துக் கிணை யாகாதே!
உலகில் கவிஞனுக்குள்ள எத்தனையோ துன்பங்களில் இது மிகப் பெரும் துன்பமாக
வெறும் கற்பனை என்பது காகிதப் பூக்களாக, அழகுள்ளதாக, மனம் கவர்வதாக இருக்கலாம். ஆனால், அனுபவம் என்னும் உண்மையால் மூட்டைப் பூச்சியின் கடியை கூட உயிரோட்டமாக கவிதையில் கூற முடிகிறது.ஒரு கவிஞன், மகளுக்கு தீபாவளி பரிசாக, “நான் உனக்குக் கொடுப்பது ஒரு மேதையின் இரவல் வாக்கியமே. அதை மறவாது மனதில்வை! 'பிறர் தவறுகளை தேடிப் பார்க்காதே. உன் தவறுகளைத் தேடிப் பார். அதை அறிந்து களைந்தெறி அதுவே உன் துன்பங்களுக்கெல்லாம் தீர்வாகும்” என்கிறார்.
கவிச்சக்ரவர்த்தி ரவீந்திரர்:
"அவன் என்னை ஏசுகிறான் என்றால், அதைத் திரும்பச் செய்ய என்னால் முடியாது. ஏனெனில், நான் புகழ முடியாத ஒருவனை எவ்வாறு நான் இகழ முடியும்?" எனக் கேள்வி எழுப்புகிறார்.
சிறுவயதில் தாய், பின் முதல் குழந்தை, கணவன் என இறந்தவர்கள் அனைவரும் மறக்கப்பட்டு விட்ட போதும். எனக்கு வறுமையை மட்டுமே பரிசாகக் கொடுத்த தந்தை, நெஞ்சில் நீங்கா இடம்பெற்று விட்டது ஏன்?
நினைவிலேயே நெகிழும் இதயம். கலங்கும் உள்ளம் கண்ணீர் சொரியும் கனகள் என, கவிஞன் செத்தும் என்னை சொந்தமாக்கிக் கொள்ள வைத்தது எது?
கவித்துவம்...! அது... சாகாவரம் பெற்றது. அது, என்றும் வாழும் நிலை பெற்றது.
கவிச்சக்கரவர்த்தி ரவீந்திரர் சொல்கிறார்.
“உன் காலிலே விழுகிறேன் சரத்பாபு
ஒரு கதை எழுத வேண்டும் நீ
ஒரு சாதாரணப் பெண்ணின் கதை
குறைந்தது ஆறேழுதி அசாதரணப் பெண்களுடன்
போட்டி போடும் நிர்பந்தம்
அந்த அதிஷ்டக் கட்டைக்கு...!
அப்படியும்
எனக்காக
அவளை வெற்றி பெறச் செய்து விடு
உன் கதையைப் படிக்கப், படிக்க
என் நெஞ்சு....
விம்மி பூரிக்கட்டும்” என்கிறார்.
கதைச் சிற்பி இவ்வாறு சொல்கிறார் - இளம் எழுத்தாளர்களுக்கு....
'மனித வாழ்வில் எத்தனையோ துன்பங்கள் துயரங்கள் மலிந்து கிடக்கின்றன. அவை எழுத்தாளர்களான உங்களின் கண்களில் படவில்லையா? நமது அடிமைத்தனம், அறியாமை, வறுமை இவைகளால் மனித இனம் படும் பாடும் - இன்னல்களும் உங்கள் இதயத்தைத் தொடவில்லையா? இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, ஆபாசமான, பாலுணர்வு பற்றி மட்டுமே எழுதுவது கோழைத்தனமானதல்லவா' என்கிறார்.
இளம் எழுத்தாளர்களே இதயத்தைத் திறவுங்கள் ஏழைகளுக்காக! அவர்களின் விழிப்புணர்வுக்காக' எங்கு அறியாமை ஒழிக்கப்படுகிறதோ அங்கு ஏற்றம் அழைப்பில்லாமல் வரும் - தேடிக் கொண்டு.
வெ.இரா.நளினி