கவியகம், வெள்ளியங்காட்டான்/வேட்பு
வேட்பு
சுற்றி விரியும் கதிர்க்கரம்
முற்றிலுமே - சுருக்கிச்
சூரியன் போய் மறைந்தான்.
உற்ற செல்வம் உதிர்த்தவர்
உள்ளமென - உலகம்
உகைந்த திருள்தனிலே!
பகலெ லாம்பய னற்றுக்
கழிந்ததுகாண் - பொட்டல்
பதையைப் பார்த்தபடி
சுகமெலாம்தமிழ்த் தோழியின்
பால்பெறவே - இரவில்
சுற்றித் திரிந்திடுவேன்.
நறும ணங்கமழ் தென்றல்
நிலவையெலாம் - வானில்
நல்ல இளம்பிறையார்
வெறும ணற்பரப் பில்வெகு
வாயிறைத்தே - என்னை
வேதனை செய்திடுவார்!
தூய எண்ணங்க ளாகிய
நல்லணிகள் - ஒலி
தோன்றும் குறிப்பினிலே
பேயு றங்கிடும் நள்ளிர
வாயிடினும் - கண்டு
பேசிக் களித்திடுவேன்!
வான மன்றில் பரவி
வயங்கவரும் - நல்ல
வண்ணத் திருச்சுடராம்
மீனினங்களினூடு
மறைந்திருப்பாள் - காதல்
மேலிட நாண முடன்!
கயல்கள் துள்ளிக் கதிரில்
மணியுதிர்க்கும் - எழில்
காட்சி தனில்மகிழ்ந்து
வயல்க ளோடு வரப்பில்
அமர்ந்திருப்பாள் - என்றன்
வானெதிர் பார்த்தவளாய்!
மேக மண்டலம் தன்னில்
மிகுந்தொளிரும் - மின்னல்
மேனியாய் மேவிய வள்
மோகனச்சிறு புன்னகை
ஒன்றினிலே - இன்பம்
முற்றும் முகிழ்த்திடுமே!
காதலி
மதர்வேட்ட செவ்வரிக்கண் மதிமு கத்து
மலர்வேட்ட கருங்கூந்தல் மடமான், மாதாய்
எதிர்வீட்டில் பிறந்துவளர்ந் தெனக்கா கத்தான்
எழிலார்ந்த அணங்கெனவே இருக்கின் றாளென்
றதிர்வேட்டு வைத்திடினும் அஞ்சா தாகி
அரசமரத் தளிர்மறைவி லமர்ந்தி ருக்கும்
கதிர்வேட்ட கிளியெனவே நானும் வாசல்
கடைகாத்து நின்றிருப்பேன் அவளைக் காண!
கான்பெற்றுக் கொண்டுநனி களிக்கும், காண்போர்
களைப்பாற நீரருந்தும் சுனையை! கான்போல்
வான்பெற்றுக் கொண்டுநனி மகிழும், வாரி
வண்ணநில வொளிவழங்கும் மதியே! வான் போல்
தேன்பெற்றுக் கொண்டிருக்கும் மொழியாள்! தேர்ந்த
திருவுருவம் திகழுஞ்சிலை வடிவாள் தன்னை
நான் பெற்றுக் கொண்டுவக்கும் நன்னா ளென்வாழ்
நாட்களிலொன் றுண்டெனவே நம்பி னேன்நான்!
பூப்போலும் மேனியெனின் பொருந்தும்; போற்று,
பொன்போலும் வண்ணமெனின் பொருந்தும்; வெள்ளைப்
பாப்போலு முறுப்பனைத்தும் படியப் பெற்ற
பாவையவள்! பார்ப்பவர்கள் பறிக்கும் நற்பூங்
காப்போலும் தண்மையினள் எனினும், என்றன்
கண்காணாப் போதெல்லாம் கனலும் காட்டுத்
தீப்போல எரித்திடுவாள்; தினமும் நெஞ்சில்
தித்திக்கும் நினைவுகளைத் தெளித்து வைப்பாள்!