கவியகம், வெள்ளியங்காட்டான்/பரவசம்
பரவசம்
பழகி னோர்களைப் பரவசம் பண்ணிடும்
பணிவிடை யே செயலாய்ப் - பாரில்
பகைத்த பேர்களுக்கிதத்தை விளைத்திடும்
பண்புக ளே மொழியாய்
அழகு மிக்கஎன் ஆருயி ரனையநல்
அற்புதம் பூங்கொடியே! - இனி
அருமை யாயுனைப் பேணுவ தில்என
தாயுளைக் கழியேனோ!
மண்ணி லுள்ளவரனைவரு மேயுனை
மதித்தன ரென்றாலும், - உரிய
மணாள னெனமணங் கொண்டு வரித்து
மகிழ்வுட னெனைநாடும்
வண்ண மாமலர் பூங்கொடி! நீயினி
வளமுற வாழ்ந்திடவே - வசையில்
வானம் வற்றினும் என்விழி நீரினை
வார்த்து வளர்க்கேனோ!
கருங்கு யில்எழில் குரலினில் இன்னிசை
கனிந்திடுஞ் சுனையாகிப் - பூங்
காவில் மதுகரப் பாவலர் நாவினில்
கவியிெனும் மதுவாகி,
அருமை யானவன் உயிருடன் கலந்திடும்
அதிரச அமுதாகும் - என்
ஆர்வக் களஞ்சிய மேயுனக் கென்மனம்
ஆசன மாக்கேனோ!
தீண்டும் அளவிலென் உயிர்தளிர்த்திடுகிற
தெய்விக வடிவான - இனிய
தேனெ னும்படி உன்னெழில் முழுவதும்
தினம்.நனி மாந்தியபின்
ஆண்ட மானில அன்னையை வழிபடும்
அழகிய வைகறையில் - உன்
அகங்க மழ்நறு மலர்களைக் கொய்தவள்
அடிகளில் துவேனோ!