கவியகம், வெள்ளியங்காட்டான்/காதலி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

காதலி

மதர்வேட்ட செவ்வரிக்கண் மதிமு கத்து
மலர்வேட்ட கருங்கூந்தல் மடமான், மாதாய்
எதிர்வீட்டில் பிறந்துவளர்ந் தெனக்கா கத்தான்
எழிலார்ந்த அணங்கெனவே இருக்கின் றாளென்
றதிர்வேட்டு வைத்திடினும் அஞ்சா தாகி
அரசமரத் தளிர்மறைவி லமர்ந்தி ருக்கும்
கதிர்வேட்ட கிளியெனவே நானும் வாசல்
கடைகாத்து நின்றிருப்பேன் அவளைக் காண!

கான்பெற்றுக் கொண்டுநனி களிக்கும், காண்போர்
களைப்பாற நீரருந்தும் சுனையை! கான்போல்
வான்பெற்றுக் கொண்டுநனி மகிழும், வாரி
வண்ணநில வொளிவழங்கும் மதியே! வான் போல்
தேன்பெற்றுக் கொண்டிருக்கும் மொழியாள்! தேர்ந்த
திருவுருவம் திகழுஞ்சிலை வடிவாள் தன்னை
நான் பெற்றுக் கொண்டுவக்கும் நன்னா ளென்வாழ்
நாட்களிலொன் றுண்டெனவே நம்பி னேன்நான்!

பூப்போலும் மேனியெனின் பொருந்தும்; போற்று,
பொன்போலும் வண்ணமெனின் பொருந்தும்; வெள்ளைப்
பாப்போலு முறுப்பனைத்தும் படியப் பெற்ற
பாவையவள்! பார்ப்பவர்கள் பறிக்கும் நற்பூங்
காப்போலும் தண்மையினள் எனினும், என்றன்
கண்காணாப் போதெல்லாம் கனலும் காட்டுத்
தீப்போல எரித்திடுவாள்; தினமும் நெஞ்சில்
தித்திக்கும் நினைவுகளைத் தெளித்து வைப்பாள்!

காதலொடு காணுங்கண் ணசைவு போதும்;
கனியிதழில் தவழவிடும் முறுவல் போதும்;
போதுமலர்ந் திடுங்காறும் புலன டக்கிப்
பொறுத்திருப்பீர் எனப்புரியும் போதம் போதும்;
கோதிவிடும் கூந்தல்நுனி பற்றி மோந்து
கொண்டுமனங் களிக்கின்ற குறிப்பே போதும்;
வேதனைகள் தீர்ந்திதயம் விரும்பு மின்ப
விண்வெளியில் நான்பறப்பேன் விரைந்து நாளும்!

தென்றலிலே நிலவுகலந் திடுத லொப்போ!
திருக்குறளில் வாழ்வுகலந் திடுத லொப்போ!
மன்றலிலே முல்லைகலந் திடுத லொப்போ!
மதுரவிசை தமிழில்கலந் திடுத லொப்போ!
அன்றிலிரண் டாணும்பெண் ணாய மர்ந்தே
அகமகிழ்வில் அவனிமறந்திடுத லொப்போ!
முன்றிலிலே நாங்களமர்ந் திருக்கு போது
முழுவதுமொப் பெனினுமவை யொப்பா காதே!

அத்தைமகள் தான்தாரா! முறைப்பெண்! நாளும்
அதிகாலை வந்தெனது பணிகள் செய்வாள்;
சொத்துசுக மிகுந்ததெலா மத்தான் முன்பே
சுறுசுறுப்பாய்ச் சூதாடித் தொலைத்து விட்டார்!
மெத்தமனம் நொந்த அத்தை செத்துப் போமுன்,
மெதுவாயென் கைப்பற்றிக் கொண்டு, “கண்ணா!
புத்தமுத மிவளுனக்குச் சொந்தம்! வைத்துப்
போற்றிக் கொள்!” எனப்புகன்று விட்டுப் போனாள்!

ஆராஇன் பந்தரும்நல் லமிழ்த மென்றன்
அகத்திருளை அகற்றவரும் திருவி ளக்காய்
தாராவை யென்னகத்துத் தலைவி யாக்கத்
தடையெதுவுங் கிடையாது தானென் றாலும்,
ஊராரின் முன்னிலையில் அவள்கைப் பற்றும்
ஒப்பறுமந் நன்னாளை யொதுக்கிக் கொண்டு
தீராத பழியாகிக் கிடக்கின் றாரோர்
'திருவாத்தன் இவ'ரெனவூர் செப்ப அத்தான்!

பித்தாய சீட்டாட்டப் பேச்சல் லாமல்
பிறபேச்சுப் பேசாத பேதை யத்தான்,
'முத்தாய மணியாய முதலுக் கெல்லாம்
முதலாகி யுள்ளவளென் மகள்தா ராதான்!
பத்தாயி ரம்ரூபாய் மொத்த மாகப்
பணம்தந்தா னுக்கிவள்பத் தினி'யென் கின்றார்!
'இத்தய மிதுகாறும் பெண்ணைப் பெற்றோர்
இயம்பாத இன்னாச்சொல் லிதுதா' னென்ன!

வாதாடி வழிகாட்டி வைத்தும், வாழும்
வகையறியாத் தந்தையுடன் வாழ்ந்து கொண்டே
கோதோடு கூடிவிளைந் தினிக்கா நின்ற
கொழும்பலவின் தீஞ்சுளையாய்க் கொள்ள நானும்,
தாதாடுங் கருவண்டு புகுந்து வெள்ளைத்
தாமரையிற் குடிகொண்ட தென்னுங் கண்ணாள்.
போதோடு வந்தெனது வீட்டில் நாளும்
புசிப்பதற்கு வகைசெய்து கொண்டு போவாள்.

37

முத்தான முரலொளி மிளிரக் கொல்லை
முதிர்கனியி னிதழ்முறுவல் முகிழ்ப்ப, மூசும்
கொத்தான கருங்கூந்தல் முகின்மேல் முல்லை
கூன்பிறைபோல் நிலவிடவே, குயிலாய் மெல்ல
'அத்தானென் றழைத்தன்பு பெருக அன்றென்
அருகினிலே வந்தமர்ந்தாள்; அகிலத் தின்மேல்
சொத்தான தத்தனையும் தொலைத்தோர்க் கொன்றும்
சுகமுண்டா? சொல்லுங்கள் சுருக்கா' யென்றாள்.

"உழுவதற்கு மாத்திரமென் றிருந்த நன்செய்
ஒன்பதுகாணியுமறவே தொலைத்த தந்தை!
தொழுவதற்கு மாத்திரமே கண்முன் தோன்றித்
துயர்நேரின் தூரம்போய்த் தொலையும் தெய்வம்!
விழுவதற்கு மாத்திரமே போதா நீராய்
விளங்குகிற ஏரிகுள முள்ள ஊரில்
அழுவதற்குமாத்திரமே உயிரைக் கொண்டிவ்
வவனியிலே உள்ளேன் நான்ர "அத்தான்” என்றாள்

நிந்தைகளில் இதற்குநிக ரான நிந்தை
நீணிலத்தி லில்லையெனச் சொல்லு மாறாய்த்
தந்தையெனும், - தயை ஞானம், - தகவி லாரால்
தரம் தருமம் தான் குறைந்து தாமும் நாட்டைச்
செந்தமிழ்நா டென்கின்ற போதும், எந்தத்
தேன்வந்து பாயுமினிக் காதி லென்றன்
சிந்தையிதை எண்ணியொரு புண்ணாய், நானும்
சிறுகத்தேய்ந் திறந்திடுவேன் அத்தான்,” என்றாள்.

“நிச்சயமாய் இன்றைய இந் நிலைமை நீங்கி
நிகரற்ற நிறைவாழ்வு நீயும் வாழக்
கச்சிதமாய்க் கலந்திருக்கும் உன்வாழ் நாளில்
கணக்கறுநன் னாட்களெனக் கருது கின்றேன்
துச்சமென இதையொதுக்கிக் தள்ளு தூரம்:
துயரமொடு துளியேனு மின்றி ஊரில்
அச்சமற்றிவ் வவலமதை மறந்து முன்போல்
அமைதியுடனிருதாரா என்ன கத்தில்!

கனிக்காக வளர்ந்துமரம் தழைத்தும் பூத்துக்
காய்த்தது.பின் கணிகின்ற வரையும் காக்கும்!
தனக்காகத் தன்வாழ்வுக் காகச் செய்யும்
தனிக்கடமை மகவினைத்தாய் தந்தை காத்தல்!
பனிக்கால வயிற்றினிலே பிறந்திப் பாரைப்
பரவசம்செய் கின்றஇளவேனில் தான்நீ!
உனக்காக நாணிந்த உடல்வைத் துள்ளேன்:
உயிராக இதிலிருநீ தாரா!" என்றேன்.

"நிந்தைகளில் நிகரற்ற நிந்தை யென்றும்
நிலைத்திருக்கத் தேடிவைக்கும் என்னைப் பெற்ற
தந்தையொரு கொடியவர்தான்; அவர்நான் சாகும்
தடங்காட்டிக் கொடுக்கின்றார்; தகுந்த தான
விந்தைமிகு செஞ் சொற்கள்விழைந்து கூறி
விரைந்தென்னைச் சாகவிடா திவ்வாறாகத்
தந்திரமாய்ப் பேசியுயிர் தரிக்கச் செய்து
தவிக்கவைக்கும் கொடியவர்நீர் என்றாள் தாரா.

பழுதுவரும் எனநினைத்துப் பாராதத்தான்
பத்தாயிரத்தையெதிர் பார்க்கின்றார்: கேட்
டழுதுவரும் உனைச்சிரிக்க வைப்ப தற்காய்,-
அகமுடையா ளெனவுனைநான் அழைப்ப தற்காய்,
உழுதுவரும் மாடெனவே களைப்புமேலிட்
டுடல்வலிக்கும் வரையுமுளம் ஒன்றிக் குந்தி
எழுதவரும் என்திறமை யனைத்தும் கூட்டி
இணையில்லாக் காவியத்தை எழுது கின்றேன்.

மண்ணிர மறமறுகி வளர்ச்சி குன்றி
மனங்கவரும் பசுமையெழில் மாறி வாடித்
தண்ணிரைத் தாதாயே! என்று பாரைத்
தாலைதாழ்த்தி இரக்கும்பயிர் போன்றி ராமல்,
கண்ணிரைத்துடைத்துவிட்டுக் கவலை யின்றிக்
காத்திருதா ராஇன்னும் கொஞ்ச காலம்!
எண்ணாயி ரம்ரூபாய் சேர்த்து விட்டேன்;
இனியிரண்டா யிரமிதனால் சேரும் என்றேன்.

உள்ளத்தில் இதுவரைநான் ஒளித்து வைத்த
உண்மையிதை உணர்ந்துளமும் குளிர்ந்த தாரா.
முன்ளொத்து வருத்தத்தை மூட்டும் பெற்ற
முட்டாள்சொல் களைந்தவளாய், முறுவல் மேவக்
கண்ணொத்து வடிகின்ற சுடர்நீ லங்கள்
கமலத்தில் காண்பனபோல் களிக்கும் கள்
வெள்ளத்தைத் துடைத்தபடி "சிக்க லெல்லாம்
விடுவித்து விட்டீர்நீர் அத்தான்!"

"பண்ணாவேன் நானும்; நீர், பண்ணுக்கேற்ற
பாட்டாவீர்! அதுவன்றேல், பாங்காய்ப் பார்க்கும்
கண்ணாவேன் நானும்; நீர், கண்ணுக் கேற்ற
கவிஞனாவீர்! அதுவன்றேல், கருத்தைக் காட்டும்
எண்ணாவேன் நானும்; நீர், எண்ணுக் கேற்ற
இலக்காவீர்! அதுவன்றேல், எழில்மிகுந்த
பெண்ணாவேன் நானும்; நீர், பெண்ணுக் கேற்ற
பேராண்மை பிறங்கிடுமாண் ஆவிர்!" என்றாள்.

தேனொத்த வெண்ணிலவை வாரிக் கொட்டித்
தேகத்தை யதில்திளைக்கச் செய்யும் திங்கள்,
பூநத்தித் திரியும்கரு வண்டி ரண்டைப்
பொன்னொத்த முகத்தினிலே பொருத்திக் கொண்டு
வானத்தை வெறுத்துவிட்டு வந்தின் றிந்த
வையத்தி லெனதுமனை புகுந்தோர் மாதாய்
மோனத்தைக் கலைத்துவிட முயன்றேன் முன்னால்
மோகனங்கள் புரிகிறதே நன்றாய்" என்றேன்.

"மோசமிதுதான்.அத்தான்! மொழியு மொன்று:
முறுவல்வே றென்றெனநீர் முயன்று போடும்
வேசமிது வேண்டாங்காண்! இன்னும் நானோர்
விவகாரம் தெரியாத விளரி யன்றே!
நேசமதை நெஞ்சினிலே நிறைத்துக் கொண்டு
நேர்மாறாய்ப் பேசிடினும் என்னாம்!
முல்லை வாசமதை மறைக்கமுடி யாது மூடி
வாழையிலை தனில்வைத்த போதும்!" என்றாள்.

"இழுதொக்கும் அருஞ்சொற்களெல்லாம் வந்தின்
'றெனையெழுதிங் கெனையெழு'தென் றியம்பக் கேட்டே
எழுதக்கை பறக்கிறதென் னிதயந் தன்னில்
இருந்தகவி பிறக்கிறதற் கெனவே; நீயோ
'முழுதுக்கும் அதிகாரி நான்தான் என்றே
முடிச்சவிழ்த்து மோகனங்கள்கொட்ட நின்றாய்!
பொழுதுக்கு யாரிடுவாராணை: சற்று
பொறுத்திருந்து பொழுதேபோ வெனவே" என்றேன்.

"புவியுழுது சேறாக்கிப் பயிரை நட்டுப்
பொன்போன்று விளைந்தநெல்லைக் குத்தித் திரட்டி
அவியிழுது பெய்துகலந் தட்ட சோற்றை
அருந்திடவா ருங்களென அழைக்கின்றேன்...
'கவியெழுதப் பறக்கிறது கை யென் கின்றீர்;
கற்கண்டாய் எழுதுங்கள்:கவிதைக் கென்றன்
செவியமுது கொண்டிருக்க வில்லை; நானும்
செல்கின்றேன்." என்றெழுந்து சென்றாள் தாரா.

சேவலினைத் தேடிவந்த செங்கா லன்னச்
சிறுபெடையீ தெனத்திரும்பி வந்தாள்: "சேர,
நாவலினைத் தாருங்கள் அத்தான்! அந்த
'நட்டார்மன் எழுதினதை, யென்றாள். நானும்
ஏவலனைப் போலெழுந்து பெட்டி, பேழை -
இல்லாத இடமெல்லாம் தேடித் தீர்த்தவ்
வாவலினைப் பெருக்கிடவே சொன்னேன்:
"இந்த அல்லியர சாணிகதை படிநீ! என்றே.

'இதற்காக இதைப்படிநீ என்ப தென்றும்
இயல்புமக்கின்றேன்மறந்தீர் இதைநீர்" என்றாள்.
'முதற்காதல் இடைக்காதல் எதுவு மின்றி
மூத்தவர்கள் மொழிந்தமுறைப் படியு மின்றி,
எதற்காக வும்என்மேல் ஆண்கள் வாடை
என்றும்பட வேண்டாமென்றாளாம் அல்லி:
அதற்காகத் தானிதைப் படிக்க வேண்டும்
அரம்பையே, ஊர்வசியே!” என்றேன் நானும்.

கொடிக்கென்ன குத்தியதோ! முல்லை மூரல்
குமுதச் செவ் விதழின்மேல் குந்திக் கொள்ள,
வெடுக்கென்ன மென்றளிர்க்கை யோங்கிக் கண்ணில்
வெகுளித்தீப் பொறிபறக்க வீசி யென்றன்
இடக்கன்னம் கன்றிடவே அறைந்தாள்: நேர்ந்த
தின்னதெனத் தெரிவதற்குள் எழிலி யேற்பத்
திடுக்கென்னப் படியிறங்கிச் சென்றாள்; சற்றும்
திரும்பியெனைப் பாராமல் தெருவைத் தாண்டி!

விண்ணிலிருந் தெழில்பருதி விலகா முன்னே,
வெண்முல்லை விரிந்துமணம் வீசா முன்னே,
பண்ணையினங் கண்டிசைக்கும் பாடல் வண்டு
பதுமமலர் குவியவிட்டுப் பறக்கா முன்னே.
திண்ணைதெரு திசையனைத்தும் இருளாயின்று
திகைக்கஎனைச் செய்ததெது? தெரிவை என்றன்
கண்ணையும்தன் காதலுடன் - களைந்து கொண்டு
கடிதகன்று சென்றனளோ காணே னன்றே!

தாண்டித்த தெதற்கெனவும் தான்சொல் லாதென்
தலைதாழ்த்தி வைத்துவிட்டுத்தாரா சென்றாள்;
ஏனடித்தாள் ஏனடித்தாள் எனவி னாவி
இடையீடில் லாதென்வாய் இதயந் தன்னைத்
தேனடைத்த அடையென்னத் திகழு மாறே
தினையளவும் இடமின்றித் துளைக்க விட்டு,
நானிடித்த புளியெனவே இருந்தேன் குந்தி
நள்ளிரவு கடந்தபின்பும் நலிவோ னாகி!

பாதிதுயர் பாதிவெறுப் பாகப் பண்ணிப்
பரதவிக்கச் செய்த இரா பாழாய்ப் போகக்
கோதியதன் னிருசிறகும் புடைத்துக் கோழி,
'கொக்கரக்கோ ' எனக்கூவிக் கூற வேயென்
வேதனையும் வேரறுந்த மரம்போல் நெஞ்சை
விட்டுவிழ வெளிக்கதவை மூடினேன்நான்.
காதலெனும் சொல்கேட்கச் சொல்லக் காணக்
கருதிடவும் கடுவென்னக் கசந்த வாறே.

சொல்லரசி யல்லிகதை படிநீ யென்று
சொல்லியசொல் சுருக்கென்று தைத்த தேயோ!
மல்லரசி யாகியிவள் எனது கன்னம்
மாங்கனிபோல் வீங்கவைத்து மறைந்தா ளென்றால்,
கல்லரிசி கலந்தட்ட சோற்றை யொப்பக்
கடைவாய்ப்பல் லுதிருமன்றோ கால கண்டி
இல்லரசி யாயிருந்தால்! இவளி யல்பை
இவ்வாறு வெளிப்படுத்திற் றெனது நல்லூழ்!

நாகங்கள் புதற்புற்று நாடிச் செல்ல,
நலித்தஇருள் நலிந்திடநா னிலத்துள் நாளும்
மோகங்கொள் மடமகளி ரணைப்பை நீக்கி
முகமலர்ந்து தொழில்முயன்று முடிக்க வேநீர்
ஏகுங்கள் ஏகுங்கள் எனவே காலை
எழில்தருக்கள் மீதுதுயில் நீத்தெ ழுந்த
காகங்கள் கரையுமொலி கேட்டு வானில்
கதிரவனும் கவினுறக்கண் மலர்ந்தா னன்றே.

'சருக்கரையும் பசும்பாலும் கனியும் தேனும்
சப்பையிவை எனச்செப்பித் துப்பு மாறே,
அருக்கனென விளக்கஞ்செய்திடவே நானும்
அருந்தமிழில் கவிதைசெயக் கண்ணை மூடி
ஒருக்களித்து படுத்திருந்தேன்; எனைய றந்தவ்
வொப்புவமை யற்றஇளங் காலைப் பொழுதில்
தெருக்கதவைத் தட்டுகிறாள் அவளும் வந்தே
தினந்தோறும் போலன்றும் திடுதி டென்றே.

"சே சே சே! இதுவென்ன தொல்லை! நீயேன்
தெருக்கதவை இன்றிடித்துத் தூள் செய்கின்றாய்
வாசாதுப் பெண்மணியே! என்றின் றுன்னை
வரவேற்பார் இங்கெவரும் இல்லை; வாது
பேசாது போய்ச் சேர் உன்னிடத்துக் கென்றென்
பெருஞ்சினத்தை அடக்கியிது பேச லானேன்.
"மாசேதும் பூசவில்லை. அத்தான்! உங்கள்
மன்னிப்புப் பெறவந்தேன், என்றாள் மாறாய்!

"அல்லியர சாணிகதை படித்துப் பாரென்
றறிவித்த முறையில்தவ றென்ன கண்டாய்?
சொல்லதனை முன்னேநீ சொல்லா விட்டால்,
சொக்கவைக்கு கனியிதழ்வாய் பொக்கை யாக,
முல்லையென முத்தென்ன முருந்தே யென்ன
மோகனமாய் முறுவலித்து மூடும் உன்றன்
பல்லனைத்தும் மீதமிச்ச மின்றித் தட்டிப்
பைதனிலே போட்டனுப்பி வைப்பே" னென்றேன்.

"பெண்ணாக இருந்ததனால் பிழைத்தாய்! அன்றேல்
பிழைசெய்த கையதனைப் பிய்த்தெறிந்து
மண்ணாக மக்கிவிடச் செய்தி ருப்பேன்:
மட்டுமரி யாதையறி யாத பெண்ணே!
புண்ணாகு மாறிரவு பூரா எண்ணிப்
புகுங்கிமனம் நொந்துகிடக் கின்றேன் நானும்!
ஒண்ணாது கதவுதனைத் திறக்க! நீயும்
ஒடிப்போ நிற்காதே இனியிங்" கென்றேன்.

"என்மானம் மதிப்புமரி யாதை யென்ப
தெல்லாமும் உமக்கிளப்ப மான தேனோ
கண்மானும் இதயத்தி லிருந்து காதல்
காவியத்தை வடிக்கின்ற கர்வ மோகாண்!
பொன்மானும் எழில்பாவை மீதில் சேற்றைப்
பூசுமுங்கள் பொல்லாங்கு பொறுக்கா தென்றன்
தன்மான உணர்ச்சியினால் தாக்குண் டீர்!நும்
தலைக்கணமும் திருமினி!" என்றாள் தாரா.

"கையொன்று நளிைநீண்டு நேற்று நீயென்
கன்னத்தைப் பதம்பார்த்து விட்டுச் சென்றாய்!
பொய்யொன்று மெய்யென்னப் பொருந்தி யின்றும்
பொல்லாத பழிபோட வந்தா" யென்றே
"சையென்று கதவுதனைத் திறந்து சற்றுத்
தலைநீட்டத் தென்பட்டாள் தாராத் தங்கம்!
மையொன்று கண்மழையாய், மங்கல் போர்த்த
மதிமுகமாய் மாழ்கிமனம் மாறச் சொன்னாள்:

"பேர்விசயம் புரியாமல் கவிஞ னென்று
பேர்பெற்றுக் கொண்டென்வாய் பிடுங்குகின்றீர்!
பார்வசியம் செய்பவர்கள் உயர்ந்தோர் தம்மைப்
பாழாக்கும் படுபாவிப் பெண்க ளந்த
ஊர்வசியும் அரம்பையுமே! என்பேர் தாரா!
ஒர்ந்திதனை உணராமல், நேற்று மாறாய்
நேர்வசிகொண் டென்நெஞ்சில் குத்தல்போலந்
நீசர்பெய ரிட்டழைத்தீர்எனைநீ" ரென்றாள்.

சொத்திட்டி சுகமீட்டி வைத்த தந்தை,
சுவைபடச் சொல்லுட்டி வளர்த்த அன்னை,
புத்தேட்டில் மணம்பதியப் புகட்டிப் புத்தி
போதித்த ஆசிரியன். - இவர்கட் கன்றிக்
கத்திட்டி கொண்டென்னைக் குத்தி னாலும்,
குன்றிமணி யளவெனினும் குலையா நெஞ்சம்
மத்தாட்டி விட்டதயி ரெனவே இன்றிம்
மாதாட்டிக் கலக்கிவிட மலைத்து விட்டேன்.

மலையிரக்க மடையப்பெண் மயில்தா னின்று
மதகரியை, விழ்த்துகிற மடங்க லேற்றை
வலையிறுக்கிப் பிடித்ததெனுங் கதையா யென்றன்
வாய்வாக்கு வலிமைதனை யிழக்க, வாய்த்த
கலையிரக்கப் படுமாறு கறைக மத்திக்
கட்டுண்டு விடச்செய்தாள். கற்றோர்க் குத்தம்
தலையிறக்க மடைவதிலும் கொடிய தான
தண்டனைவே றில்லையெனத் தவித்தே னேனும்.

அரிந்தஇளங் கொடியெனவே மேனி வாடி,
அரவிந்த மெனவிழிகள் சிவந்து வீங்கிச்
சரிந்தசுருள் கருங்கூந்தல் நுதல்மேல் வீழச்
சங்கெனச்செம் பவளஇதழ் வெளிர நின்று,
பரந்தமனத் திருந்தெழுதன் மானச் சீற்றப்
பார்வையெனைச் சட்டெரிக்கப் பதறி யேநான்,
விரிந்தகரம் நீட்டிமனம் கரைந்த ழைத்தேன்.
"விளக்கேவா விடிவுதர விரைந்திங்" கென்றே.

"சந்தித்ததாலுன்னைப் பொங்கி வந்த
சரிமகிழ்ச்சிப் பெருக்கினிலே வழிந்த நன்றிச்
சிந்தித்துச் செப்பவிலை யெனினும், மற்றுன்
செங்கையினா லதற்கெதிர்நீ செய்து தீர்த்தாய்!
நிந்தித்து மனமினியும்நெகிழ வேண்டாம்!
நேற்றுடனே அதுமுடிந்த கதையா கட்டும்!
வந்திந்தேன்; மன்னித்து மறந்து விட்டு
வழக்கம்போல் வாளன்றன் வாழ்வே." என்றேன்.

"கொல்லையிலே கொழுந்தோடிப் படர்ந்து நன்றாய்க்
கொழுகொழைன அரும்பெடுத்துக் கமழும் நல்ல
முல்லையிலே பிறவாமல், முகந்து மேயும்
மோட்டெருமை மோந்துடலை மூழ்க்குங் கோரைப்
புல்லயிலே கொண்டகுள நீரில், வெய்யோன்
போய்மறைந்த நள்ளிரவில் பூக்கும் பொல்லா
அல்லியிலே பிறந்தவளின் கதையில் என்ன
அதிசயத்தைக் கண்டீர்நீர் அத்தான்?" என்றாள்.

துளிக்கவலை எனக்காயுன் னுளத்தில் வைத்து
தொழுவத்தைப் பார்;அட்டில் பார்; தொடர்ந்து;
ஒளிக்கவிலை உன்னிடத்தில் எதையும் நானும்
உறங்கவிலை ஒருதுளியும் இரவில் ஒக்கக்
குளிக்கவிலை; குடல்குறைந்து கூவா முன்னே.
கொண்டுவந்தேன் உனவெனவே, உனது கையால்
அளிக்கவிலை! இவ்வளவும் இருக்க, அந்த
அல்லிகதைக் கவசரமேன் தாரா' என்றேன்.

திறந்திருந்த வெளிக்கதவை விரைந்து மூடித்
தினமும்போல் செயலிலவள் திளைக்க லானாள்;
முறிந்திருந்த மனமிரண்டொன் றாயிற் றென்று
முகமலர்ந்தேன் கடன்கழித்து முடித்தேன் நானும்.
சிறந்திருந்த நெய்விட்டுச் சுட்டத் தோசை
சிவக்க அரைத் திட்டசுவைத் துவையல், சேரக்
கறந்திருந்த பசும்பாலைச் சுண்டக் காய்ச்சிக்
கடும்பசிக்கு மருந்திவதனக் கொண்டு வந்தாள்.

மூசுகின்ற முல்லையிவள் மூக்கிற் கென்றும்;
மோகனமாய் விண்வெளியில் முகிழ்த்து வந்து
பேசுகின்ற பெருமதிதான் கண்ணுக் கென்றும்!
பிறிதொன்று மினையில்லை யெனவே பேச,
வீசுகின்ற மனப்பலவின் சுளைவாய்க் கென்றும்;
விதிமுறையாய் இசைகூட்டி விரும்பிக் கேட்க
மாசகன்ற மகரந்த மலரில் பாடும்
மதுகரம்தான் மாதிவளென் செவிகட் கென்றும்!

பொழுதன்று புதிதாகப் புலர வில்லை;
பூவுலக மும்புதிதாய்ப் பிறக்க வில்லை;
விழுதொன்றும் ஆலமரத் தளிரில் தங்கி
விடியலிலே விருந்தயர விழைந்த தும்பி,
பழுதொன்று மில்லாத பதுமந் தன்னில்
பண்பாடிப் பசித்துமது பருகக் கண்டும்
 எழுதென்று துண்டாதென் னிதய மின்றேன்
எதையெதையோ எண்ணிக்கொள் டேங்கல் லுய்யும்!

அகிலொன்றின் மனங்கமழும் கூந்தல் ஆடும்
அருங்குவளை மலர்விழிகள்; அமைந்த ஆலைத்
துகிலொன்றி மூடியபொன் மேனி, துள்ளித்
துணையொன்றுக் கொன்றென்னத் தோன்றா நின்ற
நகிலொன்றி நலிக்கும்மின் னிடைமற் றெல்லாம்
நாடோறும் போலன்றி. நயக்கச் செய்து
பகலொன்று பயனின்றிக் கழியு மாறு
பைத்தியமாய் எனைப்படுத்தி வைக்கும் போலும்!

வாடிக்கொண் டிருக்கிறஎன் முகம்பார்த் தென்னை
வாழ்விக்க வரவிருக்கும் வனிதை சொன்னாள்;
"பாடிக்கொண் டிருக்கின்ற குயில்மேல் பாடிப்
பணம்பண்ணும் காவியத்தை முடியி ராயின்,
கூடிக்கொண் டிருக்கின்றநற் காலம் கூடக்
கூடாததாகிவிடக் கூடும்! கூடின்.
மூடிக்கொண் டழநேரும் முகத்தை அத்தான்!
முறையாக முயன்றதனை முடிப்பீர்” என்றாள்.

"உறுப்பாகி, உடலாகி, உயிரு மாகி
ஒப்பற்ற ஒவியமாய் உளத்தில் புக்கு,
நெருப்பாகி எரிக்கிறதென் னுடலை; நின்ற
நீராகி யலைக்கிறதென் னுளத்தை நீண்ட
பொருப்பாகிக் கணக்கிறதென் னுயிர்மேல்; பொன்றப்
புயலாகி மோதுகிற தெனது போக்கில்!
விருப்பாகி நின்நினைவு வெளியி லென்றன்
வெற்றிதனை விரட்டுதடி கண்ணே!" என்றேன்.

இந்தவொரு சிறியமொழி என்வாய் சிந்த,
இளமுறுவல் தவழும்.இத ழதுக்கி நின்று
சிந்தித்தான் சிலையென்னச் சிறிது; சேரச்
செங்காலன்னம்போல்கால் விரலால் மெல்ல
நிந்தித்தா ளெனநிலத்திற் கீற லானாள்:
நெட்டுயிர்த்தென் முகம்நோக்கி, நிலத்தில் வீழ்ந்து
வந்தித்தாள், வரன்பனந்தா ருங்கள்:" என்றாள்
வழங்கினேன் வாரியெல்லாம்! வாங்கிச் சென்றான்

வழக்கம்போலந்திமறைந்திரவு தோன்ற,
வானம்பூப் பந்தலென வடிவம் கொள்ள,
வழக்கம்போல் முல்லைமணம் அள்ளித் தென்றல்
வாலிபத்தில் காதலதை வளர்க்க, நானும்
வழக்கம்போல் துயிலாது, வாழ்வை எண்ணி
வைகறையை வரவேற்கக் காத்தேன்; ஆனால்,
வழக்கம்போல் வரவில்லை தாரா வாயால்
வார்க்கவிலை குரலமிழ்தென் செவியி லன்றே.

தாராவைத் தன்னுடனே அழைத்து வாராத்
தலையாய வைகறையும் கசந்த தாலே,
ஏராரும் பசுங்கிளிதான் கூட்டி னின்றும்,
'இனியெழுயென் குலக்கொழுந்தே! என்ற சொல்லும்,
காராவைக் கறந்துடனே சுண்டக் காய்ச்சிக்
கற்கண்டைப் பொடித்தளவாய்க் கலந்த பாலும்,
பாரோர்கள் பாராட்டும் பண்டைச் சங்கப்
பழந்தமிழ்ப்பாக் களும்பலவும் கசந்த தன்றே!

அகமிங்கே ஆழ்குளமாய் அமைந்தும் அங்கே
அதிகாலை அரவிந்தம் மலர்ந்த தென்னும்
முகமெங்கே? முயற்சியொடு முடிவு காண
முறுவலமிழ் தளிக்கிறமோ கினியின் நெஞ்சே!
சுகமெங்கே சோர்விருளும் சூழா முன்பே
சொல்விளக்கா யொளியுட்டும் சுடர்தா னெங்கே?
நகமெங்கே சதைவிட்டு நீங்கிற் றென்ன
நானிங்கே நலிகின்றேன். நங்கை வயங்கே!

வான்தாரா வண்ணமதி முகத்தாள்மேனி
வடிவழகைப் பருகிடஎன் விழிகள் தேடத்
தேன்தாரா மதுர மிகு குரலில் பேசும்
தெளிமொழிகள் பருகிடஎன் செவிகள் தேடக்
கான்தாராக் கவின்சுளையாய்க் கருத்துக் கேற்பக்
கற்பனைகள் சுரப்பதற்கென் கவனம் தேட,
என் தாரா வரவில்லை? எனும் வினாவும்
இதயத்தில் கடலலைபோல் எழுந்த தன்றே.

படித்துவைத்த கற்பனைகள் நூலறுந்த
பட்டமெனப் பயனின்றிப் பாழாய்ப் போகக்
கொடுத்து வைத்த பொருளனைத்தும் 'இல்லை' யென்ற
கொடியமொழி கேட்டகுடி மகன்போல் நொந்து,
வடித்துவைத்த சோற்றுக்கும் வகைகாணாமல்
வாசலிலே விழியிரண்டும் வளர வைத்துப்
பிடித்துவைத்த பசுஞ்சாணிப் பிள்ளை யார்போல்
பிற்பகலெல் லாம்பேசாதமர்ந்திருந்தேன்.

விண்ணுக்குள் விளங்கிஇருள் விலக்கா நின்ற
வெய்யவனும் மெய்சோர்ந்து வீழ்ந்தான் கல்மேல்;
மண்ணுக்குள் மமதை மிகு மாந்தர் மாணா
மனமென்ன மாயஇருள் மனைபு குங்கால்
கண்ணுக்கும் ஒளிகாந்தக் காணப் பண்ணும்
கவின்விளக்கை ஏற்றமணங் கருதும் காலென்
புண்ணுக்கு மருந்தாகிப் பொருந்தும் புத்திப்
புலனுக்கு விருந்தாகப் போனாள் வந்தாள்.

கார்முகிலைக் கூந்தலெனச் சீவிப் பின்னிக்
கவின்முல்லை மதியெனவே கமழச் சூட்டிக்
கூர்மிகுவேல் விழியொளிரக் கொவ்வைச் செவ்வாய்க்
குவியிதழில புன்முறுவல் தவழ வந்தாள்,
'பார்மகளன்றி.வள்பைம்பொன் னுருக்கி வார்த்த
பதுமையுயிர் பெற்ற தெனப் பார்த்தின் றிங்கெள்
நேர்முகமாய் நின்றதுமே நெஞ்சில் சேர்த்திந்
நெருப்பனைக்கக் கைநீட்டி நெகிழ்ந்து நின்றேன்.

புனைவுற்ற பொற்பாவை, பூனை போன்று
புகுந்தவுடன் மின்விளக்குப் பொறியை யேற்றி,
மனைமுற்றும் ஒளிநிலவச் செய்தாள்: செந்தா
மரையெனவே முகம்மலர்ந்து மகிழ்ச்சி மேலும்
தனையுற்றுப் பார்த்தன்னைத் தானும் பார்த்து:
தளிர்க்கரத்தா லென்கன்னம் தடவித் தாங்கி,
எனைவிற்று விடச்செய்தேன் அத்தான்! உங்கட்
கெண்ணாயி ரம்ரூபாய்க் கெனச்சி ரித்தாள்.

"சேற்றுக்குள் உதித்தமரை மலர்நான் அத்தான்
செங்கதிரோன் தானெனக்கு நீரும் சிந்தை
ஆற்றிக் கொள்வதுவேண்டாம்! ஆமாம்!
இந்த அகத்தினைவிட்டரைக்கணமும் அகலேன்;
நீரும் மாற்றிக்கொள் ளுங்களினி ஒன்றாய் மாறா
மனத்தினையும் மனைவியென மகிழ்ந்திப் போதே
ஏற்றுக்கொள் ளுங்களெனை", என்றாள். என்ன
"இருவருமின் றொருவரென இணைந்தோ மன்றே!

பரவசம்

பழகி னோர்களைப் பரவசம் பண்ணிடும்
பணிவிடை யே செயலாய்ப் - பாரில்
பகைத்த பேர்களுக்கிதத்தை விளைத்திடும்
பண்புக ளே மொழியாய்
அழகு மிக்கஎன் ஆருயி ரனையநல்
அற்புதம் பூங்கொடியே! - இனி
அருமை யாயுனைப் பேணுவ தில்என
தாயுளைக் கழியேனோ!

மண்ணி லுள்ளவரனைவரு மேயுனை
மதித்தன ரென்றாலும், - உரிய
மணாள னெனமணங் கொண்டு வரித்து
மகிழ்வுட னெனைநாடும்
வண்ண மாமலர் பூங்கொடி! நீயினி
வளமுற வாழ்ந்திடவே - வசையில்
வானம் வற்றினும் என்விழி நீரினை
வார்த்து வளர்க்கேனோ!

கருங்கு யில்எழில் குரலினில் இன்னிசை
கனிந்திடுஞ் சுனையாகிப் - பூங்
காவில் மதுகரப் பாவலர் நாவினில்
கவியிெனும் மதுவாகி,
அருமை யானவன் உயிருடன் கலந்திடும்
அதிரச அமுதாகும் - என்
ஆர்வக் களஞ்சிய மேயுனக் கென்மனம்
ஆசன மாக்கேனோ!