பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

‘இரங்கற் பாக்கள்’ எழுதியனுப்பி யிருந்தனர். சுவாமிகளின் பெருமையை விளக்கும் அப் பெரியார்களின் உருக்கமான பாடல்கள் ஒன்று கூட இன்று நமக்குக் கிடைக்கவில்லை. கவிராயர் அவர்கள் பாடியவற்றில் இரண்டு வரிகள் மட்டும் எங்களுக்கு நினைவிலிருக்கின்றன.

“நான் சாக நீகாண வேண்டுமென
        நினைத்திருந் தேன்
தான் சாக மருந்துண்ட
       சங்கரதாஸ் ஐயனே”

என்ற அந்த இரண்டு வரிகளிலேயே கவிராயர் அவர்களுக்கும் சுவாமிகளுக்கும் இருந்த உள்ளத் தொடர்பு வெளிப்படுகிற தல்லவா ?.........

புலவனைப் போற்றிய புலவர்

சுவாமிகள் மிகுந்த உதார குணமுடையவர். எளியோர்க் கிரங்கும் உள்ளம் படைத்தவர். பொருள் திரட்டும் போக்கு அவரிடம் இறுதிவரை இருந்ததேயில்லை. தன்னிடம் இருப்பதை எல்லோருக்கும் கொடுத்து இன்புறும் பண்பு சுவாமிகளிடம் நிறைந்திருந்தது.

அந்தக் காலத்தில் தமிழகத்தின் வட பகுதியிலே நாடாகாசிரியராகத் திகழ்ந்தவர் திருவாளர் ஏகை—சிவ சண்முகம் பிள்ளை அவர்கள். இராமாயணம், கண்டி ராஜா, ஹரிச்சந்திரன் முதலிய நாடகங்கள் இப்பெரியாரால் இயற்றப் பெற்றவை. வேலூர் தி. நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் கம்பெனி முதல் இன்று வரை சம்பூர்ண இராமாயணத்தை நடிக்கும் எல்லாச் சபையினரும் திரு. சிவ சண்முகம் பிள்ளை அவர்களின் பாடல்களையே பாடிவருகிறார்கள் என்பது இப்பெரியாருக்குப் பெருமை தருவதாகும்.