பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

மக்சீம் கார்க்கி


ஒரு கையாள் மாதிரிக் கூட்டிக்கொண்டு போகும்படி கேட்கிறேன். எனக்கும் பிழைப்புக்கு ஒரு வழி வேண்டும் அல்லவா? எனவே நானும் தொழிற்சாலையில் சாப்பாடு விற்கச் செல்கிறேன். அப்போது நான் சமாளித்துக்கொள்கிறேன்.”

அவள் தன் கைகளை மார்போடு அணைத்துக்கொண்டு துடிதுடிப்போடு அவர்களுக்கு நம்பிக்கையூட்டினாள். எல்லாவற்றையும் தான் திறமையோடு, எவரும் காணாமல், செய்து முடிப்பதாகக் கூறினாள். முடிவாக அவள் ஒரே பரவசத்தோடு சொன்னாள்:

பாவெல் சிறைக்குள்ளே கிடந்தாலும், அவன் கை சிறைக்கு வெளியிலும் நீண்டு சென்று வேலை செய்யும் என்பதை அவர்கள் உணரட்டும்; பார்க்கட்டும்!”

அவர்கள் மூவரும் தெம்பு பெற்று எழுந்தார்கள். இகோர் தனது இரு கைகளையும் பிசைந்துகொண்டு, புன்னகை செய்தவாறே சொன்னான்.

“அற்புதம்! அபாரம்! உங்கள் யோசனை எவ்வளவு மகத்தானது என்பது உங்களுக்கே தெரியாது! பிரமாதத்திலும் பிரமாதம்!”

“இந்தத் திட்டம் மட்டும் வெற்றிகரமாக நடந்தேறினால், நான் நிம்மதியாகத் தூங்கச் செல்வதுபோல், சிறைக்குள் தயங்காமல் செல்வேன்” என்று சமோய்லவம் கைகளைப் பிசைந்தவாறே சொன்னான்.

“அம்மா! இந்த உலகிலேயே உங்களைப்போல அழகான பெண்மணியைக் காணமுடியாது!” என்று கரகரத்துக் கத்தினான் இகோர்.

தாய் புன்னகை செய்தாள். தொழிற்சாலைக்குள் துண்டுப் பிரசுரங்கள் பரவி வருவதை நிர்வாகஸ்தர்கள் கண்டால் அவர்கள் தன் மகனை மட்டும் குறைகூறிக்கொண்டிருக்க முடியாது என்பதை அவள் தெளிவாக உணர்ந்தாள் தான் எடுத்துக்கொண்ட வேலையைத் தன்னால் சாமர்த்தியமாக நிறைவேற்றிவிட முடியும் என்று அவள் நம்பினாள். அந்த நம்பிக்கையினால் ஏற்பட்ட உவகை அவளது உடல் முழுவதையுமே புல்லரிக்கச் செய்தது.

“நீங்கள் சிறைக்குப் போனால், பாவெலைச் சந்தித்து அவனுக்கு ஒரு அருமையான தாய் இருக்கிறாள் என்ற செய்தியைச் சொல்லுங்கள்” என்றான் இகோர்.

“அவனைப் பார்ப்பதுதான் என் முதல் வேலை” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் சமோய்லவ்.