பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/நபிகள் நாயகம் காட்டிய இஸ்லாம்

விக்கிமூலம் இலிருந்து
நபிகள் நாயகம்
காட்டிய இஸ்லாம்


உலகெங்கும் உதித்த
நபிமார்கள்

இஸ்லாமியக் கோட்பாட்டின்படி, இறை தந்த திரு மறையின்படி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, இறைநெறியில் இட்டுச் செல்ல ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களை வழிகாட்டும் ஒளி விளக்குகளான தீர்க்கதரிசிகளை இவ்வுலகுக்கு இறைவன் அனுப்பியுள்ளான். இவர்கள் பிறவாத நாடில்லை; இனமில்லை; மொழியில்லை. எல்லா மொழியிலும் நாட்டிலும் இனத் திலும் இவர்கள் தோன்றி மக்களை இறை நெறி வழி நடத்தியிருக்கிறார்கள்.

ஒருவர் புத்தரை மட்டும் ஏற்றுக் கொண்டால் பெளத்தராகி விடலாம். ஈசா (அலை) அவர்களை மட்டும் ஏற்றுக் கொண்டால்போதும் கிருஸ்தவராகி விடமுடியும். ஆனால், அண்ணல் நபி (சல்) அவர்களை மட்டும் ஏற்றுக் கொண்டால் ஒருவர் முழுமையான முஸ்லிமாகி விட முடியாது. அவனியெங்கும் பல்வேறு கால கட்டங்களில் தோன்றி, மக்களுக்கு இறைவழியில் நேர்வழிகாட்டிச் சென்ற ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்களையும் ஏற்றுக் கொண்டால்தான் முழுமையான முஸ்லிமாக முடியும்.

முந்தைய நபிமார்களுக்கும்
பெருமானாருக்கும் உள்ள வேறுபாடு

பெருமானாருக்கும் அவருக்குமுன் தோன்றிய நபிமார்களுக்கும் ஒரு பெரும் வேறுபாடு உண்டு. முந்தைய நபிமார்களான தீர்க்கதரிசிகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்த, இனத்தைச் சார்ந்த, மொழி பேசிய, நாட்டு. எல்லைக்குட்பட்ட மக்களுக்கு வழிகாட்ட வந்தார்கள். ஆனால், அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் வழி காட்ட இறைவனால் அனுப்பப்பட்டவர்கள். அவனிக்கோர் அருட்கொடையாக இறுதி இறைத் தூதராக வந்துதித்தார்கள்.

பெருமானாருக்கு முன் தோன்றிய நபிமார்கள் அனைவருமே ஓரிறைத் தத்துவத்தையே போதித்துச் சென்றார்கள். ஆனால், அவர்கள் மறைவுக்குப்பின், அவர்களைப் பின்பற்றியவர்களாகக் கூறிக்கொண்டவர்கள், அவர்தம் போதனைகளில் பலப்பல மாற்றங்களை, திருத்தங்களை காலவோட்டத்தில் செய்து, அவ்வக்கால உணர்களுக்கேற்ப, விரும்பிய வண்ணம் விளக்கங்களைத் தந்து, மூலத் தத்துவமாகிய ஓர் இறை தத்துவதத்துக்கு மூக்கு விழியெல்லாம் வைத்து, மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தார்கள். இதன் விளைவு, எந்தத் தீர்க்கதரிசி ஓரிறைத் தத்துவத்தை முனைப்புடன் போதித்தாரோ, அவரையே, அந்தத் தீர்க்கதரிசியையே நாளடைவில் கடவுளாக ஆக்கி விடலானார்கள்.

எந்தத் தீர்க்கதரிசியும் தாங்கள் வாழ்ந்த காலத்தில், தங்களை இறைவனாக வணங்குமாறு பணித்ததே இல்லை. காலவோட்டத்தில் இந்நபிமார்களில் பலரும் கடவுளாக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தன்னை ஒரு மனிதனாக மட்டுமே உலகத்துக்குக் காட்டி, ஒரே இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்க வேண்டுமென உலக மக்களுக்கு அறிவுறுத்தி, அந்த உணர்வு உலகம் உள்ளளவுக்கும் மக்களிடையே அழுத்தமாக நிலைபெற வழி வகுத்துச்சென்றுள்ளார்கள். அதனால்தான் இஸ்லாம் அன்று முதல் இன்றுவரை எவ்வித மாற்றங்களுக்கும் இடம்தராமல் உலகெங்கும் அழுத்தமாகக் காலூன்றி வளர்ந்து வருகிறது.

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும்
அழகிய முன்மாதிரி

மற்ற நபிமார்களுக்கும் பெருமானாருக்கும் மற்றொரு வேறுபாடு உண்டு. முந்தைய நபிமார்களில் யாருமே வாழ்க்கையின் எல்லாப் படித்தரங்களிலும் முன் மாதிரியாக வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்கள் அல்லர். அவர்கள் மக்களுக்கு உபதேசம் மட்டுமே செய்து வாழ்ந்து மறைந்தவர்கள். நாயகத்துக்கு முன் வாழ்ந்து மறைந்த மூஸா (அலை), ஈஸா (அலை) போன்ற தீர்க்கதரிசிகள் ஒரு நல்ல குடும்பத் தலைவராக, நல்ல கணவராக, தந்தையாக, படை நடத்தும் தளபதியாக, சட்டமியற்றுவோராக, ஆட்சித் தலைவராக, வாழ்ந்து வழிகாட்டியவர்கள் அல்லர். ஆனால், அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மனித வாழ்வில் எத்தனை வாழ்வியல் முறைகள், படித்தரங்கள், அம்சங்கள் உண்டோ அத்தனையிலும் வாழ்ந்த அனுபவ முத்திரை பதித்து வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளி விளக்குகளாக அவற்றை ஆக்கித் தந்து மறைந்தவர்.

எனவே, வல்ல அல்லாஹ் தன் திருமறையில் “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரில் அழகான முன்மாதிரி அமைந்திருக்கிறது” (33:21) என நாயகத் திருமேனியைப் பற்றிக் கூறியுள்ளார். இதற்கொப்ப அண்ணலார் இறைச்செய்தியை உபதேசிப்பவராக மட்டுமல்லாது திருமறைக்கேற்ப வாழ்ந்தும் காட்டிய அழகிய முன் மாதிரியாகத் திகழ்ந்த மனிதப் புனிதரும் ஆவார்.

ஆகவேதான், நபிகள் நாயகம் (சல்) திருமறைக்கு விளக்கமாக எடுத்துக் கூறிய உபதேசங்கள், அவற்றை மெய்ப்பிக்கும் வகையில் பெருமானார் வாழ்ந்துகாட்டிய வாழ்க்கை நெறிமுறைகள் ஆகியவற்றின் தொகுப்பான ‘ஹதீஸ்’ திருமறைக்கு அடுத்த நிலையில் முஸ்லிம்களால் போற்றப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகிறது.

ஆதாம் (அலை) முதல்
தொடங்கிய இஸ்லாம்

இஸ்லாமிய நெறி நபிகள் நாயகத்தால் உருவாக்கி வளர்க்கப்பட்டது அன்று. இறை நெறியாகிய இஸ்லாம் முதல் மனிதரும் முதல் நபியும் ஆகிய ஆதாம் (அலை) முதுல் இறுதி நபி பெருமானார் (சல்) வரை தோன்றிய ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களாலும் வளர்க் கப்பட்டு வந்த மார்க்கமாகும். இறுதி நபி பெருமானார் (சல்) இஸ்லாமிய மார்க்கத்தை நிறைவு செய்த பெருமைக்குரியவராவார்.

‘இஸ்லாம்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘இறைவனிடம் தன்னை ஒப்படைத்தல்’ என்பது பொருளாகும். இறை வனின் கட்டளைகளையும் வழிகாட்டுதலையும் முழுமையாக ஏற்றுச் செயல்படுவதே இஸ்லாமியக் கோட்பாடாகும். இறைவனின் பேராற்றலை அறிந்து அவன் காட்டிய நெறியில் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே முஸ்லிம் ஆவான்.

இளமை வாழ்வு

அரேபியாவில் அக்காலத்தில் மிகப் பெரும் வணிக மையமாக விளங்கிய மக்கா நகரில் அப்துல்லா - ஆமினா தம்பதியரின் புதல்வராகப் பிறந்தார் முஹம்மது. கருவிலிருக்கும்போதே தந்தையையும், பிறந்த ஆறாவது ஆண்டில் தாயையும் இழந்து அநாதையானார். இரண்டு ஆண்டுகள் பாட்டனாரின் அரவணைப்பில் வளர்ந்த முஹம்மத் பின்னர் பெரிய தந்தை அபுதாலிப்பால் வளர்க்கப்பட்டு வாலிப நிலையடைந்தார்.

ஆடு, ஒட்டகம், மேய்ப்பது முதல் வணிகம்வரை பல தரப்பட்ட பணிகளையும் செய்தார். இளமை முதலே இனிய பழக்க வழக்கங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தார். பெரியவர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றார். எப்போதும் உண்மையே பேசினார். நேர்மையைப் பூரணமாய்க் கடைப்பிடித்தார். இதனால், மற்றவர்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கினார். எல்லோரும் அவரை ‘அல் அமீன்’ என்றே அழைத்தார்கள். இதற்கு ‘நம்பிக்கைக்குரியவர்’ என்று பொருள். ஏட்டுப் படிப்பு அறவே பெறா விட்டாலும் அறிவுக் கூர்மை மிக்கவராக விளங்கினார்.

தன்னிடம் வணிகப் பிரதிநிதியாகப் பணியாற்றும் இளைஞர் முஹம்மதின் நேர்மையும் ஒழுக்கமும் அறிவாற்றலும் ‘கதீஜா’ எனும் செல்வ வளமிக்கப் பெண்மணியைப் பெரிதும் கவரவே, விரைவில் அவர் முஹம்மதுவை மணந்து கொண்டார்.

இல்லற வாழ்வும்
தனிமைத் தவமும்

இல்லற வாழ்வில் இனிதே ஈடுபட்டிருந்த முஹம்மது முப்பத்தெட்டு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும்போது, தன்னைச் சுற்றி நாள்தோறும் நடைபெற்று வரும், மது, சூது, விபச்சாரம் போன்ற சமூக ஒழுக்கக் கேடான செயல்கள் அவரை அதிகம் வருத்தின. அறியாமையினாலும் மூடநம்பிக்கையினாலும் இறைவன் பெயரால் அவர்கள் இழைத்து வரும் அநீதியான, அனாச்சாரச் செயல்கள் அவரைப் பெரிதும் சிந்திக்கத் தூண்டின.

இத் தீய போக்கிலிருந்து மக்களை மீட்க வழி தேடினார். தியான முறைகள் மூலம் தன் உள்ளொளியைப் பெருக்க முனைந்தார். இதற்காக மக்கா நகருக்கருகில் உள்ள ஹிரா குகையில் நாட்கணக்கில் தனிமைத் தவமிருந்தார். அங்கு இறைவனைக் குறித்தும், படைப்பின் அற்புதங்களைக் குறித்தும் ஆழ்ந்த சிந்தனையிலும் தியானத்திலும் ஈடுபடலானார். இதற்காகப் பல நாட்கள் பசித்திருந்தார், தனித்திருந்தார், மனத்தை அடக்கி அறிவு வழி சிந்திக்க மோனத் தவமிருந்தார். இவ்வாறு நாட்கள் வாரங்களாகவும் மாதங்களாகவும் ஆண்டுகளாகவும் உருண்டோடின.

இறைமறை பெற்ற
இரவு

கி.பி. 609, ரமளான் மாதம் ஒரு நாள் இரவு. ஹிரா குகையில் தியானத்திலிருந்த அண்ணல் முஹம்மத் அவர்கள் ‘ஓதுவீராக’ எனும் குரல் கேட்டுத் திடுக்கிட்டார். அவர் முன் காட்சியளித்த ஓர் உருவம் ‘நான்தான் ஜிப்ராயில். இறைவனுடைய செய்திகளையும் அவனது வேத வெளிப்பாடுகளையும் மனித இனத்திற்கு அறிவிப்பதற்காக, இறைவனால் நியமிக்கப்பட்டிருப்பதோடு, நீர் இறைவனால் இறைதூதராக நியமிக்கப்பட்டிருக்கிறீர் என்பதை உமக்குத் தெரிவிக்க இறைவனால் அனுப்பப்பட்ட வானவன் நான்’ என்று அவ்வுருவம் தன்னை அடையாளம் காட்டியதோடு, முஹம்மது இறைவனின் நபியாக-தூதராக நியமிக்கப்பட்டுள்ளதையும் அறிவித்து, அவரை ஓதப் பணித்தது.

“உதிரக் கட்டியிலிருந்து மனிதனைப் படைத்த படைப்பாளரான உமது இறைவனின் திருநாமத்தால் ஒதுவீராக! எழுதுகோலினால் கற்பித்தவனான உமது இறைவன் ஈகை உள்ளவனாவான். மனிதன் அறியாதவற்றை அவனுக்கு (இறைவன்) கற்பித்தான்”. எனக் கூறி ஓதப் பணித்தார்.

இதுவே ஜிப்ராயில் மூலம் அண்ணல் நபி அவர்கட்கு இறைவனால் அளிக்கப்பட்ட முதல் மறைச் செய்தி இதைப் பற்றி திருக்குர்ஆன்,

“நபியே (குர்ஆன் ஆகிய) இஃது இறைவனால்தான் அருளப்பட்டது. இறைவன் கட்டளைப்படி ஜிபுராயில் இதனை உமது இருதயத்தில் இறக்கி வைத்தார்”.

(திருக்குர்ஆன் 26: 192; 95)

“நிச்சயமாக அல்லாஹ்வின் கட்டளைப்படியே ஜிபுராயீல் இதனை உமது இருதயத்தில் இறக்கி வைத்தார்” (2.97)

வஹீ மூலம் இறைச் செய்தி

இவ்வாறு ரமளான் இரவு தொடங்கி பெருமனாரின் இறுதிநாள்வரை 23 ஆண்டுகள் சிறிது சிறிதாக குர்ஆன் திருமறை வஹீயாக அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இறைவன் மொழியை வானவர் உணர்த்துவது ‘வஹீ’ எனப்படும். இதைப் பற்றி திருமறை குறிப்பிடும் போது “அல்லாஹ்வுடன் நேருக்கு நேர் பேசுவதற்குரிய தகுதி மானிடரில் ஒருவருக்கும் இல்லை. எனினும் வஹீயின் மூலமாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு வானவரை அனுப்பி வைத்தோ மனிதரிடம் இறைவன் பேசுகிறான் (42-51). வஹீ மூலம் இறைச்செய்தி பெற்றது எவ்வாறு என்பதைப் பெருமானாரே கூறியுள்ளார்,

“சில சமயம் மணி ஒலிப்பதுபோல் என் காதில் சொற்கள் ஒலிக்கும். அவ்வொலி மூலம் சொல்லப்பட்ட சொற்களை நான் நினைவில் இருத்திக் கொள்வேன். சிலவேளைகளில் வானவர் தலைவர் ஜிப்ராயில் (அலை) மனித வடிவில் தோன்றி என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நான் மனத்தில் இருத்திக் கொள்வேன்”. (புகாரீ 1-1) எனப் பெருமானார் கூறியுள்ளதிலிருந்து வானவர் வடிவிலும் ஒலி வடிவிலுமே பெருமானாருக்கு இறைச் செய்தி முழுமையும் அருளப்பட்டது என்பது தெளிவாகிறது.

ஹிரா குகையில் முதல் இறைச் செய்தியை வானவர் ஜீப்ராயில் மூலம் பெற்ற அண்ணல் நபி (சல்) அவர்கள் உடல் நடுக்கமுற்றவராக விரைந்து இல்லம் சேர்ந்து தம் துணைவியார் கதீஜா பிராட்டியாரிடம் நடந்தவைகளைக் கூறினார். பெருமானார் கூறயதனைத்தையும் கேட்டறிந்த அம்மையார் முழுமையாக நம்பியதோடு அண்ணலாரை இறை தூதர் - நபியாகவும் முழு மனதோடு ஏற்று உறுதி கொண்டார். இவ்வாறு இறை மார்க்கமான இஸ்லாமிய நெறியில் அன்னை கதீஜா தன்னை முதன்மையாளராக இணைத்து முஸ்லிமானார். பின்னர், அபூபக்கர், சித்தீக், மாவீரர் அலி போன்றோர் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டு இணைந்தனர்.

இன்றைய உலக மக்களில் நான்கில் ஒருவர் வீதம் நம்பிக்கை வைத்துள்ள இஸ்லாம் மார்க்கம் இவ்வாறு தான் வளரலாயிற்று.

பல தெய்வ உருவ வழிபாட்டில் மூழ்கிக் கிடந்த மக்காவாசிகளான குறைஷிகள் உருவமற்ற, இணை, துணை இல்லாத ‘அல்லாஹ் ஒருவதே இறைவன்’ என்று பெருமானார் கூறுவதை ஏற்க மறுத்தனர். தீயவழிகளில் ஒழுக்கக் கேடர்களாக வாழ்ந்த மக்கா வாசிகளில் சிலர் பெருமானார் கூறும் நன்னெறிகளைக் கேட்டு வெகுண்டனர்.

நல்லவர்கள் சிலர் நபிகள் நாயகம் போதித்த இஸ்லாமிய நெறியில் நம்பிக்கை கொண்டு நடந்தனர். இதைக் கண்டு, குறைஷிகள் கோபமும் கொதிப்பும் கொண்டனர். மிரட்டி அடக்கி ஒடுக்க முயன்றனர். பல வகையான தீங்குகளை இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கு ஏற்படுத்தினர். எண்ணற்ற இடர்கள் ஏற்பட்ட போதிலும் நபி பெருமானார் உறுதி குறையாதவர்களாக இஸ்லாத்தை எடுத்து சொல்லி வந்தார். இதனால் கலக்கமடைந்த குறைஷிகள் நபிகள் நாயகத்தைப் பெருஞ் செல்வத்துக்கு அதிபதியாகவும் மன்னராகவும் ஆக்குவதாகவும் “ஒரே இறைவன்” என்ற கொள்கையை கைவிடும்படியும் வேண்டினர். இதற்குச் சற்றும் இணங்காமல் தொடர்ந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வந்த நபிகள் நாயகத்தை குறைஷிகள் இறுதியில் கொல்லவும் திட்டமிட்டனர்.

சிலந்தி வளையும்
புறாக்கூடும்

அப்போது இறை கட்டளைப்படி நபிகள் நாயகமும் அவரது தோழர் அபூபக்கரும் மக்காவைவிட்டு யாருமறியாமல் வெளியேறினர். மதீனா செல்லும் வழியில் இருந்த தெளர் எனும் குகையில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது எதிரிகள் அவர்களைத் தேடி அங்கே வந்தனர். குகை வாயிலை அடைந்தபோது, அங்கே சிலந்தி வலையும் புறாக்கூடும் இருப்பதைக் கண்டனர். குகையினுள் யாரும் இருக்க முடியாது என எண்ணித் திரும்பி விட்டனர். மீண்டும் நபிகள் நாயகமும் தோழர் அபூபக்கரும் மதீனா நோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இவ்வாறு பெருமானார் (சல்) மக்காவிலிருந்து மதீனா சென்ற நிகழ்ச்சியே ‘ஹிஜ்ரத்’ என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து தான் இஸ்லாமிய ஆண்டான ‘ஹிஜ்ரி’ தொடங்குகிறது.

முன்னரே இஸ்லாமிய நெறியில் தங்களை இணைத்துக் கொண்டிருந்த மதீனாவாசிகள் பெருமானாரை வரவேற்று தங்களோடு தங்கவைத்துக் கொண்டனர். நாளடைவில் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்ட மக்கா வாசிகள் மதீனா வந்து சேர்ந்தனர். மதீனாவில் முதன் முதலாக தொழுகைக் கான பள்ளிவாசல் ஒன்றை நபிகள் நாயகம் கட்டினார். அடிமையாக இருந்து இஸ்லாத்தை ஏற்று விடுதலை பெற்ற கறுப்பரான பிலால் அவர்கட்கு தொழுகைக்கு அழைக்கும் ‘அதான்’ எனும் பாங்கொலி எழுப்பும் மிக முக்கிய பணியைப் பெருமானார் அளித்தார்.

மதீனாவில் வேகமாக இஸ்லாம் பரவி வளர்வதைக் கண்டு வெகுண்ட மக்காவாசிகள் பெரும் படையுடன் மதீனா மீது படையெடுத்துச் சென்றனர். பத்ரு எனுமிடத்தில் நடந்த முதல் போரில் எதிரிகளுடன் பெருமானார் மிகச் சிறு படையுடன் சென்று போரிட்டார். அதில் பெருமானாருக்கே வெற்றி கிடைத்தது.

தோல்வியடைந்த மக்காக் குறைஷியர் அடுத்த ஆண்டே மீண்டும் படையெடுத்துச் சென்று ‘உஹத்’ எனுமிடத்தில் போரிட்டனர். இதில் முஸ்லிம்களே வெற்றி பெற்றனர். இஸ்லாம் வேகமாக வளர்ந்து எங்கும் பரவியது.

இரத்தம் சிந்தா வெற்றி

நபிகள் நாயகத்தை வெற்றி கொள்ள இயலாது என்பதை நாளடைவில் குறைஷியர் உணர்ந்தனர். பெருந் தொகையினராக ஹஜ் பயணம் மேற்கொண்ட மக்கா வந்த நபிகள் நாயகத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்துத் தங்கள் தோல்வியை ஒப்பு கொண்டனர். இவ்வாறு பெரும்போர் ஏதுமின்றி, சொட்டு இரத்தமும் சிந்தாதபடி மக்கா நகரை பெருமானாரும் முஸ்லிம்களும் வெற்றி கொண்டனர். எதிரிகளில் பலரும் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டு முஸ்லிம்களாயினர்.

இதனால், பெருமானாரின் பெருமையும் புகழும் திசை யெங்கும் பரவின. இஸ்லாமிய மார்க்கத்தின் நன்னெறிகளை அறிந்துணர்ந்த மக்கள் முஸ்லிம்களாயினர். இதனால், அரேபியாவெங்கும், அடுத்துள்ள பல்வேறு நாடுகளிலும் இஸ்லாம் வலுவாக வளர்ந்து உலகப் பெரும் மார்க்கமாக நிலை பெற்றது.

தன் இறைத் தூதை முழுமைப்படுத்திய நபிகள் நாயகம், இறை வாக்குப்படி வாழ்ந்து காட்டிய மனிதப் புனிதராவார்.

உலகுக்கோர் அழகிய முன் மாதிரியாக வாழ்ந்து காட்டிய அண்ணலார் தம் அறுபத்து மூன்றாம் வயதில் மதீனாவில் மறைவெய்தினார்கள். பெருமானார் மதீனாப் பள்ளியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

பெருமானர் போதித்து, அதன்படி வாழ்ந்து காட்டிய இஸ்லாமியக் கொள்கைகள் கோட்பாடுகளில் சிலவற்றைக் காண்போம்.

இஸ்லாத்தின் உயிர்மூச்சாக அமைந்திருப்பது ஐம்பெரும் கடமைகளாகும். அவை - கலிமா எனும் இறை நம்பிக்கை, (2) தொழுகை, (3) நோன்பு, (4) ஜகாத் எனும் ஏழை வரி, (5) ஹஜ் ஆகியவைகளாகும்.

கலிமா (இறை நம்பிக்கை)

இறைவன் ஒருவனே, அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு ஒருவருமில்லை; அல்லாஹ் இணை, துணை இல்லாதவன்; முஹம்மத் (சல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார். இது அரபி மொழியில் லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று கூறப்படும்.

தொழுகை

இறை நம்பிக்கையை செயல் வடிவில் வெளிக்காட்ட ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு நாளைக்கு ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். அவை: வைகறை, நண்பகல், மாலை, அந்தி, இரவு நேரங்களாகும். தஹஜ்ஜத் எனும் நள்ளிரவுத் தொழுகையும் தொழுவர்.

நமக்கு எல்லாவகை நலத்தையும் அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவித்து, இறையருள் வேண்டுதல் தொழுகையாகும். ஐவேளைத் தொழுகையில் இறை நம்பிக்கை வலுப்படுகிறது. உயர்ந்த ஒழுக்கமுள்ள வர்களாய் மாற்றுகிறது. மனத்தைத் தூய்மைப்படுத்துகிறது. தீயசெயல் செய்ய விடாமல் தடுக்கிறது.

நோன்பு

இஸ்லாமிய ஆண்டிலுள்ள பன்னிரண்டு மாதங்களில் ஒன்பதாவது மாதம் ரமளான் ஆகும். இம்மாதத்தில் வைகறை முதல் கதிரவன் மறையும் வரை எதையும் உண்ணாமலும் பருகாமலும் இருத்தல் வேண்டும். எல்லா விதத் தீய எண்ணங்களையும் ஆசைகளையும் அகற்றுதல் வேண்டும். அன்பையும் கட்டுப்பாட்டையும் கடமையுணர்வையும் இறை பக்தியையும் நோன்பு கற்பிக்கின்றது. நோன்பின் மூலம் பிறர் பசித்துயர் அறிய ஈகை உணர்வு பெருகுகிறது. நோன்பு நோற்பவர்களுக்கு பொறுமையும் தன்னலமின்மையும் மன வலிமையும் உண்டாகிறது.

ஜகாத்

செல்வ வளம் உள்ளவர்கள் தமது சேமிப்பிலிருந்து இரண்டரை சதவீதத்தை ஆண்டுதோறும் கணக்கிட்டு ஏழை எளியவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பது ‘ஜகாத்’ எனப்படும். இக் கடமையைத் தவறாமல் செய்வதன் மூலம் செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஹஜ்

பண வசதியும் பயணத்திற்கான உடல் வலிமையும் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் மக்காவுக்குச் சென்று, ஹஜ் கடமைகளை நிறை வேற்றுவது இஸ்லாம் விதித்துள்ள ஐந்தாவது கடமையாகும்.

இஸ்லாத்தில் இறைவழிபாடு

இஸ்லாம் தூய எண்ணங்களுக்கு நற்செயல்களுக்கு முதன்மை தருகிறது. இறைவனை அறிந்து அவனை நேசிக்க வேண்டும். இறைவனின் கட்டளைகளை வாழ்வில் எல்லாத் துறைகளிலும் செயல்படுத்த வேண்டும். நற் செயல்களைச் செய்யத் தூண்ட வேண்டும். தீய செயல்களையும் கொடுமைகளையும் அநீதியையும் தடுக்க வேண்டும். வேண்டிய அளவு தான தருமங்கள் செய்ய வேண்டும். நீதி செலுத்த வேண்டும். மனித குலத்திற்கு இயன்ற வரை சேவை செய்வதும் இறை வணக்கமே. இதையே திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

“உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல புண்ணியம்; ஆனால், அல்லாஹ்வின் மீதும் இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் வானவர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு) அல்லாஹ்வின் மீதுள்ள) நேசத்தின் காரணமாகத் தன் (நெஞ்சுவக்கும்) பொருள்களைச் சுற்றத்தாருக்கும் அநாதைகளுக்கும், வறியவருக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும் ஈதலும் தொழுகையை நிலை நாட்டுதலும், ஜகாத் கொடுத்து வருதலுமே புண்ணியமாகும். இன்னும் வாக்குறுதி அளித்தால் அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகின்றவர்கள், துன்பமும்
இன்னலும் சூழ்ந்த நேரத்திலும் (மெய்மைக்கும் பொய்மைக்கும் இடையே ஏற்படும்) போரிலும் பொறுமையைக் கைக்கொள்கின்றவர்கள் ஆகிய இவர்களே சத்தியசீலர்கள் இவர்களே முத்தகீன்கள் (பக்தியும் பரிசுத்தமும் உடையவர்கள்)” (2:177).

உலகம் - ஒரு குடும்பம்

உலகம் ஒரு குடும்பம் என்பது பெருமானாரின் போதனைகளின் திரட்சியாகும். மனித குலம் முழுவதும் இறைவனின் ஆட்சிக்குட்பட்ட ஒரே குடும்பம் ஆகும். இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் செய்த நன்மை தீமைகளுக்கு இறைவனிடம் மறுமையில் கணக்குக் காட்ட வேண்டும். உலக வாழ்வில் உண்மையையும் நீதியையும் பின்பற்றியவர்கள் மறுமையில் தக்க வெகுமதிகள் அளிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் அநியாயமும் அநீதியும் செய்தவர்கள் அதற்கேற்ற கடும் தண்டனையைப் பெறுவார்கள்.

சகோதரத்துவம்

பெருமானார் அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார். உலக மக்கள் அனைவரும் இறை வனின் படைப்பாவார்கள். மனிதர்கள் அனைவரும் ஆதாமின் வழி வந்தவர்களேயாவர். ஒருவருக்கொருவர் அன்பு காட்டி உதவி செய்து சகோதரர்களாக வழி காட்டியவர் அண்ணல் நபி (சல்) அவர்கள்.

சமத்துவம்

இன, மொழி, நிற, இட வேறுபாடின்றி மனிதர்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டுமெனப் போதித்தவர் பெருமானார். வசதி படைத்தவராக இருந்தாலும் சரி; ஏழையாக இருந்தாலும் சரி, ஆளுவோராக இருந்தாலும் சரி; ஆளப்படுவோராக இருந்தாலும் சரி, அனைவருமே இறைவனின் முன் சமம் என்பதே பெருமானாரின் சமத்துவக் கொள்கை.

வாழும் முறை

மனிதர்கள் சமூகம், பொருளாதாரம், அரசியல், ஒழுக்கம், ஆன்மீகம் என எல்லாத் துறைகளிலும் எவ்வாறு வாழ வேண்டும் என இஸ்லாம் வரையறை செய்துள்ளது. திருமறை வழியிலும் இறைதூதர் பெருமானாரின் வழிகாட்டுதல்படியும் வாழ்வோர் இறைவனின் அன்பிற்குரியராக ஏற்றம் பெறுவர்.

நன்றி : தினமணி