28
பிறப்பினில், ஆண்மை, பெண்மைப்
பேதமொன் றிருப்ப தேனும்,
உறுப்பினில் பலவு மொன்றி,
யுணர்வுள மொருமித் தொன்றி
யிறப்பினில், வாழ்வி லுள்ள
இன்பதுன் பங்க ளொன்றிச்
சிறப்பினில் சிந்தை யொன்று
சிறியது பெரிய தாமோ?
இகத்தினி லிருமை யேற்ற
யிதயங்க ளிணைந்து வாழும்
சுகத்தினி லார்வ மன்புச்
சுயம்,நயம் தவிர்த்துத் துன்பம்
அகத்தினை யாட்கொள் ளும்கா
லாண்மையற் றவத்த னனேன்,
நுகத்தினில் பகல்கா ணது
நொந்தான்வாய் மொழியிஃ” தென்றள்.
“தொடலறி வொன்றுற் றெங்கும்
தோப்பாகித் துலங்கும் துாய
மடலுறு வாழை, தென்னை,
மா,பலா மரங்க ளென்ன,
வுடலுற வொதுக்கி, யாண்பெண்
ணுயிர்வாழ்வ தொல்லா தாமோ?
அடலுறு கோப தாபம்,
அழல்,தொழ லின்றி ,” யென்றேன்.
பூவரம் பின்றிப் பூத்துப்
புதியகாய் கனிகள் நல்கும்
தாவர வாழ்வி யங்காத்
தன்மைத்தா யமைந்த வாழ்வு!
பாவரம் பின்றிப் பாடும்
பாவல ரேறே! பைய
நாவரம் பின்றிப் பேசி
நாணமூட் டாதீ” ரென்றள்.