பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/ஏன் வேண்டும் இறைச் சிந்தனை?

விக்கிமூலம் இலிருந்து

ஏன் வேண்டும்
இறைச் சிந்தனை?


பாரிஸ் யுனெஸ்கோ தலைமையகம். யுனெஸ்கோ கூரியர் சர்வதேச ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சமயம். மாநாட்டில் பங்கு கொண்ட பிரதிநிதிகளில் எட்டுநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முஸ்லிம்கள். பத்துநாட்கள் நடைபெறும் கூட்டம் வெள்ளிக்கிழமை மட்டும் சற்று முன்னதாக முடிந்து பிற்பகல் சற்று நேரந் தாழ்த்திக் கூடும். காரணம் இஸ்லாமியப் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குச் சென்று வருவதற்காக இவ்வேற்பாடு.

அன்று வெள்ளிக்கிழமை. ஜும்மா தொழுகையை முடித்து ஹாலில் வந்து அமர்ந்தேன். எனக்கு முன்னதாக அங்கு வந்திருந்த பிரேசில் நாட்டுப் பிரதிநிதி பெனடிக்டோ சில்வா ஆர்வத்துடன் என்னிடம் இஸ்லாம் பற்றி உரையாடினார். எங்கள் பேச்சு பாரிஸில் உள்ள அழகான மசூதி பற்றியும் அங்கு நடைபெறும் ஜும்மா தொழுகை, ஐவேளைத் தொழுகையெல்லாம் பற்றியதாக இருந்தது. திடீரென நான் எதிர்பாராத கேள்வியொன்றை கேட்டார்.

“கிருஸ்தவர்களாகிய நாங்கள் வாரத்திற்கு ஒருமுறை ஞாயிறன்று சர்ச்சுக்குப் போகிறோம். ஆனால், முஸ்லிம்களாகிய நீங்களோ ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை நடத்துகிறீர்கள். இன்றைய விரைவுத்தன்மை மிகுந்த வாழ்க்கைச் சூழலில் இது இடராக இல்லையோ? இதனால் உங்கள் பணிகள் பாதிக்காதோ? சக்தியும் நேரமும் கூட விரையமில்லையோ? குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறை தொழுதால் போதாதோ?” என்ற வினாக்களைப் பாமரத்தனமாக அடுக்கிக் கொண்டே போனார்.

இத்தகைய வினாக்களை மார்க்க அறிவு குறைந்த இஸ்லாமிய இளைஞர்களில் ஒரு சிலர் கூட தொடுப்பதை இலைமறையாக அறிந்தவன் என்பதால் நண்பர் சில்வாவின் கேள்விக்கணைகள் எனக்கு வியப்பாகத் தோன்றவில்லை. அவரைப் பொறுத்தவரை நியாயமான கேள்வியுங்கூட! அதற்குரிய விடையளிப்பது என் கடமையாயிற்று.

சடங்கு அல்ல தடுப்புக் கேடயம்

இஸ்லாத்தைப் பொறுத்தவரை இறைவணக்கமாகி தொழுகை என்பது ஏதோ போகிற போக்கில் செய்து விட்டுப்போகிற வெறும் சடங்கு அல்ல. எக்காரணம் கொண்டும் மனிதன் தவறான வழில் செல்லாதவாறு தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடே ஐவேளைத் தொழுகை.

மனிதன் தவறின்றி வாழவேண்டுமானால் இறைவனைப் பற்றிய உணர்வும் தவறு செய்தால் அவனது தண்டனைக்கு ஆளாவோம் என்ற அச்சமும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆழமாகவும் அழுத்தமாகவும் படிந்திருத்தல் வேண்டும்.

ஒரு முஸ்லிம் அதிகாலை ஐந்து மணிக்கு கண்விழித்து உடல் சுத்தம் உள்ளத் தூய்மையோடு இறைவணக்கத்தில் ஈடுபடுகிறான். தொழும்போது இறைவன் முன்னிலையில் தான் வணங்கிக்கொண்டிருப்பது போன்ற மன உணர்வில் தன் தொழுகையை நிறைவேற்றுகிறான். அப்போது அவன் உள்ளம் இறையுணர்வாலும் இறைநெறிக்கு மாறுபட்டு நடந்தால் அல்லாஹ்வின் கடுந்தண்டனைக்கு ஆளாவது நிச்சயம் என்ற உணர்வின் அடிப்படையில் உருவான இறையச்ச உணர்வாலும் நிறைகிறது.

பின் பொழுது புலரவே தன் அன்றாடக் கடமைகளில் கவனம் செலுத்துகிறான். பல்வேறு காரியங்களில் அவன் மனம் மூழ்குகிறது. இதனால் நேரம் செல்லச் செல்ல மனத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த இறையுணர்வும் இறையச்ச எண்ணமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத் தொடங்குகிறது. இவ்வுணர்வுகள் முற்றிலுமாக அவன் உள்ளத்தினின்றும் மறையும் முன்பாக அவன் மீண்டும் நண்பகல் தொழுகையை மேற்கொள்கிறான். மீண்டும் அவன் உள்ளம் இறையுணர்வாலும் இறையச்ச உணர்வாலும் நிறைகிறது. தொடர்ந்து பல்வேறு அலுவல்களில் ஈடுபடுவதன் மூலம் மீண்டும் மாலைத் தொழுகையில் இறையுணர்வும் இறையச்ச உணர்வும் புதுப்பிக்கப்படுகிறது. அதே தொடர் நிகழ்வுக்குப் பிறகு இரவு தூங்கச் செல்லுமுன் ஐந்தாவது தொழுகை நிறைவேற்றப்படுகிறது. நெஞ்சம் நிறைந்த இறையுணர்வோடும் இறையச்ச உணர்வோடும் தூங்கச் செல்கிறான். இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் அதிகாலை கண்விழித்தது முதல் இரவு தூங்கச் செல்லும்வரை தன் நெஞ்சத்தில் இறையுணர்வையும் இறையச்சத்தையும் இடையறாமல் நிரப்பிக்கொண்டே இருப்பதால் இரவு பகல் எந்நேரமும் இறைவழியில் மட்டும் வாழக்கூடிய மனிதப் புனிதராகத் தன்னை உருமாற்றிக்கொள்ள ஐவேளைத் தொழுகையே ஆதார கருதியாக அமைந்து விடுகிறது. இதற்காக ஒவ்வொரு தொழுகைக்கும் அவன் செலவிடும் நேரம் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே. ஆனால் கிடைக்கும் பலனோ அளவிலா இறையருள், மறுமைப் பெருவாழ்வு.

இஸ்லாத்தின் இறைவணக்க முறைகள்

மேலும் இஸ்லாத்தில் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இடையாட்கள் யாரும் இல்லாததால் தொழுகைக்கென மசூதி சென்றேயாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. இடம் தூய்மையாக இருந்தால் போதும், எங்கிருந்தும் தொழலாம்.”

இவ்வாறு நான் கூறி முடித்தவுடன் அவர் அகமும் முகமும் மலர இஸ்லாத்தின் ஐவேளைத் தொழுகைக்கு இப்படியொரு உட்கருத்து இருப்பதை அறியாமல் வினா தொடுத்துவிட்டேன். சமயவியல் அடிப்படையில் மட்டுமல்லாது உளவியல் அடிப்படையில் பார்த்தால்கூட மனிதனை தெய்வீகச் சிந்தனையுடன் நல்வழிப்படுத்த இதைவிட வலுவான வேறு வழியேதும் இருப்பதாகத் தெரியவில்லை” எனப் பாராட்டுரை வழங்கினார்.

இஸ்லாமிய மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளான இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஏழைப் பங்கான ஜகாத், இறுதிக் கடமையான ஹஜ் ஆகிய அனைத்துமே இறைவணக்க முறைகளாகவே அமைந்துள்ளன.

‘ஒரே இறைவன்; உருவமற்றவன்; இணை துணை இல்லாதவன் என்ற இறை நம்பிக்கையான கலிமா மூலம் ஒரு முஸ்லிம் உள்ளத்தால் இறைவணக்கம் புரிகிறான்.

ஐவேளைத் தொழுகையின் மூலம் உடலால் இறை வணக்கம் நடைபெறுகிறது. ரமளான் மாதத்தில் முப்பது நாட்கள் பகலில் உண்ணாமலும் சொட்டு நீரும் பருகாமலும் நோன்பு நோற்பதன் மூலம் உடலாலும் உள்ளத்தாலும் இறைவணக்கம் நிகழ்த்தப்படுகின்றது. தான் வருந்தியுழைத்துத் தேடிய பொருளிலிருந்து நாற்பதில் ஒரு பங்கைதன் கைப்படவே ஏழை எளியவர்க்கு ஜகாத்தாக ஈவதன் மூலம் பொருளால் இறைவணக்கம் செய்யப்படுகிறது. பொருள் வசதியுள்ளவர்கள் வாழ்வில் ஒரு முறையேனும் மக்காவிலுள்ள கஃபா இறையில்லம் சென்று தேச, இன, மொழி, நிற பேதங் கடந்த நிலையில் அனைவரும் சமம் என்பதை எண்பிக்கவும், அனைவரும் ஆதாம் பெற்ற மக்களே, சகோதரர்களே என்பதைச் செயல் வடிவில் நிறுவுவதற்கான ஹஜ் கடமை உள்ளத்தாலும், உடலாலும், பொருளாலும் இறைவணக்க முறைகளாகவே அமைந்துள்ளன. அதுமட்டு மல்ல, இஸ்லாமியக் கடமைகள் ஒவ்வொன்றும் மனிதனைத் தியாக சீலனாக உருமாற்றும் உந்து சக்தி களாகவே அமைந்து இறைவழி நெறிப்படுத்தி வருகின்றன.

தியாக உணர்வே
இறை வணக்க அடிப்படை

ஐவேளைத் தொழுகையில் முதல் தொழுகை ஐந்தரை மணிக்குத் தொடங்குகிறது. ஐந்து மணிக்கும் முன்னதாகவே எழுந்து உடல் சுத்தம் உள்ளச் சுத்தத்தோடு தொழுகைக்குத் தயாராக வேண்டும். இதற்காக தொழுகையாளி இன்பமான காலைத் தூக்கத்தைத் துறந்து, இறைவனுக்காகத் தியாகம் செய்து, அவனருள் வேண்டி அடிபணிகிறார். ரமளான் மாத நோன்பின்போது பகலில் தான் விரும்பி உண்ணும் சுவைான உணவு வகைகள், இனிய பானங்கள் புகைப்புகள் அனைத்தையும் முற்றாகத் துறந்து, தியாகப் பிழம்பாகிறார். தான் முயன்று உழைத்துத் தேடியபொருளை நாற்பில் ஒரு பங்கு என்ற கணக்கில் வறுமைவாய்ப்பட்ட வயோதிகர்கள், உழைக்கவியலா உடல் ஊனமுற்றவர்கள், ஆதரிப்பாரற்ற அநாதைகட்கு ஜகாத்தாக வழங்கித்தன் பொருளைத் தியாகம் செய்கிறார். ஹஜ்ஜின்போது தான் தேடி பொருளும், குடும்பத்தார், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரை யும்விட்டு நீங்குகிறார். இவைகளையெல்லாம் தியாகம் செய்து விட்டதன் அடையாளமாக இறந்தவருக்குப் போர்த்தும் உடையான தைகக்கப்படாத இரு துண்டுத் துணிகளை மட்டும் இஹ்ராம் உடையாக அணிந்த கஃபா இறையில்லம் ஏகுகிறார்.

இவ்வாறு இஸ்லாமியக் கடமைகள் ஐந்துமே இறை வணக்கத்தையும் தியாக உணர்வையும் ஊட்டிய வண்ணம் அவர்களை இறைவழிபேணும் மனிதப் புனிதர்களாக மாற்றுகின்றன.