வைணவமும் தமிழும்/வைணவ சீலர்கள்

விக்கிமூலம் இலிருந்து
8. வைணவ சீலர்கள்

உடையவர் காலத்திற்கு முன்னும் பின்னுமாக இருந்த ஆசாரியர்களைப்பற்றி வைணவ ஆசாரியர்கள் என்ற தலைப்பில் சொல்லப்பட்டவர்கள் போக உடையவர் காலத்திலிருந்த ஆசாரியர்கள், அடியவர்கள் பற்றிய குறிப்புகள் ஈண்டுத் தரப்பெறுகின்றன.

1. ஆசாரியர்கள் :

(1). திருக்கச்சி நம்பி : சுப்ரதிஷ்டாம்சம். இவர் சென்னைக்குச் சுமார் 24 கி.மீட்டர் தொலைவிலுள்ள பூவிருந்தவல்லியில் பிறந்தவர். தந்தையார் வீரராகவன் என்ற வணிகர்; தாயார் கமலை. தொடக்கக் காலத்தில் கச்சி அருளாளனுக்குப் பூத்தொண்டு புரிந்து வந்தார். பின்னர் அப்பெருமானுக்கு ஆலவட்டக் கைங்கரியம் புரிந்து வந்தவர். உடையவர் இளமைக் காலத்தில் அவருடைய திருத்தாயார் சொற்படி இவருடன் நெருங்கிப் பழகி வந்தார்; அவருக்குத் தொண்டும் புரிந்து வந்தார். திருக்கச்சி நம்பி உடையவருக்கு வரதராசப்பெருமாள் திருவுள்ளமாக வெளியிட்ட ஆறு வார்த்தைகள் மிகுபுகழ் பெற்றவை. அவை: (1) திருமாலே பரம்பொருள், (2) சீவான்மாவுக்கும் - பரமான்மாவுக்கும் உள்ள வேறுபாடுபற்றியது (3) பிரபத்தியே (சரணாகதி) சிறந்த முத்தி நெறி (4) மரணகாலத்தில் உள்ளத்தை இறைவனிடம் ஒருமைப் படுத்தவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. (5) சரீரத்தின் முடிவில் பாகவதர்கட்கு முக்தி நிச்சயம் (6) பெரிய நம்பியைக் குருவாகக் கொள்ளவேண்டும். இந்த ஆறு வார்த்தைகளையும் நம்பி சொல்ல இராமாநுசர் இறைவனே நம்பியின் இதயத்திலிருந்து வந்தவை போன்ற உணர்ச்சியுடன் கேட்டார். இதனால் ஒரு முறையில் ஆசாரியருமாகின்றார் என்று கொள்வதில் தவறு இல்லை. இவர் 55 திருநட்சத்திரம் வாழ்ந்திருந்தார்.பூவிருந்தவல்லி திருமால் திருக்கோயிலில் இவருக்குப் பெருமாள் சந்நிதிபோல் சிறப்புடன் அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் அருகில் உள்ளன. அருளிச்செயல்; 'தேவராஜஷ்டகம்'.

(2). பெரிய திருமலைநம்பி: சுகுமாம்சம். திருமலையில் சித்திரையில் சுவாதி நட்சத்தில் அவதரித்தார். இவரை ‘ஸ்ரீசைலபூர்ணர்' என்று வழங்குவதும் உண்டு. இவருக்கு இரண்டு சகோதரிகள். மூத்தவள் காந்திமதி (இராமாநுசரின் திருத்தாயார்). இளையவள் ஸ்ரீதேவி( எம்பாரின்திருத்தாயார்) காந்திமதியின் குழந்தைக்குத் தாய் மாமன் திருமலை நம்பி இலட்சுமணன் (இளையாழ்வார்) என்ற திருநாமம் இட்டு வழங்கினார். இராமனுக்குப் பணி புரிந்ததைப்போல், ஆதிசேடனைப்போல்,இளையாழ்வாரும்பணிபுரியவேண்டும், பேரறிவுள்ளவனாகவும் திகழ வேண்டும் என்பது மாதுலரின் ஆசை. இவரிடம் இளையாழ்வார் இராமாயணம் கேட்டதாக வரலாறு. இவர் ஆளவந்தாரின் திருவடிச் சம்பந்தி, வயது 100.

(3). திருக்கோட்டியூர் நம்பி: (கோஷ்டிபூர்ணர்); புண்டரீகாம்சம். திருக்கோட்டியூரில்1 அவதரித்தார். திருநட்சத்திரம் வைகாசி உரோகிணி, வேறு திருநாமம்: கோஷ்டிபுரீசர். குமாரர்: தெற்காழ்வான்; குமாரத்தி: தேவகி பிராட்டியார், சீடர்: இராமாநுசர். இராமாதுசருக்கு திருமந்திரம் உபதேசித்தார். சொல்லற்கரிய சிரமம் கொடுத்து உபதேசித்த வரலாறு கல்நெஞ்சத்தையும் உருக்கும். திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்குப் பதினெட்டு முறை வரவழைத்து, பின்னர் ஒருமாதகாலம் உண்ணாவிரதம் அதுசரிக்கச் செய்து அது வெற்றி பெற்றதும் உபதேசித்தார். உடையவர் துறவியாதலின் தண்டு பவித்திரங்களோடு தனிமையாக வரச்செய்தார் உடையவரோ 'முதலியாண்டான்' (தண்டு), பவித்திரம் ('கூரேசன்') இவர்களோடு சென்றார்; அதற்கு விளக்கமும் சொன்னார். நம்பிக்கு ஒரே வியப்பு, ஒராண் வழியாக (குரு சீடர் முறையில்) உபதேசிக்கப்படும் இதனை எவர்க்கும் தெரிவிக்கக்கூடாது என்ற உறுதிமொழியும் பெற்றார். ஆயினும் ‘தான் அறப்பெய்து மாயும் தடமுகில்’ என்று பாராட்டப்பெறும் இளையாழ்வார் திருக்கோட்டியூர் கோபுரத்தின்மீதேறி சாதிபேதமின்றி திருமந்திரத்தையும், அதன் பொருளையும் அனைவரும் கேட்குமாறு முழக்கினார். போர்க்களத்தில் கண்ணன் காண்டீபனுக்குக் கீதையை உபதேசிக்கவில்லையா? அது போல எனலாம். ஆசாரியரும் உடையவரை எம்பெருமானாரே! என்று அழைத்து மகிழ்கின்றார். இது வரையில் பரமவைதிக சித்தாந்தம் என்று வழங்கிவந்த இந்தச் சித்தாந்தம்” இன்று முதல் 'எம்பெருமானார்தரிசனம்' என்று வழங்குவதாகும்” என்று வாழ்த்திப் போற்றுகின்றார்.

     “காரேய் கருணை இராமாநுசா!
          இக்கட லிடத்தில்
     ஆரே அறிபவர் நின்அருளின்
         தன்மை? (இராமா. நூற். 25)

என்று திருவரங்கத்தமுதனார். அருளிச் செய்த இந்த வாக்கில் திருமந்திரதானம் செய்தது போன்ற உடையவரின் கருணைப் பெருஞ்செயல் குறிக்கப்பெற்றதாகக் கொள்ளலாமல்லவா? இத்தகைய வள்ளலை தான்அறப் பெய்து மாயும் தடமுகில்’ என்று உருவகித்தது எவ்வளவு பொருத்தம்? என்று நாம் வியந்து சிந்தித்து மகிழ்கின்றோம். வயது. 105.

(4).திருமாலையாண்டான்: வனமாலை அம்சம்.அழகர் திருமலையில் அவதரித்தவர்; திருவரங்கத்தில் வாழ்ந்தவர். திருநட்சத்திரம் : மாசிமகம், வேறு திருநாமங்கள் மாலாதரர், ஞானபூர்ணர், ஆசாரியர்: ஆளவந்தார். சீடர் : இராமாநுசர். - திருக்குமாரர். சுந்தரத்தோளுடையான். வயது 100

(5).திருவரங்கப்பெருமாள் அரையர்: சங்குகரணாம்சம். திருவரங்கத்தில் ஆளவந்தாரின் திருக்குமாராக அவதரித்தார். ஆசாரியர், ஆளவந்தார்.சீடர்: இராமாநுசர் இசையில் வல்லவர். தெய்வகானமாய் இசைப்பாடல் பாடுவதில் வல்லுநர். இசைக்குப் பிரியரான காஞ்சி வரதராசர் முன் திவ்வியப் பிரபந்தத்திலிருந் து சில பாசுரங்களை இயலாகச் கேவித்தும், இசையாகப் பாடியும், நாடகமாக அபிநயித்துக் காட்டியும் அருளாளனை மயக்கி, அவன் அடிநிழலில் இருந்த இராமாதுசரைத் தந்திரமாக அரங்கனின் அடிநிழலுக்குக் கொண்டு வந்து சேர்த்த தந்திரசாலி. அரங்கத்தில் சில காலம் வாழ்ந்தவர். உடையவர், இவரிடம் நம்மாழ்வார் திருவாய் மொழியையும், மங்கை மன்னனின் பெரிய திருமொழியையும் கற்றுத் தேர்ந்தார். ஆக, பெரிய நம்பியுடன் உடையவருக்கு அறுவர் ஆசாரியராக அமைந்தனர்.

(6) வாதிகேசரி அழகிய மணவாளசீயர் : திருவாய் மொழிக்கு பன்னிறாயிரப்படி என்ற வியாக்கியானத்தை அருளிச் செய்தவர். இவருடைய வாழ்க்கை வரலாறு சற்று வியப்பானது.

இவர் இல்லற வாழ்க்கையில் இருந்தபோது ஒரு நாள் ஓரிடத்தில் சேர்ந்து பயிலும் மாணவர்களைக் கண்டு அவர்கள் பயிலும் நூலைப்பற்றி வினவினார். அவர்கள் இவர் எழுத்து வாசனையற்றவர் என்பதை அறிந்தவர்களாதலின் முசலகிசலயம்? படிப்பதாகக் கூறினர். இப்படியும் ஒன்று உண்டோ? என்று திகைத்தவர், தமது ஆசிரியரான பெரியவாச்சான் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய அவரும் இதன் விளக்கத்தை அருளிச் செய்ய, பெருநாணமுற்ற இவர் தம் ஆசாரியரின் திருவடியில் வீழ்ந்து வணங்கி தம்மை வித்துவானாக்கும்படி வேண்டிக் கொண்டார்.

ஆச்சான்பிள்ளையும் திருவுள்ளம் உவந்து முப்பத்து இரண்டு அகவையில் இவரை மாணவராக ஏற்றுக்கொண்டு கல்வி கற்பித்தார். படிப்படியாக இவர்தம் அறிவை மலரச் செய்து இவரைக் காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம் பூர்வ உத்தரமீமாம்சை முதலிய சகல சாத்திரங்களிலும் வல்லுநராகச் செய்தருளினார். இவரும் பிள்ளையவர்களின் திருவருளால் சிறந்த புலமையடைந்து தம்மை எள்ளி நகையாடிய மாணாக்கர்கள் வியந்து தலைகுனியும்படி ‘முசலகிசலயம் என்ற பெயரில் காவியம் ஒன்றையும் அருளிச் செய்தார். பின்னர் இல்லறவாழ்க்கையில் வெறுப்புற்று துறவறத்தை மேற்கொண்டு பிறசமயங்களையெல்லாம் வென்று ‘வாதிகேசரி' என்ற விருதையும் பெற்றார்.

அருளிச்செயல்கள் : பின்னர் முன்புள்ள நான்கு வியாக்கியானங்களையும் ஆழ்ந்து கற்று அவற்றின் சாரமான பொருள் சிறப்பினையெல்லாம் சுருக்கி பன்னீராயிரப்படி யை அருளிச் செய்தார். வேறு நூல்கள் தீபப்பிரகாசிகை, தீப சங்கிரகம், தத்துவநிரூபணம், தத்துவ தீபம், தத்துவ பூஷணம், தந்துவ திப சங்கிரகம்,கீதாசாரம், தமிழ்க்கவிபிரபந்தம், இரகசிய விவரணமாலை, இருபத்து நாலாயிரப்படிப்பிரமானத்திரட்டு, சுலோகருபத்தால் திருவாய்மொழி சங்கதி முதலியன.

(7). பெரியவாச்சான்பிள்ளை : திருக்குடந்தைக் கருகிலுள்ள சேங்கனுரில் யாமுன தேசிகருக்கும், நாச்சியா ரம்மைக்கும் திருமகனாய்த் தோன்றியவர். திருநட்சத்திரம் : ஆவணி-உரோகிணி.வேறு திருநாமங்கள்:ஸ்ரீகிருஷ்ணபாதர், அபயப்ரதாசர்,பூனிமத்கிருஷ்ணர், ஆச்சான்பிள்ளை. திருக்குமாரர். நயனாச்சான் பிள்ளை. சீடர்கள்  : திருக்குமாரர் நயனாச்சான் பிள்ளை, பரகாலதாசர், பின்பழகிய பெருமாள் சீயர், ஸ்ரீரங்க சாரியார், வாதிகேசரி அழகிய மணவாளப்பெருமாள் வாதிகேசரி (அன்போடழகிய மணவாள சீயர்). அருளிச் செயல்கள்; நம்பிள்ளை நியமனப்படி திருவாய்மொழிக்கு “இருபத்துநாலாயிரபடிவியாக்கியானம்’ இது தவிர, மற்றைய மூவாயிரத்துக்கும் வியாக்கியானமும், பரந்தரகஸ்யவிவரணமும், மாணிக்கமாலை, நவரத்தினமாலை, சகலபிரமானதாத்பரியம், உபகாரரத்தினம், கத்யத்திரயத்திற்கு, வியாக்கியானம், ஆளவந்தார் தோத்திரத்திற்கு வியாக்கியானம், அபயப்பிரதான வியாக்கியானம், அநுசந்தானரகசியம், சரமரகசியம், நிகமனப்படி, தனிசுலோகி, முதலிய வேறு நூல்களும் உரைகளும் இவர் தம் படைப்புகள்.

(8). பிள்ளை உலக ஆசிரியார் : தேவப்பெருமாள் அம்சம் : திருவரங்கத்தில் வடக்குத் திருவிதிப்பிள்ளைக்கும், பூரிரங்க நாச்சியாருக்கும் முதல் திருக்குமாராய் அவதரித்தார். திருநட்சத்திரம்; ஐப்பசி-திருவோணம்.திருத்தம்பியார் அழகிய பெருமாள் நாயனார். திருநாமம்; உலகாசிரியர், துருக்கர் காலத்துப் பெருமாள் நாச்சியாருடன் வெளியேறின பொழுது அவன் பிரிவற்றாது தாமும் முதலிகளுடன் புறப்பட்டு 'சோதிடக்குடி' என்னும் சிற்றுாரில் பெருமாளுடைய எல்லாச் சொத்துகளையும் கள்ளர் அபகரித்ததைக் கேட்டு தாமும் தம்முடையவற்றையெல்லாம் பறி கொடுத்தார். பெண்டிரும், பேதையரும் உய்யக்கருதி அரிய பெரிய பதினெட்டு இரகசிய கிரந்தங்களை “அஷ்டாதசா இரகசியங்கள் (அஷ்டம் எட்டு. தசம்பத்து என்ற பெயரில் வெளியிட்டு தமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவரும் இலர் என்ற திருப்பெயரை நிலை நாட்டினார். இவைதவிர “தத்துவ விவேகம்”, “நாலு வார்த்தை” என்பவையும் இவர்தம் அருளிச் செயல்கள். இவர்தம் கருத்தைப் பின்பற்றி மணவாளமாமுனிகள் வரைந்த வியாக்கியனத்தின் பொருளமைப்பும், நடையழகும் ஒருவராலும் அளவிடக் கூடியதல்ல. இவருடைய திருவடிசம்பந்தம் பெற்றவர்கள்: திருவாய்மொழிப்பிள்ளை, வங்கிபுரம் சீரங்காசாரியர், கோட்டுரிலண்ணன், விளாஞ்சோலைப்பிள்ளை, வாதிகேசரி அழகிய மணவாள சியர், கிடாம்பி இராமாநுசப் பிள்ளான் மனப்பாக்கத்து நம்பி, சடகோபசீயர், நாலூராச்சான், நாலூர் பிள்ளை, கூரகுலோத்துங்கம் தாசர், திருவாய் மொழிப்பிள்ளை தமப்பனாரண்ணர், திருவாய்மொழிப் பிள்ளைத் திருத்தாயார் கொல்லிகாவல்தாசர், கோட்டுர் அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை, திகழக் கிடந்தாரண்ணன், அழகிய பெருமாள் நாயனார் ஆகியோர் வயது 105.

(9). அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்: நம்பெருமாள் அம்சம். திருநட்சத்திரம் : மார்கழி அவிட்டம். திருவரங்கத்தில் பிள்ளை உலக ஆசிரியரின் திருத்தம்பியாக அவதரித்தார். ஆசாரியர் : பிள்ளை உலக ஆசிரியர். இவர்தம் அருளிச் செயல்கள்; ‘ஆசாரிய ஹிருதயம், அருளிச் செயல் ரகசியம், மாணிக்கமாலை, அமலனாதி பிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்கியானங்கள், திருப்பாவை வியாக்கியானம் ஆறாயிரம்படி திருவந்தாதிகளுக்கு வியாக்கியானம் முதலியன.

(10). திருவரங்கத்தமுதனார்  : அணியரங்கத்தமுதனாரின் திருமகனார். கூரத்தாழ்வானின் திருவடி சம்பந்தி, அருளிச் செயல்: இராமாதுச நூற்றாந்தாதி

(11). ஆத்தான் சீயர் 'ஆத்தான் யதி' என்றும் வழங்கப் பெறுபவர். காஞ்சி பெருமான் கோயிலில் எழுந்தருளியிருந்த ஒரு சுவாமி இவர் ஆந்திர வைணவர்.ஒரு சமயம் ஐதராபாத்தில் அமைச்சராக இருந்தவர். மிக வனப்பாக இருந்த இவரைத் துருக்க அரசரின் மகள் திருமணம் செய்துகொள்ள விரும்பி இவரை வற்புறுத்தத் தொடங்கினாள். அதனைத் தவிர்க்கும் பொருட்டு இவர் தமது பதவியைத் துறந்து[1] ஒருவரும் அறியாவண்ணம் ஒடி வந்து பெருமாள் கோயிலில் துறவறம் பூண்டு கிழக்குச் சந்நிதிக்குத் தெற்கே மதிலோரத்தில் மடம் கட்டிக்கொண்டு அதில் எழுந்தருளியிருந்தார். அந்தத் திவ்வியதேசத்தில் பெருந்தேவித்தாயார் சந்நிதி மண்டபம், திருமஞ்சன மண்டபம் முதலியவற்றைக் கட்டிப் பகவத் விஷயத்திற்கு ஒர் அரும்பதவுரை எழுதச்செய்தார்.திருவரங்கம் பெரியபெருமாளுக்கு அடையவளைந்தான் மதில்போலே - பகவத் விஷயத்திற்கு இது இரட்சகமாயிருந்ததாலே அடைய வளைந்தான் அரும்பதவுரை என்ற திருநாமம் சாற்றி அதனை இலக்கிய உலகில் புகழோங்கச் செய்தார். இதுதவிர, ‘திருப்பல்லாண்டு வியாக்கியானம் அரும்பதம்’ என்ற நூலும் இவருடையவை.

(12). பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் :அழகியமன வாளதாசர் என்ற மாற்றுப்பெயரினையுடையவர். சோழ நாட்டில் திருமங்கை என்னும் பகுதியில் தோன்றியவர். சிறந்த வைணவ பக்தர்."மறந்தும் புறந்தொழா மாண்புடையவர்.பெரிய திருமலைநாயகன் அரசவையில் பணியாற்றியவர். அவ்வரசன் இவரது திருமால் பக்தியைக் கண்டு உகந்து, திருவரங்கத்தில் தங்குவதற்கு ஒர் இருப்பிடம் அமைத்துத் தந்ததுடன், நாடோறும், தளிகைப் பிரசாதமும் கிடைக்க ஏற்பாடும் செய்தருளினன். அய்யங்காரும் கோயிலில் எழுந்தருளியிருந்த காலத்தில் “திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்து மாலை, திருவரங்கக் கலம்பகம், சீரங்கநாயகர் ஊசல், திருவேங்கட மாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகரந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி” என்னும் எட்டுப் பிரபந்தங்களைப் பாடி யருளினார். (அஷ்ட பிரபந்தம்) வைணவ நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர் என்பதும் சம்பிரதாயங்களைத் தெளிவாக அறிந்தவர் என்பதும், அவருடைய நூல்களால் புலனாகின்றன. பாடல்களின் இனிமை கருதி வைதிக சமூகம் இவருடைய பெயருடன் ‘திவ்வியகவி’ என்ற முன்னொட்டையும் சேர்த்து மகிழ்கின்றது. இவர் “சிலேடை, யமகம், திரிபு, அந்தாதி, கலம்பகம், ஊசல் முதலியவற்றை விசித்திரமாகப்பாடுவதில் வல்லவர் என்பதும் இவர்தம் நூல்களால் தெளிவாகும். நாலாயிரத்தின் சாரப் பொருள்களும், இவர்தம் பாடல்களில் பொதிந்திருக்கும் மாத்திரமேயன்றி,"சொல் நோக்கும், பொருள் நோக்கும், தொடைநோக்கும், நடைநோக்கும், துறையின் நோக்கும், என்நோக்கும் காண” இலக்கியமாகவும் இனிப்பனவாக அமைந்தனவாகும். இவர்தம் பாடல்களைக் கற்போர் சிறந்த புலவர்களாகத் திகழ்பவர் என்பதில் ஐயம் இல்லை.

2. அடியார்கள்

(1).கூரத்தாழ்வான்: இராமாம்சம் காஞ்சியை அடுத்தகூரம் என்ற ஊரில் இராமசோமயாசிக்குத் திருமகனாய் அவதரித்தார். திருநட்சத்திரம்- தை-அஸ்தம்.வேறு திருநாமங்கள்:ஸ்ரீவச்சின்ன மிஸ்ரர், நடையாடு பதஞ்சலி, யதீந்திர சரணன், கூரேசர், கூராதிபர், கூராதிபதி, கூரநாதன், ஸ்ரீவத்ஸ்சிஹ்நர். தேவிகள் : கூரத்தாண்டாள். குமாரர்கள் : பட்டர், சீராமப்பிள்ளை சீடர்கள்: பிள்ளைப் பிள்ளை ஆழ்வான், திருவரங்கத்தமுதனார், நாலூரான் அகளங்க பிரம்மராயன். இவர் அருளிய நூல்கள்; “வரதராஜஸ்தவம், சுந்தர பாகூஸ்தவம், அதிமாதுஸ்தவம், ஸ்ரீவைகுண்டஸ்தவம், யமனரத்னாரம், கத்யதிரய; (திரயம்மூன்று வியாக்கியானம்” ஆகியவை.

இவர்தம் ஆசாரியர் இராமாநுசர் குரு-சீடர் தொடர்பு அற்புதமானது. கல்நெஞ்சத்தையும் உருக்கும் தன்மையது. இராமாநுசர் வேடத்துடன் சோழன்முன் சென்று தம் கண்களையே பிடுங்கிக் கொண்டவர். அரசனுக்கு இவர் இராமாநுசர் அல்லர் என்று காட்டிக் கொடுத்தவன் “நாலூரான்” என்ற அமைச்சர். அரங்கர் சந்நிதியில் பெரிய பெருமாள் அர்ச்சகர் மூலமாக “உமக்கு என்னவேண்டும்?” என்று கேட்டதற்குக் கூரேசன்"நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். இந்தக் கருணை எவரெஸ்டு சிகரம் போல் இவர்தம் பேருள்ளத்தின் பெருமையைக் காட்டி நிற்கின்றது.

(2). முதலியாண்டான் : பரதாம்சம் பூவிருந்தவல்லிக் கருகிலுள்ள பச்சை வண்ணப்பெருமாள் கோவில் என்கின்ற “புருஷமங்கலத்தில்” அவதரித்தவர் உடையவரின் சகோதரி புத்திரர், திருநட்சத்திரம் : சித்திரையில் புனர்பூசம். ஆசாரியர்: இராமாநுசர் வேறு திருநாமங்கள் : “தாசரதி, மாதுல தேசிகன், ஸ்ரீவைணவதாசன், இராமாதுசபாதுகை’. திருக்குமாரர்; கந்தாடையாண்டான். சீடர் : இவர் திருக்குமாரர், கந்தாடை தோழப்பர். 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். ஸ்ரீபெரும் புதுரரில் எம்பெருமானாரின் திருமேனியை எழுந்தருளப் பண்ணினவர் வயது105

(3).அனந்தழ்வான்சத்துருக்கனாம்சம்.சிறுபுத்தூரில் அவதரித்தார். திருநட்சத்திரம் : சித்திரையில் சித்திரை. தம் ஆசாரியராகிய உடையவர் கட்டளைப்படி, ஏனையோர் தயங்க, திருவேங்கடமுடையானுக்குக் கைங்கரியம் செய்ய முன் வந்தவர். இதனால் எம்பெருமானார் நீதான் ஆண் பிள்ளை” என்று பாராட்டினார். இதனால் இவருக்கு ‘அனந்தாழ்வான் ஆண்பிள்ளை என்ற சிறப்புத் திருநாமும் ஏற்படலாயிற்று. திருமலையில் ஓர் ஏரிவெட்டி அதற்கு 'இராமாநுசன் புத்தேரி' என்ற திருப்பெயரையும் அமைத்தார். ஏரிகட்டும்போது இவர் மண்சுமவாநிற்க பெருமாள் ஒரு சிறுவனாய் வந்து அவர் கூடையை வாங்கப்புக “என் பிழைப்பை ஏன் கெடுக்கப் பார்க்கிறாய்? நீயும் ஒன்றெடுத்துச் சுமக்கலாகாதோ’ என்றார். பின்னர் ஒரு நாள் நிறைகர்ப்பவதியான தேவிகளும் மண்சுமவா நிற்க, அதை அந்த பகவச் சிறுவன் வாங்கி ஒத்தாசைச் செய்வதைக் கண்ட இவர் கொட்டெடுத்து ஓடி அடிக்க, திருவேங்கடச்செல்வன் கோயிலுள்ளே புகுந்தான் என்பர்.இவர் கட்டிய ஏரிக்கருகில் ஒருநந்தவனத்தை உண்டாக்கி அதிலிருந்து மலர்களைப் பறித்துத் திருவேங்கடமுடையானுக்கு நாடோறும் மலர்த்தொண்டு புரிந்து வந்தார். ஒருநாள் மலர் கொய்கையில் நல்ல பாம்பு ஒன்று இவர் கையில் தீண்டியது. இவர் அவற்குப் பரிகாரம் ஒன்றும் செய்யாமல் மீண்டும் நீராடிபின்னரும் நந்தவனத்திற்குச் சென்று மலர்களைக் கொய்து மாலை தொடுத்துத் திருவேங்கடமுடையானைச் சேவிக்கச் சென்றார். அவ்வளவில் இறைவன் அர்ச்சகர் மூலமாக “அரவு தீண்டியும் அந்நஞ்சைத் தீர்க்க வேண்டா என்றிருப்பது tஇ) கேட்டருள, இவரும் “கடியுண்ட அரவு வலிதாகில் திருக்கோனேரியில் தீர்த்தமாடித் திருவேங்கடமுடையானைச் சேவிக்கின்றேன்; கடித்த அரவு வலிதாகில் விரஜையில் தீர்த்த மாடி வைகுந்த நாதனைச் சேவிப்பேன் என்றிருந்தேன்” என்று மறுமொழி தந்த பரமயோகி, இவரைக் கூரத்தாழ்வானுக்குப் பின் பிறந்தவர் (இளையவர்) என்று கூறுவர். இன்று திருமலையில் கட்டப்பெற்றுள்ள அனந்தாழ்வான் ஏரிவிடுதிகள் (Ananthalvan Tank Cottages) argir nI @GIFTudub @ C Gub றிருப்பது இவர்தம் தொண்டைநினைவு கூருவதற்காக (4). கிடாம்பி ஆச்சான்: கண்டாம்சம் திருநட்சத்திரம்: சித்திரையில் அஸ்தம், பெரிய திருமலைநம்பிக்கு மருமகன். குமாரர் : இராமாநுசப்பிள்ளான். திருக்கோட்டியூர் நம்பி நியமனத்தால் மடப்பள்ளி கைங்கரியம் செய்தவர். சாத்திர ஞானம் மிக்கவர். வயது 100.

(5). வடுக நம்பி : உடையவரின் சீடர், ஆசாரியரைத் தவிர வேறு தெய்வம் அறியாதவர்.உடையவருக்குப் பர்லமுதம் காய்ச்சித் தரும் சேவையைப் புரிந்தவர். ஒருநாள் பெரிய திருநாளில் பெரிய பெருமாள் வீதி உலாவில் இவர் திருவாசல் முன்பு எழுந்தருள,உடையவர் பெருமாளைச் சேவிக்க வருக என்று அழைக்க, இவரும் ‘அடியேன் தேவருடைய பெருமாளைச் சேவிக்க வந்தால் என்னுடைய பெருமாளுக்குப் பாலமுதம் கும்பிப்போகும். ஆதலால் இச் செயலைத் துறந்து வரமுடியாது’ என்று விண்ணப்பித்தாராம். எம்பெருமானாருக்கு இவர் எண்ணெய்க் காப்பும் சாத்தியருள்பவர். -

(6). 'மிளகாழ்வான் : இராமாநுசர் நியமனம் செய்த 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். திருவானைக்காவில் இலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டின பாலைக் கொண்டு ததியாராதனத்தில் சேர்ப்பிப்பதை அறிந்த இவர் அப்படிச் செய்யலாகாது எனத் தடுத்தவர். பிரசாதத்திற்கு உரலில் துணுக்காமல் முழு மிளகைப் பயன்படுத்தியதைக் கண்ட உடையவர் காரணம் வினவினார். தேவதாந்தரம் சம்பந்தப் படாமல் மிளகைச் சேர்ந்ததாக மறுமொழி பகர்ந்தார். மிளகாழ்வான். இலிங்கமும் குழவியும் இவர்மனத்தில் சிவபரமாகக் காட்சியளித்ததைக் கண்ட உடையவர் இவருடைய பக்திக்கு வியந்தார்.

(7). பிள்ளை உறங்காவில்லிதாசர் : உறையூரை ஆண்டு வந்த சிற்றரசன் அகளங்க சோழன். இவன் அத்தாணிச் சேவகர்களில் முக்கியமானவர் உறங்காவில்லி என்ற மல்லன், சிலம்பம், குத்துச் சண்டை, மற்போர் முதலிய பயிற்சிகளில் நிகரற்றவர், பின்னர் இராமாநுசரால் ஆட்கொள்ளப்பெற்று அவர்தம் அருமருந்தன்ன சீடரானார். உடையவரின் கருவூலங் காக்கும் காவலர் பொறுப்பில் அமர்த்தப்பெற்றார். ஞான பக்தி, வைராக்கியங்களில் மிக்க இவர் உடையவரின் ஞான புத்திரர் என்ற நிலையையும் அடைந்தார். இவருடன் இவர்தம் மருமக்களான வண்டவில்லியும், செண்ட் வில்லியும் முறையே - வண்டலங்காரதாசர், செண்டலங்காரதாசர் என்ற தாஸ்ய நாமங்கள் பெற்று வைணவர்களாயினர்.

(8). பொன்னாச்சியார் : இவர் பிள்ளை உறங்கா வில்லிதாசரின் தேவியார். அழகு கொழிக்கும் வனப்புடையவர். உடையவரின் கடைக் கண் நோக்கினால் வைணவ தத்துவத்தில் ஆழங்கால் பட்டவர். கேள்வி ஞானத்தாலேயே பல நுட்பங்களை அறிந்து கொண்டிருந்தார். வைணவர்கள் பலர் இவரிடம் சம்பிரதாயத்தின் நுண்ணிய கருத்துகளைக் கேட்டு பயன் பெறும் அளவுக்கு ஞானச் செல்வத்தைப் பெற்றிருந்தார். கணவரிடம் ஆழ்ந்த பக்தியுடையவர். கணவர் பரமபதித்த அப்போதே தம் உடலைத் துறந்து விட்ட உத்தமி.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

வில்லிதாசர் தம் அந்திமதசையில் தம் துணைவியாரை நோக்கி “என்பிரிவு குறித்து நீ கலங்க வேண்டா. நம் அன்பு நெறியில் பிரிவுக்கோ மறைவுக்கோ இடம் இல்லை” என்று சொன்னார். அவரும் அப்படியே ஆறுதல் அடைந்தவர்போல் ‘இராமாநுசரின் திருவடிகளே சரணம் என்று சொல்லிக் கொண்டு தம் கணவர் அருகில் இருந்தார். இந்நிலையில் உடையவர் திருவடி நிலைகளைத் தம் முடியலே வைத்துக் கொண்டும், தம் திருவடிகளைத் தம் துணைவியார் மடியில் வைத்தநிலையிலும் மீண்டும் விழித்துக் கொள்ள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார்; பரமபதித்தார்.

தாசரின் திருமேனியை விமானம்போல அலங்கரித் திருந்த பூந்தேரில் ஏற்றி வைத்து ஏகாங்கிகளும் மற்றப் பாகவதர்களும் மாறி மாறித் தோள்கொடுத்துத் துக்கிக் கொண்டு போக, அதைப் பொன்னாச்சியார் வைத்த கண் வாங்காமல் அந்தக் கண்களில் துளிநீரும் அரும்பாமல் பார்த்துக் கொண்டே மங்கை மன்னனின் பிரிவாற்றாமைப் பற்றிய திருமொழியை (பெரிதிரு.8:5) அதுசந்திக்கத் தொடங்கினார். முதற்பாசுரம் அதுசந்தித்து இரண்டாம் பாசுரம் அது சந்திக்கும் அளவில் முன்னே பூத்தேரை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு செல்பவர்கள் விரைந்து செல்லுவதனால் திருத்தேர் மறைய, அதற்குத் தகுதியாகப் பொன்னாச்சியாரின் அநுசந்தானம். -

    தேரும் போயிற்று; திசைகளும்
          மறைந்தன; செய்வதொன் றறியேனே (8.5:2)

என்ற பெரிய திருமொழிப் பாசுர அடிகளில் நடைபெற்ற நிலையில், திருத்தேர் சென்ற திசையை நோக்கித் தொழுத வண்ணம்) கீழே விழுந்து விட்டார். அவர் உயிரும் தன்னடைவே பிரிந்து போயிற்று. உடையவரின் ஆணைப்படி இவர்தம் திருமேனியையும் வில்லிதாசரின் திருமேனியுடன் பள்ளிப்படுத்தி அந்திமச் சடங்குகளை நடத்தினர்.

(9). அகளங்க நாட்டாழ்வான்: உறையூரைத் தலைமை ஊராகக் கொண்டு சோழ அரசின் ஒரு பகுதியை ஆண்டு வந்த சிற்றரசன் அகளங்கன். உறங்காவில்லி முதலியோர் இவனை அண்டிதான் வாழ்ந்தனர். இவர்கள் இராமாநுசரால் ஆட்கொள்ளப்பெற்ற பின்னர் இவர்களின் இயல்புகள் மாறிவருவதைக் கண்டான். இவர்கள் முகத்தில் சாந்தியையும் ஒளியையும் கண்ணுற்றான்.தன்னையும் உடையவரிடம் இட்டுச் செல்லும்படி வேண்ட, வில்லிகளும் அங்ஙனமே இட்டுச் சென்று செய்தியை உடையவரிடம் தெரிவித்தனர். வேடர்களை உகந்து ஆட்கொண்டிருந்த உடையவரின் கருணை வேந்தனையும் உகந்து ஆட்கொண்டது. உடனே அவனுக்குப் பஞ்சசம்ஸ்காரம் செய்வித்து அகளங்க நாட்டாழ்வான் என்ற தாஸ்ய நாமமும் வழங்கினார். இங்ஙனம் ஆட்கொண்டபின் கோயில் கைங்கரியங்களை மேற்பார்வையிடும் அதிகாரியாகவும் நியமித்தார். அரசனுக்குரிய மாட்சியைவிட இந்தப் பணியில் தனக்குக் கிடைந்தத மாட்சியே பெரிது என்று அகமகிழ்ந்தான். அகளங்கன். குலசேகரப் பெருமாளைப்போல வெற்றரசைக் கைவிட்டு வீட்டரசுக்கு வழிவகுத்துக் கொண்டு அரங்கன் பணியில் ஆழங்கால் பட்டுவிட்டான்.

(10). அம்மங்கி அம்மாள்: அருளாளப் பெருமான் எம்பெருமானுடைய சீடர் ஒரு நோயில் வருந்தியிருந்தபோது நஞ்சியரும், நம்பிள்ளையும் நலன் விசாரிக்கச் சென்றனர். அப்போது அவர் மிகவும் கிலேசப்படுவதைக் கண்டு நஞ்சீயர் “சுவாமி, தேவரீர் சாமானிய மனிதரன்றே, எவ்வளவோ பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணி இருக்கின்றீர். சுவாதுபவத் தோடல்லாது போது போக்கியறியீர். இப்படியிருக்க உம்மையும் மற்றவர்களைப் போலவே இப்படிக் கஷ்டப்படுத்துகின்றானே! என்றாராம்” அதற்கு அவர் “நீயாள வளையாள மாட்டோமே” (பெரிதிரு. 3:6:9) என்பதன்றோ கலியன்பாசுரம்? என்றாராம். பிறகு வெளியில் எழுந்தருளியபின் நஞ்சீயர், நம்பிள்ளையை நோக்கி “பார்த்திரா இவருடைய எண்ணத்தை ? என்ன பாசுரம் எடுத்துக் காட்டினார்!” என்று அருளிச்செய்து மகிழ்ந்தாராம்.

(11). எறும்பியப்பா : சோளசிங்கபுரத்திற்கருகிலுள்ள (சோளிங்கர்) எறும்பி என்ற ஊரில் அவதரித்தவர், மணவாள மாமுனிகளின் திருவடிசம்பந்தி, இவருடைய ஆசாரியரான மாமுனிகள் விஷயமாக “வரவரமுனி சதகம், பூர்வ தினசரியை, உத்தரதினசரியை, விலட்சன மோட்சாதிகாரி நிர்ணயம், சுப்ரபாதம், சம்பூப் பிரபந்தம், ஆர்த்திப் பிரபந்தம்” முதலிய கிரந்தங்களைச் செய்து தலைக்கட்டித் தம் ஆசாரியரான சீயர் சந்நிதிக்கு வந்தார். சீயரும் “அபிமான நிஷ்டராகில் இப்படி இருக்க வேண்டாவோ?" என்று உகந்தருளி அப்பாவை எழுந்தருளச் செய்தார். அங்ஙனமே அப்பாவும் எழுந்தருளிச் சீயர் திருவடிகளில் அடிமை செய்து கொண்டு வாழ்ந்தார். பின்னர் தம் சீடர்களுக்குத் தம் “ஆசாரிய கிருபாலப்த மால, விலட்சணமோட்சாதிகாரி நிர்ணயம்” முதலிய கிரந்தங்களை பிரசாதித்தருளினர்.

(12). கூரநாராயணசீயர்: இவர் எம்பாரின் திருக்குமாரர். ஆசாரியர் : பெரிய பட்டர் சீடர்கள் : திருக்குருகைப்பிரான் சீயர்,சேமஞ்சீயர், சுந்தரபாண்டியதேவன். வேறு திருநாமங்கள்: நலந்திகழ் நாராயணசியர், சீரங்க நாராயணசீயர், இவர் திருவல்லிக்கேணி முதலான பல திருக்கோயில்களில் திருப்பணி செய்தவர், அருளிச்செயல்கள்: “உபநிஷத்கூர நாராயண - பாஷியம், தோத்திரவியாக்கியானம், சுதர்சன சதகம்" ஆகியவை.

(13). நடுவில் திருவிதிப் பட்டர். இவர் பெரும்புலவர். அரசவைக்கு எழுந்தருளினபோது இவருடைய புலமையைக் கண்டு அரசர் மிகு தனங்களை நல்கினார். அவற்றை நம்பிள்ளையின் திருவடிகளில் சமர்ப்பித்து ‘தேவரீருடைய திவ்விய சூக்தியில் பதினாயிரம் கோடியிலே சிந்தின ஒரு பூர் சூக்தி பெற்ற தவம் இவை. இவற்றை அங்கீகரித்தருள வேண்டும் என்று விண்ணப்பிக்க, நம்பிள்ளை அவற்றை அங்கீகரியாமல் பட்டரை வாரி அணைத்துக் கொண்டு பல சிறப் புகளைச் செய்தார். பட்டரும் நம்பிள்ளையின் பெருமையைக் கண்டு அவருக்கு “றுiசூக்தி சாகரம்” என்ற திருநாமம் சாத்தி மகிழ்ந்தார். அருளிச் செயல்; “பூர்வத்ஸ் சிஹ்ந, பஞ்சவிம்சதி”

(14). கந்தாடை அண்ணன் : இவரைக் கோயில் கந்தாடை அண்ணன் என்றும் வழங்குவர். மாறனேர் நம்பிக்குப் பிரம்ம மேத சம்ஸ்காரம் செய்த பெரிய நம்பிகளை ஸ்ரீவைணவர்கள் தம் சாதியினின்றும் விலக்கி வைத்தனர். ஓர் உற்சவத்தில் திருத்தேர் தன் நிலையை விட்டு அசையாதிருந்தது. கந்தாடை அண்ணனுக்குப் பெருமாள் அர்ச்சகர் மூலமாக “பெரிய நம்பியை உமது திருத்தோளின் மேல் எழுந்தருளப் பண்ணி வாரும் என்ற நியமத்தை உடனே அநுட்டித்துக் காட்டிய உத்தமர். இதனை நிறைவேற்றியவுடன் திருத்தேரும் நகர்ந்து திருவீதி வலம் வந்தது. அரியபெரிய அநுட்டானத்தை நிறைவேற்றிக் காட்டினமையால் “பெரிய நம்பிகள்” என்ற திருநாமம் பெற்றார் போலும்!

(15). கந்தா ஆண்டான்: பிரம்மதந்தர சுதந்தர சீயர் திருவடி சம்பந்தி, முதலியாண்டானின் திருக்குமாரர். குமாரர். கந்தாடை தோழப்பர். வேறு திருநாமம் : இராமாதுசதாசர்.

‘இருக்குவேதம், சாத்திரம், பிரபந்தம், ஸ்ரீபாஷ்யம்’ ஆகிய வற்றைச் சாதித்தவர் இவர்.தம் திருத்தந்தையார். சகல இரகசியப் பொருள்களைச் சாதித்தவர் ஆட்கொண்டவல்லி சீயர். இவர் யூனிபெரும்புதூரில் எம்பெருமானாரைத் திருமேனியாக எழுந்தருளப் பண்ணினார். சீடர் : கந்தாடை தோழப்பர்.

(16). கந்தாடை இலட்சுமானாசாரியர்: இவர் ஆசாரிய புருஷரில் ஒருவர். இவர் தேசிகர் காலட்சேபம் செய்கையில் அவ்வழிச் சென்றனர். இவரது சீடர்கள் தமது ஆசாரியருக்குத் தேசிகர் மரியாதை செய்யவில்லை என்று அவரது காலைப் பிடித்து இழுத்து அவமதித்தனர். இதனைத் தேசிகர் பொறுத்திருந்தனர். மாணாக்கர் செய்தது ஆசாரியரைப் பற்றுமாகையால் சில நாட்களில் இலட்சுமணாசாரியர் நோய் ாய்ப்பட்டனர். இதன் காரணம் அறிந்து தேசிகரைச் சரண்ம் புடைந்து அவரது திருவடித் தீர்த்தத்தைப் பெற்றுக் கொண்டு நாய் நீங்கப் பெற்றார். மேலும் தீர்த்தத்தின்கனத்தால் ஒரு குமாரரையும் பெற்று அவருக்குத் “தீர்த்தப் பிள்ளை” என்ற திருநாமமும் இட்டு மகிழ்ந்தவர். -

(17). பிள்ளைத் திருநறையூர் அரையர் : இவர் கீழை நாட்டில் கோயிலுக்கு முக்காத வழிதொலைவில் உள்ள தொட்டியம் திருநாராயணபுரத்திலே பெருமாளைச் சேவிக்க - குடும்பத்தோடு எழுந்தருளின சமயத்தில் சில பகவத் விரோதிகள் சந்நிதியில் நெருப்பை வைத்தனர். இதனைக் கண்ணுற்ற அரையர் அவ்வெம்பெருமானுடைய திருமேனிக்கு உண்டான ஆபத்தைக் கண்டு தாமும் பிள்ளைகளுடன் அத் திவ்விய மங்கள விக்கிரகத்தைக் கட்டிக் கொண்டு திருமேனியை விட்ட உபேய அதிகாரி. 74 சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். உரைகளில் இவரைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன.



(18). பிரதிவாதி பயங்கரம் அண்ணன் : நயினாரா சார்யரிடம் ரீபாஷியம் சேவித்தவர். பெருமாள் கோயிலில் (காஞ்சி) மிகச் செல்வாக்குடன் திகழ்ந்தவர். இவரை மணவாள மாமுனிகள் வருவித்து இவருக்கு முப்பத்தாறாயிரப்படி அருளிச் செய்தனர். இதனைக் கேட்டு வந்த இவர் LOGsTG ffT@JT மாமுனிகளிடம் பஞ்ச சம்ஸ்காரமும் பெற்றனர். இவருக்கு ‘வைணவ தாசர்’ என்ற ஒரு திருநாமும் உண்டு. இவர் அஷ்டதிக்கஜங்களுள் ஒருவர். இவர்தம் அருளிச் செயல்கள்: “ஸ்ரீபாஷ்யவியாக்கியானம் (சுகபட்சியம்) பாகவதவியாக்கி யானம், பிரபத்தி யோக காரிகைகள், அஷ்டசுலோக் வியாக்கியானம்” ஆகியவை.

(19). கந்தான்டதோழப்பர் கந்தாடையாண்டான் திருக்குமாரர். இவர் நம்பிள்ளையிடத்துச் சிறிது பொறாமைப் பட்டு வாசிகமாக அபச்ரப்பட்டார். சிறந்த வித்துவானாதலாலும் திருவம்சப் பிரபாவத்தாலும் பின்பு தெளிந்தார். நம் பிள்ளையின் திருவடிகளைப்பற்றிப் புகழ்ந்து அவருக்கு ‘உலகஆசிரியர் என்ற திருநாமம் சாத்தினார், இவருடைய திருப்பாட்டனார் முதலியாண்டான். திருநாமங்கள் பச்சைவாரணப் பெருமாள் வாராகுதீசர், சீயாம்ஹஸ்தீசர்.

(20). விளாஞ்சோலைப் பிள்ளை: பிள்ளை உலக ஆசிரியரின் திருவடிசம்பந்தி, திருவாய்மொழிப்பிள்ளைக்கு இரகசியப் பொருள்களை உபதேசித்தவர். அருளிச்செயல்: சப்தகாதை, -

விரிவஞ்சி நூற்றுக்கு மேற்பட்ட வர்கள் விடப் பெற்றனர். விவரம் வேண்டுவோர் இவ்வாசிரியரின் வைணவச் செல்வம். பகுதி 2 இல் காணலாம்:


  1. தாயுமான அடிகளின் வாழ்க்கையில் இதையொத்த நிகழ்ச்சியை நினைக்கின்றோம்.