உள்ளடக்கத்துக்குச் செல்

பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/மறை பிறந்த இறை மாதம்

விக்கிமூலம் இலிருந்து

மறைபிறந்த
இறை மாதம்


‘ஈதுல் ஃபித்ர்’ எனும் ஈகைத் திருநாள்!

உலகமக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினரான முஸ்லிம் பெருமக்கள் ஈதுல் ஃபித்ர் பெருநாளை ஈகைத்திருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஒவ்வொரு முஸ்லிமும் ரமளான் மாதம் முழுமையும் நோன்பிருந்தும் அதிகமான தொழுகைகளை நிறைவேற்றியும் தாங்கள் உழைத்துத் தேடிய பொருளை இரண்டரை சதவிகிதம் பங்கிட்டுப் பிறருக்குத் தான தருமமாக ஜகாத் வழங்கியும் ஃபித்ரா எனும் தானத்தைத் தந்தும் ஒரு மாத காலம் ஒருவித தவ வாழ்வை நடத்திய பின்னர் வெற்றிக் களிப்புடன் இந்நன்னாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இஸ்லாமிய மாதங்கள் பன்னிரண்டில் ‘ரமளலான்’ மாதம் மட்டுமே திருமறையாகிய திருக்குர்ஆனில் அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இம்மாதம் இறை மாதமாகக் கருதிப் போற்றப்படுகிறது.

இம்மாதத்தில் தான் இறை வேதம் முதன் முதலாக வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) மூலம் இறுதி இறைதூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு அருளப்பட்டது. பெருமானாருக்கு முந்திய இறை தூதர் பலருக்கும் கூட இதே ரமளான் மாதத்தில் தான் இறை வேதங்கள் இறக்கியருளப்பட்டன என்பது இறைமறை தரும் வரலாற்றுச் செய்தியாகும்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ் தவிர்த்துள்ள ஈமான், தொழுகை நோன்பு, ஜகாத் ஆகிய நான்கு கடமைகளும் இப்புனித ரமளான் மாதத்தில்தான் ஒருசேர நிறைவேற்றப்படுகின்றன.

ரமளான் மாதம் முழுமையும் நோன்பு (விரதம்) நோற்கப்படுகின்றது. நோன்பாகிய விரதம் இந்து சமயம் உட்பட உலகத்துப் பெரும் சமயங்கள் அனைத்தும் வற்புறுத்தும் வாழ்வியல் அறநெறிக் கடமையாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவதான நோன்புக் கடமை பற்றி திருமறை.

“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முந்தியவர்மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது” (2.183) எனக் கூறுகிறது.

ஆனால், இஸ்லாமிய நோன்புக்கும் பிற சமய விரதங்களுக்கும் அதைக் கடைபிடிக்கும் வழிமுறைகளில் பெரும் வேறுவாடு உண்டு. சில மதங்கள் ஒரு சில நாட்கள் தொடர்ந்து விரதமிருக்கப் பணிக்கின்றன. இன்னும் சில ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம்வரை விரதம் இருக்கக் கூறுகின்றன. வேறு சில சமயங்கள் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட உணவு வகைகளை விலக்கி உண்ணும்படி கட்டளையிடுகின்றன. விரும்பும்போது விரதம் இருக்கப் பணிக்கும் சமயங்களும் உள்ளன.

ஆனால், இஸ்லாமிய மார்க்கம் வகுத்தளித்துள்ள ரமளான் மாத நோன்பில் மாற்ற திருத்தங்களுக்கும் நெளிவு சுளிவுகளுக்கும் அறவே இடமில்லை. ரமளான் மாத பிறை கண்ட முதல் நாள் தொடங்கி அடுத்த ஷவ்வால் மாத முதல் பிறை காணும்வரை அம்மாதம் முழுமையும் பகலில் உண்ணாலும் ஒரு சொட்டு நீரும் பருகாமலும் இஸ்லாம் விதித்துள்ள விதிமுறைகளில் இம்மியும் பிசகாது நோன்பு நோற்க வேண்டியது ஒரு முஸ்லிமுக்குரிய கட்டாயக் கடமை (ஃபர்ள்) ஆகும்.

நோன்பின் நோக்கம்

அதிகாலை நான்குமணிக்கு முன்னதாகவே உண்பதும் பருகுவதும் நிறுத்தப்படுகிறது. மீண்டும் முன்னிரவு ஆறரை மணிவாக்கில் நோன்பு முடிக்கப்படுகிறது. அதற் குப் பிறகே எதையும் உண்ணவோ பருகவோ முடியும்.

இறைவன் தன் திருமறையில் “ல அல்லகும் தத்தகன்” (இதனால் நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்) எனக் கூறியுள்ளான். இதிலிருந்து இறையச்ச உணர்வைப் பூரணமாக உள்ளத்தில் உருவாக்கி நிலைபெறச் செய்வதே நோன்பின் முழுமுதல் நோக்கமாகும்.

ரமளான் நோன்பின்போது இறைவன் மனிதனுக்கு விலக்கி வைத்தவைகளின்றும் அறவே விலகியிருக்கிறான். அல்லாஹ் இட்ட கட்டளையை இம்மியும் பிசகாது முழுமையாக மனக்கட்டுப்பாட்டோடு நிறைவேற்றுகிறான். அல்லாஹ்வின் அன்பையும் அவன் அளிக்கும் வெகுமதியையும் பெறுகிறான். அதற்கான பயிற்சிக் களமாக அமைந்திருப்பதே ரமளான் நோன்பு.

மனக்கட்டுப்பாடும் மனஉறுதியும் மிக்கவராக வாழ நோன்பு பெருந்துணை புரிகிறது. “எல்லா வகையிலும் மனத்தைக் கட்டுப்படுத்துவதுதான் தூய்மையான போராட்டம்” (ஜிஹாதுல் அக்பர்) என்றார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.

நோன்புக் காலத்தில் தீய செயல்கள் எதையும் செய்யாததோடு தீய உணர்வே நெஞ்சத்தில் எழ இடமில்லா மலும் போகிறது.

நோன்பில் மற்றொரு சிறப்புத் தன்மையும் உள்ளது. தொழுகை, ஜகாத், ஹஜ் போன்றவை வெளிப்படையாக நிகழ்த்தப்பெறும் கடமைகளாகும். இவற்றைப் பலரும் அறியவும் காணவும் இயலும். ஆனால், நோன்புக் கடமையானது நோன்பாளிக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த கடமையாக அமைந்துள்ளது. ஸஹர் (வைகறை)யில் உண்பதும் அந்தியில் நோன்பை முடிப்பதும் வேண்டுமானாலும் மற்றவர்கள் அறிய நிகழும் நிகழ்வாக இருக்கலாம். ஆனால், பகல் முழுமையும் தொடர்ந்து நோன்பு நோற்பது இறைவனுக்கும் நோன்பாளிக்கும் மட்டுமே தெரிந்த செயலாக உள்ளது. இறைவனின் பார்வையினின்றும் தான் கடுகளவும் தப்ப இயலாது என்ற உணர்வுடன் நோன்பை முறிக்கும் எச்செயலையும் எக்காரணம் கொண்டும் செய்யாமல் தனக்குத்தானே கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நோன்பை முழுமையாக நிறைவேற்றுகிறான். இதனால், இடையறா இறைச் சிந்தனையும் இறையச்ச உணர்வும் அவன் உள்ளத்தை முழுமையாக ஆட்கொண்டு விடுகிறது. இதன் மூலம் இறைச் சட்டத்தை இம்மியும் பிசகாமல் பின்பற்றும். பேராளனாக ஆகிறான். இதையே திருமறை: “நம்பிக்கையாளர்களே நீங்கள் “முத்தகி” (இறைவனுக்குப் பயந்து அவன் கட்டளையைப் பின்பற்றுவோராகவும்) ஆக வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முந்தியவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது” (2:183) எனக் கூறுகிறது.

மனிதரைப் புனிதராக்கும்
நோன்பு

நோன்பு மனிதனைப் புனிதனாக உருமாற்றும் ஒப்பற்ற பணியையும் செய்கிறது. நோன்பு தவிர்த்து மற்றைய இஸ்லாமியக் கடமைகள் குறிப்பிட்ட குறுகிய கால எல்லைக்குள் முடிந்து விடுகின்றன. சான்றாக, தொழுகை குறிப்பிட்ட நேரங்களில் ஒரு சில நிமிடங்களுக்குள் முடிந்து விடுகின்றது. ஜகாத்தும் ஒரு சில நாட்களுள் முடிந்து விடுகின்றது. ஹஜ் கடமை பெரும்பாலோர்க்கு வாழ்வில் ஒரு முறையோடு முற்றுப் பெற்று விடுகிறது. ஆனால், நோன்போ ரமளான் மாதம் முழுமையும் தொடர்ச்சியாக நோற்கப்படுகிறது. ரமளான் மாதம் முழுமையும் தராவீஹ் எனும் சிறப்பு இரவுத் தொழுகை தொடர்ந்து தொழப்படுகிறது. எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றைச் செய்யக் கூடாது என இஸ்லாம் விதித்துள்ளதோ அவ்விதி முறைகள் கண்டிப்புடன் முற்றாக நிறைவேற்றப்படுகின்றது. இக்கடுமையான ஒரு மாதப் பயிற்சி அடுத்துள்ள பதினொரு மாதங்களும் தவறாது கடைப்பபிடிக்கும் பழக்கமாக அவனிடம் அழுத்தமாகப் பதிந்து விடுகிறது. பன்னிரண்டாவது மாதத்தில் மீண்டும் அதனைப் புதுப்பிக்கும் வகையில் அதே ரமளான் மாத நோன்பை நோற்கும் பயிற்சியை மேற்கொள்கிறான்.

இவ்வாறு ஒரு முஸ்லிம் வாழ்நாள் முழுமையும் இறை நெறிகளைக் கட்டுப்பாட்டுடனும் கண்டிப்புடனும் கடைப் பிடிக்கும் இறையாண்மையாளனாகச் செயல்பட உறுதுணை புரிகிறது ரமளான் நோன்பு. அத்துடன் பொறுமையைப் பேணி நடக்கவும் பசித்துன்பத்தை எதிர்த்துப் போராடும் மனத்துணிவைப் பெறவும் மன இச்சைகளை அடக்கும் மாமருந்தாகவும் ரமளான் நோன்பு அமைகிறது.

பிறர் துன்பம்
போக்கும் பேராண்மை

பசியின் கொடுமையையும் தாகத்தின் தகிப்பையும் நாள் முழுவதும் உணரும் நோன்பாளி பிறர் பசி போக்குவதில் நாட்டமுடையவராகிறார். மற்றவரின் வறுமைத் துன்பத்தைப் போக்குவதில், தன்னைச் சுற்றியுள்ளவர்களிடையே ஆதிக்கம் செலுத்தும் இல்லாமையை விரட்டு வதில்-விருப்போடு பங்கேற்கிறார். உணவும் உடையும் பணமும் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறார். இதற்கான கடமையாக அமைந்துள்ள ‘ஜகாத்’ கடமையை நிறைவேற்றுவதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்.

இஸ்லாத்தின் நான்காவது கடமையான ‘ஜகாத்’ ரமளான் மாதத்தில்தான் முழுமையாக நிறைவேற்றப்படுகிறது. அதனால் ரமளான் ஈத்துவக்கும் மாதமாகவும் அமைந்துள்ளது.

சமுதாய வாழ்வில் தான் முயன்று பாடுபட்டு உழைத்துத் தேடிய பொருள் முழுமையும் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற தன்னல உணர்வைப் போக்குவதே ரமளான் மாதத்தில் அதிகமாகச் செயல்படுத்தும் ஜகாத் கடமையின் நோக்கம். தான் தேடிய வருமானத்தில், அவ்வருவாய்க்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத, வறுமைவாய்ப்பட்ட ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் உழைத்து வாழ இயலா ஊனமுற்றோர்க்கும், முதியவர்கட்கும் பயணத்தில் இருக்கும் வறியவர்கட்கும், கடன் துன்பத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவர்கட்கும் நாற்பதில் ஒரு பங்கு அதாவது இரண்டரை சதவிகிதம் உரிமை உண்டு என்பதை எண்பிப்பது ரமளான் மாதம். அவர்கட்கு வழங்கும் ஜகாத் உதவியும் இடது கை செய்வது வலது கைக்குத் தெரியா வண்ணம் தரப்படவேண்டும் என்பது ‘ஜகாத்’ விதியாகும். ஜகாத்தை வெளிப்படையாக, பலரறிய, விளம்பரமாக வழங்கினால் உரிய பலன் கிட்டாது என்பது இறையாணை.

தான் உழைத்துத் தேடிய செல்வத்தை இறையாணைப் படி ஜகாத் தருவதன் மூலம் ஒரு முஸ்லிம் எத்தகைய தியாகத்திற்கும் தன்னைப் பொருத்தமுடையவராக ஆக்கிக் கொள்கிறார்.

வரவும் செலவும்
நேரிய வழியில்

ஜகாத் கடமையை செவ்வனே நிறைவேற்றுவதன் மூலம் தனிப்பட்டவர்களிடம் தேங்கும் பொருட் குவிப்பு ஓரளவு தடுக்கப்படுகிறது. இதன் மூலம் பொருளாதார மேடு பள்ளங்கள் ஓரளவு நிறைவு செய்யப்பட்டு சமனப்படுத்தப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையும் ‘எல்லாவற்றிலும் எல்லோர்க்கும் உரிமை’ என்ற நியதியும் நிலை நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் சமுதாய நலன் முழுமையாகப் பாதுகாக்க வழி கோலப்படுகிறது. மேலும், சம்பாதிக்கத் தெரிந்த முஸ்லிம் அதைப் பயனுள்ள வழியில் எவ்வாறு செலவழிப்பது என்பதற்கான பயிற்சி தரும் வழிமுறையாகவும் ஜகாத் கடமை அமைந்துள்ளது.

மற்ற மாதங்களைவிட ரமளான் மாதத்தில் மிக அதிகமான வணக்க முறைகளில் முஸ்லிம்கள் முழுமையாக ஈடுபடுகின்றனர். தொழும்போது நெற்றி நிலத்தில் பதிய அடிபணிந்து இறைவனை வணங்கம் முஸ்லிம் எண்ணத் திலும் செயலிலும் இறையுணர்வே இழையோடிக் கொண்டிருக்கும் வகையில் இஸ்லாத்தின் வணக்க முறைகள் அமைந்துள்ளன.

ஐம்பெரும் கடமைகளும்
இறைவணக்க முறைகளே

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளும் இறைவணக்க முறைகளாகவே அமைந்துள்ளன. கலிமா எனும் இறை நம்பிக்கை உள்ளத்தால் இறைவனை வணங்குவதாகும். தொழுகை உடலால் வணங்கும் வணக்க முறையாகும். நோன்பு அல்லாஹ்வை உடலாலும் உள்ளத்தாலும் வணங்குவதாகும். ஜகாத் எனும் தான தருமம் பொருளால் இறைவனை வணங்குவதாகும். ஹஜ் எனும் புனிதப் பயணம் உள்ளத்தாலும் உடலாலும் பொருளாலும் இறைவனை வணங்கிப் போற்றும் வணக்க முறையாகும்.

ரமளான் மாதம் இறைவனின் திருமறை மனிதகுலத்துக் கிடைத்த புனித மாதமுமாகும். ரமளான் 27 ஆம் நாளன்று ‘லைலத்துல் கத்ர்’ இரவன்று ஹிரா மலைக்குகையில் இறை தியானத்தில் இருந்த பெருமானாருக்கு வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) மூலம் திருமறையின் முதன் நான்கு இறை வசனங்கள் முதன் முதலாக வழங்கப்பட்டது. எனவே, மறை பிறந்த இறைமாதமாக ரமளான் திங்கள் போற்றப்படுகிறது. அன்று தொடங்கி பெருமானார் மறைவுவரை 23 ஆண்டுகள் திருமறை சிறிது சிறிதாக வழங்கப்பட முழுமையடைந்தது.

தராவீஹ் எனும்
சிறப்புத் தொழுகை

ரமளான் மாதம் முழுமையும் இரவு தோறும் ‘தராவீஹ்’ எனும் சிறப்புத் தொழுகை சுமார் ஒரு மணிநேரம் கூட்டுத் தொகையாக நிறைவேற்றப்படுகிறது. இத் தொழுகைகளின் போது திருமறை வசனங்கள் முழுமையாக ஓதி முடிக்கப்படுகின்றன. தனித் தொழுகையிலும் கூட்டுத் தொழுகைகளே அதிகமாக நடைபெறுகின்றன. ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை நினைந்து, ஒரே மறையாகிய திருக்குர்ஆன் வழி ஒழுகி, ஒரேவித வணக்க முறையை உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் பின்பற்றி இறையருள் வேண்டி இப்புனித ரமளான் ஈதுல் ஃபித்ர் பெருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.